சட்டைமுனி ஞானம்

சித்தர் பாடல்கள்
நூல் பகுதி 14
பக்கம் 277
சட்டைமுனி ஞானம்

பாடல்

தொகு

1

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்

கைம்முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்

பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்

புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்

நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்

நம்முடைய பூசை என்ன மேருப்போலே

ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே

உத்தமனே பூசை செய்வார் சித்தர் தானே

2

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்

சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்

தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்

சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப் போகா

வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்

வாய்திறந்தே உபதேசம் சொன்னர ஆகிற்

கோனென்ற வாதசித்தி கவன சித்தி

கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே

3

கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்

குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்

மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தைக் கேளாய்

மைந்தனே இவளை நீ பூசை பண்ணத்

தேறியதோர் புவனை தனின் எழுத்தைக் கேளாய்

திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு

ஆறியதோர் யாமளை ஆறெழுத்தைக் கேளாய்

அவளுடைய பதம் போற்றிப் பூசை பண்ணே

4

பண்ணியபின் யாமளை ஐந்தெழுத்தைக் கேளாய்

பண்பாகத் தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு

வண்ணியதோர் வாசியென்ற யோகத்துக்கு

மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும்

கண்ணியதோர் இத்தனையும் அறிந்து இருந்தாற்

காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை

உண்ணியதோர் உலகமென்ன சித்தர் என்ன

உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=சட்டைமுனி_ஞானம்&oldid=968932" இலிருந்து மீள்விக்கப்பட்டது