சங்க இலக்கியத் தாவரங்கள்/123-150



மஞ்சள்
குர்குமா லாங்கா (Curcuma longa,Linn.)

மஞ்சள் குத்தாக வளரும் ஓராண்டுச் செடி. இதன் கிழங்கு மஞ்சள் ஆகும். இது நிறத்தால் பெயர் பெற்ற மங்கலப் பொருள். மஞ்சள், சங்க காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் பயிரிடப்பட்டு வருகின்றது. உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும். மருந்தாகவும் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : மஞ்சள்
தாவரப் பெயர் : குர்குமா லாங்கா
(Curcuma longa,Linn.)

மஞ்சள் இலக்கியம்

சோழ வளநாட்டின் கழனியில் மஞ்சள் விளைவதைப் பட்டினப்பாலை கூறுகின்றது.

“காய்க்கமுகின் கமழ் மஞ்சள்” -பட்டின. 17

மதுரைக்காஞ்சி மஞ்சள், இஞ்சி, மிளகு முதலியன கல்தரையினிடத்தே குவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றது.

“இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
 பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி”
-மதுரைக். 289-290

மஞ்சள் குத்துக்குத்தாக வளரும் ஓராண்டுச் செடி; மண்ணில் தரை மட்டக் கிழங்காக வளரும். இதுவே மஞ்சளின் தண்டு ஆகும். இதில் கணுக்கள் காணப்படும். கணுவில் கிளைத்த மஞ்சள் கிழங்கு இருக்கும். இதன் நுனியில் குருத்து மோனோக்கி எழுந்து நிலத்திற்கு மேற்பரப்பில் இலை விட்டு வளரும். இதன் இலைகள் நீளமானவை; அகன்றவை. பசுமையானவை. மெல்லியவை, ஏறத்தாழ 4-5 அடி உயரமானவை. மஞ்சளின் மெல்லிய இலைகள் தம் மேல் தடவிக் கொடுக்கும் படியாகப் பலா மரத்தின் நீழலில் எருமை பாயல் கொண்டிருப்பதைச் சிறுபாணாற்றுப் படையில் நத்தத்தனார் கூறுகின்றார்.

“. . . . . . . . . . . .எருமை
 பைங்கறி நிவந்த பலவின் நீழல்
 மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர”
-சிறுபா. 42-44

முதிராத புதிய மஞ்சள் கிழங்கில் செதில்களும், வேர்களும் மூடியிருக்கும். இதனை இறால் மீனின் புறத்திற்கு உவமை கூறுகின்றார் வெள்ளியந்தின்னனார்.

“முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச்
 சுற்றிய பிணர சூழ்கழி இறவின்”
-நற். 101 : 1-2

சேம்பு, மஞ்சள் விளைந்த கொல்லையில் பன்றி முதலிய விலங்குகள் புகாவண்ணம் காவலர் எழுப்பும் பறை ஒலி, குன்றில் எதிரொலிக்கும் என்றார் பெருங்கௌசிகனார்.

“சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
 பன்றிப் பறையும். குன்றகச் சிலம்பும்”

-மலைபடு. 343-344


வெறியாட்டு நிகழ்த்தும் குறமகள், குருதியொடு கூடிய வெள்ளரிசியைப் பலியாக இட்டு, மஞ்சளோடே சந்தனம் முதலியவற்றைத் தெளித்து வழிபடுவாள் என்று கூறும் திருமுருகாற்றுப்படை.

“சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து” -திருமுரு. 235

மஞ்சள் ஒரு மங்கலப் பொருள். இதன் கிழங்காகிய மஞ்சளுக்காக, மஞ்சள் செடி தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வருகின்றது. இது உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும். இது மருந்தாகவும் பயன்படும். உடம்பில் பசு மஞ்சளை அரைத்துப் பூசிக் கொள்வதால், நுண்ணிய நச்சுக் கிருமிகள் ஒழியும். மகளிர் இதனைப் பூசிக் கொள்வர்.

மஞ்சள் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எபிகைனே (Epigynae)
சைடாமினே (Scitaminae)
தாவரக் குடும்பம் : சிஞ்ஜிபெரேசி (Zingiberaceae)
தாவரப் பேரினப் பெயர் : குர்குமா (Curcuma)
தாவரச் சிற்றினப் பெயர் : லாங்கா (longa)
சங்க இலக்கியப் பெயர் : மஞ்சள்
தாவர இயல்பு : 4-5 அடி உயரம் வரை குத்தாக வளரும் ஓராண்டுச் செடி. தரைக்கு அடியில் மஞ்சள் கிழங்கு இருக்கும். இதுவே மஞ்சளின் தரை மட்டத் தண்டு ஆகும். இதில் கணுக்கள் காணப்படும். நுனியில் முளை விட்டு மேல் நோக்கி எழுந்து, தரைக்கு மேல் இலைகளை விட்டுக் குத்துக் குத்தாக வளரும்.
இலை : இலை நீளமானது 18 அங்குலம். அகலம் 8 அங். வரை இருக்கும். நுனி கூரியதாக இருக்கும்.
மஞ்சரி : அகன்ற செதில்களை உடையது. வெளிர் பச்சை நிறமானது. 1.5 அங். நீளமானது. 2-7 மலர்கள் உண்டாகும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : குழாய் வடிவானது குட்டையானது.
அல்லி வட்டம் : புனல் வடிவானது; 3 பிளவானது. நீள்முட்டை வடிவானது. பக்கத்துப் பிளவும் மலட்டுத் தாதிழைகள், மஞ்சள் நிறமானவை.
மகரந்த வட்டம் : அகன்ற தாதுத் தாளின் நுனி இரு பிளவானது. தாதுப்பைகள் நீளமானவை. அடியில் ‘ஸ்பர்’ இருக்கும்.
சூலக வட்டம் : 3 செல் உள்ள சூலகம்; பல சூல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது. சூல்முடி இரு உதடுகளை உடையது. நுண்மயிர் நிறைந்திருக்கும்.
கனி : 3 வால்வுகளை உடைய காப்சூல் என்ற வெடிகனி.
விதை : முட்டைவடிவானது. ‘ஏரில்’ இருக்கும்.

மஞ்சள் ஒரு மங்கலப் பொருள்: இதன் கிழங்காகிய மஞ்சளுக்காகப் பயிரிடப்படுகிறது.உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுவது. மருந்துக்கும் பயன்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32 என சாட்டேன்டி (1948, 1960) என்போரும், 2n = 62 என இராகவன், டி. எஸ்: வெங்கடசுப்பன் (1943) என்போரும், சர்மா, ஏ.கே.;.பட்டாச்சாரியா, என்.கே. (1959 சி) என்போரும் கணக்கிட்டுள்ளனர்.