சங்க இலக்கியத் தாவரங்கள்/103-150
குமிழ்
மெலைனா ஏஷியாட்டிகா (Gmelina asiatica,Linn.)
நற்றிணையில் பயிலப்படும் ‘குமிழ்’ என்னும் புதர்ச்செடி குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. இதன் மலர் அழகிய மஞ்சள் நிறமானது. மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் இது நல்ல நிறமுள்ள மகளிரின் மூக்கை ஒத்திருக்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | குமிழ் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | குமிழ் |
உலக வழக்குப் பெயர் | : | குமிழம், குமிளம் |
தாவரப் பெயர் | : | மெலைனா ஏஷியாட்டிகா (Gmelina asiatica,Linn.) |
குமிழ் இலக்கியம்
குமிழம்பூவைக் குமிழ் என்று குறிப்பிடும் சங்க இலக்கியம். இது மலைப் பாங்கில் 1000 கி. மீ. உயரம் வரையில் வளரும் புதர்ச்செடி. சிறு மரமென்றும் கூறலாம். இது பல்லாண்டு வாழும் இயல்பிற்று. மலர் மிக அழகிய மஞ்சள் நிறமானது. அல்லியிதழ்கள் இணைந்து சற்று வளைந்த புனல் வடிவாயிருக்கும். கீழ்ப்புற அல்லியிதழ்கள் மூன்றும் சற்று நீண்டு நன்கு இணைந்தும், மேற்புற இரு இதழ்கள் இரு பக்கத்திலும் மடல் விரிந்தும் இருக்கும். இம்மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் நல்ல இளமுறி நிறமுள்ள மகளிரின் மூக்கை வடிவாலும் வண்ணத்தாலும் ஒத்து இருக்கும். இரண்டு கண்களுக்குமிடையே மூக்கை ஓவியமாகத் தீட்டுவதை இளங்கோவடிகள்,
“இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி”[1]
மணிமேகலையில் “குமிழ் மூக்கு இவைகாண்”[2] என்றும் பேசப்படுகின்றது.
இதன் மலர்கள் நுனிவளராப் பூந்துணராகப் பூக்கும். 2-3 மலர்களே ஒரு கொத்தில் காணப்படும். பூங்கொத்து கிளையினின்றும் தொங்கி, குழை போன்று அசைந்தாடும் என்பர்.
“ஊசல் ஒண்குழை உடைவாய்த் தன்ன
அத்தக் குமிழின் ஆய்இதழ் அலரி
கல்அறை வரிக்கும் புல்லென் குன்றம்”
-நற். 286 : 1-3
குன்றுடைய பாலை நிலப் பாதையில் இம்மலர் பூத்து ஊசலாடும் என்றமையின், இது பாலை நில மலர் என்பதாகும். இவ்வியல்பினைக் கார் நாற்பதிலும் காணலாம். மேலும் இது கார்காலத்தில் பூக்கும்.
“இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்
பொன்செய் குழையின் துணர் தூங்கா”[3]
மலைப்பகுதியில் வளரும் இச்சிறுமரத்தின் பூக்கள் காயாகிப் பழமாகும். பழமும் பொற்காசு போல் மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் பெண் மான் உராய்வதால், இதன் கனிகள் உதிரும் என்றும், இக்கனிகளை மான்கள் உணவாகக் கொள்ளும் என்றும் கூறுவர்.
“படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின், ஒண்பழம் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்”-நற். 274 : 2-5}}
“அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சியாகும்”-நற் 6 : 7-8
(கொடுமூக்கு குமிழின் என இயைக்க)
பிங்கல நிகண்டு[4] இதற்குக் கூம்பல், கடம்பல் என்ற இரு பெயர்களைச் சூட்டுகின்றது. குமிழத்தைத் தாவரவியலில் மெலைனா ஏஷியாட்டிகா என்றழைப்பர். இது வர்பினேசி என்ற தாவரக் குடும்பத்தில் சேர்க்கப்படும். இக்குடும்பத்தில் 80 பேரினங்களும், 800 சிற்றினங்களும் வெப்ப நாடுகளில் உள்ளன. இவற்றுள், இந்தியாவில் 23 பேரினங்கள் வளர்கின்றன. மெலைனா என்ற குமிழின் பேரினத்தில் 5 சிற்றினங்கள் உள்ளன என்பர் ஹூக்கர். தமிழ் நாட்டில் இக்குடும்பத்தில் 13 பேரினங்களும், மெலைனா பேரினத்தில் 2 சிற்றினங்கள் மட்டும் காணப்படுவதாகக் காம்பிளும் கூறுவர்.
