சங்க இலக்கியத் தாவரங்கள்/118-150
அதவம்–அத்தி
பைகஸ் குளோமெரேட்டா (Ficus glomerata,Roxb.)
அதவம்–அத்தி இலக்கியம்
சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும், ‘அத்தி’ என்றும் கூறப்படும் இச்சிறு மரம் பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியா. ‘அத்தி பூத்தாற் போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று. இருப்பினும் பிற்கால இலக்கியங்கள் கூறும் ‘பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’[1] என்றதற்கு எடுத்துக்காட்டு ‘அத்தி, ஆல்’ முதலிய மரங்கள் ஆகும் என்பர். உணவாகக் கொள்ளப்படும் அத்திக் காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப் பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருத்தலின் அத்திப் பிஞ்சு - கோளி - எனப்படும். தாவரவியலில் இதனை ரிசப்டகிள் (Receptacle) என்று கூறுவர். அத்திக் காயினுள்ளே மூன்று அல்லது நான்கு வகையான பூக்கள் உள்ளன அவை ஆண் பூ. பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப் பூக்களில் ஆண் மலட்டுப் பூவும். பெண் மலட்டுப் பூவும் பைகஸ் காரிக்கா (Ficus carica)என்ற சிற்றினத்தில் காணப்படும்.
அத்தியில் ஆண் மரமும் பெண் மரமும் தனித் தனியாக வளரும். இவற்றில் முறையே ஆண் பூக்களைக் கொண்ட ‘கோளி’யும், பெண் பூக்களைக் கொண்ட ‘கோளி’யும் உண்டாகும். அத்திக் காய்கள் இலைக் கோணத்தில் இரண்டு இரண்டாகக் காணப்படும். முட்டை வடிவான இதன் பிஞ்சுதான் அத்திப் பூந்துணர். இதன் மேற்புறத்தில் சிறு துளை செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இதற்குள்ளே காயின் சதைப்பற்றான உட்புறச் சுவரில் பலவகையான மலர்கள் நிறைந்திருக்கும். ஆண் மலரில் உண்டாகும் மகரந்தம், பெண் மலரில் உள்ள சூல் முடியில் வண்டினத்தால் கொண்டு சேர்க்கப் பெறும். மகரந்தச் சேர்க்கை பெற்ற பெண் மரத்திலுள்ள ‘கோளிகள்’ காயாகிப் பின்னர் பழமாகும். பழம் செந்திறமானது. இதன் செம்மை நிறம் மந்தி முகத்தின் செம்மைக்கு உவமையாகக் கூறப்பட்டது.
“அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க”-நற். 95 : 3-4
அத்திமரம் ஆற்றங்கரைகளில் வளரும் என்றும், இதன் கிளைகள் வெண்ணிறமானவை என்றும், இதன் கனி மிக மென்மையானது என்றும், நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் கூறும் குறுந்தொகை.
“ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”-குறு. 24 : 3-4
அதவம்—அத்தி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | அர்ட்டிசிபுளோரே (urticiflorae) என்னும் இத்தொகுதியில் மானோகிளமைடியே என்றதொரு பிரிவு உண்டு. அதில் அத்திக் குடும்பம் சேர்க்கப்பட்டுள்ளது. |
தாவரக் குடும்பம் | : | மோரேசி (Moraceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பைகஸ் (Ficus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | குளோமெரேட்டா (glomerata) |
சங்க இலக்கியப் பெயர் | : | அத்தி |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | அதவம் |
உலக வழக்குப் பெயர் | : | அத்தி |
தாவர இயல்பு | : | சிறு மரம். இதில் ஆண்மரமும், பெண்மரமும் உண்டு. இதன் பேரினத்தில் ஏறத்தாழ 700 சிற்றினங்கள் உலகில் உள்ளன என்பர். தமிழ் நாட்டில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர் காம்பிள். இவற்றுள் பெருமரங்களும் கொடியும் உள்ளன. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட். இதன் காய்க்காக வளர்க்கப்படுகிறது. அத்திக்காயும் பழமும் உணவுப் பொருள்கள். |
