சங்க இலக்கியத் தாவரங்கள்/076-150
கொகுடி–(கொகுட்டம்)–கொடிமுல்லை
ஜாஸ்மினம் சாம்பக் வகை ஹேனியானம்
(Jasminum sambac,Var. heyneanum C. B. Clarke)
குறிஞ்சிக் கபிலர் தமது குறிஞ்சிப் பாட்டினுள் அதிரல், குளவி முல்லை, தளவம், மௌவல், கொகுடி, செம்மல் ஆகிய ஏழு மலர்களையும் தனித்தனியாகவே கூறுகின்றார். இவை அனைத்தும் முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தவை. தாவரவியலில் இவையனைத்தும் ஜாஸ்மினம் என்னும் பேரினத்தில் அடங்கும். இச்சொற்களுக்குப் பொருள் கூறிய உரை ஆசிரியர்கள், இவற்றை உலக வழக்கில் உள்ளவாறு முல்லை விசேடம் எனவும், காட்டு முல்லை எனவும், மல்லிகை விசேடம், காட்டு மல்லிகை எனவும் உரை கூறினார். இவருள் நச்சினார்க்கினியர் சேடல் என்பது பவழக்கால் மல்லிகை என்றாராயினும் இம்மலர் முல்லையினத்தைச் சார்ந்ததன்று. மல்லிகை மலர் சங்கவிலக்கியங்களுள் பாரிபாடலில் மட்டுமே பயிலப்படுகின்றது. அங்ங்னமே கொகுடி என்பது ‘நறுந்தண் கொகுடி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே (குறிஞ். 81) கூறப்பட்டுள்ளது. கொகுடி என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘கொகுடிப்பூ’ என்றே கூறியுள்ளார். பிற்காலத்தில் இதனைக் கொகுட்டம் என்னும் ஒருவகை முல்லை என்றும் கூறுவர்.
மற்றும் கொடி முல்லை என்பதோர் மலர் உலக வழக்கில் உள்ளது. கொகுடி முல்லை[1]என்பது கொடி முல்லை என மருவிகொகுடி
(Jasminum sambac Var. heyneanum)
இருக்குமோ என்பது சிந்தனைக்குரியது. முல்லையினத்தில் பெரிதும் ஏறுகொடிகளே உள்ளன. ஆதலின், கொடிமுல்லை என்பது மட்டும் கொண்டு, இதனுடைய தாவரவியல் பெயரைக் கண்டு கொள்ள இயலவில்லை. எனினும், தஞ்சாவூர்ப் புறநகரிலும், மன்னார்குடியிலும், குடந்தைக்கருகில் உள்ள முல்லை வனத்திலும் வழக்கில் உள்ள கொடி முல்லைக் கொடியைக் கொண்டு வந்து, ஆய்வு செய்து, இதன் தாவரப் பெயர் அறுதியிடப்பட்டது.
கொகுடி (கொகுட்டம்) கொடிமுல்லை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஓலியேசி (Oleaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் (Jasminum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சாம்பக் வகை ஹேனியானம் (sarnbac Ait. var. heyneanum C. B. Clarke) |
சங்க இலக்கியப் பெயர் | : | கொகுடி |
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர் | : | முல்லை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | கொகுடி, முல்லை |
உலக வழக்குப் பெயர் | : | கொடி முல்லை, முல்லைக் கொடி, நித்திய கல்யாணி. |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் |
இயல்பு | : | பல்லாண்டு வளரும் புதர்க் கொடி, ஏறுகொடி. |
வளரியல்பு | : | மீசோபைட் |
உயரம் | : | 20 முதல் 50 மீட்டர் நீளம். படர்ந்து வளரும் ஏறுகொடி. |
வேர்த் தொகுதி | : | ஆணி வேர், பக்க வேர்கள் |
தண்டுத் தொகுதி | : | 2-3.5 மி. மீ. பருமன். |
கிளைத்தல் | : | இலைக்கோணத்தில் உள்ள குருத்து நீண்டு, கிளைத்து வளரும். நுனியில் பூங்கொத்தாகி விடும். |
இலை | : | கூட்டிலை எதிரடுக்கில் 18 முதல் 20 செ.மீ நீளம், அடியில் 2, நுனியில் 1 சிற்றிலை. இலைக் காம்பு 12-15 செ.மீ. நீளமானது. |
சிற்றிலை | : | அடியில் உள்ள இரண்டும் 5-6.5 செ.மீ.நீளம், 2.5-3 செ.மீ. அகலம். நீள் முட்டை வடிவம். நுனியில் உள்ள சிற்றிலை காம்புடன் 7-8.5 செ.மீ. நீளம், சிற்றிலைக் காம்பு 12-15 மி.மீ. நீளம். |
நீள, அகலம் | ||
விளிம்பு | ||
நுனி | ||
மஞ்சரி | : | மஞ்சரிக் காம்பு 6-8 செ.மீ. நீளம். இலைக் கோணத்திலும், கிளை நுனியிலும், நுனி வளராப் பூந்துணர் அடியில் துணர்ச் செதில் சிற்றிலை போன்றது; சிறியது; மெல்லியது. 3-4 X 1-1.5 மி.மீ. |
அரும்பும் போது | : | 10-15 மலர்கள் உண்டாகும். 3-3.5 செ.மீ. நீளம். |
மலர்க் காம்பு | : | 2 மி.மீ. குட்டையானது. |
புல்லி வட்டம் | : | 5 பச்சை நிறமுள்ள புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவானது. 3-5 மி.மீ. நீளம். மேலே 5 விளிம்புகள் காணப்படும். |
அல்லி வட்டம் | : | 5 வெண்மையான இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. மேலே விரிந்து, இதழ் வடிவானது. 10-13 X 3-3.5 மி. மீ. |
மகரந்த வட்டம் | : | 2 மகரந்தத் தாள்கள். அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். இதழ் ஒட்டியவை. |
மகரந்தத் தாள்கள் | : | 5 மி.மீ. நீளம். |
மகரந்தப் பை | : | 3-4 மி.மீ. நீளம். |
சூலக வட்டம் | : | சூற்பை 2 அறை. 2 தலைகீழ் சூல். |
ஏனைய இயல்புகள் | : | முல்லையைப் போன்றவை என்பர். |
- ↑ “கொகுடி முல்லை”
-திருஞா. சம்.தே.வடகுரங்காடுதுறை: 1
“பெருமான் கொகுடிக் கோயில்”
-திருஞா. சம். தே. திருக்கருப்பறியலுார் 10:3
“பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்”
-சுந். தே. திருக்கருப்பறியலுார். 1: 11
எனத் தேவாரத் திருமுறை கூறுவதைக் கொண்டு உ. வே. சாமிநாத அய்யர் இதனை ஒரு வகை ‘முல்லை’ என்பார். ‘இருவாட்சி, கொகுடி, பிச்சி இவை எல்லாம் கொடிப்பூவாமே’ என்று புட்ப விதிகள் கூறும்.