சங்க இலக்கியத் தாவரங்கள்/023-150

 

விளா-வெள்ளில்
பெரோனியா எலிஃபாண்ட்டம் (Feronia elephantum,Corrn.)

விளா மரம் குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லையாயினும் பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது.

யாப்பிலக்கணத்தில் ஈரசை முதலாக நான்கசைச் சீர்களின் வாய்பாட்டில் முறையே ‘கருவிளம்’, ‘கருவிளந்தண் பூ’ பயிலப்படும். இதற்கு ‘வெள்ளில்’ என்ற பெயரும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : விளா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : வெள்ளில்
ஆங்கிலப் பெயர் : உட்ஆப்பில்
தாவரப் பெயர் : பெரோனியா எலிஃபாண்ட்டம்
(Feronia elephantum,Corrn.)


விளா-வெள்ளில் இலக்கியம்

விளாமரம் பிற்காலத்தில் கருவிளா எனப்பட்டது. இதனைத் தாவரவியலில் ஃபெரோனியா எலிஃபாண்டம் (Feronia elephantum, Corrn) என்பர். வில்வம் எனப்படும் கூவிளத்தைத் தாவரவியலில் ஈகிள் மார்மிலோஸ் (Eagle marmelos, Corrn.) என்பர். இவை இரண்டும் ரூட்டெசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

யாப்பிலக்கணத்தில் தேமா, புளிமா என்பன சீர்களைக் குறிக்கப் பயன்படுவன போலவே கருவிளம், கூவிளம் என்பனவும் குறிக்கப் பெறும்.

கருவிளம் : நிரை நிரை
கூவிளம் : நேர் நிரை
கருவிளங்காய் : நிரை நிரை நேர்
கூவிளங்காய் : நேர் நிரை நேர்
கருவிளங்கனி : நிரை நிரை நிரை
கூவிளங்கனி : நேர் நிரை நிரை
கருவிளந்தண் பூ : நிரை நிரை நேர் நேர்
கூவிளந்தண் பூ : நேர் நிரை நேர் நேர்

கருவிளம்

சங்க இலக்கியத்தில் விளாமரமும், விளங்கனியும் பேசப்படுகின்றன. அன்றி, விளாமரம் வெள்ளில் என்றும் கூறப்படுகின்றது.

“பார்வை யாத்த பறைதாள் விளவின்
 நீழல் முன்றில் நிலவுரல் பெய்து”
-பெரும்பா. 95-96

இவ்வடிகட்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘பார்வை மான் கட்டி நின்று தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோன்றிய நிலஉரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து’ என்று உரை கூறுவார்.

“விளம்பழங் கமழும் கமஞ்சூழ் குழீஇ”-நற். 12 : 1

என்ற இதனால் தயிர்த் தாழியில் நறுமணம் கமழுதற்கு அதனுள் விளாம்பழத்தை வைத்து மணமேற்றுவர் என்று தெரிகிறது.

“வெள்ளில் குறுமுறிகிள்ளுபு தெறியா”-திருமு. 37

என்ற இதனால் விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகு பெற, ஒருவர் மேல் ஒருவர் தெறித்து மகிழ்வர் என்று அறியலாம்.

இவையன்றிக் கபிலர்குறிஞ்சிப் பாட்டில் விளவினது மலரைக் கூறவில்லை.

“மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்றவிடத்து நச்சினார்க்கினியர் ‘நீலமணிபோலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்று உரை கண்டார். ஈண்டு கருங்காக்கணம் எனப்படும் கருவிளையினது மலரே குறிப்பிடப்படுகின்றதல்லது கருவிளாவின் பூவன்று.

கருவிளம்
(Feronia elephantum)

அவர் கருவிளம்பூ என்றது சந்தி நோக்கிப் போலும். மேலும், விளவினது பூ மிகச் சிறியது. அது நீலமணி போன்றதும், கரிய கண்ணை ஒத்ததுமன்று. அன்றியும், நான்கு சீர் அசைக்குக் கருவிளந்தண் பூ, கூவிளந்தண் பூ எனக் கூறப்படுவதல்லால், கருவிளம்பூ, கூவிளம்பூ என்னும் மூவகைச் சீரைக் கூறுவதில்லை.

விளா எனவும், வெள்ளில் எனவும் வழங்கப்பட்ட விளா மரத்தைப் பிற்காலத்தில் விளா என்றும், கருவிளா என்றும், கருவிளம் என்றும் வழங்கினர்.

“செண்பகம் கருவிளம் செங்கூதாளம்” என்று கூறுவர் இளங்கோவடிகள் .[1]

விளவின் குறுஞ்செடியில் முட்கள் நிறைந்திருக்கும். இதனுடைய கட்டை மஞ்சள் கலந்த வெண்மையான நிறத்தில் உறுதியாக இருக்கும். தமிழ் நாடெங்கும் வளர்கிறது. இதன் கனி சுவையுடையது, மணமுள்ளது.

