சங்க இலக்கியத் தாவரங்கள்/039-150

 

கொள்
டாலிகஸ் பைபுளோரஸ் (Dolichos biflorus,Linn.)

கொள் இலக்கியம்
மாங்குடி கிழார் என்னும் புறநானூற்றுப் புலவர், உணவுப் பொருள்களில் வரகு, தினை, கொள், அவரை என்ற இந்நான்கு அல்லதில்லை என்று பாடியுள்ளார்.

“கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
 சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
 இந்நான் கல்லது உணாவும் இல்லை
-புறநா. 335 : 1- 3

வரகு விதைப்பதற்காகக் கரம்பையாகக் கிடந்த நிலத்தை உழுகிறார்கள். அங்கே கொள்ளுக் கொடி முளைத்திருக்கிறது என்றும், கொள்ளொடு பயறும், பாலும் சேர்த்துப் பாற்சோறு அட்டு உண்பர் என்றும் சங்க நூல்களில் அறிய முடிகிறது.

“வெள்வரகு உழுத கொள்ளுக் கரம்பை-பதிற். 75 : 11

“கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
 கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை

(மிதவை-பாற்சோறு)

-அகநா 37:12-13

கொள்ளுக் கொடி முதலில் செடியாக நேரே வளரும். பின்னர் கொடியாகிப் படரும். குதிரைக்குக் ‘கொள்’ நல்லுணவுப் பொருள். அதற்காகவே கொள் பயிரிடப்படுகிறது.

கொள் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : டாலிகஸ் (Dolichos)
தாவரச் சிற்றினப் பெயர் : பைபுளோரஸ் (biflorus)
சங்க இலக்கியப் பெயர் : கொள்
உலக வழக்குப் பெயர் : கொள்ளுச் செடி
ஆங்கிலப் பெயர் : (Horse gram)
தாவர இயல்பு : சிறு செடியாக வளர்ந்து பின்னர், வயல்களில் படர்ந்து வளரும் ஓராண்டுக் கொடி.
இலை : 2-3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை.
மஞ்சரி : இலைக்கோணத்தில் 1-3 மஞ்சள் நிற மலர்களைக் காணலாம்.
மலர் : மஞ்சள் நிறமானது. அவரைப்பூப் போன்றது.
புல்லி வட்டம் : மெல்லிய மயிரிழைகள் மலிந்த பசிய குழல் வடிவானது. 5 புறவிதழ்களில் மேற்புறமுள்ள இரண்டும் சற்றுக் கூம்பு போன்றவை.
அல்லி வட்டம் : பளபளப்பான பதாகை இதழ். இரு பக்கங்களிலுமுள்ள சிறகிதழ்கள் குறுகியவை.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் (1-1-9) என்ற முறையில் இருக்கும்.
சூலக வட்டம் : 1 செல்; பல சூல்கள்.
கனி : நீளமானது. 1.5-2 அங்குல நீளமும், 0.25 அங்குல அகலமும் உள்ள பசிய காய் 5-6 விதைகளை உடையது.
விதை : சற்றுத் தட்டையானது. இதன் விதைகளுக்காக இச்செடி பயிரிடப்படுகிறது. இச்செடி ஆடு மாடுகளுக்கு நல்ல உணவுச் செடி.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=20 என சென், என். கே. வித்யாபூஷன் (1959), பிரிட்சார்டு, ஏ. ஜே. கௌல்டு (1964) என்போர் கணக்கிட்டுள்ளனர்.