சங்க இலக்கியத் தாவரங்கள்/029-150

 

வேம்பு
அசாடிராக்டா இன்டிகா (Azadirachta indica,A.Juss.)

வேம்பு எனச் சங்க இலக்கியங்கள் கூறும் வேப்ப மரத்தின் பூ பாண்டிய முடி மன்னர்களின் குடிப் பூவாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. (தொல் : பொ : 60 : 2-5)

சங்க இலக்கியப் பெயர் : வேம்பு
தாவரவியற் பெயர் : அசாடிராக்டா இன்டிகா
(Azadirachta indica,A.Juss.)
தாவரக் குடும்பம் : மீலியேசி

தென் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளரும் இம்மரம், பல்லாண்டுகட்கு வாழும் இயல்பிற்று. மரம் கட்டிட வேலைக்குப் பயன்படும். விதையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் மருந்துக்குப் பயன்படும். இதன் இலைகள் அம்மை நோயினைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை.

வேம்பு இலக்கியம்

தென் தமிழ் நாட்டினை முறை செய்து காத்த முடி மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர்கட்குரிய குடிப்பூக்கள் மூன்று.

சேரனுக்குப் பனம்பூ,
சோழனுக்கு ஆர்ப்பூ (ஆத்திப்பூ),
பாண்டியனுக்கு வேப்பம்பூ

மன்னர்கள் மட்டுமன்றி வீரர்களும் இப்பூக்களைச் சூடிக் கொள்வர். இவ்வீரர் இன்ன அரசனைச் சார்ந்தவர் என்று வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டிப் போரின் போது அவரவர் பூக்களைச் சூடிக் கொண்டு ஆர்ப்பர். இதனைத் தொல்காப்பியம் விளக்கும்.

“வேந்திடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ்
 போந்தை, ஆரே, வேம்பென வருஉம்
 மாபெருந் தானை மலைந்த பூவும்”

-தொல். பொருள்: 60 : 2-5

மேலும், ‘மூவேந்தர்கள் தமது குடிப் பூக்களைச் சூடிக் கொண்டு வரினும்’ என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.

“................ கருஞ்சினை
 வேம்பும், ஆரும், போங்தையும் மூன்றும்
 மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்”
-புறநா: 338 : 5-7

வேம்பு ஒரு பெரிய மரம். இதில், கருவேம்பு, நில வேம்பு, மலை வேம்பு, சருக்கரை வேம்பு எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, வேம்பு என்பது கருவேம்பைக் குறிக்கும் என்பதைப் பின் வரும் அடிகளிற் காணலாம்.

“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்”-குறுந்: 24 : 1

“கருஞ்சினை விறல் வேம்பு”-பதிற்: 49 : 16

வேப்பம்பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூக்கும் இயல்பிற்று. இது ‘கவரி போல் பூ பூக்கும்’ என்பது வழக்கு. இதனைப் பாலை நிலப் பூவென்பர். இளவேனிற் காலத்தில் பூக்கும். நல்லதொரு மணம் உள்ளது. புத்தாண்டில் இதனைச் சூடியும், வேப்பம்பூச் சாறு கூட்டியுண்டும் மகிழ்வர்.

புறப்பணிக்குப் பிரிந்த தலைவன் வந்து சேரவில்லை. தலைவி இளவேனிற் காலம் வந்ததையுன்னி உள்ளம் வெதும்புகின்றாள். வீட்டு முன்றிலில் வேம்பு பூத்துக் குலுங்கி ஆண்டின் புதிய வருவாயினை அறிவிக்கின்றது. அதனைக் கொய்து சூடாமலும், வேம்பின் பூக்கொண்டு சாறு வைக்காமலும், பூக்கள் வறிதே கழிகின்றதை அவளால் தாங்க முடியவில்லை.

“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
 என்ஐ இன்றியும் கழிவது கொல்லோ”
-குறுந்: 24 : 1-2

என்று கூறிக் கவல்கின்றாள். மேலும் இம்மலர்கள் உதிர்ந்து கொட்டுகின்றன. இளவேனில் முடியும் அறிகுறியாகக் காணும் தலைமகள், “அவன் வரவில்லையே” என்று கூறி ஏங்குகின்றாள் என்பது இளவேனிற்பத்து.

“அவரோ வாரார் தான்வந் தன்றே
 வேம்பின் ஒண்பூ உறைப்பத்
 தேம்படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே”
-ஐங்: 350

வேம்பின் பூவைத் தாராக்கி மார்பிலும், கண்ணியாக்கித் தலையிலும், பாண்டிய குலத்தவர் சூடினர். அதனால் பாண்டிய மன்னர், “கருஞ்சினை வேம்பின் தெரியலோன்” (புறநா : 45 : 2) எனப்பட்டான்.

பாண்டிய மன்னர் இப்பூவைக் காட்டிலும் இதன் இளந் தளிரை (குழை)யே மிகுதியும் சூடினர்; அணிந்தனர்; பயன் கொண்டனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கன்னிப் போருக்குப் புறப்பட்டான். மதுரை மூதூரின் வாயிலில் அமைந்த குளத்தில் நீராடினான். பொது மன்றத்து வேம்பின் குழையைச் சூடினான். வெற்றி மடந்தையை நாடிப் புறப்பட்டான் என்கிறார் இடைக்குன்றூர் கிழார்.

“மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
 மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
 தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
 வெம்போர்ச் செழியனும் வந்தனன்”
-புறநா : 79 : 1-4

“.... .... .... .... .... .... .... .... .... திரள் அரை
 மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
 ஒலியல் மாலையொடு பொலியச் சூடி”
-புறநா : 76 : 3-7

பாண்டியன் நெடுஞ்செழியன் போர் முடிந்த நாள் இரவில் புண்பட்டுப் பாசறையில் உள்ள வீரர்களைக் கண்டு ஆறுதல் சொல்லச் செல்கின்றான். ஒவ்வொருவரையும் காட்டுதற்குப் படைத் தலைவன் மன்னனை அழைத்துச் செல்கின்றான். அவன் கையில் வேல் ஒன்றுள்ளது. அதன் தலையுச்சியில் வேப்பிலை செருகப்பட்டுள்ளது என்று கூறும் நெடுநல்வாடை.

“வேம்புதழை யாத்த நோன்காழ் எஃகமொடு
 முன்னோன் முறைமுறைகாட்ட”
-நெடுந: 176-177
(முன்னோன் - படைத்தலைவன்)

அகத்துறையில் வெறியாட்டு அயரும் வேலன் வேப்பிலை சூடிக் கொள்வான் என்று குறிப்பிடுகிறது அகநானூறு.

“வேம்பின், வெறிகொள் பாசிலை நீலமொடுகுடி”
-அகநா 138 : 4-5


“வீட்டின் முகப்பிலும் வேப்பிலை செருகப்படுவதை இலக்கியங்கள் கூறு”மென்பர்.[1]

மேலும் வேப்பிலை குழந்தைகட்கு கடிப்பகையாகச் சூட்டப்படும் என்று கூறும் பெரும்பாணாற்றுப்படை.

“கோட்டினர் வேம்பின் ஓடுஇலை மிடைந்த
 படலைக் கண்ணி”
-பெரும் : 59-60

வேப்பமரம் பழையன்மாறன் என்ற பாண்டியர்க்குக் காவல் மரமாக அமைந்தது. இதனை வெட்டி வீழ்த்திக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வென்றதைப் பரணர் பாடுகின்றார்.

“பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
 முழ்ஆரை முழுமுதல் துமியப் பண்ணி”

-பதிற். பதிகம் : 5 : 14-15


வேப்பமரம் ஊர் மன்றத்தில் வளர்க்கப்பட்டு வருவதை முன்னர்க் கூறினாம். ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரையிலும் வேப்ப மரம் முதிர்ந்து வளரும். மிக முதிர்ந்த இதன் அடி மரத்தில் பால் சுரக்கும். இப்பால் மிகவும் சுவையானது. நோய் அணுகாமல் உடலுக்கு உறுதி தருவது. இதனைப் பல ஆண்டுகட்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் கடலில் உள்ள மணி பல்லவத் தீவில் (நயினார்த் தீவு) யாம் அருந்தியதுண்டு.

வேப்பிலை பொதுவாக அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. முதிர்ந்த வேப்ப மரம் கட்டிடவேலைக்குப் பயன்படும். இம்மரத்தைக் கரையான் (Termites) உண்பதில்லை. வேப்பிலையை இந்நாளில் மாரியம்மன் பச்சிலை என வழங்குவர்.

வேம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே(Disciflorae)
தாவரக் குடும்பம் : மீலியேசி (Meliaceae)
தாவரப் பேரினப் பெயர் : அசாடிராக்டா (Azadirachta)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
சங்க இலக்கியப் பெயர் : வேம்பு
தாவர இயல்பு : மரம், உயர்ந்தும், கிளைத்துப் பரவி அகன்றும், நெடு நாளைக்கு வாழும் பெருமரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட் (Mesophyte)
இலை : கூட்டிலை. 9 முதல் 15 வரையிலான சிற்றிலைகள் இறகமைப்பில் இருக்கும்.
சிற்றிலை : நீண்ட குத்துவாள் வடிவினது. பல் விளிம்புடையது. சற்று வளைந்துமிருக்கும். நடு நரம்பு தெளிவாகத் தோன்றும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் நீண்டு கிளைத்த கலப்புப் பூந்துணர்.
மலர் : சிறு மலர்களை உடையது. வெள்ளிய நிறம். மணமுள்ளது.
புல்லி வட்டம் : ஐந்து பிளவானது.
அல்லி வட்டம் : ஐந்து, மெல்லிய வெளிய சிறு இதழ்கள் புல்லிக்கு மேல் விரிந்து காணப்படும்.
மகரந்த வட்டம் : அல்லிகளை விடக் குட்டையான மகரந்தக் குழல் நீண்டிருக்கும். மேற்புறத்தில் குழல் 9-10 விளிம்புகளை உடையது. குழலுக்குள் 9-10 மகரந்தப் பைகள் ஒட்டியிருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 3 செல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது, நீளமானது.
சூல் முடி : குறுகிய தண்டு போன்றது. மூன்று பிளவானது. ஒவ்வொரு சூலக அறையிலும் 2 சூல்கள்.
கனி : ஒரு விதைவுள்ள (பெர்ரி) சதைக்கனி, 2 வித்திலைகள் தடித்தவை. சூல்முளை மேலானது.


வேப்ப மரம் மிகச் சிறந்த வலிமை வாய்ந்த மரம். கட்டிட வேலைக்குப் பயன்படும். பட்டை, இலை, மலர், விதை முதலியவற்றில் வேப்ப எண்ணெய் உள்ளது. எண்ணெய், உணவுக்கும், விளக்கெரிக்கவும், மருந்துக்கும் பயன்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n= 30 என மேன்ஜெனட், எஸ் , மேன்ஜெனட், ஜி, 1958, 1962 என்போர் அறுதியிட்டனர்.

 

  1. கோவை இளஞ்சேரனார்-இலக்கியம் ஒரு பூக்காடு-பக் : 338