சங்க இலக்கியத் தாவரங்கள்/04A-150
செவ்வல்லி
நிம்பேயோ ரூப்ரா (Nymphaea rubra, Roxb.)
செவ்வல்லியும் அல்லியினத்தைச் சேர்ந்தது. இதன் இதழ்கள் எல்லாம் செந்நிறமாக இருக்கும். ‘செவ்வல்லி கொய்யாமோ’ என்பது பிற்கால இலக்கியம். இதனை ‘அரக்காம்பல்’ என்றும் கூறுவர். செந்தீயனைய செந்நிறமுடைமையின் இவ்வாம்பலை அரக்காம்பல் என்றனர். ஒரு பழனத்தில் ஒரே நேரத்தில் எண்ணற்ற இதன் மலர்கள் பூத்தன. பழனத்தில் வாழும் நீர்ப் பறவைகள், ‘பழனம் தீப்பற்றி எரிவதாக எண்ணித் தமது குஞ்சுகளை அணைத்துக் கொண்டன’ என்று கூறும் முத்தொள்ளாயிரம்.[1] இதன் ஏனைய இயல்புகள் அனைத்தும் வெள்ளாம்பலை ஒக்கும்.
மற்று, செவ்வல்லி மலரும் செங்கழுநீர் மலரும் வேறுபட்டவை.
செவ்வல்லியின் மலர் சற்று பெரியது. இதன் புறவிதழ்கள் அகத்தும் புறத்தும் செந்நிறமானவை. வெண்ணிற அல்லி மலரைப் பெரிதும் ஒத்திருத்தலின் தாவரவியலில் இதனை ‘நிம்பேயா’ என்ற பேரினத்தில் அடக்கியும் மலரில் செந்நிறத்தால் வேறுபடுதலின் ‘ரூப்ரா’ என்ற சிற்றினப் பெயர் கொடுத்தும் விளக்கப் பெறுகின்றது.
வெள்ளாம்பலைப் போன்று இவ்வரக்காம்பல் மலரிலும் நறுமணம் கமழும். தாவரவியலுண்மைகள் இவ்விரண்டிற்கும் பொதுவானவை.
(ஆம்பல், அல்லி, குமுதம்)
தாவர அறிவியல்
நிம்பேயா பூபசென்ஸ் (Nymphaea pubescens Willd.)
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | நிம்பயேசீ (Nymphaeaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | நிம்பேயா (Nymphaea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பூபசென்ஸ் (pubescens, willd.) |
தாவர இயல்பு | : | பல பருவ நீர்த் தாவரம், நீர்வாழ்க் கொடி |
தாவர வளரியல்பு | : | அருவி, ஓடை, பொய்கை முதலியவிடங்களில் நன்னீரில் வாழும் நீர்ச் செடி. |
வேர்த் தொகுதி | : | தரையில் அதிலும் சேற்றில் அடி மட்டத் தண்டு எனப்படும் கிழங்கு இருக்கும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும். |
அடி மட்டத் தண்டு | : | கிழங்கு எனப்படும் இத்தண்டில் கணு உண்டு. கணுவிலிருந்து இலையுண்டாகும். இலைக்கோணத்தில் அரும்பும், மலரும் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும். |
இலை | : | தனி இலை; முட்டை அல்லது வட்ட வடிவமானது; பசிய நிறம் உள்ளது. அடியில் அடர்ந்த உரோமமுள்ளது. இலையைத் தாங்கி நிற்கும் இலைக் காம்பு; இலையின் மேற்புறத்தே இலைத் துளைகள் உள. இலை, காம்புடன் இணைக்கப்பட்டவிடத்தில் இலை நீளமாகப் பிளவுபட்டிருக்கும். இலை விளிம்பு நேரானது; இலைக் |
காம்பு இலையின் அடியில் ஒட்டியிருக்கும்; இலையின் நடுவினின்றும் பல இலை நரம்புகள் இலை விளிம்பு வரை விரிந்துள்ளன. | ||
இலைக் காம்பு | : | நீளமானது. தூம்புடையது. இதனைக் கால் எனவும் தாள் எனவும் இலக்கியங்கள் கூறும். இதில் இரு பெரிய துளைகளும்,பல சிறு நுண் துளைகளும் உள்ளன. இவற்றுள் காற்று நிரம்பி இருக்கும். |
மலர் | : | தனி மலர். நீரில் மிதந்து கொண்டிருக்கும்; சற்று நீர் மட்டத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருப்பதுமுண்டு; மலர்க் காம்பு இலைக் காம்பு போன்று நீளமானது; தூம்பு உடையது. ஐந்து பெரிய துளைகள் இருக்கும். மலர் இலைக் கோணத்தில் உண்டாகும். |
அரும்பு | : | நீளமானது; புறவிதழின் வெளிப்புறம் பசுமையானது. |
