சங்க இலக்கியத் தாவரங்கள்/025-150

குரவம்–குரா, குரவு, குருந்து
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)

“பயினி வானி பல்லிணர்க்குரவம்” என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் (குறிஞ்: 69). குரவ மரம் தனித்தும், கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளரும். இளவேனிற் காலத்தில், அரவின் பற்களையொத்த அரும்பீன்று மலரும். மலர் நறுமணமுடையது. இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.

சங்க இலக்கியப் பெயர் : குரவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருந்து, குரா, குரவு
பிற்கால இலக்கியப் பெயர் : குருந்தம்
தாவரப் பெயர் : அடலான்ஷியா மிசியோனிஸ்
(Atelantia missionis,Oliv.)

குரவம்–குரா, குரவு, குருந்து இலக்கியம்

‘குரவம்’ ஒரு சிறு மரம். இதனைக் குரா, குரவு, குருந்தம், குருந்து என்றெல்லாம் கூறுவர். நிகண்டுகள் இதற்குப் புன எலுமிச்சை, கோட்டம், குடிலம், கோபிதாரம் என்ற பெயர்களைக் கூட்டுகின்றன.

இம்மரம் கோவலரின் கொல்லைக் குறும்புனத்தில் வளருமென்றும், இதன் அடிமரம் குட்டையானதென்றும், குவிந்த இணரையுடைய தென்றும், வெள்ளிய பூக்களை உடையதென்றும் இளந்தச்சனார் கூறுவர்.

“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
 குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ”
-நற்: 266 : 1-2

இருப்பினும் இதன் கிளைகள் ஓங்கி நீண்டு வளரும் எனவும், இதன் நீழலில் தனது குட்டியுடன் பெண்மான் இரலையுடன் வந்து தங்கும் என்றும், இதன் கிளைகளில் வதியும் குயிலினம் அங்கிருந்து கூவுமென்றும் கூறுமாறு காணலாம்.

“அரவ வண்டினம் ஊது தொறும் குரவத்து
 ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப”

-அகநா. 317 : 10-11

“சிறுமறி தழீஇய நெறிநடை மடப் பிணை
 வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
 அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய”

-அகநா: 304 : 8-10

“நின்நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண்”[1]
“.... .... .... .... .... .... .... அலரே
 குரவ நீள் சினை உறையும்
 பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே”
-ஐங்: 369 : 3-5

இம்மரம் கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளர்ந்து இளவேனிற் காலத்தில் அரவின் பற்களை ஒத்த அரும்பீன்று மலரும் என்பர்.

“ஓங்கு குருந்தொடு அரும் பீன்று பாங்கர் 
 மரா மலர்ந்தன”
[2]
“.... .... .... .... .... .... .... குரவு மலர்ந்தது
 அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்”
-அகநா: 97 : 16-17
“அரவு எயிற்றன்ன அரும்பு முதிர் குரவின்
 தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ
  குயில் குரல் கற்றவேனிலும் துயில் துறந்து”

-அகநா: 237  : 3- 5

“குரவம் மலர மரவம் பூப்ப
 சுரன் அணி கொண்டகானம்”
-ஐங்: 257 : 1-2

“பல்வீ படரிய பசுநனைக் குரவம்
 பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிகொளாஅ”

-குறுந்: 341 : 1-2


குருந்த மரம் குவிந்த இணரை உடையது. இதனுடைய போது செழுமையானது. வெண்மை நிறமான இதன் மலரில் நறுமணம் வீசும். பூக்காம்பு குட்டையானது. குறுமலர்கள் பல ஒருங்கே பூக்கும். இம்மலரைத் தெய்வ மலராகத் திருவாசகமும் திருவாய் மொழியும் கூறுகின்றன. இடையர் மகன் சூடிய குறிப்பும் நற்றிணையில் காணப்படும்:

“குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ”-நற்: 266 : 2

“குரவு வார் குழல் மடவாள்”[3]

“குரா நற்செழும்போது கொண்டு வராகத்
 தனி உருவன் பாதம் பணியுமலர்”
[4]

