சங்க இலக்கியத் தாவரங்கள்/020-150

குருக்கத்தி-குருகு-மாதவி
ஹிப்டேஜ்-மாடபுளோட்டா (Hiptage madabłota,Gaertn.)

‘குருக்கத்தி’ எனவும் ‘குருகு’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும், இக்கொடியினை, ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‘குருக்கத்தி’யை ஒரு வலிய கொடி என்ற கூறலாம். தடித்து நீண்டு வளருமாயினும், கொழுகொம்பின்றித் தானாக வளராது. இதன் மலர் வெண்ணிறமானது. இதன் ஓர் அகவிதழ் மஞ்சள் நிறமாக இருக்கும். இதனால் மலர் கண் கவரும் வனப்புடையது.

சங்க இலக்கியப் பெயர் : குருக்கத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருகு
பிற்கால இலக்கியப் பெயர் : மாதவி, கத்திகை
உலக வழக்குப் பெயர் : மாதவிக் கொடி, குருக்கத்தி
தாவரப் பெயர் : ஹிப்டேஜ்-மாடபுளோட்டா
(Hiptage madabłota,Gaertn.)

குருக்கத்தி-குருகு-கத்திகை-மாதவி இலக்கியம்

இதனைக் குறிஞ்சிப் பாட்டில், கபிலர் ‘பாரம் பீரம் பைங் குருக்கத்தி’ (93) என்றார். மாறன் வழுதியும். இதனைப் ‘பைங் குருக்கத்தி’ (நற். 97:5) என்றார். இவற்றுக்கு உரை கூறிய நச்சினார்க்கினியரும் பின்னத்தூராரும் ‘பசிய குருக்கத்திப்பூ’ என்றனர். கடியலூர் உருத்திரங்கண்ணனார். இதனைக் ‘குருகு’ என்பர் (பெரும்பா: 377). இதற்கு நச்சினார்க்கினியர் ‘குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

திருத்தக்கதேவர் ‘மாதவி’, ‘கத்திகை’ என்ற இரு பெயர்களைச் சூட்டுவர்:

“பயிலுமாதவிப் பந்தரொன்று எய்தினான்”[1]
“கோதை வீழ்ந்ததுவென முல்லை கத்திகைப்
 போது வேய்ந்தின மலர் பொழிந்து”
[2]

ஆசிரியர் நச்சினார்க்கினியர் கத்திகை என்பதற்குக் ‘குருக்கத்தி’ என்று உரை கூறுவர்.

ஆகவே குருக்கத்தி எனவும் குருகு எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் இக்கொடியினைப் பிற்கால இலக்கியங்கள் ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் குறிப்பிடுகின்றன. தாவர இயலில் இதற்கு ஹிப்டேஜ் மாடபிளோட்டா (Hiptage madablota) என்று பெயர். இது மால்பிகியேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை ஒரு வன்மையான கொடி எனக் கூறலாம். நெடிது நீண்டு வளரும் இயல்பிற்றாயிலும், பற்றுக் கொம்பின்றித் தானே ஓங்கி வளராது. இவ்வியல்பினால் இதனை வேறு கோல் கொண்டு பந்தரிட்டு, அதன் மேலே படர விட்டால், நல்ல பந்தராக அமைந்து வளரும். இதன் இலைகள் நான்கு அங்குலம் முதல் ஒன்பதங்குலம் வரை நீளமும், ஒன்றரை முதல் இரண்டங்குலம் வரை அகலமும், நல்ல பச்சை நிறமும் உடையன. இதன் இலை சற்றேறக் குறைய நுணா இலை போன்றிருக்கும். இதன் பூங்கொத்து காண்பதற்கு அழகாக இருக்கும். இணர், கணுக் குருத்தாகவும் நுனிக் குருத்தாகவும் வளரும். அரையங்குலம் முதல் முக்கால் அங்குலம் வரை நீளமான இதன் பூ வெண்மையானது. புறவிதழ்கள் ஐந்தும் பசுமையானவை. அரும்புகள் புறவிதழ்களால் மூடப் பெற்றிருத்தலின் பசிய நிறம் தோன்றுமாகலின், இதனைப் பைங்குருக்கத்தி என்றனர் போலும். அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குறுகியும், நுனியில் அகன்று நொய்தான விளிம்புகளுடனும் இருக்கும். ‘இதனைத் துய்த்தலை இதழ பைங்குருக் கத்தி’ (நற். 97 : 6) என்று புலவர் கூறுவர். இவற்றுள் ஓர் இதழ் மட்டும் மஞ்சள் நிறம் விரவப் பெற்றதாதலின், மலர் கண்கவர் வனப்புடையது. பத்து கேசரங்கள் பொன்னிறத் தாதுகுத்து நிற்கும். கருப்பை மூன்று பிரிவுகளை உடையது. இம்மலர் வட்ட வடிவாகத் தோன்றும்; பூவில் நறுமணமுண்டு. அதனால் இம்மலரைச் சூடிக் கொள்வதுண்டு. இம்மலரைப் பித்திகை மலருடன் விரவித் தொடுத்து உழவர் மடமகள் தெருவில் விற்பதைக் கூறுவர் மாறன் வழுதியார் :