மலர் | : | அகன்று விரியும்; இரு சமச்சீரானது; ஒழுங்கானது; இருபாலானது; பல இதழ்கள் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன. |
புல்லி வட்டம் | : | 4 புல்லிகள்; நீளமானவை. 5-6 செ.மீ. x 2-3 செ.மீ. வெளிப்புறம் பசுமையானவை. உட்புறம் வெண்மையானவை. |
அல்லி வட்டம் | : | எண்ணற்ற இதழ்கள் வெண்மையானவை; அடுக்கடுக்காய் அமைந்துள்ளன; 5-6 x 2-3 செ.மீ. இவை உட்புறத்தில் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் இயல்பின. |
மகரந்தத் தாள்கள் | : | இதழ்கள் போன்ற மகரந்தக் கம்பிகளுடன் (Petaloid filameants) உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும்; தாள்கள் பூத்தளத்திலிருந்து எழும். |
சூலக வட்டம் | : | 5 முதல் 35 வரையிலான சூலிலைகள் சதைப்பற்றானவை; பூத்தளத்தில் புதைந்திருக்கும்; பல அறைகளைக் கொண்ட சூற்பையினை உண்டாக்கி அவற்றின் சூல்முடி பல ஆரங்களில் கதிர்களாகப் பிரிந்திருப்பது போல் அமைந்திருக்கும். அனாட்ரோபஸ் வகையானவை. |
கனி | : | அல்லிக்காய் எனப்படும் பல விதைகள் கொண்ட வழவழப்பான சதைக்கனி அடியிலிருந்து கனியும்; விதைகள் மிகச் சிறியவை; அல்லி அரிசி என்று வழங்கப்படும். ஏரில் (Aril) எனப்படும் விதை சூழ்தசையில் புதைந்திருக்கும். |
அல்லி மலர் பொதுவாக வெண்மையானது. வெள்ளாம்பல் எனப்படுவது; சிவப்பு நிறமான இதழ்களை உடைய செவ்வல்லி தமிழ்நாட்டில் குளங்குட்டைகளில், வெள்ளாம்பலுடன் சேர்ந்தோ தனித்தோ வளரும். அன்றி இவ்வினத்தில் மஞ்சள் அல்லியும், நீல அல்லியும் உண்டு. நீல அல்லி இக்காலத்தில் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறதென்பர். தமிழ்நாட்டில் உள்ள நீலோற்பலத்தை (கருநெய்தல்) நீல அல்லி என்றும், நீலம் என்றும் கூறுவாருமுண்டு. இவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் மிக நுண்ணியவை. எனினும், மலரியல்புகள் எல்லாம் அல்லியை ஒத்தனவே ஆம்பல் இந்திய நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்பர் .
பயன் : அல்லிக்காய்களினின்றும் அரிசியை எடுத்து (அல்லி அரிசி) உண்பர்; அல்லி அரிசியைக் கழிகலமகளிர் உணவாகக் கொண்டனர் என்று பண்டைய இலக்கியம் கூறும். பெரிதும் பல வண்ண அல்லிச் செடிகளை அழகுக்காகக் குளங்குட்டைகளில் வளர்க்கின்றனர்.
வெள்ளாம்பலின் (Nymphaea alba, Linn.) குரோமோசோம் எண்ணிக்கை :
- 2n - 48, 52, 56 என்று டிரே (1947) என்பவரும்.
- 2n - 84 என்ற லாங்லெட் சோடர்பர்க் (1927) என்பவரும், இதனை வலியுறுத்தி டிஷ்லர் (1934)
- 2n = 84, 105, 112, 160, என்று உட் (1959) என்பவரும் 84, 112 என்று ஷெல்காப் ஷேரிங்சன் (1955) என்பவருங் கூறுகின்றனர்.
அரக்காம்பல் என்ற நிம்பேயா ரூப்ராவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் (1927) கூறுவர்.
நிம்பேயா பூபெசென்ஸ் என்னும் வெள்ளாம்பலுக்குப் பழைய தாவரப் பெயர் நிம்பேயா ஆல்பா (Nymphaea alba, Linn,) என்பது.
செவ்வல்லி என்றும் அரக்காம்பலென்றும் வழங்கப்படும் செந்நிற அல்லியை நிம்பேயா ரூப்ரா (Nymphaea rubra, Roxb.) என்று கூறுவர். இதன் குரோமோசோம் எண் 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் கூறியுள்ளார். (1927).
- ↑ “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇ - புள்ளினம்தன்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு”–முத்தொள்ளாயிரம்