சங்க இலக்கியத் தாவரங்கள்/093-150

கூதளம்
ஐபோமியா செபியாரியா (Ipomoea sepiaria,Koen.)

கூதளம் என்னும் கொடி வெண்ணிற மலர்களை உடையது எனவும். இது ‘வெண்கூதாளம்’ எனப்படும் எனவும், நறுமணம் உடையது எனவும், குறுகிய காம்பினை உடையது எனவும், பெருந்தண் சாரலில் வளரும் எனவும். கார்காலத்தில் பூக்கும் எனவும், மலர் ‘காம்பினை’ உடையது எனவும், இதனால் மலர்ந்த பின்னர் காம்பிலிருந்து மடல் கழன்று விழும் எனவும் இம்மலரைத் தனித்தும் கண்ணியாகப் பிற மலர்களுடன் தொடுத்தும் தெய்வத்திற்குச் சூட்டுவதோடு ஆடவரும் மகளிரும் அணிவர் எனவும் சங்க நூல்கள் கூறுகின்றன. இதனை ஒத்த ‘செங்கூதாளம்’ என்ற வேறு ஒரு கொடியும் உண்டு. தாவரவியலார் இவை இரண்டு கொடிகளையும் ஒரே சிற்றினத்தில் அடக்குவர்.

சங்க இலக்கியப் பெயர் : கூதளம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கூதளி, வெண்கூதாளம், தாளி
பிற்கால இலக்கியப் பெயர் : கூதாளி, கூதாளம், வெண்டாளி, செங்கூதாளம்
உலக வழக்குப் பெயர் : தாளிக்கொடி, தாளக்கொடி, வெண்டாளி
தாவரப் பெயர் : ஐபோமியா செபியாரியா
(Ipomoea sepiaria,Koen.)

கூதளம் இலக்கியம்

கூதாளி என்னும் கொடியைக் குறிக்கும் இச்சொல் இகர இறுதி கெட்டுக் ‘கூதாள்’ என்றாகி, அம் விகுதி பெற்றுக் ‘கூதாளம்’ எனவும், குறுகிக் ‘கூதளி’ எனவும் படும் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத்து: 247 உரை). இது ‘கூதளி, கூதாளி, கூதாளம், கூதளம் என்றெல்லாம் கூறப்படும். எனினும், இது சங்கவிலக்கியங்களுள் ‘கூதளம்’ என்றே மிகுதியும் பயிலப்படுகின்றது. இவையன்றி, ‘தாளி’ என்ற கொடி ஒன்றும் பேசப்படுகின்றது. ‘தாளித்தண்பவர் நாளா மேயும்’ (குறுந். 104) என்புழி ‘தாளி’ என்னும் ஒரு வகைக் கொடியுமாம் என்று உரைகாரர் கூறுவர். ‘தாளி’ என்பது கூதளத்தையே குறிக்கும் போலும். குறுந்தொகையும் திருமுருகாற்றுப்படையும் (192) இதனை வெண்கூதளம் என்று கூறும். இதனால் வெண்கூதாளத்திலும் வேறான ‘கொடி’ ஒன்று உண்டென அறியலாம்.

‘சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமொடு’[1] என்றதனால், ‘செங்கூதளம்’ என்றதொரு கொடியும் உண்டென அறிதல் கூடும். நிகண்டுகள் ‘துடி’ என்னும் மற்றொரு பெயரையும் இதற்குச் சூட்டுகின்றன.

வெண்கூதாளமாகிய இதனைத் தாவரவியலில் ஐபோமியா செபியாரியா(Ipomoea sepiaria) எனக் கூறுவர். ‘செங்கூதாளமும்’ இதே பெயரில் அழைக்கப் பெறுமெனினும், இதன் மலர் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

இக்கொடி மலைப்புறத்தில் வளரும் எனவும், குளவி, பாகல், அதிரல் முதலிய கொடிகளுடன் படர்ந்து காணப்படும் எனவும், கூதிர் காலத்தில் பூக்கும் எனவும் கூறுப. செண்பகம், கருவிளம் முதலியவற்றுடன் சேர்த்தும் பயிலப்படும்.

“நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய”
-புறநா. 380 : 7
“பலவுக் காய்ப்புறத்த பசும்பழப் பாகல்
 கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க”

-அகநா. 255 : 23-24
“மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலைச்
 சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்”

-அகநா. 47 : 16- 17
“குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரை” -குறுந். 60 : 1

“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
 கூதிர்க் கூதளத்து அலரி நாறும்”
-நற். 244 : 1-2

“விரிமலர் அதிரலும் வெண் கூதாளமும்”[2]

“சிறுமலைச் சிலம்பின் செய்கூ தாள மொடு”[3]

“செண்பகம் கருவிளம் செங்கூதாளம்”[4]

குறுகிய தாளையுடைய இக்கூதள மலரில் நறுமணம் உண்டு. இம்மணம் மாறாது நிலைத்து வீசும். இதனைக் குளவி மலரோடும், பிற மலர்களோடும் கலந்தும், கண்ணியாகப் புனைந்தும் தெய்வத்திற்குச் சூட்டுவதோடு, ஆடவரும் சூடிக் கொள்வர்.

“. . . . . . . நயவருஞ் சாரல்
 கூதள நறும்பொழில் புலம்ப”
-நற். 313 : 6-7

“குல்லை குளவி கூதளம் குவளை
 இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”

-நற். 376 : 6-7
“. . . . . . . . . . . . குளவியொடு
  வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்”
-திருமுரு. 192

“குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
 அசையா நாற்றம் அசைவளி பகர”
-அகநா. 272 : 8-9

இம்மலரில் துளையொன்று இருக்கும். இதற்குத் ‘தூம்பு’ என்று பெயர். இப்பூ மலர்ந்த பின்னர், கொடியினின்று கழன்று விழுவதுண்டு. இவ்வியல்பினை நாகம் போத்தன் உவமிக்கும் திறம் போற்றுதற்குரியது.

தலைவன் கார் காலத்தில் மீண்டு வருவேனென்று கூறி, வினை வயிற் பிரிந்து சென்றான். கூறிச் சென்ற கார்ப் பருவம் கடந்து, கூதிர்ப் பருவம் வரவும், அது கண்டு தலைவி ஆற்றாள் என்று அஞ்சிய தோழி கூறுவதாக அமைந்தது இப்பாடல். ‘தோழி! கார் காலத்தை ஏற்றுக் கொண்ட தண்ணிய கொல்லையைக் காண்பாராயின், நீர் விளங்குகின்ற மலைப்பக்கத்தில் ஒரு படித்தாக மலர்ந்த, அழகிய வெண்கூதாள மலர்கள் காம்பிற் கழன்று உதிர்தலைப் போல நின் கைவளைகள் சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ?’ என்று வினவுகின்றாள்.

“காரெதிர் தண்புனங் காணின் கைவளை
 நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த
 வெண்கூ தாளத்து அம்தூம்பு புதுமலர்
 ஆர்கழல் புகுவ போலச்
 சோர்குவ அல்ல என்பர்கொல் நமரே?”

-குறுந். 282 : 4-8


மேலும் இதனைக் குறுமலர் என்பர் பூக்காட்டாசிரியர். புதர் போன்று வளர்ந்த குன்றில், இவ்வெண் கூதாளப்பூ மலர்ந்திருப்பதற்குப் புதரின் கிளையில் வெண்மையான இறகுகளை உடைய குருகு அமர்ந்திருப்பதை உவமை கூறுவர்.

“பைம்புதல் நளிசினைக் குருகு இருந்தன்ன
 வன்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து”

—அகநா. 178: 8-9


இவ்வுவமையை எடுத்து மொழிகின்றார் அவ்வையார். கூதளம் பூவால் கட்டிய மாலையை வானத்தில் விசி எறிந்தாற் போன்று, பசிய கால்களை உடைய வெண்குருகு தன் சிறகை விரித்து வானத்துப் பறந்தது என்பார்.

