சங்க இலக்கியத் தாவரங்கள்/037-150

புன்கு
பொங்காமியா கிளாப்ரா (pongamia glabra,Vent.)

சங்க நூல்கள் குறிப்பிடும் ‘புன்கு’ என்னும் சிறுமரம் மிக அழகானது. என்றும் தழைத்து இருப்பது. செந்நெல்லின் பொரி போன்ற செந்நிறங் கலந்த வெள்ளிய பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவரப் பெயர் : பொங்காமியா கிளாப்ரா
(pongamia glabra,Vent.)

புன்கு இலக்கியம்

புன்கு’ மரத்தின் பூக்கள் செந்நிறப் பொரியை ஒத்தவை. மிகச் சிறியவை. தலைவியின் ஊரிலுள்ள நீர்த் துறையில் புன்கு பூத்து, மலர்கள் மணல் மேல் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடம் வேலன் வெறியாட்டு அயரும் பொரி சிந்திய வியன்களம் போன்றுள்ளது. தலைவியை அவ்விடத்திற் கண்ட தலைவன் அவளது முன் கையைப் பற்றிக் கொண்டு தெய்வ மகளிரைச் சுட்டிக் காட்டி, அவளை மணந்து கொள்வதாகச் சூள் உரைக்கின்றான். நெடு நாளாகியும் அவன் வரைந்து கொள்ளவில்லையே என்று தலைவி வருந்துகின்றாள். இதனை அறிந்த தோழி, தலைவனை நோக்கி “நீ கூறிய சூளுரைகள் எம்மைத் துன்புறுத்துவதாயின” என்று கூறுகின்றாள்:

“எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
 நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
 வேலன் புனைந்த வெறி அயர்களந் தொறும்

 செந்நெல் வான் பொரி சிதறியன்ன
 எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
 நேரிறை முன்கை பற்றிச்
 சூர்அர மகளிரொடு உற்ற சூளே”
-குறுந். 53

பூத்த ‘புன்கு’ மலர்கள் சிதறிக் கிடப்பதைப் புலவர்கள் நெற் பொரிக்கு உவமிக்கும் பல சங்கப் பாடல்கள் உள்ளன.

“. . . . . . . . . . . . . . . . . . . . பொரி எனப்
 புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய”
-அகநா. 116 : 5-6

“பொரிஉரு உறழப் புன்கு பூஉதிர”-கலி. 33 : 11

“பொரி சிதறி விட்டன்ன புன்கு”[1]

“புன்குபொரி மலரும் பூந்தண் பொழிலெல்லாம்
 செங்கண் குயில் அகவும்”
[2]

எனினும், புன்கம்பூ முழுவதும் வெண்ணிறங் கொண்டதன்று. இப்பூவின் தலைப் பகுதியில் சிறிய செந்நிறம் காணப்படும். பிற நெல்லின் பொரி போலாது செந்நெற் பொரியில்தான் இச்செந்நிறம் கூறப்படுகின்றது. இதனை மேற்குறித்த குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. இதற்கு விளக்கம் தருகின்றார் திருத்தக்கதேவர்.

“செந்தலையை வெண்களைய புன்கம் பொரியணிந்தவே”[3]

புன்கு பூத்த போது இச்சிறு மரம் மிக அழகாகத் தோன்றும். இதில் செங்கண் குயில் கூடி அகவும்; இதன் தளிர்கள் பளபளப்பானவை, மஞ்சள் கலந்த செந்நிறமானவை; அழலை ஒத்தவை. இவ்விளந் தளிர்களை மகளிர் தமது மார்பகத்தில் அப்பிக் கொள்வர். தமிழ் இலக்கியம் இதனைத் ‘திமிர்தல்’ என்று கூறும்.

“எழில்தகை இளமுலை பொலியப்
 பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”
-ஐங்: 347 : 2-3

“பொரிப்பூம் புன்கின் அழற்றகை ஒண்முறி
 சுணங்கு அணிஇளமுலை அணங்கு கொளத்திமிரி”

-நற். 9 : 5-8


புன்கு தாவர அறிவியல்

|
தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை
தாவரத் துணைக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : பொங்காமியா (Pongamia)
தாவரச் சிற்றினப் பெயர் : கிளாப்ரா (glabra)
சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவர இயல்பு : சிறு மரம், 7-10 மீ. உயரமானது. நன்கு கிளைத்துத் தழைத்து வளர்வது. என்றும் பசிய இலைகளையுடையது.
இலை : சிற்றிலைகளை உடைய கூட்டிலை. எதிரடுக்கானது. இலைச் செதில்கள் சிறியவை. சிற்றிலைகள் நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும். கொத்தாகக் காணப்படும்.
மலர் : அவரைப்பூப் போன்றது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. விரைவில் உதிர்ந்து விடும்.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்கள் இணைந்து புனல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5, பதாகை இதழ் சற்று முட்டை வடிவானது. மேலே மடிந்து வளைந்திருக்கும். சிறகிதழ்கள் இரண்டும் இரு பக்கத்திலும் உள்ளன. ஒரு புறமாக நீண்டிருக்கும். அடியில்
படகிதழ்கள் ஒட்டியிருக்கும். படகிதழ்கள் இரண்டும் நுனியில் ஒட்டியிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் ஒன்றாய் ஒரு கட்டாக அடியில் இணைந்து இருக்கும். ‘வெக் சிலரி’ தாதிழை அடியிலும் மேலும் பிரிந்திருக்கும், தாதுப் பைகள் சீரானவை.
சூலக வட்டம் : சூல்தண்டு உள்வளைவானது. சூல்முடி குல்லாய் போன்றது. ஒரு சூலிலைச் சூலகம். இரு சூல்கள் உள.
கனி : வெடியாத உலர்கனி, ‘பாட்’ எனப்படும். தட்டையானது. அடியிலும், நுனியிலும் குறுகி இருக்கும். 5-6×2-3 செ.மீ. ஒரு விதை. சிறு நீரக வடிவானது. தடித்தது.

இதன் மரம் வலியது; வெண்ணிறமானது. வண்டிச் சக்கரங்கள் செய்வதற்கும் பயன்படும். இதன் விதையில் ஒரு வித எண்ணெய் உளது. இது விளக்கெரிக்கவும், மருந்தாகவும் பயன்படும். இம்மரப்பட்டை தடித்தது; கரிய பழுப்பு நிறமானது. இதனை மருந்துப் பொருள் என்பர்.

பொங்காமியா’ என்ற இப்பேரினத்தில் ‘கிளாப்ரா’ என்ற சிற்றினம் மட்டும் ஆற்றோரங்களிலும், வெற்றிடங்களிலும் தமிழ் நாட்டில் பரவலாக வளர்கிறது. 3000 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் காணப்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை : 2n = 22 என பட்டேல், ஜே. எஸ். நாராயணா (1937) முதலியோர் கணக்கிட்டுள்ளனர்.


  1. திணைமா. நூ : 64 : 4
  2. திணை. மொ : 14 : 1-2
  3. சீ. சிந் : 1649 :4