சங்க இலக்கியத் தாவரங்கள்/052-150

கருவாகை
என்டெரலோபியம் சமான் (Enterolobium saman,Prain.)

கருவாகை இலக்கியம்

புலவர்கள் வாகைக்குக் கூறும் ‘அத்தவாகை’, ‘கடவுள் வாகை’ என்பனவும், மலருக்குக் கூறும் ‘கோலுடை நறுவீ’, ‘வாகை வெண்பூ’,‘சுடர்வீ வாகை’, ‘துய்வீ வாகை’, ‘மென்பூ வாகை’ என்ற சிறப்புகளும் கருவாகைக்கும் பொருந்தும். இதன் மலர் பளபளக்கும் செந்நீல நிறமானது. இதனை இந்நாளில் ‘தூங்கு மூஞ்சி மரம்’ என்றழைப்பர். இதன் இலைகள் வாகை இலைகளைக் காட்டிலும் நீண்டு வேறுபட்டவை. இதன் கூட்டு இலைகளில் உள்ள பல சிற்றிலைகள் இரவில் அடிப்புறமாகக் கவிழ்ந்து ஒன்றையொன்று மூடிக் கொள்ளும். இவ்வியல்பினைத் தன் புகழ் கேட்ட மானமிக்க பெரியவர்கள் தலை குனிந்து மருளும் நிலைக்கு உவமிக்கின்றார்.

“தம்புகழ்க் கேட்டார் போல் தலைசாய்த்து
 மரம் துஞ்ச
-கலி. 119:6

என்று குறிப்பிட்டது இம்மரத்தின் இலைகளைப் போலும்!

கருவாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : லெகுமினோசி
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : என்டெரலோபியம் (Enterolobium)
தாவரச் சிற்றினப் பெயர் : சமான் (saman)
உலக வழக்குப் பெயர் : கருவாகை
தாவர இயல்பு : மிக உயர்ந்து, மிகவும் பரவிக் கிளைத்துச் செழித்து எங்கும் வளரும் பெரிய மரம்.
இலை : கூட்டிலை நீளமானது. பல சிற்றிலைகள் காம்பில் இறகன்ன அமைந்து உள்ளன.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாக உண்டாகும் பூந்துணர்.
மலர் : செந்நீல நிறமானது. வாகையைப் பெரிதும் ஒத்தது. தாதிழைகள் பல மிக நீளமானவை. பளபளப்பானவை. செந்நீல நிறமானவை.
கனி : மிக நீளமானது பாட் (pod)எனப்படும். பெரு முழவடிக்கும் கோல் போன்றது. கருமையானது. கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுவது.

இதன் பட்டை கரிய நிறமானது. இதனால் இப்பெயர் பெற்றது . அடிமரம் மிகப் பெரியதாயினும் வலியற்றது. விறகுக்குத் தான் பயன்படும். இம்மரம் தென்னமெரிக்க நாட்டிலிருந்து நமது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்று கூறுவர் காம்பிள். இம்மரம் நல்ல நிழல் தருவதாகலின், சோலைகளிலும், சாலைகளிலும் வளர்க்கப்படுகிறது. இரவில் இதன் சிற்றிலைகள் அடிப்புறமாக மடிந்து கூம்பியிருக்கும்! இவ்வியல்பை ‘நாக்டர்னல் மூவ்மென்ட்’ (Nocturnal movement) என்பர். இதனால் இது ‘தூங்கு மூஞ்சி மரம்’ எனப்படும்.