சங்க இலக்கியத் தாவரங்கள்/091-150

இல்லம்–தேற்றா
ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.)

சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘இல்லம்’ என்பது தேற்றாங்கொட்டை மரம். இதன் பூக்களைப் பிற மலர்களுடன் சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்து, முல்லை நிலத்தவர் அணிவர். இம்மரம் கார்காலத்தில் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : இல்லம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : தேறு, தேற்றா, தேறுவீ
உலக வழக்குப் பெயர் : தேற்றாங்கொட்டை மரம்
தாவரப் பெயர் : ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம்
(Strychnos potatorum.,L.f.)

இல்லம்-தேற்றாங்கொட்டை மரம் இலக்கியம்

இல்லம் என்பது தேற்றாங்கொட்டை மரம். கலங்கல் நீரைத் தேற்றித் தெளிவிக்க இதன் கொட்டையை நீரில் தேய்ப்பர். தேற்றப் பயன்படும் இதன் கொட்டையைத் தேற்றாங்கொட்டை என்றனர் போலும். பின்வரும் கலித்தொகைப் பாடலில்:

“கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
 கலங்கிய நீர்போல் தெளிந்துநலம் பெற்றாள்

(காழ்-கொட்டை) -கலி. 142 : 64-65

முடத்தாமக் கண்ணியார், ‘நகுமுல்லை உகுதேறுவீ’ (பொரு. 200) என்பார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அலர்கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்றா வினையும்’ என்று உரை கூறுவர்.

“மனை மாமரம் வாள் வீரம்”-பரி. 11 : 19

என்புழி, பரிமேலழகர், ‘மனை மாமரம்’ இல்லம், ஆவது தேறு என்றனர். இது முல்லையுடன் கார் காலத்தில் பூக்கும். இதன் பூ காம்பிலிருந்து கழன்று உதிரும்.

“முல்லை இல்லமொடு மலர,
 . . . . . . . . . . . . . . . .
 கார் தொடங்கின்றே காலை காதலர்”
-அகநா. 364:7-9

இதன் பூவை முல்லை நிலத்தவர் குல்லை, குளவி, கூதளம். குவளை முதலிய பூக்களுடன் கணணியாகத் தொடுத்து அணிவர்;

“குல்லை குளவி கூதளம குவளை
 இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”

-நற். 376 : 5-6


எனினும், இப்பூ குறிஞ்சிப் பாட்டில் கூறப்படவில்லை.

இல்லம்—தேற்றாங் கொட்டை மரம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
தாவரக் குடும்பம் : லொகானியேசி (Loganiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்டிரிக்னஸ் (Strychnos)
தாவரச் சிற்றினப் பெயர் : பொட்டடோரம் (potatorum)
தாவர இயல்பு : மரம். 50 அடி வரையில் உயர்ந்து, கிளைத்து வளரும். ஏறக்குறைய 4000 அடி உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படும்.
இலை : இரு முனையும் குறுகிய, நீண்ட சிற்றிலை. 6 அங் X 2.5 அங் இலை நரம்புகள் இணையிணையான நடு நரம்பிலிருந்து உண்டாகும்.
மஞ்சரி : ஓர் அங்குல அகலமான நுனி வளராப் பூந்துணர்.
மலர் : மலர் வெண்ணிறமானது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள்
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக நீண்டிருக்கும். மேலே சிறிய 5 மடல்கள் விரியும். குழலுக்குள் நுண் மயிர் செறிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் - குட்டையானவை. அல்லிக் குழலில் ஒட்டியிருக்கும். மகரந்தப் பைகள் நீண்ட முட்டை வடிவானவை.
சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் உள்ளன. சூல் தண்டு நீளமானது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : உருண்டையான பெர்ரி எனப்படும் சதைக் கனி. 0.5-0.7 அங்குலப் பருமன் உடையது. இரு விதைகள் உள்ளன.

அடிமரம் கருமஞ்சள் நிறமானது. வலிமையான மரம். பட்டை தக்கை போன்றது. பல பிளவுகளை உடையது. இதன் கொட்டையைத் தேய்த்துக் கலங்கிய நீரைத் தெளியச் செய்வர். இதனைக் கிளியரிங் நட் (Clearing nut) என்று ஆங்கிலத்தில் கூறுவர். இம்மரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை.