சங்க இலக்கியத் தாவரங்கள்/041-150

 

பிண்டி–செயலை–அசோகு
சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.)

சங்கப் புலவர்களால், பிண்டி எனவும், ‘செயலை’ எனவும் கூறப்படும் அசோகு என்பது ஓர் அழகிய மரம்; என்றும் தழைத்திருப்பது; செவ்விய தளிர்களை உடையது; செக்கச் சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது; தென்னிந்தியாவில் பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : பிண்டி
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் : செயலை
பிற்கால இலக்கியப் பெயர் : அசோகு
உலக வழக்குப் பெயர் : அசோகமரம்
தாவரப் பெயர் : சராக்கா இன்டிகா
(Saraca indica, Linn.)

பிண்டி–செயலை–அசோகு இலக்கியம்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பிண்டி, செயலை என்பன அசோகு என்ற அழகிய மரத்தைக் குறிப்பனவாகும். ‘அசோகு’ என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பிண்டி, செயலை என்ற இரு சொற்களையும் ஆளுகின்றார்.

“பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி”-குறிஞ். பா. 88
“எரிஅவிர் உருவின் அம்குழைச் செயலைத்
 தாதுபடு தண்ணிழல் இருந்தன மாக”
-குறிஞ். 104-105

(குழை-தளிர்)

திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்விரு பெயர்களையும் குறிப்பிடுகின்றார்.

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப ”
-திருமுரு. 31-32

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெவ்வரைச்
 செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்”

-திருமுரு. 206-207


மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார், பிண்டியைக் குறிப்பிடுகின்றார்.

“சினைதலை மணத்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701


இவற்றிற்கெல்லாம் உரை கூறிய நச்சினார்க்கினியர், திருமுரு காற்றுப்படையில் வரும் ‘பிண்டி’ என்ற ஓரிடத்தில் மட்டும் ‘பிண்டியினது’ என்றாராயினும், ஏனைய விடங்களிலெல்லாம் ‘பிண்டி’, ‘செயலை’ என்ற சொற்களுக்கு, ‘அசோகு’ என்றே உரை கூறியுள்ளார். இதனுடைய ஆங்கிலப் பெயர் அசோகா மரம் (Asoka Tree) என்பதாகும். இவற்றையறியாத இற்றை நாளைய விரிவிலா அறிவினர் எல்லாம் போலியால்தியா லாஞ்சிபோலியா என்ற நெட்டிலிங்க மரத்தை அசோகு என்று தவறாகக் கூறிப் பரப்பி வருவதோடன்றி, களஞ்சியங்களிலும் எழுதியுள்ளனர்.

‘பிண்டி’ எனப்படும் இவ்வசோக மரம் மலைப்பாங்கில் அழகு பொருந்த உயர்ந்து வளருமென்பர் கூற்றங்குமரனாரும், கபிலரும்.

“மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
 செயலை அந்தளிர் அன்ன . . . . . .”
-நற். 244 : 6-10

“சிலம்பின் தலையது செயலை”-ஐங். 211

மேலும், புலவர் பெருமக்கள் இதன் அடிமரம் சிவப்பு நிறமுள்ளதெனவும், பல கிளைகளையுடையதெனவும், கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவர் எனவும், கிளைகள் செவ்விய அழகிய இளந்தளிர்களையும் செவ்விய இணர்களையும் உடையன எனவும் கூறுவர்.

“செவ்வரைச் செயலை”-திருமுரு. 206

“ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை
 ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்புஎன”
-அகநா. 68 : 5-6

“. . . . . . . . . . . . . . . . . . . . அந்தளிச் செயலைத்
 தாழ்வில் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
 ஊசல்மாறிய மருங்கும்”
-அகநா. 38 : 6-8

இம்மரம் இப்போது பங்களூர் ‘லால்பாக்’ தாவரப் பூங்காவில் அருமையாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடிமரம் செம்மை கலந்த பழுப்பு நிறமானது. இதன் இலை, பல்லலகுடை கூட்டிலையாகும். சிற்றிலைகள், ஆறு முதல் பன்னிரண்டு வரையில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பசிய சிற்றிலையும், குத்துவாள் வடிவினதாய் 7-18 செ. மீ. நீளமானது. தோல் போல் சற்றுத் தடித்துமிருக்கும்.

இதன் தளிர் அழகிய சிவப்பு நிறமானது. இதனைச் செந்நிறம் ஊட்டப்பட்ட ஒளி வீசும் தளிர் எனவும், பவளச் சிவப்பானது எனவும், இத்தளிரை ஆடவரும், மகளிரும் காதில் செருகிக் கொள்வர் எனவும், இதனை மந்தி உணவாகக் கொள்ளும் எனவும் கூறுவர்.

“ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை”-அகநா. 68:5

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப”
-திருமுரு. 31-32

“அழல் ஏர் செயலை ஆம்தழை”- அகநா. 188 : 11

“சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள்”
-பரிபா. 11 : 95

“அத்தச் செயலைத் துப்புஉறழ் தண்தளிர்
 புன்தலை மந்தி வன்பறழ் ஆரும்”
-ஐங். 273 : 1-2

(அத்தம்-சிவந்த)

பிண்டியின் மலர்கள் மிகச் சிவந்த நிறமுடையவை. இவை மரக்கிளைகளில் எல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். இவ்வுண்மையைப் புலவர்கள் அங்ஙனமே கூறியுள்ளனர். இதன் இணரிலுள்ள மலர்களில் சுரும்பு மொய்க்கும் என்றும் கூறுவர்.

“சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701

“சினையெலாம் செயலை மலர-பரிபா. 15 : 31

“எரிநிற நீள் பிண்டி இணர் எல்லாம்
 வரிநிற நீள் வண்டர் பாட”
[1]

மேலும் திருமங்கையாழ்வார், ஒரு கற்பனை செய்கின்றார். ‘நெருப்பை ஒத்து மலர்ந்த இம்மலர்களைப் பார்த்த வண்டினம் மரம் எரிவதாக எண்ணி அஞ்சும்’ என்கிறார்.

“தாதுமல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
 தழல் புரை எழில் நோக்கி
 பேதை வண்டுகள் எரிவன வெருவரும்”
[2]

செக்கச் சிவந்த இதன் மலர்களையும், செவ்விய இதன் தளிர்களுடன் காதில் செருகி அணிவர் என்பர் புலவர்கள்:

“. . . . . . . . . . . . . . . . . . . ஞாலச் சிவந்த
 கடிமலர்ப் பிண்டி தன்காதில் செரீஇ”

-பரிபா. 12:87-88

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . செந்தீ
 ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ ”

-குறிஞ். 104-105


மக்களுக்கன்றி தெய்வத்திற்கும் இம்மலர் உகந்தது போலும். திருமுருகாற்றுப் படையில் முருகப் பெருமான், “செயலைத் தண்தளிர் துயல்வரு காதினன்” (206) என்பர் நக்கீரர். மற்று, மகளிரது உடல் நிறத்திற்கு இத்தளிர் உவமையாகக் கூறப்படுகின்றது.

“செயலை அந்தளிர் அன்ன என்
 மதனில் மா மெய் ”
-நற். 244 :10-11

இம்மரத்தின் தழையை மகளிர் தழையுடையாக்கி அணிந்து மகிழ்வர். தலைவன், இதன் தழையுடையைத் தலைவிக்கு வழங்குவதுமுண்டு. இங்ங்னம், இதன் தளிரும், தழையும் கொய்யப் பட்டதால் மரமே மொட்டையாகி விட்டதென்றார் ஒரு புலவர்.

அசோகு
(Saraca indica)

“திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
 செயலை முழுமுதல் ஒழிய ”
-குறுந் 214 : 4-5

இனி. இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

“மைந்தார் அசோகம் மட லவிழ் கொந்தார்
 இளவேனில் வந்தது”
[3]

இப்பிண்டியின் மலரைச் சுனையில் வளரும் நீலத்துடன் சேர்த்துப் பாடும் இரு பரிபாடல்கள் உள (15 : 30-31, 11 : 95-96). பிண்டியின் மலரைப் போன்று, இதன் தளிரும் நீல மலருடன் பிணைக்கப்படும் என்பர். ‘வையை ஆற்றில் மகளிர் நீராடினர். நீரோட்டத்தில் ஒப்பனைப் போட்டியும் நேர்ந்தது. ஒருத்தி நீல மலரைக் காதில் செருகிக் கொண்டு, மற்றொருத்தியின் முன்னே காட்சி தந்தாள். இவள், உடனே செயலையின் சிவந்த தளிரைத் தன் காதில் செருகி, எழில் காட்டினாள். செயலைத் தளிரின் செம்மை நிறம், நீல மலரில் எதிரொளித்து, அதன் நீல நிறத்தையும் பகலவன் நிறம் போலச் சிவப்பாக்கி விட்டதாம்’.

“சாய்குழைப் பிண்டித்தளிர் காதில் தையினாள்
 பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்”

-பரிபா. 11 : 95-96


சமண சமயத்தில் அருக தேவனை, பூமலி அசோகின் புனை நிழலில் அமர்ந்தவன் என்பர். மேலும், காமதேவன் கொண்ட ஐம்மலர்க் கணைகளில் அசோக மலரும் ஒன்றாம். காமனால் எய்யப்பட்டால், கவர்ச்சி ஊட்டும் அசோகு துயர் செய்யும் என்றும், மகளிர் உதைத்தால் அசோகு மரம் மலரும் என்றும் கூறுவர்.

