சங்க இலக்கியத் தாவரங்கள்/007-150

 

தாமரை
நிலம்பியம்‌ ஸ்பீசியோசம்‌
(Nelumbium speciosum, Willd.)

தாமரை எனவும் கமலம் எனவும் சங்க நூல்கள் கூறும். நன்னீர்க் கொடியில் மலரும் தாமரையில் இருவகை உண்டு. செவ்விய இதழ்களை உடையது செந்தாமரை. தூய வெண்மையான இதழ்களை உடையது வெண்தாமரை. இவையிரண்டும் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தாமரை மலரைத் ‘தெய்வ மலர்’ என்று கூறுவர் கோவை. இளஞ்சேரனார்.[1] சிறுபாணாற்றுப்படை (73) இதனைத் ‘தெய்வத்தாமரை’ என்று கூறுமாறு கொண்டு.

சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
தாவரப் பெயர் : நிலம்பியம் ஸ்பீசியோசம்
(Nelumbium speciosum)
ஆங்கிலப் பெயர் : சேக்ரட் லோடஸ் (Sacred lotus)


தாமரை இலக்கியம்

சிறுபாணாற்றுப்படை தாமரையைத் ‘தெய்வத்தாமரை’ 73 என்று கூறுகின்றது.

எண்ணில் பெருந் தொகைக்கும் ஈடற்றதென விளங்கும் குறுந்தொகையில், கடவுள் வாழ்த்துப் பாடல் முருகப் பெருமானைப் பற்றியதாகும். பெருமானுடைய விருப்பம் மருவிய செம்மையாகிய திருவடி தாமரை மலரைப் போன்று அழகியது என்று தாமரை மலரை உவமையாகக் கூறுவார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

“தாமரை புரையும் காமர் சேவடிப்
 பவளத் தன்ன மேனித் திகழொளிக்
 குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
 நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
 சேவலங் கொடியோன் காப்ப
 ஏம வைகல் எய்தின்றால் உலகே”
-குறுந். 1

சேவடி என்றமையின் செந்தாமரையைக் குறிக்கும். குறுந்தொகைக்கு முதற் பாடலாக அமைந்த இதனுள் நானிலங்கட்கும் உரிய கருப்பொருள்கள் கூறப்படுகின்றன. அவையெல்லாம் செந்நிறமானவையாகலின், தாமரையும் செந்தாமரையாகுமெனக் கோடலும் ஒன்று.

தாமரை ஒரு கொடி; நன்னீரில் வாழும். தாமரையின் தண்டு அது வளரும் சேற்றில் புதைந்திருக்கும். அதிலிருந்து இலைகளும், மலர்களும் நீண்ட காம்புகளைக் கொண்டு நீர்ப்பரப்பின் மேலே மிதந்து வளரும். இலைக் காம்பிலும் மலர்க் காம்பிலும் முட்கள் மலிந்திருக்கும். புலவர்கள் முள் நிறைந்த தாளையுடைய தாமரை என்று பாடுவர்.

“தாழை தவளம் முட்டாள தாமரை”-குறிஞ். 80
முள் அரைத் தாமரை”-சிறுபா. 144
முட்டாட்டாமரை துஞ்சி”-திருமு. 73

மேலும், இக்காம்புகள் நுண்ணிய துளைகளை உடையவை. இவற்றுள் காற்று நிறைந்திருக்கும். அதனால், இதன் இலைகளும், மலர்களும் நீரில் மிதக்க இயலும். தாமரை மலரிதழ்களின் நிறத்தால் செந்தாமரை. வெண்டாமரை என இருவகை உள்ளன. நீலத்தாமரை வடநாட்டில் வளர்வதாகக் கூறுவர். செந்தாமரையின் அகவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகக் கூறப்படுகின்றன.

“திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
 ஆசில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
 சேயிதழ் பொதிந்த”
-சிறுபா. 73-75

மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
 அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல்”

-கலி. 13 : 11-13

வெண்டாமரையின் இதழ் நல்ல வெண்மை நிறமானது. இதனை முயற்காதிற்கு ஒப்பிடுவர்.

“முள்ளரைத் தாமரை புல்லிதழ் புரையும்
 நெடுஞ்செவிக் குறுமுயல் . . . . ”
-பெரும்பா. 114-115

(புல்லிதழ்-மெல்லிய இதழ்)

சேற்றில் வளரும் செந்தாமரை, கதிரவனைக் கண்டு மலர்வது. ஐந்து புறவிதழ்களை உடையது. அகவிதழ்கள் ஏறக்குறைய 20-25 ஒரே மாதிரியாக இருக்கும். தாமரையில் நூற்றுக்கணக்கான அகவிதழ்கள் உன்டென்பர் புலவர்.

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
 நூற்றிதழ் அலரின் நிரை கண் டன்ன
 வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து”

-புறநா. 27: 1-3

“நூற்றிதழ்த் தாமரை”-ஐங்: 20

கதிரவன் தாமரையை மலர்த்தித் தனது வெப்பத்தை அதனுள் பெய்தான். மாலையில் பனி பெய்யுங்கால் தாமரை கூம்பியது. கதிரவன் வைத்த சிறு வெப்பம் உள்ளே பொதிந்திருந்தது. இதனை ஒத்தவள் தலைவி என்பது மோசிக்கொற்றன் கூற்று

“ . . . . . . . . . . . . . . . .பனியே
 வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
 அலங்கு வெயிற் பொதித்த தாமரை
 உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே”
-குறுந்., 376 : 4-6

போது மலராகி விரியும் போது மலரின் உட்புறத்தில் சிறிது வெப்பம் உண்டாகுமென்பது தாவர அறிவியலுண்மை. இதனைச் ‘சூடுதரு புதுப்பூ’ என்று புலவர் பாடுவர். இதனை விரிவாகப் பிறிதோரிடத்திற் கூறினாம்.

தாமரைப்பூவின் நடுவே நீண்டு உருண்ட ‘பொகுட்டு’ இருக்கும். இதனைச் சுற்றி மகரந்தத் தாள்கள் மலிந்திருக்கும். இவற்றில் தாதுக்கள் உண்டாகும். இவற்றை உண்ணுதற்கு வண்டுகள் மொய்க்கும். இவ்வுண்மைகளைத் தொகுத்து மதுரை மாநகரின் அமைப்பாகப் பாடுகின்றார் ஒரு புலவர்.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
 பூவொடு புரையும் சீர் ஊர், பூவின்
 இதழகத் தன்ன தெருவம்; இதழகத்து
 அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
 தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
 தாதுண்பறவை அனையர் பரிசில் வாழ்நர்”

-பரி.திரட்டு : 8

தாமரைக்குக் கமலம் என்றதொரு சங்கத் தமிழ்ப் பெயரும் உண்டு.

“மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய”-பரிபா. 2 : 14

கமலம் என்ற இச்சொல் ஈண்டு பேரெண்ணைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

“ஐ,அம்பல் என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல். எழுத்து: 8:98
என்னும் தொல்காப்பிய நூற்பாவினால் ‘ஐ’ என்னும் எழுத்தை இறுதியாகக் கொண்ட ‘தாமரை’ அல்லது ‘அம்’ என்பதை இறுதியாகக் கொண்ட ‘கமலம்’ என்னும் பெயர் எனத் துணியலாம்.

நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆண்டுகள். அதாவது:

100 x 100000 = 107=கோடி 10000000
கோடி எண் மடங்கு கொண்டது 1056 -சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது 10448 -விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது 103584 -ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது 1028672 -கமலம் அல்லது தாமரை
கமலம் எண் மடங்கு கொண்டது 10229376 -குவளை
குவளை எண் மடங்கு கொண்டது 101835008 -நெய்தல்
நெய்தல் எண் மடங்கு கொண்டது 1014680064 -வெள்ளம்

(இராமனது சேனை 70 வெள்ளமென்றும் இராவணனது சேனை 1000 வெள்ளமென்றும் கம்பர் கூறுவர்.)

