சந்திரிகையின் கதை/பெண்டாட்டிக்கு ஜயம்
ஒன்பநாம் அத்யாயம்.
பொண்டாட்டிக்கு ஜயம்
மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந் தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். ஸோமநாதய்யர் ஏதேனுமொரு கார்யம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். “தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன் கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்யக்ஷ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப் படலாகாது” என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படி யிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:— “நாளை ஞாயிற்றுக் கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்
விசேஷக் குறிப்பு.
ஆசிரியர் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டார். இதுவரை விசாலாக்ஷி அம்மாளுடைய சரித்திரம் விரித்துக் கூறப்பட்டது. இரண்டாவது பாகத்தில் தான் சந்திரிகையின் வரலாற்றைச் சொல்வதாக உத்தேசித்திருந்தார். சுமார் க0 பக்கங்கள் மாத்திரமே இரண்டாம் பாகத்தில் எழுதப்பட்டிருந்தன. ஸோமனாதய்யரும் முத்தம்மாளும் ஸமுத்ரக்கரைக்குப் போதல்—ஸமுத்ரவர்ணனை, விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் தெளிதல், சர்மா விசாலாக்ஷி சந்திரிகை முதலியவருடன் வசித்துக் கொண்டிருத்தல் ஆக இவையே ௸ பத்துப் பக்கத்தின் கதை, ௸ பக்கங்கள் சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ் மானேஜர் அவர்களிடம் கொடுத்திருப்பதாகக் கையெழுத்துப் பிரதியில் எழுதப்பட்டிருக்கிறது. அங்கு பல தடவை விசாரித்தும் கிடைப்ப தற்கிடமில்லாமல் போய்விட்டபடியால் “சந்திரிகையின் கதை” யை இப்படியே நிறுத்தவேண்டியிருக்கிறது.
பாரதி பிரசுராலயத்தார்