சமதர்மம்/என்னைக் கவர்ந்த புத்தகங்கள்

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்


இருள் சூழ்ந்திருந்த அந்தக் குகையிலே, தேம்பித் தேம்பி அழுதபடி நின்று கொண்டிருந்த அலாவுதீன் சுவற்றின் மீது சாய்ந்தான்--அவன் கையிலிருந்த தீபம், சுவற்றிலே உராய்ந்தது--உடனே குகையே கிடுகிடுவென்று ஆடுவது போன்றதோர் சத்தம் கேட்டது--அலாவுதீனின் தலை கிறுகிறுவென்று சுழன்றது. ஐயோ என்று அலறினான். அவன் எதிரே ஒரு பயங்கரமான பூதம் வந்து நின்றது.

இதுபோன்ற வர்ணனைகளும், ஆச்சரியச் சம்பவங்களும், திடுக்கிடவைக்கும் தகவல்களும், நிரம்பிய அலாவுதீனின் அற்புததீபம் என்ற கதையைப் படித்தபோது, அதிலேயே சொக்கிப்போய், அதைவிடச் சிறந்த புத்தகமே இடையாது என்று நம்பிய பருவம்--எனக்குமட்டுமல்ல-- உங்களில் பலருக்கும் உண்டு. அந்தச் சிறு பிராயத்தில் அந்தக் கதை நிச்சயமாக நமது உள்ளத்தைக் கவர்ந்தது--அலாவுதீன் அழுதபோது அழுதோம்--சிரித்தபோது சிரித்தோம். மந்திரவாதியை வெறுத்தோம். அவன் மாண்டான் என்று கதையிலே கூறப்பட்டபோது மகிழ்ந்தோம். மாலை விளையாட்டு, காலை உணவு, இரவுப்படிப்பு, வீட்டுக் கணக்கு முதலிய அலுவல்களையும் மறந்து அந்தக் கதையைப் படித்திருக்கிறோம். ரசித்திருக்கிறோம். பழைய விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம், அந்த அற்புத தீபத்தின் நினைப்புதான்--உருட்டு விழியும் மருட்டும் மீசைகளைப் பார்க்கும்போதெல்லாம், அந்த மந்திரவாதியின் நினைப்புத்தான்--நமது இளம் உள்ளத்தில், அந்தக் கதை அவ்வளவு தூரம் குடி ஏறிவிட்டது--குதூகலம் தந்தது. ஆப்பிரிக்காவின் அகல நீளம். பசிபிக் கடலிலுள்ள தீவுகள், ஆயிரம் ரூபாயை அறுபத்தாறு பேருக்குப் பங்கிட்டுத் தருவது, ஆலமரத்துக்கு விழுது இருப்பதன் காரணம் போன்ற பள்ளிக்கூடப் பாடங்களெல்லாம், நமக்குக் கசப்பாகவும், அலாவுதீன் கதை, அலிபாபா கதை, ஆயிரம் தலை வாங்கியவள் கதை, கூடுவிட்டுக் கூடுபாயும் கதை, காளி கூளிக்குச் சொன்ன கதை, போன்றவைகள் சுவை தந்து, நம்மைக் கவர்ந்திருக்கின்றன.

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் இவை போன்றவை--அந்தப் பிராயத்தில் --துள்ளித் திரிந்த பள்ளிப் பருவகாலத்தில். எனக்கு மட்டுமா? உங்களுக்குந்தான்--கவனப் படுத்திப் பாருங்கள், தெருத் திண்ணையில் மாடத்தில் மங்கலாக அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது--சுவற்றில் சாய்ந்தபடி, சுற்றும் முற்றும் என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், சிற்றெறும்பு கடித்தாலும் கவலைப்படாமல், படித்துக்கொண்டிருக்கும் காட்சி, கவனத்திற்கு வரும்.

மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழைய கருத்துக்களை மாற்றுவது, பண்பு தருவது, செயல் புரியும் திறன் அளிப்பது என்பன போன்ற பயன்களைப் பெறுவதற்கே; படிக்கிறோம்--ஒவ்வொரு வகைப் புத்தகமும் ஒவ்வொரு பயனை, ஒவ்வோர் அளவுக்குத் தருவதுடன் நமது மனதை உருவாக்க உதவுகின்றன. மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றோ புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக் கூடிய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது.

