சங்க இலக்கியத் தாவரங்கள்/116-150

தில்லை
எக்ஸ்கொகேரியா அகலோச்சா
(Excoecaria agallocha,Linn.)

கபிலர், ‘தில்லை, பாலை, கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) என்று ‘தில்லை‘ மலரைக் குறிப்பிட்டார். தில்லை என்பது ஒரு சிறுமரம். கடலோரத்திலுள்ள உப்பங்கழியில் வளரும். இந்நாளில் சிதம்பரம் என வழங்கும் ஊருக்குத் தில்லை என்பதுதான் பழைய தமிழ்ப் பெயராகும்.

தில்லை என்னும் இச்சிறுமரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித் தனியாக உள்ளன. மரத்தில் வடியும் ஒரு வகையான ‘பால்’ மிகக் கொடிய நஞ்சுடையது. இதன் பூக்களையும் இம்மரத்தையும் யாரும் நாடுவதில்லை.

சங்க இலக்கியப் பெயர் : தில்லை
உலக வழக்குப் பெயர் : தில்லை மரம்
தாவரப் பெயர் : எக்ஸ்கொகேரியா அகலோச்சா
(Excoecaria agallocha,Linn.)

தில்லை இலக்கியம்

தில்லை என்பது ஓர் அழகிய சிறுமரம். எப்போதும் பசிய நிறமுள்ளதாக இருக்கும். இது உப்பங்கழித் தாவரம். தில்லை மரக் காடு சூழ்ந்திருந்த ஊருக்குத் தில்லை என்று பெயர். மணிவாசகர், ‘தில்லை மூதூர் ஆடிய திருவடி’[1] என்பார்.அங்கே திருச்சிற்றம்பலம் தோன்றி, அணிகொள் தில்லை ஆயிற்று. இப்போது ‘சிதம்பரம்’ எனப்படும். சிதம்பரத்திற்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில், இன்றைக்கும் தழைத்து ஓங்கும் தில்லை மரக்காடுகள், கடலோரத்தில் உள்ள உப்பங்கழியில் உள்ளன. இதனால், இது நெய்தல் நில மரம். இம்மரம் கழிமுள்ளியுடன் சேர்ந்து கானலிடத்தே வளரும் இயல்பிற்று. இவ்வுண்மையை அங்ஙனமே கலித்தொகை கூறும்.

“மாமலர் முண்டகம் தில்லையோடு ஒருங்குடன்
 கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்”

-கலி. 133 : 1 - 2


மேலும் தாழைப் புதர்களுடனும், தில்லை மரம் உப்பங்கழியில் வளரும். இவ்வுண்மையைத் திணை மாலை நூற்றைம்பது கூறுகின்றது.

“கண்டல் அம்தில்லை கலந்து கழிசூழ்ந்த
 மிண்டல் அம்தண் தாழை இணைந்து”
[2]

இத்தில்லைப் பொதும்பரில் வதியும் நீர்நாய்க் குருளை கழியிலுள்ள கொழுத்த மீனைச் சுவைத்துப் பள்ளிகொண்டதென்பர்.

“. . . . . . . . . . . . இருங்கழிக்
 குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தி
 தில்லை அம்பொதும்பில் பள்ளி கொள்ளும்”

-நற். 195 : 1-3


‘தில்லை’ மரத்தளிர், மங்கிய செம்மை நிறங்கொண்டது. மாற்பித்தியார் என்பவர் இதனை மானின் செம்பட்டைச் சடை நிறத்திற்கு உவமித்தார்.

“தில்லை யன்ன புல்லென் சடையொடு ”
-புறநா. 252 : 2


இத்தகைய தில்லை மரங்கள் சிற்றுாரின் வேலியாக அமைந்துள்ளதென்றும் புலவர் கூறுவர்.