“துய்த்தலை இதழபைங் குருக்கத் தியொடு
 பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்தலை உழவர் தனி மடமகள்”

 (வட்டி-கடகப்பெட்டி)-நற். 97 : 5-8

இப்பூ அமைந்த ஒரு சுவையான விளக்கத்தைப் பெரும் பாணாற்றுப் படையில் காணலாம்.

சிற்றுணவில் இடியப்பம் என்பதொன்றுண்டு. அரிசியை மாவாக இடித்து, நூல் இழை போலாக்கி அவிப்பதுதான் இடியப்பம். இதனை வெல்லப்பாகில் இட்டும் உண்பர். பாலில் இட்டும் உண்பர். இதனைக் கூவி விற்போர் ‘கூவியர்’ எனப்படுவர். புற்கென்ற புறத்தையும். வரிகளையுமுடைய குருக்கத்திப் பூவை இடியப்பமாகக் காட்டுகிறார் புலவர்.

காஞ்சி மரத்தைச் சுற்றிப் படர்ந்து குருக்கத்திக் கொடி மிகுதியாகப் பூத்துள்ளது. அப்பூ புன்புறத்தையுடையது. அகவிதழ்களின் விளிம்புகள் இழை போன்றுள்ளன. காஞ்சியின் கரிய அடி மரத்தில் குருக்கத்தி மலர்கள் வெண்ணூலாகப் பூத்திருப்பது, வெல்லப்பாகோடு இடியப்பம் கிடப்பது போன்று காட்சியளிக்கின்றது என்கிறார். மற்று, இன்னொரு காட்சியும் இங்கே தரப்படுகின்றது. மாதவிப் பூங்கொத்திற்கு அடியில் மணற்குழி ஒன்று உளது. அதில் நீர் நிறைந்திருக்கும். பூங்கொத்திலிருந்து மலர்க் குழி நீரில் விழுந்து கிடக்கும் இம்மலர்கள், ‘இடியப்பம் பாலில் வீழ்ந்து கிடப்பது போன்று உள்ளது’ என்கிறார். இக்காட்சியைச் ‘சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவை போல’ என்பார் நச்சினார்க்கினியர்.

“குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
 பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
 கார்அகல் கூவியர் பாகொடு பிடித்த
 விழைசூழ் வட்டம் பால் கலந்தவை போல்
 நிழல்தாழ்வார் மணல் நீர்முகத் துறைப்ப”

-பெரும்பா. 375-379


மேலும் குருக்கத்திப் பூந்துணர், நுனி வளரும் இயல்பிற்றாதலின் கோதை போலக் காட்சி தரும். சிலப்பதிகாரத்தில்[3] காப்பியத் தலைவியின் பெயருக்கேற்ப இம்மலர் ‘மாதவி’ எனப்பட்டது. இளங்கோவடிகள் ‘கோதை மாதவி’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு அடியார்க்கு நல்லார், ‘மாலை போல பூக்கும் குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

மாதவிக் கொடி, நவம்பர்-திசம்பர் மாதங்களில் இளவேனிற் காலத்தில் பூக்கும். உழவர் மடமகளால் இம்மலர் விற்கப்படுவதால், இதனை மருத நிலப்பூ என்பர். இம்மலரை முருகன் சூடியதாக நச்சினார்க்கினியர் கூறுவர். பெரியாழ்வார்,

“குடந்தைக் கிடந்த எங்கோவே
 குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்”

எனக் கண்ணனுக்காகப் பாடினார். “முல்லைக் கத்திகைப் போது வேய்ந்தனர்” என்பர் திருத்தக்கதேவர்.[4]

