சங்க இலக்கியத் தாவரங்கள்/147-150
செங்குரலி
‘சேடல் செம்மல் சிறுசெங்குரலி’ என்றார் குறிஞ்சிக் கபிலர் (குறிஞ். 82). சிறுசெங்குரலி என்பதற்குக் ‘கருந்தமாக் கொடிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர்.
“ஒண்செங்குரலித் தண் கயங் கலங்கி
வாளை நீர் நாய் நாளிரை பெறூஉம்”
-புறநா. 283 : 1-2
என்பது புறநானுாறு. ‘குரலி’ என்பதற்கு ஒரு வகைக் கொடி என்ற குறிப்புரை காணப்படுகிறது. நீர்நாய் வாளைமீனை நாள் இரையாகப் பெறுவதற்கு இக்கொடி படர்ந்த குளத்தைக் கலக்கியதாம்.
தாமக்கொடி என்றால் நீர்க்கொடி. எனவே கருமையான நீர்க்கொடியில் பூக்கும் பூ சிறிய அளவில் செம்மை நிறத்தில் பூக்கும் கொடிப்பூ என்று மட்டும் அறிய முடிகின்றது.
இம்மலரைப் பற்றிக் கொங்கு வேளிரும் குறிப்பிடுகின்றார். எனினும் விளக்கம் ஏதும் கூறப்படவில்லை. இவையன்றி இம்மலரைப் பற்றி யாதும் அறிய முடியவில்லை. அதனால் இதன் தாவரப் பெயரைக் கண்டு கொள்ள இயலவில்லை.
சங்க இலக்கியப் பெயர் | : | செங்குரலி |
தாவரப் பெயர் | : | தெரியவில்லை |