“தில்லைவேலி இவ்வூர்”-ஐங். 131 : 2

இம்மரத்தில் பால் வடியும். இப்பால் மிகவுங் கொடியது. இதனை யுன்னி இம்மரத்தை ஆங்கிலத்தில், ‘புலியின் பால் மரம்’ (Tiger’s milk tree) என்பர். இக்குடும்பத்தில் 57 பேரினங்கள் தமிழ் நாட்டில் உள்ளன என்றும். இப்பேரினத்தில் 3 சிற்றினங்கள் வளர்கின்றன என்றும், ‘காம்பிள்’ கூறுவர். இதில் ஆண்பால் மலர்களும், பெண்பால் மலர்களும் தனித் தனியாக இருக்கும். இம்மலரை யாரும் சூடிக் கொள்வதில்லை. இருப்பினும் கபிலர் இம்மலரையும் தலைவியும், தோழியும் சேகரித்ததாகக் கூறுவர்.

“தில்லை பாலை கல்லிவர் முல்லை”-குறிஞ். 77

இதன் குரோமோசோம் எண்ணிக்கை கண்டு சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.

தில்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஒரு பால் மலருடையவை
யூனிசெக்சுவேலீஸ்
தாவரக் குடும்பம் : யூபோர்பியேசி (Euphorbiaceae)
தாவரப் பேரினப் பெயர் : எக்ஸ்கொகேரியா (Excoecaria)
தாவரச் சிற்றினப் பெயர் : அகலோச்சா (agallocha)
ஆங்கிலப் பெயர் : புலிப்பால் மரம் (Tiger’s milk tree
தாவர இயல்பு : சிறு மரம். எப்பொழுதும் பசிய இலைகளையுடையது. மரங்கள் காடாக வளரும்.
தாவர வளரியல்பு : கடலோரத்தில் உள்ள மாங்குரூவ் (Mangrove) மரம். உப்பங்கழித் தாவரம்.
இலை : பசிய, மெல்லிய, பளபளப்பான, சிறிய, தனி இலை. சுற்றடுக்கு.
மஞ்சரியும் மலர்களும் : ஆண்பால் மலர், பெண்பால் மலர் என இருவகை மலர்கள் தனித்தனியே உண்டாகும். நுனிவளராப் பூந்துணரில் மலர்க் காம்பின்றி அரும்பும்.
ஆண்பால் மலர் : மலரடிச் செதிலின் கோணத்தில், 1-3 மலர்கள் உண்டாகும். மலரடிச் சிறு செதில்களுமுண்டு.
புல்லி வட்டம் : 3 சிறிய பசிய பிளவுகளுடன் காணப்படும்.
அல்லி வட்டம் : அல்லியிதழ்கள் இல்லை.
மகரந்த வட்டம் : 3 மெல்லிய தாதிழைகளில், 2 தாதுப் பைகள் மேலும் கீழுமாக இருக்கும்.
பெண்பால் மலர் : தனி மஞ்சரியில் உண்டாகும். மலரடிச் செதில்களின் அடியில் சுரப்பி காணப்படும்.
சூலக வட்டம் : 3 சூலகம், ஒவ்வொன்றிலும் ஒரு சூல், சூல்தண்டு தடித்துப் பரந்திருக்கும்.
கனி : காப்சூல் எனப்படும் வெடியாக்கனியில் 3 சூலுறைகளுடன் கூடிய சுருளும் இயல்புடைய ‘காக்கஸ்’ உண்டாகும்.
விதை : ஒரு வித உருண்டை வடிவானது (காரங்கிள்) விதை முடிச்சதை இல்லாதது. விதையுறை சொரசொரப்பானது சதைப் பற்றுள்ள ஆல்புமின் உண்டு. சூலிலைகள் தட்டையானவை.

இம்மரத்தில் கொடிய நச்சுப் பால் சுரத்தலின், இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.


  1. திருவாசகம் : கீர்த்தித் திருவகவல் : 1
  2. திணைமா. நூ. 61