ஆசியாவில், வெம்மை மிக்க நாடுகளில் வாழும் மால்பிசியேசி என்னும் இதன் தாவரக் குடும்பத்தில், 3 பேரினங்கள் இந்தியாவில் உள என்பர். இவற்றுள், ஹிப்டேஜ் பேரினத்தில் 5 இனங்கள் இந்தியாவில் வளர்வதாக ‘ஹூக்கரும்’, தமிழ்நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் காணப்படுவதாகக் ‘காம்பிளும்’ சொல்வர். மாதவிக் கொடி இந்தியாவில் வெம்மையானவிடங்களிலும், பர்மா, மலாக்கா, சீலங்கா, சீனா, சாவா முதலியவிடங்களிலும், காணப்படுகிறது. தமிழ் நாட்டில், மாதவியை ஒத்த மற்றொரு வகைக் கொடியும் வளரும். இதனை ஹிப்டேஜ் பார்விபுளோரா (Hiptage parviflora) என்றழைப்பர். இதன் இலைகள், மாதவி இலைகளைக் காட்டிலும் குறுகி நீண்டும், மலர்கள் சிறியனவாகவும் இருக்கும். மாதவிக் கொடி கன்னட மொழியிலும் ‘மாதவி’ எனவே வழங்கப்படுகிறது. உரியா மொழியில் இதனை, ‘மாதவி’ என்றும், ‘மாதபிளோதா’ என்றும் அழைக்கின்றனர். இதனைக் கொண்டுதான், தாவர நூலில் இதற்கு மாடபிளோட்டா என்ற சிற்றினப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

மாதவிக் கொடி பூத்த சில நாள்களில் மலர்கள் உதிர்ந்து, பூவிணர் பொலிவிழந்து காணப்படும். இந்நிலையில் நின்ற, குருக்கத்திச் செடியைக் கண்ணுற்ற கோவலன், தனது பிரிவினால் நலனிழந்து வாடும் தனது காதற்கணிகை “மாதவியை ஒத்த மாதவியாயினை” என்று தன் உள்ளத்துயரைப் புலப்படுத்துவானாயினன். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42, 56 என ராய ஆர். பி., மிஸ்ரா என்.பி. (1962) என்போரும், 2n=58 எனப் பால். எம். (1964) என்பவரும் கூறுவர்.

குருக்கத்தி–குருகு–கத்திகை–மாதவி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் பிரிந்தது; டிஸ்கிபுளோரே
தாவரக் குடும்பம் : மால்பிகியேசி (Malpighiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஹிப்டேஜ் (Hiptage)
தாவரச் சிற்றினப் பெயர் : மாடபுளோட்டா (madablota)
தாவர இயல்பு : வன்கொடி (Woody climber). பற்றுக்கோடு கொண்டுதான் முதலில் வளரும். மரங்களின் மேல் சுற்றிப் படர்ந்து வளரும். மிக நீளமானது.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : தனியிலை; எதிரடுக்கில் பசுமையானது. தோல் போன்றது. இலைச் செதில் அற்றது. 10 செ.மீ-22செ.மீ. 3 செ. மீ.-5 செ. மீ. அகன்று நீண்டது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர். கணுக்குருத்தாகவும் நுனிக்குருத்தாகவும் வளரும் இயல்பிற்று. பல மலர்கள் பூத்த நிலையில் இணரே மாலை போன்று காட்சியளிக்கும். இதனைப் புலவர் கூறுவர்.
மலர் : வெண்மை நிறமானது. 5 அகவிதழ்களை உடையது. 15 மி. மீ. முதல் 20 மி. மீ. நீளமானது.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்களை உடையது. அடியில் இணைந்திருக்கும் அரும்பில் இவை அகவிதழ்களை நன்கு மூடிக் கொண்டிருத்தலின், பசிய நிறமானதாகத் தோன்றும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் பளபளப்பானவை. அடியில் குறுகியும், நுனியில் அகன்றும் நொய்தான விளிம்புகளுடன் இருக்கும். இவற்றுள் ஓரிதழில் மட்டும் மஞ்சள் நிறம் உட்புறத்தில் விரவியிருக்கும். இதழ்கள் ஒரே மாதிரியன்று. மலர் கண்கவர் வனப்புடையது. நறுமணமுடையது.
மகரந்த வட்டம் : 10 தாதுக்கால்கள் தாதுப் பைகளை ஏந்தி நிற்கும். இவை பொன்னிறமான தாதுக்களை உகுக்கும். இவற்றுள் ஒன்று ஏனையவற்றிலும் மிக நீளமானது.
சூலக வட்டம் : 3 பகுதியானது. சூல்தண்டு முதலில் சுருண்டு இருக்கும். சூல் முடி உருண்டையானது.
கனி : 3 சிறகமைப்பையுடைய சமாரா எனப்படும். விதைகள் உருண்டையானவை. வித்திலைகள் இரண்டும் வேறான நீளமுள்ளவை.

பற்றுக்கொம்பு கொண்டு பந்தரிட்டு வளர்ப்பதுண்டு. இதனைக் கம்பர் ‘மாதவிப் பொதும்பர்’ என்பர்.


  1. சீ.சிந் : 1322 : 4
  2. சீ.சிந் :1208
  3. சிலப்பதிகாரம் 5 : 190
  4. சீ.சிந் : 1208