சங்க கால வள்ளல்கள்/தோற்றுவாய்

சங்க கால வள்ளல்கள்

தோற்றுவாய்

திருவள்ளுவரையும் அவர் யாத்த திருக்குறள் பெரு நூலையும் எல்லா மொழியினரும், இனத்தவரும் சமயத்தவரும் பெரிதும் பாராட்டுதற்குரிய காரணங்கள் பலவற்றுள் ஒன்று, எல்லாச் செய்திகளையும் திருவள்ளுவர் நன்கு சிந்தித்து வரையறுத்துத் தம் நூலில் பாடி அமைத்திருத்தலே யாகும். அங்ஙனம் அமைத்த கருத்துக்களில் “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்பதும் ஒன்று. அஃதாவது உயிர் அடையவேண்டிய பேறாக இருப்பது தமக்மென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, இயல்வது கரவாது ஏற்றவர்க்கு இல்லையெனக் கூறாது ஈந்து, அங்கனம் ஈந்ததனால் இசைதோன்ற வாழ்வு நடாத்துதலே யாகும் என்பதாம். ஈதலையே தம் வாழ்வாகக் கருதி அவ்வாழ்வே தம் மறுமையிலும் தொடரவேண்டும் என்று விரும்புபவர்களும் பலர் நம் நாட்டில் இருந்திருக்கின்றனர். கன்னனது ஆவியோ நிலையில் கலங்கி இருந்தது. அவ்வாவி ஆக்கையின் அகத்ததோ, புறத்ததோ என்னும் நிலையில் இருந்தது. அந்நிலையிலும் அவன் கண்ணனுக்கு வேண்டியதை ஈந்து கன் இசையை நிலை நிறுத்தினான் என்பதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அப்படி ஈந்த அவனை நோக்கிய கண்ணன் “கன்னா நீ வேண்டிய வரங்களைக் கேள் ; யான் தருகின்றேன்” என்று வினவியபோது, அங்கர்பூபதி வேறு எதையும் விரும்பாமல், “இல்லை என்றுரைப்போர்க்கு இல்லை யென்று உரையா இதயம் ஈந்தருள்," எனக் கேட்டதாக நாம் படிக்கும்போது, ஈகையில் எத்துணைப் பெருவிருப்பம் கொண்டிருந்தனர் நம் முன்னோர் என்பதை உணரலாம் அன்றோ ?

இங்ஙனம் பிறர்க்காக வாழ்ந்த பெரியவர்களையே நம்மவர் வள்ளல்கள், ஈகையாளர்கள், கொடையாளிகள், வண்மைமிக்கவர் என்று பாராட்டி வந்தனர். இங்ஙனம் உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் வள்ளியோர் என உரைக்கப்பட்ட பெருமை வாய்ந்தவர்கள் பலராக இருந்தாலும் இவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்து, இருபான் ஒருவர் என ஒரு தொகைப்படுத்திக் கூறுகின்றன நம் தொன்னூல்கள். அவ்விருபான் ஒருவரையும் மூன்றாக வகைப்படுத்தி எழுவர் எழுவராகவும் தொகைப்படுத்தினர். அங்ஙனம் தொகையாகக் குறிப்பிடப் பட்டவர்களை முதல் எழுவள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் எனக் கணித்துங் காட்டினர். அவர்களுள் முதல் எழுவள்ளல்களாக முதல் அணியில் நிற்பவர்கள் ‘சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், என்பவர்கள். இடையெழு வள்ளல்களாக இருந்து ஏற்றம் பெற்றவர்கள், அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் என்பவர்கள். கடையெழு வள்ளல்களாகக் கண்ணியம் கண்டவர்கள், பாரி, ஆய் அண்டிரன், எழினி, நள்ளி, மலயமான் திருமுடிக்காரி, வையாவிக் கோப்பெரும் பேகன், ஓரி என்பவர்கள். அவ் விருபான் ஒருவருள் கடைநின்ற கடையெழுவள்ளல்களின் வரலாறுகளை மட்டும் ஈண்டு உணர்வோ வி