வேனிற்காலத்தில் மலர்ந்த இம்மர நிழலில், மலர்கள் உகுத்த தாதுப் பாயலில் பூக்கொய்யச் சென்ற மகளிர் தங்கியிருத்தலைக் கபிலர்,

“தாதுபடு தண்ணிழல் இருந்தனமாக”-குறிஞ். 106

என்று மிக அழகொழுகக் கூறுகின்றார். இம்மலரின் மணத்தாலும்,

அசோகு
(Saraca indica)

செந்நிற அழகாலும் ஈர்க்கப்பட்ட வண்டினம் பிற மகரந்தச் சேர்க்கைக்குத் துணை செய்யும் என்பர்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய அசோக மரத்தைச் சராக்கா இன்டிகா (Saraca indica, L.) என்பர் தாவர நூலில். இந்திய நாட்டில் பெரிதும் காணப்படும் சிறப்புப் பற்றியே இதன் சிற்றினப் பெயர் இன்டிகா (indica) எனப்பட்டது. இது புளி, கொன்றை, ஆவாரை முதலியவற்றைக் கொண்ட சிசால்பினாய்டியே (Caesalpinoideae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தது. சராக்கா (Saraca) என்ற இப்பேரினம், ஆறு சிறு இனங்களை உடையதாய், இந்திய நாட்டில் நடுவிலிருந்து கிழக்கு இமயம் முதலாகத் தென் தமிழ் நாடு வரையிலும், ஜாவா, சுமத்திரா முதலிய கிழக்கிந்தியத் தீவுகளிலும், சீலங்கா, மலேயா, பர்மா முதலிய நாடுகளிலும் செழித்து வளர்கிறதென்பர். தமிழ் நாட்டில் சராக்கா என்ற பேரினத்தில் ஒரு சிற்றினமான இன்டிகா எனப்படும் ‘பிண்டி’ மட்டும் வளர்கின்றதென்பர் ‘காம்பிள்’.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n=24 எனக் கண்டு அட்கின்சன் (1951) கூறுவர். இம்மரம் 2000 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் கிளைத்து வளருமென்பர். இதன் அடி மரம் செவ்விய பழுப்பு நிறமானது. மலர் அழகுக்காக இம்மரம், தாவரத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.

பிண்டி–செயலை–அசோகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் (துணைக்குடும்பம்) : சிசால்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : சராக்கா (Saraca)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
ஆங்கிலப் பெயர் : அசோகா மரம் (Asoka Tree)
தாவர இயல்பு : மரம். தழைத்துக் கிளைத்துப் பரவி உயர்ந்து வளரும்.
தாவர வளரியல்பு : 2000 அடி உயரமான மலைப் பாங்கிலும் வளர்வது. மீசோபைட்.
இலை : 6-12 சிற்றிலை கொண்ட கூட்டிலை.
சிற்றிலை : பசியது. குத்துவாள் வடிவினது 7-18 செ.மீ. நீளமானது. தோல் போல் தடித்திருக்கும்.
தளிர் : மிக அழகிய செந்நிறமான தளிர்கள். கூம்பு போன்ற இலைச் செதில்கள் உள.
மஞ்சரி : பகட்டானது. காரிம் என்ற நுனி வளராப் பூந்துணர்.
மலர் : அழல் நிறச் செம்மையானது. கிளையெல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். மலர்ச் செதில்கள் விரைவில் உதிர்வன. சிவந்த மலரடிச் சிறு செதில்கள் சிறிது காலம் ஒட்டியிருக்கும்.
புல்லி வட்டம் : அல்லியைப் போன்று சிவந்த 4 இதழ்கள். அடியில் இணைந்த நீண்ட குழல் வடிவாக இருக்கும். குழலுக்குள் பிளவு பட்ட வட்டத் தட்டுள்ளது. மேலே இதழ்கள் சற்று நீண்டு அடியிதழ் தழுவியிருக்கும்.
அல்லி வட்டம் : அல்லியிதழ்கள் இல்லை.
மகரந்த வட்டம் : 7 மென்மையான தாதிழைகள் நீளமானவை. தாதுப் பைகள் சுழலும் அமைப்புடையன. நீள வாக்கில் பிளவுபட்டுத் தாது வெளியாகும்.
சூலக வட்டம் : வட்டத் தண்டில் ஒட்டியது. பல சூல்கள். சூல் தண்டு நீண்ட இழை போன்றது. சூல்முடி சிறிய குல்லாய் போன்றது.
கனி : வெடியாக் கனி. தட்டையானது. தோல் போல் தடித்த வலிய உறையுடையது.
விதை : அடி குறுகிய முட்டை வடிவானது. தட்டையாக அழுந்தியது. ஆல்புமின் இல்லாதது.

இம்மரம் செவ்விய தளிர் விட்ட போதும், மலர்ந்த போதும் மிக அழகாகவும், எடுப்பாகவும் காணப்படும். அடி மரம் சிவந்த பழுப்பு நிறமானது. மிருதுவான, மிக வலிய, என்றும் தழைத்துள்ள மரம். தென் கன்னடம், மைசூர், திருவாங்கூர் மலைப் பகுதிகளில் வளர்கிறது என்பர். இளவேனிற் காலத்தில் பூத்து, நல்ல நிழல் தரும். இம்மரங்களைக் கொண்ட அசோக வனத்தில், இம்மரத்தினடியில்தான் இராவணன் கவர்ந்து சென்ற இராமனது மனைவியாகிய சீதையைச் சிறை வைத்தான் என்று கூறும் இராம காதை.


  1. திணைமா. நூ. 63 :1-2
  2. பெரி. திரு: 2-9
  3. சிலப்: 8-வெண்பா