நாரதரின் கானம் பற்றியோ, தேவலோகக் காட்சி பற்றியோ, சுவைதரும் விதமாகத் தீட்டப்பட்ட ஏட்டினைப் படிக்கும்போது, ஒருவகை இனிமை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் புதிய எண்ணம், விழிப்பு. செயலாற்றும் தன்மை ஏற்படுவதில்லை. பக்திப் பரவசத்துடன் அந்த ஏடுகளைப் படிப்போரும், போய்ப் பார்த்துவிட்டே வரவேண்டும் நாரதரை என்று பயணப்படுவதில்லை.

மலேயாவைப்பற்றிய வரலாற்றுப் புத்தகத்திலே சுவை இருக்காது. எனினும், படிப்பவர்கள் வசதி கிடைத்தால் அங்குபோய் வரலாம் என்ற எண்ணம் கொள்ளவும். செயலாற்றவும் முடிகிறது.

சுவை கருதி மட்டும் படிக்கும் பருவத்திலே, நம்பமுடியாத நிகழ்ச்சிகள், சாதிக்க முடியாத செயல் கொண்ட கதைகள், உள்ளத்தைக் கவருகின்றன. இந்த வரிசையில் மனதிலே. எளிதாகவும் விரைவாகவம் பதிந்துவிடும் கதைப் போக்கு கொண்டது விக்கிரமாதித்தன் கதை போன்றவைகள்.

அந்தப் பருவம் கடந்த பிறகு, பயன் தரும் ஏடுகளையே மனம் நாடுகிறது. பொழுது போக்குடன் பயனும் வந்து, சுவையும் தந்த புத்தகங்களிலே, பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறேன் -- என் உள்ளத்தைக் கவர்ந்த ஏடுகளிலே, அது ஒன்று.

இம்மை, மறுமை என்ற இரு கூறுகளை ஏற்றுக்கொள்பவர்கள், மறுமைக்குத் துணைசெய்யும் ஏடுகளை மதிக்கத் தொடங்கி, அறிவாராய்ச்சிக்கு ஒவ்வாத கருத்துக்களை மனத்திலே திணித்துக்கொண்டு, கவலைச் சுமையும், பயபாரமும் கொண்டவர்களாகிறார்கள்.

அத்தகைய ஏடுகளை நான் படித்ததுண்டு--அவை. சில சமயம் அச்சத்தையும், அருவருப்பையும் தந்துள்ளன--உள்ளத்தைக் கவர்ந்ததில்லை. புராண இதிகாசக் கதைகளை நான் பள்ளிப்பருவத்திலே, படிக்க நேரிட்டபோது, அவை தேவையற்றவை என்ற கருத்தோ, அல்லது நம்மால் சாதிக்க முடியாதவைகளைக் கொண்ட ஏடுகள் என்றோ தான் எண்ணம் ஏற்பட்டது. உள்ளத்திலே சில சமயம் அதிர்ச்சி தரும், நரகலோக வர்ணனை, மண்டை ஆயிரம் சுக்கலாக வெடிப்பது, மலைப் பாம்பு விழுங்கிவிடுவது போன்றவைகளைப் பற்றிப் படிக்கும்போது--ஆனால் நீண்ட காலம், அந்த ஏடுகளோ, அவைகளிலே குறிப்பிடப்பட்ட கருத்துகளோ, மனதில் தங்கி இருந்ததில்லை. தினைப்புனத்துப் பட்சிகள் போல, அக்கருத்துக்கள கூட்டம் கூட்டமாக வரும். உள்ளத்தைத் தொடும். ஆனால் அறிவுத்தெளிவு--எனும் ஆலோலம், கேட்கக் கேட்க அவை பறந்தே போய்விடும்--எனக்கு மட்டுமல்ல; சராசரி அறிவுள்ள எவருக்கும்.

படித்துக்கொண்டிருக்கும்போதே நம்மைப் பரவசப் படுத்திவிடும் ஓசை நயமும். பொருள் செறிவும் கொண்ட புத்தகங்கள் மனதைக் கவரும் தன்மை உடையன. இந்த வரிசையிலே, என்மனதை மிகவும் அதிகமாக ஈர்த்த புத்தகங்களிலே கலிங்கத்துப் பரணியை, முக்கியமானதாகக் கருதுகிறேன். அத்தகைய ஏடுகள் சுவை தருவன -- சுவை ஏற்படுகிறது நிச்சயமாக--ஆனால் பயன் கருதிப் படிக்கும் பருவத்திலே, வெறும் சுவை தரும் ஏடுகளாகிய கலிங்கத்துப்பரணி, குற்றாலக் குறவஞ்சி ஆகியவைகளைப் படிக்க நேரமும், நினைப்பும், இயற்கையாகவே ஏற்படுவதில்லை.