“பல்வீ படரிய பசுநனைக் குரவம்”-குறுந்: 341

“குரவத்து ஓங்கு சினை நறுவீ”-அகநா: 317 : 11

“ஆடுடை இடைமகன் சூட”-நற்: 266 : 2

குரவ மரத்தின் காய் சற்றுப் பருத்து நீண்டு சாம்பல் நிறமாகத் தொங்கும். இதனைப் பாவையாகக் கொண்டு மகளிர் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி விளையாடுவர். இதற்குக் ‘குரவம் பாவை’ என்று பெயர். இதனைச் ‘செய்யாப் பாவை’ என்பதும் உண்டு. இளவேனிற் காலத்தில் இதன் காயைக் கொய்து விளையாடுவர் என்பர்:

“அவரோ வாரார் தான் வந்தன்றே
 நறும்பூங் குரவம் பயந்த
 செய்யாப் பாவை கொய்யும் பொழுதே”

-ஐங் : (இளவேனிற்பத்து) 344


இக்குருந்த மரத்தின் நீழலின் இறைவன் குருவடிவாக எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டான் என்று மாணிக்க வாசகர் நெஞ்சுருகப் பாடுவார்.

குரவம்
(Atalantia missionis)

“செடிகொள் வான் பொழில் சூழ்
 திருப்பெருந்துறையில்
 செழுமலர்க் குருந்தம் மேவிய
 அடிகளே அடியேன் ஆதரித்தழைத்தால்
 அதெந்துவே என்றருளாயே.”
[5]

குரவம்—குரா, குரவு, குருந்து தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தது. இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி
தாவரப் பேரினப் பெயர் : அடலான்ஷியா
தாவரச் சிற்றினப் பெயர் : மிசியோனிஸ்
தாவர இயல்பு : சிறுமரம், முள் அடர்ந்தது
தாவர வளரியல்பு : மீசோபைட். வறண்ட நிலத்திலும், காடுகளிலும் வளரும். என்றும் தழைத்து வளரும்.
இலை : 3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை யெனினும் ஒரே ஒரு நுனியில் உள்ள சிற்றிலை மட்டும் சற்று மங்கிய பச்சை நிறமானது. பக்கத்திலிருக்க வேண்டிய சிற்றிலைகள் இரண்டும் அருகி விட்டன. எனினும் இலைக் குருத்துகள் செதில்களாகக் காணப்படும். இலைச் சருகு மங்கிய கறுப்பு நிறமாக மாறும்.
இலை நரம்பு : சிற்றிலையில் 8-10 இணையான நரம்புகள் வெளிப்படையாகத் தோன்றும்.
மலர் : வெண்மை நிறமானது. பல்லிணர்க் குரவம் (குறிஞ். 69) என்புழி பல இதழ்களை உடைய குரவம்பூ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார். மலர்க்காம்பு சிறியது. நறுமணம் உடையது.
புல்லி வட்டம் : 5 நுண் பற்களை உடையது. பசிய புறவிதழ்கள் இணைந்தது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குழல் போல் இணைந்தது. மேற்புறத்தில் மடல் விரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 6-8 மகரந்தக் கால்கள் அடியில் மட்டும் பருத்திருக்கும். தாதுப் பைகள் நீண்டும், சற்று அகன்றும் தோன்றும்.
சூலக வட்டம் : 2-4 சூலிலைகளை உடையது. சூல் தண்டு தடித்தது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெரிய நீள் உருண்டை வடிவான சதைக்கனி. கனியுறை வலியது. விதை முட்டை வடிவானது. விதையுறை மெல்லியது. விதையிலைகள் சதைப் பற்றுடையவை.

இதன் அடிமரம் சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமானது. வலிமை உள்ளது. நீலகிரி, ஆனைமலை, திருவிதாங்கூர் முதலியவிடங்களில் காணப்படுமென்பர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணிக்கப்படவில்லை.

  1. திணைமா . நூ . 70 : 1
  2. திணை. மொ . ஐம்: 13
  3. திருவாச: 5 : 17
  4. திருவாய். இயற்பா : 2 : 31
  5. திருவா : 29 : 5. 3-4