சங்க இலக்கியத் தாவரங்கள்/054-150
நாவல்
சைசீஜியம் ஜாம்பொலானம்
(Syzygium jambolanum,DC.)
கடலோரத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரமான மலைப் பாங்கு வரையில் வளரும் பசிய தழைத்த கிளைத்த வலிய பெருமரம் நாவல் மரம். கருமையான இனிய பழங்களை உதிர்க்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | நாவல் |
தாவரப் பெயர் | : | சைசீஜியம் ஜாம்பொலானம் (Syzygium jambolanum,DC.) |
நாவல் இலக்கியம்
“நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை”-பரிபா. 5:8
“நாவலம் தண்பொழில் வீவுஇன்று விளங்க”-பெரும். 465
“பொங்கு திரைபொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி”-நற். 35:1-3
என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் கூறப்படும் நாவல் மரம் வலியது. தழைத்து, கிளைத்துப் பரவி வளரும் இப்பெரிய மரம், தமிழ் நாட்டில் எங்கும் காணப்படுகிறது. மேலே காட்டிய பெரும் பாணாற்றுப்படையின் அடிக்கு, ‘நாவலில் பெயர் பெற்ற அழகினை உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இம்மரம் கடலோரப் பகுதிகளிலும் வளர்வதைப் புலவர் கூறுகின்றார். இதில் விளையும் நாவற்பழம் கருமை நிறமானது. இனிமையானது. இக்கனிகள் காற்றில் உதிர்வதைப் புலவர் கூறுவர்.
“காலின் உதிர்ந்த கருங்கனி நாவல்”-மலைப. 135
நாவல் பழத்தின் சாறு ஊதா நிறமானது. பொன்னால் செய்த அணிகலன்களை இச்சாற்றில் ஊற வைத்தால், கலன்களின் நிறம் வேறுபட்டு ஊதா நிறமாக விளங்கும்.
இவ்வணிகலன்களை மகளிர் சூடிக் கொள்வர்.
“நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை”
-திருமுரு. 18
இதற்கு ‘நாவற்பழச்சாறு பட்டுப் பேதமான பொன்னால்’ என்பது பழைய உரை. ஆனால் ‘சம்பூந்தமென்று நாவலோடடுத்துப் பெயர் பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவார்.
இதன் உண்மையை ஆய்தற் பொருட்டு, நாவற்பழச் சாற்றிலே பொன் மோதிரத்தை இருபத்து நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பார்த்தோம். மோதிரம் ஊதா நிறமாகி விட்டது. நீரில் கழுவிப் பார்த்தும் நிறம் குலையவில்லை. ஆனால், பதினைந்து நாள்களுக்குப் பின்னர் மோதிரத்தின் ஊதா நிறம் கரைந்து பொன்னிறமாகி விட்டது.
கடற்கரை மணலில் உதிர்ந்த நாவற்பழத்தைக் கரிய தன் இணையெனக் கருதி மொய்த்ததாம் ஒரு தும்பி. இதனை அம்மூவனார் என்ற புலவர் கூறுகின்றார்.
“பொங்குதிரை பொரு வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி”-நற். 35 : 1-3
நாவல் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorae) மிர்ட்டேலீஸ் (Myrtales) |
தாவரக் குடும்பம் | : | மிர்ட்டேசி (Myriaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சைசீஜியம் (Syzygium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஜாம்பொலானம் (jambolanum) |
சங்க இலக்கியப் பெயர் | : | நாவல் |
உலக வழக்குப் பெயர் | : | நாவல் |
தாவர இயல்பு | : | உயர்ந்து, கிளைத்துப் பரவி வளரும் பெருமரம். எப்பொழுதும் பசிய இலையுடையது. |
இலை | : | 3-6 அங்குல நீளமும், 1 அங்குல அகலமும் உள்ள தனியிலை; பசுமையானது. இலை நரம்புகள் நுனியில் இணைந்து இலை விளிம்புக்குள் காணப்படும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் அல்லது பக்கத்தில் உண்டாகும் நுனி வளராப் பூந்துணர். கொத்தாக இருக்கும். |
மலர் | : | வெண்ணிறமான மலர். |
புல்லி வட்டம் | : | 4 புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். குழல் விளிம்பு 0.2 அங்குல அகலமானது. |
அல்லி வட்டம் | : | 4 அகவிதழ்கள் வெண்மையானவை; உள்வளைவானவை. முட்டை வடிவானவை. |
மகரந்த வட்டம் | : | மிகப் பல தனித்த மகரந்தத் தாள்களை உடையது. முகையில் இவை உட்புறமாக வளைந்திருக்கும். |
சூலக வட்டம் | : | இரு செல் உடையது. ஒவ்வொன்றிலும் பல சூல்கள். ஒரு சூல்தண்டு. |
கனி | : | உருண்டையான சதைக்கனி. கருநீல நிறமானது. இனிப்பானது. கனிச் சாறு ஊதா நிறமானது. வித்திலைகள் சதைப்பற்றானவை. இவற்றுள் கருமுளை மறைந்திருக்கும். |
இம்மரம் 6000 அடி உயரம் வரையிலான மலையிடத்தும், கடலோரப் பகுதிகளிலும் வளர்கிறது. இதன் கனிக்காகத் தோப்புகளில் வளர்க்கப்படுவதுமுண்டு. இதன் மரம் வன்மையானது; செம்பழுப்பு நிறமானது; கட்டிட வேலைக்கும், வேளாண்மைக் கருவிகட்கும் பயன்படுகிறது.
இதன் முன்னைய பெயர் யூஜினியா ஜாம்பொலானா (Eugenia jambolana, Lam.) பின்னர் இது சைசீஜியம் ஜாம்பொலானம் எனப் பெயரிடப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=33, 35 என்று ராய் ஆர். ப. ஜா. .(1962) என்போரும், 2n=44, 46 எனப் பாதுரி, இஸ்லாம் (1949) மொசெல் (1965) என்போரும் கணக்கிட்டுள்ளனர்.