சங்க இலக்கியத் தாவரங்கள்/113-150

 

காழ்வை–அகரு–அகில்
அக்விலாரியா அகலோச்சா
(Aquilaria agallocha,Roxb.)

சங்க இலக்கியங்களில், ‘காழ்வை’ என்று குறிஞ்சிப் பாட்டிலும் (93) ‘அகரு’ என்று பரிபாடலிலும்(12:4) இம்மரம் குறிப்பிடப் படுகின்றது. ‘காழ்வை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் அகிற் பூ என்றும், ‘அகரு’ என்பதற்குப் பரிமேலழகர் அகில் என்றும் உரை கண்டனர்.

சங்க இலக்கியப் பெயர் : காழ்வை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அகரு
பிற்கால இலக்கியப் பெயர் : அகில்
உலக வழக்குப் பெயர் : அகில்
தாவரப் பெயர் : அக்விலாரியா அகலோச்சா
(Aquilaria agallocha,Roxb.)

காழ்வை–அகரு–அகில் இலக்கியம்

குறிஞ்சிக் கபிலர், கூறிய ‘ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை’ (குறிஞ். 93) என்பதில் காழ்வை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘அகிற்பூ’ என்று உரை கண்டார். இது மிகவும் வன்மையான வைரம் பாய்ந்த மரம். இதனாற் போலும் இது இப்பெயர் பெற்றது. இது ஒரு பெரிய, எப்பொழுதும் தழைத்திருக்கும் மரமாகும். இம்மரம் வட இந்தியாவில் இமயமலைச் சாரலில் வளர்கிறது. தமிழ் நாட்டில் இந்நாளில் வளர்வதாகக் குறிப்புகள் காணப்படவில்லை.

சங்க இலக்கியங்களில், ‘காழ்வை’ என்று குறிஞ்சிப் பாட்டிலும் (93) ‘அகரு’ என்று பரிபாடலிலும் குறிப்பிடப்படுகிறது.

“அகரு வழைஞெமை ஆரம் இனைய<”
-(பரிபா. 12 : 4) என்பது காண்க.


இம்மரம், தைமீலியேசி (Thymelaeaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 11 பேரினங்கள் இந்தியாவில் வளர்வதாக ‘ஹூக்கர்’ குறிப்பிட்டுள்ளார். இம்மரம் அக்குவிலாரியா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் 2 சிற்றினங்கள் அஸ்ஸாம், பூட்டான் முதலிய நாடுகளின் மலைப் பகுதிகளில் வளர்கின்றன என்பர்.

இம்மரத்தின் தண்டு (கட்டை) நறுமணப் புகை தரும். இதனால், இது சந்தன மரத்துடன் சேர்த்துப் பேசப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதன் மரக்கட்டையில் ஒருவித எண்ணெய் இருக்கிறது. இதனை நெருப்பிலிட்டால், நறுமணப்புகை உண்டாகும். இம்மரம் மிக வலிமையுடையது.

காழ்வை—அகரு—அகில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரக் குடும்பம் : தைமீலியேசி
தாவரப் பேரினப் பெயர் : அக்விலாரியா (Aquilaria)
தாவரச் சிற்றினப் பெயர் : அகலோச்சா (agallocha, Roxb.)
தாவர இயல்பு : பெருமரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். வடஇந்தியாவில், இமயமலைச் சாரலில் 10,000 - 15,000 அடி உயரத்தில் வளர்கிறது.
இலை : 2-3.5 அங்குல நீளமானது; தோல் போன்றது; பளபளப்பானது; காம்புள்ளது.
மஞ்சரி : :நுனிவளராப் பூந்துணர் அம்பெல் எனப்படும். மலர்க் காம்பு இல்லை.
மலர் : வெண்மையானது.
புல்லி, அல்லி வட்டங்கள் : புல்லியும், அல்லியும் இணைந்து ‘பீரியாந்த்’ எனப்படும். புல்லி புனல் வடிவானது. 5 அகன்ற, பரந்த பிரிவுள்ளது.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள். தாதுப் பைகள் சற்று நீளமானவை. இணைப்பு அகன்று இருக்கும்.
சூலக வட்டம் : மலர்க் காம்பில் ஒட்டியிருக்கும். இரு சூலகம். சூல்தண்டு பெரியது.
கனி : காப்சூல் எனப்படும் வெடிகனி. வலிய வெளிப்புறம் தோல் போன்றிருக்கும். விதைகளைச் ‘சீட்ஸ் ஆப் கைரினாப்ஸ்’ என்பர்.

இம்மரம் கிழக்காசியா, மலேயா, சீனா, மலாக்கா முதலியவிடங்களில் காணப்படுகிறது என்பர்.