சங்க இலக்கியத் தாவரங்கள்/111-150

பூளை
ஏர்வா டொமென்டோசா (Aerva tomentosa,Forsk.)

சங்க இலக்கியங்கள் இதனைப் ‘பூளை’ என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு புதர்ச் செடி. வெண்ணிறமான நீண்ட பூங்கொத்துக்கள் இதன் கிளை நுனியில் உண்டாகும்.

இதில் ‘சிறுபூளை’ என்று ஒன்றுண்டு. அதனைக் ‘குரீஇப் பூளை’ என்று கபிலர் குறிப்பிடுவர்.

சங்க இலக்கியப் பெயர் : பூளை
தாவரப் பெயர் : ஏர்வா டொமென்டோசா
(Aerva tomentosa,Forsk.)

பூளை இலக்கியம்

சங்க இலக்கியங்கள் ‘பூளைப்’ பூக்களையே பேசுகின்றன. இது ஒரு சிறு புதர்ச் செடி. வறண்ட பாழிடங்களில் வளர்வது. பூளையின் பூங்கொத்து நீளமானது. இதன் மலர் வரகுச் சோற்றை ஒத்த வடிவானது. மங்கிய வெண்ணிறமானது. கோடைக்காலத்தில் மலர்வது. மலர்கள் காற்றடிக்கும் போது வதங்கிக் குழையும். கரும்பின் பூவை ஒத்துக் காற்றில் மிதக்கும்.

“பூளை நீடிய வெருவரு பறந்தலை”-புறநா. 23 : 20
“கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”-அகநா. 217 : 5

“நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன

 குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி”- பெரும்பா. 192-193
(சொன்றி-சோறு)
“வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய”-அகநா 199 : 10

பட்டினப்பாலையில் கோட்டை மதிலைத் தாக்க எழுந்த களிறு, பூளையொடு உழிஞைப் பூவையும் சூடிச் சென்றதாகக் கூறுவர்.

“வேறுபல் பூளையொடு உழிஞை சூடி”-பட்டின. 235

பிங்கலம் இதனை வெற்றிப்பூ என்று கூறும்[1]. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைக் கம்பர் ‘பூளைசூடி’ என்று குறிப்பிடுகின்றார்[2]. மடலேறுவோன் பிற மலர்களோடு பூளைப் பூக்களையும் சூடிக்கொள்வான் என்பர்.

பூளை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
(Monochlamydeae),
புல்லி வட்டமும் அல்லிவட்டமும், இணைந்து, ‘பீரியாந்த்’ எனப்படும்.
தாவரக் குடும்பம் : அமராண்டேசி (Amarantaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஏர்வா (Aerva)
தாவரச் சிற்றினப் பெயர் : டொமென்டோசா (tomentosa)
சங்க இலக்கியப் பெயர் : பூளை
உலக வழக்குப் பெயர் : பூளை
தாவர இயல்பு : சிறு புதர்ச் செடி. நேராக நீண்டு வளரும். செடி முழுவதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : தனியிலை. மாற்றடுக்கில் நீண்டு, அகன்றது. இலை முழுதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும். 2.5 அங்குல நீளமும் 0.5 அங்குல அகலமும்.
மஞ்சரி : 1-6 அங்குல நீளமான ‘ஸ்பைக்’ எனப்படும் பூந்துணர். கிளை நுனியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும். நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
மலர் : பால் வேறு பட்ட வெள்ளிய இரு வேறு மலர்கள். ஆண் மலரைக் காண்பதரிது.
புல்லி, அல்லி வட்டங்கள் : புல்லியும், அல்லியும் இணைந்து ‘பீரியாந்த்’ எனப்படும். பிளவு பட்டவை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 5 தாதிழைகள். தாதுப்பை 2 செல் உடையது.
சூலக வட்டம் : உருண்டை வடிவானது. ஒரு செல் உடையது. சூல் தொங்கிக் கொண்டிருக்கும். சூல் காம்பு நீளமானது. சூல்தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : காப்சூல் என்ற உலர்கனி.
விதை : ‘இன்னர்ஸ்’ ஆனது. விதையுறை தடித்தது. விதைக் கரு வட்டமானது. வித்திலைகள் நீளமானவை.

இச்செடி முன்னர் ஏர்வா ஜாவானிக்கா என்று கூறப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 36 என பால் எம். (1964) என்பார் கணக்கிட்டுள்ளார்.


  1. “பூளை வெற்றிப் பூவாகும்மே” -பிங். நி. 1498
  2. கம்பராமா. அகலிகை. 39