இம்முறை வைப்பினைப் பிங்கலத்திலும் பரிபாடலிலும் ஈழ முனிவன் தன் யாழ் நூலிலும் கண்டு கொள்க. ஆகவே, தாமரை என்பது 1028672 என்று ஆகும். அதாவது 10 என்ற எண்ணை 28672 தடவை பெருக்கினால் வரும் எண்ணாகும். இங்ஙனமாகப் பெருகும் ‘கமல’மும் ‘வெள்ள’மும் நுதலிய ஆண்டுகளான பல்லூழிக் காலந்தொட்டு நிலைத்துள்ள “ஆழிமுதல்வ! நின்னை யாவரும் உணரார்! நிற்பேணுதும்"! என்கிறார் கீரந்தையார்

‘தாமரை பயந்த ஊழி’ (திருமு. 164) என ஊழிக்காலப் பேரெண்ணைக் குறிப்பது போலவே, மிகச் சிறு பொழுதிற்கும் தாமரை கொள்ளப்பட்டது. ‘கணம்’ என்னும் சொல் மிகச் சிறு நேரத்தைக் குறிக்கும். பல ஆயிரங் கணம் கொண்டது இமைக்கும் நேரம் என்பர். ‘கணம்’ என்னும் அணுவளவான நேரத்தை, அரபத்த நாவலர் என்னும் பரத நூல் புலவர் அளவிட்டுக் காட்டியுள்ளார்.[2] தாமரை மலரின் இதழ்களில் நூறு இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். கூரிய ஊசி ஒன்றை அவ்வடுக்கின் மேல் வைத்து அழுத்த வேண்டும். நூறு இதழ்களில், முதல் ஓர் இதழில் ஊன்றும் நேரம் ஒரு கணமாம்.

திருமகள், கலைமகள், நான்முகன் முதலிய தெய்வங்கள் தாமரை மலரின் மேல் இடம் பெற்றனர் என்ப. ‘திருவளர் தாமரை’[3] என்ற சொற்றொடருக்குத் ‘திருமகள் தங்கும் தாமரை எனினும் அமையும்’ என்று உரை கூறுவர். மற்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள கண்ணனின் உடலும், உடல் உறுப்புகளும் தாமரை போன்றிருத்தலின் “கமலக்காடன்ன கண்ணன்” என்று போற்றும் திருவாய்மொழி.[4] புத்தர், அருகதேவர் முதலியோருக்கும் தாமரை முறையே இருப்பிடமாகவும் திருவடிக்கு உவமையாகவும் கூறப்படும்.

கடவுளரது உறுப்புகளையெல்லாம் தாமரையாகக் கொண்டு பாடியவர்கள், மாந்தரின் உறுப்புகளையும் அங்ஙனம் கூறாமல் இல்லை. முகம், கை, கன்னம் முதலிய புற உறுப்புகள், தாமரை மலருக்கு உவமையாக்கப்பட்டுள்ளன. இதயமும் தாமரை மொட்டுக்கு உவமிக்கப்படுகிறது.

தாமரை மருத நிலத்திற் சிறந்த மலராகும். ஆனால், மருத நிலம் மருத மரத்துப் பூவின் பெயரால் மருதம் எனப் பெயர் பெற்றது. ஆயினும், மருதமரப் பூவைக் குறித்தோரைச் சங்க இலக்கியத்தில் காண இயலவில்லை. அதனால், தாமரையை மருத நிலத்து மலராகக் குறிப்பிட்டுள்ளது இறையனார் களவியலுரை.

தாமரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : தாலமிபுளோரே (Thalamiflorae)
தாவரக் குடும்பம் : நிம்பயேசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிலம்பியம் (Nelumbium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பிசியோசம் (Speciosum, )
சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
உலக வழக்குப் பெயர் : தாமரை, பதுமம், கமலம்
ஆங்கிலப் பெயர் : லோடஸ் (Lotus)
தாவர இயல்பு : நன்னீர்க் கொடி; குளம், குட்டை, பொய்கை முதலிய நன்னீர் நிலைகளில் வளரும். இதில் நிறத்தால் வேறுபட்ட செந்தாமரையும் வெண் தாமரையும் உண்டு.
தண்டு : சேற்றில் அழுந்திய அடிமட்டத் தண்டு கிழங்கு போன்றது. இதன் கணுவிலிருந்து இலைகளும், மலர்களும் உண்டாகும்.
இலை : இலை வட்டவடிவமானது (2-3 அடி) ஒரு வகையான கொழுப்புப் பொருள் இலைப் பரப்பில் உள்ளது. அதனால் நீர்த்துளி அதில் தங்குவதில்லை; ஒட்டுவதுமில்லை.
இலைக் காம்பு : 3-6 அடி நீளமானது. சிறுமுட்கள் அடர்ந்தது: இலையின் அடியில் நடுவில் இணைந்திருக்கும்.
மலர் : அகவிதழ்கள் செந்நிறமாக இருப்பின் செந்தாமரை எனவும், அவை வெண்ணிறமாக இருப்பின் வெண்டாமரை எனவும் கூறப்படும். நீண்ட முள் நிறைந்த மலர்க் காம்புகளில் முகை உண்டாகும். மலர் அகன்றது. வட்ட வடிவாகத் தோன்றும். பூத்த மலர் மிக அழகானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள் பசிய நிறமுள்ளவை. அகன்று நீண்டவை. இவை தாமரை மொட்டை மூடிக் கொண்டிருக்கும்.
அல்லி வட்டம் : பல அகவிதழ்கள் (20-25). நீண்ட அகன்ற மெல்லிய அழகிய இதழ்கள்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இப்பைகளை இணைக்கும் மகரந்தத் தாள்; பைகளுக்கும் மேலும் நீண்டிருக்கும். பைகளில் தாது மிகுத்து உண்டாகும். வண்டினம் இத்தாதுக்களைத் தேடி வந்து நுகரும்.
சூலக வட்டம் : பொகுட்டு எனப்படுவது சற்று அகன்ற நீண்ட (3-4 அங்குலம்) ‘டோரஸ்’ எனப்படும் மலரின் நடுவில் இருக்கும். இதனுள் முட்டைவடிவான சூலகங்கள் அமைந்துள்ளன.
சூல் தண்டு : குட்டையானது.
சூல் : 1-2 சூல்கள் சூலக அறையில் காணப்படும்.
விதை : கடலை விதை போன்றது. சூலகத்தை நிறைத்துக் கொண்டு வளரும் விதையின் புறவுறை பஞ்சு போன்றது. இதனுள் சதைப்பற்றான இரு வித்திலைகள் காணப்படும். முளைக் குருத்து மடிந்திருக்கும்.

தாமரை, மலருக்காகக் குளங்களில் வளர்க்கப்படுகிறது. மணிவாசகர் சிவபெருமானது திருஉருவத்தைச் “செந்தாமரைக் காடனைய மேனி” என்றார்.[5]


  1. இலக்கியம் ஒரு பூக்காடு: பக். 217
  2. “நூற்றிதழ் அடுக்கி அதனில் துன்னூசி ஊன்றிடும் காலம் கணமாம்”-பரத நூல்
  3. திருச்சிற்றம்பலக் கோவை : 1
  4. திருவாய் 9:7:3 -பழம்பாடல்
  5. திருவாசகம் : திருச்சதகம் : 26