“விசும்பு விசைத்து எழுந்தகூதளங் கோதையின்
 பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ”

—அகநா. 273: 1-2


கூதள மலரின் தாது பொன் நிறமானது. இப்பூவில் உராய்ந்து போன ஒரு பன்றியின் முதுகில் இப்பொன் தாது படிந்தது. பன்றியின் முதுகு பொன்னை உரைத்துப் பார்க்கும் (உரை கல்) கட்டளைக் கல்லாகி விட்டது என்பர் பரணர்.

“வன்பிணி அவிழ்ந்த வெண்கூதாள மொடு
 அலங்குகுலை அலரி தீண்டித் தாதுஉக
 பொன்னுரை கட்டளைக் கடுப்பக் காண்வர”

—அகநா. 178 : 9-11


இனி, சிலப்பதிகாரத்தில் செங்கூதாளமும் பேசப்படுகின்றது.

“சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமோடு”[5]
“செண்பகம் கருவிளம் செங்கூதாளம்”[6]
“விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும்”[7]

என வருவன காண்க. இது வெண்கூதாளத்தைப் பெரிதும் ஒத்த வேறு ஒரு வகையான கொடி. மலர் நிறம் மட்டும் இளஞ்சிவப்பாக இருக்கும். தாவரவியலில் இவை இரண்டும் ஒரே பெயரில் வழங்கப்படும் இருவேறு கொடிகளாகும்.

கூதளம் தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : செபியாரியா (sepiaria)
சங்க இலக்கியப் பெயர் : கூதளம்
தாவர இயல்பு : கொடி (சுற்றுக் கொடி)
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : தனியிலை, மாற்றடுக்கானது.
மஞ்சரி : தனி மலர். இலைக் கட்கத்தில் தனித்தும், நுனி வளராப் பூந்துணர் ஆகவும் வளரும். ஐந்தடுக்கானது.
மலர் : (ஊதா) இளஞ்சிவப்பு அல்லது வெண்மை நிறமானது; புனல் வடிவமானது; மலர்ச் செதில் காணப்படும்.
புல்லி வட்டம் : 5 பசிய இதழ்கள், நீளமானவை. கனியிலும் காணப்படும்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகி, மேலே புனல் வடிவாகப் பூக்கும். வெண்மை, ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிறமாகப் பூக்கும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் அல்லி மடலுக்கு உள்ளடங்கி இருக்கும். மகரந்தத் தாள்கள் இழை போன்றவை. ஒரே உயரமில்லை. தாது நுண்முள் அடர்ந்த புறவுறை உடையது.
சூலக வட்டம் : 2 சூற்பைகள்; ஒவ்வொன்றிலும் இரு சூல்கள். சூல்தண்டு இழை போன்றது. சூல்முடி தடித்து முடிச்சு போன்றது. இரு பிளவுள்ளது.
கனி : நான்கு அறையுள்ள காப்சூல், 4 விதைகள் உண்டாகும். பளபளப்பானவை.
விதையிலை : இரு பிளவானது.

இக்கொடி சம நிலத்திலும், மலைப் பாங்கிலும், புதரின் மேலும், வேலியின் மேலும் சுற்றிப் படர்ந்து வளரும். கன்வால்வுலேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் 57 பேரினங்களும், 1100 சிற்றினங்களும் உள என்பர். ஐபோமியா இனத்தில் 400 இனங்கள் வளர்கின்றன. இக்குடும்பம் உலகில் குளிர் நாடுகளைத் தவிர, மற்ற எல்லாப் பாகங்களிலும் வளர்கிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை இன்னும் கண்டு சொல்லப்படவில்லை.


  1. சிலப். 14 : 88
  2. சிலப். 13 : 156
  3. சிலப். 14 : 88
  4. சிலப். 22 : 40
  5. சிலப். 14 : 88
  6. சிலப். 22 : 40
  7. சிலப். 13 : 156