விளா—வெள்ளில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : டிஸ்சிஃபுளோரே (Disciflorae)
தாவரக் குடும்பம் : ரூட்டேஸி (Rutaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஃபெரோனியா (Feronia)
தாவரச் சிற்றினப் பெயர் : எலிஃபேண்டம் (elephantum)
தாவர இயல்பு : மரம் 15 மீ - 20 மீ. உயரமாகக் கிளைத்து வளரும் வலிய மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். ஆற்றுப் படுகையிலும், நீரற்ற வறண்ட நிலத்திலும் வளரும்.
இலை : மாற்றடுக்கில் சிறகுக் கூட்டிலை, 5-7 சிற்றிலைகள் காம்பற்று எதிரடுக்கில் அமைந்திருக்கும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி, நுனி வளர் பூந்துணராகத் தோன்றும்.
மலர் : பல பாலானவை. கருஞ்சிவப்பு நிறம்.
புல்லி வட்டம் : 5 சிறு பற்கள் போன்ற புல்லிகள் தட்டையானவை. முதிர்ந்தவுடன உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 திருகு இதழமைப்பில் விரிந்திருக்கும் மிகச் சிறிய இதழ்கள். 4-6 வரையில் இருப்பதுமுண்டு.
வட்டத் தண்டு : வட்டத் தண்டு குட்டையானது
மகரந்த வட்டம் : 10-12 மகரந்தத் தாள்கள் சிலவற்றில் நிறைவின்றியுமிருக்கும்; வட்டத் தண்டினைச் சுற்றிச் செருகப்பட்டிருக்கும்.
மகரந்தத் தாள் : மகரந்தத் தாள்களின் அடிப்புறம் விரிவடைந்து இருக்கும். விளிம்பிலும் முகப்பகுதியிலும் விரல்கள் போலிருக்கும். மேற்புறம் மென்மையானவை.
மகரந்தப் பை : மெலிந்து நீள் சதுரமாயிருக்கும்
சூலக வட்டம் : சூற்பை நீள் சதுரமானது, 5-6 அறைகளை உடையது. நீளத்தில் ஓர் அறையுடன் இருக்கும் சூல்தண்டு இல்லை. சூல்முடி நீள் சதுரமானது.
சூல் : எண்ணற்றவை. பல அடுக்குகளில் உட்சுவரில் ஒட்டிய சூல் ஒட்டு முறையில் திரண்டிருககும்.
கனி : பெரிய உருண்டை வடிவான (அ) முட்டை வடிவான சதைக்கனி, ஒவ்வோர் அறையும் பல விதைகளுடன் இருக்கும்; ஓடு வழவழப்பாயும், மரக் கட்டை போலும் இருக்கும்.
விதைகள் : எண்ணற்றவை. மணமுள்ள சதைப் பற்றில் காணப்படும். நீள் சதுரமானவை. அமுங்கியிருக்கும்: முளை சூழ் தசையில்லை.
வித்திலை : தடிப்பாகவும், சதைப்பாங்குடனும் இருக்கும்.

விளா மரமும் வில்வ மரமும் (கருவிளம்-கூவிளம்) தொன்று தொட்டு வளர்வன; இந்திய நாட்டைச் சேர்ந்தன என்பர். இவ்விரு மரங்களும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதோடு, கீழ்க்கண்ட பொதுவியல்புகளும் உள்ளன.

  1. உயர்ந்து வளருதல்
  2. முட்களை உடையதாதல்
  3. தோட்டங்களிலும், பிறவிடங்களிலும் ஒழுங்கற்று வளர்தல்
  4. வளமற்ற, வறண்ட நிலத்திலும் வளர்தல்
  5. விதைகளைக் கொண்டே வளர்தல்
  6. ஐந்தாண்டுகளில் கனி தருதல்
  7. வலிமையான கனியுறை உடைமை முதலியன.

விளவின் கனி நறுமணமும் சுவையும் உடையது. சுவைத்து உண்ணப்படுவது. இதில் 2-3 விழுக்காடு ஆஸ்கார்பிக் அமிலமும் 7.25 விழுக்காடு சர்க்கரையும் உள்ளது.

கூவிளங்கனி, குருதி கலந்த வயிற்றுப்போக்கு நோய்க்கு நல்ல மருந்து. இதன் குரோமோசோம் எண் 2n = 18 என பானாஜிபால் (1957), இராகவன் (1957), நந்தா (1982) என்போரும்.2n = 36 என, சானகி அம்மாளும் (1945) கூறியுள்ளனர்.


  1. சிலப் : 22 : 40