இலை | : | தனியிலை. நீண்டு, அகன்ற, பசிய, பெரிய இலை. சற்றுச் சொரசொரப்பாகவும், அடியில் நுண்மயிர் நிறைந்தும் இருக்கும். இலைக் கோணத்தில் இதன் மஞ்சரி 2 கோள வடிவானது. அத்திப் பிஞ்சுகள் உண்டாகும். |
மஞ்சரி | : | இதற்குக் ‘கோளிகள்’ என்று பெயர். இதற்குள்ளே நூற்றுக்கணக்கான மலர்கள் உட்புறச் சுவரில் ஒட்டியிருக்கும் |
மலர் | : | அத்தியில் மூன்று அல்லது நான்கு வகையான மலர்கள் உண்டாகும். ஆண் மலர், பெண் மலர், அலி மலர், மலட்டு மலர்-ஒருவகை அத்தியில் ஆண் மலடு, பெண் மலடு ஆன மலர்கள் உண்டாகும். இரு பாலான மரங்களிலும் உண்டாகும். |
ஆண் மலர் | : | இரு அகவிதழ்களையும், இரு மகரந்தத் தாள்களையும் உடையது. |
பெண் மலர் | : | இரு அகவிதழ்களும், சூலகமும் கர்ணப்படும். ஒரு சிற்றினத்தில் சூல்தண்டு குட்டையாகவும், நீண்டும் இருப்பதுண்டு. பொதுவாக, அத்திப் பிஞ்சாகிய பூங்கொத்தில் ஆண் மலர்கள் மேற்புறத்திலும், பெண் மலர்கள் அடிப்புறத்திலும் உண்டாகும். இணரின் (பிஞ்சு) மேற்புறத்தில் சிறு துளை இருக்கும். இதன் வழியாக வண்டினம் உள்ளே புகுந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும். இணராகிய கோளி பிஞ்சாகி, காயாகிப் பழமாகும். |
கனி | : | செந்நிறமானது. உணவாகப் பயன்படும் அத்திமரங்கள், இதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகின்றன. பசிய கனிகளும் உண்டு. |
அத்தியில் பைகஸ் காரிகா (Ficus carica) என்ற ஒரு சிற்றினம் உண்டு. அத்திப்பழம் (உணவுப்பொருள்) இதிலிருந்து உண்டாவது. இதில் மகரந்தச் சேர்க்கை வியத்தகு முறையில் நிகழ்கின்றது. இதனைச் சற்று விரிவாக விளக்குவாம்.
உண்ணுதற்குரிய பழந்தரும் இந்த அத்தி மரம், ‘மெடிட்டரேனியன்’ கடல் ஓரமாக வளர்கிறது. அத்திக்காய் என்பது ஆல், அரசு இவற்றின் காய்களைப் போன்று ஒரு பூங்கொத்து ஆகும். இதனைத் தமிழ் இலக்கியம் ‘கோளி’ என்று கூறும். இந்த அத்தியில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனியாக ஒரே காயில் உண்டாகின்றன. ஆண் அத்தி மரத்தில் உண்டாகும் காயினுள் மலட்டுப் பெண் பூக்களும் (Gall flo’ers), ஆண் பூக்களும் இருக்கும். பெண் அத்தி மரத்தில் உண்டாகும் காயினுள் பெண் பூக்களும், மலட்டு ஆண் பூக்களும் இருக்கும். மலட்டுப் பெண் பூவில் சூல் தண்டு குட்டையானது. இப்பூ சூல் உறாது சூலுற்றுச் செயல்படும் பெண் பூவில் சூல்தண்டு நீளமானது. மலட்டு ஆண் பூக்களில் மகரந்தம் விளையாது. மலட்டுப் பெண் பூ ஒரு வகைக் குளவிகள் முட்டையிடுவதற்கு இடம் கொடுக்கவே பயன்படுகிறது. இப்பூவில்தான் பிளாஸ்டோபாகா (Blastophaga sp.) என்னும் குளவி நன்கு அமர்ந்து முட்டையிட முடியும். மற்றைய பெண் பூவில் சூல்தண்டு நீளமாக இருப்பதால், அதன் மேல் இக்குளவி அமர முடியாது. இருப்பினும், இதனுடைய நீளமான சூல்தண்டின் முடிவில்தான் (சூலக முடி) நுண்ணிய மயிரிழைகள் அடர்ந்திருக்கின்றன. இவை மகரந்தங்களைப் பற்றிக் கொள்கின்றன. அங்குச் சுரக்கும் இனிய நீர்க் கசிவின் துணையால் மகரந்தங்கள் முளைத்து, நுண்ணிய மகரந்தக் குழாய்களைத் தோற்றுவித்து, அவற்றின் வழியாகத் தாதுவின் உட்கருவைச் செலுத்தும். மகரந்தக் குழாய் நீண்டு சூல்தண்டின் மூலம் உட்புகுந்து சூலகத்தைச் சென்றடையும். அங்குத் தாதுவின் உட்கரு, சூலகத்திலுள்ள குலக உட்கருவுடன் கலந்து, கரு முதிர்ந்து காயாகிப் பின் பழமாகும். பழத்தில் முதிரும் கரு விதையாகும். இக்கனியில் விதைகள் மிகுதியாக உண்டாகும். இங்ஙனம் அத்திப் பிஞ்சாகிய பூங்கொத்து ‘கோளி’ காயாகிப் பழமாகின்றது.
நீண்ட சூல்தண்டையுடைய இப்பூக்களுக்கு மகரந்தம் எவ்வாறு வந்து சேருகிறது என்பதை இனிக் காண்போம். இவ்வகை அத்தியின் மகரந்தச் சேர்க்கை (pollination) ஒரு வகையான குளவியால் உண்டாகின்றது என்று மேலே கூறினோம். அத்திப் பிஞ்சு காயாவதற்கு இக்குளவி வருகை தருதல் வேண்டும். இக்குளவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க, இவ்வத்தி பூத்தாக வேண்டும். இதுவே இயற்கையின் அழகு.
அத்தி பூத்தவுடன், பெண் குளவி அத்திக் காயின் (பூங்கொத்து) மேற்புறத்திலுள்ள சிறு துளை வழியாக உட்செல்லும். அத்திப் பிஞ்சில் இத்துளை சிறு செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இப்பிஞ்சில் மலட்டுப் பெண் பூக்கள் இருக்குமானால், குளவி அதில் அமர்ந்து முட்டையிடும். இல்லாவிடில், மலட்டுப்பெண் பூக்களைத் தேடி அலையும். முட்டையிடப்பட்ட அந்த ஆண் அத்திகளின் உள்ளே (caprifigs) குஞ்சுக் குளவிகள் ஆணும், பெண்ணுமாக இருக்கும். அங்குள்ள ஆண் பூக்களில் உண்டாகும் தாதுக்களை உண்டு, இவை வளர்ந்து வரும், புணர்ச்சிப் பருவம் முடிந்த பின்னர், கருவுற்ற பெண் குளவிகள் வெளியே புறப்படுகின்றன. ஆண் குளவிகள் தாம் பிறந்த அந்த அத்திக் காயிலேயே இறந்துபடுகின்றன. வெளியில் ஊர்ந்து வரும் பெண் குளவிகளின் உடல் முழுவதும் தாதுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இப்பெண் குளவி பறந்து போய், அருகில் உள்ள அத்திப் பூந்துணரில் நுழையும். இது பெண் அத்திப் பூவுள்ள பிஞ்சானால், குளவியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் மகரந்தம் பெண் பூக்களில் உள்ள நீண்ட சூல் தண்டின் மேல்பட்டு மகரந்தச் சேர்க்கை உண்டாகும். ஆனால், அதில் நுழைந்த குளவியின் நோக்கம் நிறைவேறாது. இப்பூக்களின் சூல்தண்டு நீளமாக இருப்பதால், குளவி இப்பூவில் தங்கி முட்டையிட முடியாமல், மகரந்தச் சேர்க்கையைத் தான் அறியாமலே செய்து விட்டு, முட்டையிடுதற்குரிய வேறு அத்திப் பிஞ்சைத் தேடி வெளிப்படும். குளவி நுழைந்தது ஆண் அத்தியானால், அதிலுள்ள மலட்டுப் பெண் பூவில் முட்டையிட்டு, அதனுள்ளேயே இறந்து விடும். முட்டைகள் குஞ்சுகளாகி, இம்மலட்டுப் பெண் பூக்களின் சூலகத்திலிருந்து வெளியேறுகின்றன. ஆண் குளவிகள் இந்த ஆண் அத்தியிலேயே இருந்து சாகின்றன. குளவிகள் முட்டையிடுவதற்கும், மகரந்தம் வெளிப்படுவதற்கும், அத்தி மரம் ஆண் அத்திக் காய்களை உண்டாக்க வேண்டும். இல்லாவிடில், அத்தி பழுக்காது. குளவியும் முட்டையிடாது. இவ்விரு உயிர்களின் வாழ்க்கையும் முற்றுப் பெறும் பொருட்டு, இயற்கையன்னை கையாளும் எத்தனையோ வியத்தகு இயற்கை உண்மை நிகழ்ச்சிகளில் இதுவும் ஒனறு.
- ↑ நல்வழி