குமிழத்தின் குரோமோசோம் எண்ணிக்கை, 2n = 38 என்று இராமன், கேசவன் (1963 அ) என்போரும், 2n = 40 என்று சாப்தி, சிங் (1961) என்போரும் கணக்கிட்டனர்.
குமிழின் பழம் மருந்துக்கு உதவும் என்பர்.
குமிழ் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | அல்லி இதழ்கள் இணைந்த பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | வர்பினேசி (Verbenaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | மெலைனா (Gmelina) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஏஷியாட்டிகா (asiatica,Linn.) |
தாவர இயல்பு | : | பல்லாண்டு வாழும் புதர்ச் செடி. 2-3 மீ. உயரமாகக் கிளைத்து, வளரும் சிறு மரமெனலாம். |
தாவர வளரியல்பு | : | ஸீரோபைட் (xerophyte) பாலை நிலத்தில் வளரும் தாவரம். 1000 மீட்டர் உயரம் வரையிலான குன்றுப் பகுதிகளில் வளர்கிறது. சிறு முட்களை உடையது. |
இலை | : | சிறு தனியிலை 3-4 செ.மீ. X 2-3 செ.மீ. முட்டை வடிவானது. பளபளப்பானது. |
குமிழ்
(Gmelina asiatica)
இலை | : | அடியில் சிறு வட்டமான சுரப்பிகளை உடையது. சிறு காம்புடையது. கிளைக் குருத்து முள்ளாதல் உண்டு. |
மஞ்சரி | : | நுனிவளர் பூந்துணரில் 2-3 பெரிய மலர்களும், மொட்டுகளும் காணப்படும். பூங்கொத்து கிளை நுனியிலிருந்து தொங்குவதுண்டு. |
மலர் | : | அல்லியிணைந்தது. சற்று வளைந்த புனல் வடிவானது. மடல் மேற்புறத்தில் விரிந்திருக்கும். |
புல்லி வட்டம் | : | 4 பசிய இதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். சுரப்பிகள் காணப்படும். மேலே 4 விளிம்புகள் உள்ளன. |
அல்லி வட்டம் | : | நல்ல மஞ்சள் நிறமான அல்லியிதழ்கள் ஐந்தும் அடி முதல் இணைந்து, மேலே சற்று வளைந்த புனல் போன்றிருக்கும். மலரின் கீழ்ப்புறத்தில் 3 இதழ்களும் நன்கு இணைந்து சற்று நீண்டும், மேற்புறத்து இரு இதழ்கள் இரு பக்கங்களில் சிறு மடல் விரிந்தும் இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 4 குட்டையான மகரந்தத் தாள்கள் இரு வேறு நீளத்தில் 2.2 ஆக மலருக்குள் அல்லியொட்டி இருக்கும். தாதுப் பைகள் நீண்டு தொங்கும் இயல்பானவை. |
சூலக வட்டம் | : | 2-4 சூலிலைச் சூலகம். ஒரு சூல் வளர்ந்து ஒரு விதை மட்டும் உண்டாகும். சூல்தண்டு இழை போன்றது. சூல்முடி இரு பிளவானது. |
கனி | : | மஞ்சள் நிறமான் சதைக்கனி ட்ரூப் எனப்படும். விதை சற்று நீளமானது. |
இது சிறுமரம், வலியது, விறகுக்கும், வேலிக்கும் பயன்படும். இதன் கனியைக் குழைத்துத் தலையில் தடவ, தலையில் உள்ள பொடுகு போகுமென்ப.