சந்திரிகையின் கதை/பூகம்பம்
பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்- பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.
அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.
அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருதுசாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.
இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.
இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலைமயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.
இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நட்சத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.
அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.
இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.
மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.
இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.
எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர், ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள் என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.
ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு கணங்களில் திடீரென்று உள் வீட¦ல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.
இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து குவா!குவா! என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:-விசாலாட்சி!விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை என்றாள்.
விசாலாட்சி 'சரி' என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.