இனிய நடை, எழில் பற்றிய விளக்கம், சிந்து பாடும் சிற்றாறு, மேகத்தை மாலையாகக்கொண்ட மலை, மானும் அதன் கன்றும் சென்று நீர் பருகும் சுனை, பங்கப்பழனத்துழும் உழவர், பலவின் கனிமைப் பறித்ததென்று சங்கிட்டு எறியும் காட்சி, கதிர் ஒரு முழமே காணும் கதலி கழுகெனவே நீளும் காட்சி, ஆகியவைகள் போன்ற ஓவியங்களைத் தீட்டிக் காட்டும் காவியங்களிலே, சுவை உண்டு என்பதை உணரவே முடியாத குருட்டறிவோ, பருகவே முடியாத பாமரத் தன்மையோ அல்ல, இன்று அவ்விதமான ஏடுகளை, நானும், என் நிலையில் உள்ள உங்களில் பலரும், நாடாத்தற்குக் காரணம். நமது நோக்கம், வேறு ஏடுகளைத் தேடச் செய்கிறது; நமது மனக் கண்முன் தோன்றி, நம்மைப் பணிபுரியச் சொல்லும் பிரச்னைகள் யாவையோ, அவைகளை விளக்கும் ஏடுகளே, இப்போது உள்ளத்தைக் கவருகின்றன.

உள்ளம் வளருகிறது--சிந்தனையால். உலகில் உலவும் எண்ண அலைகளால்--வாழ்க்கை எனும் ஆசிரியன் புகட்டும் பாடங்களால்--இலட்சியங்கள். புதிது புதிதாகப் பிறக்கின்றன. இவைகளுக்கேற்ற வண்ணம். அறிவுத் தாகம் ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைத் தீர்க்கும் ஏடுகளை நாடுகிறோம்.

அழகு, இன்பம், காதல், மாந்தோப்பில் மங்கை நல்லாளைச் சந்திப்பது போன்ற கதைகள், சுவை தந்த சில சமயம் பயனும் தருகின்றன. ஆனால் அந்த ஏடுகளிலேயே, அவன் தேடும் இலட்சியம் முழுவதும் இருப்பதில்லை. மாறுகிறது.

மாசறு முத்தே! வலம்புரிச்சங்கே !! என்று அன்புரை கூறிக் கண்ணகியுடன் கோவலன் கொஞ்சிடும் காட்சியும், கடலாடும் காட்சியும் "அறநெறி அழித்த நானோ மன்னன்! யானே கள்வன்!!" என்று பாண்டியன் பதறி இறந்திடும் காட்சியும், நெஞ்சை அள்ளும் இன்னேரன்ன பிற காட்சிகளும் கொண்ட சிலப்பதிகாரம், உள்ளத்தைக் கவர்ந்திடத்தான் செய்தது. ஆனால், பருவம் மாறுகிறது, புத்தகப்பட்டியலும் மாறுகிறது.

ஆற்றல் வளரும் பருவத்தை அடைந்ததும், வீரச் செயல்கள், களக்காட்சிகள், அரசு அமைக்கும் அருஞ் செயல்கள், ஆகியவைகளைப் பற்றிய புத்தகங்கள் பெரிதும் கவர்ச்சி தருகின்றன. அலெக்சாண்டரின் ஆற்றல், ஜூலியஸ் சீசரின் வீரம், நெப்போலியனின் போரார்வம், பேரரசுகள் அமைந்த விதம், அழிந்த வகை, ஆகியவை பற்றிய நிகழ்ச்சி நிகண்டுகள் மனதைக் கவர்ந்ததுடன் தாய்நாட்டில், தமிழகத்தில், அத்தகைய மாவீரர்கள். மணிமுடி தரித்த மன்னர்கள், கடல் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டிய வேந்தர்கள், ஆகியவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தாய்த் திருநாட்டின் தனிச்சிறப்பை உணர்ந்து உலகுக்கு உரைக்கவேண்டும், என்று ஆர்வம் கிளம்பி தமிழ்ச் சுவடிகளைத் துருவித்துருவிப் பார்க்கவும். தமிழ் அறிஞர்களிடமெல்லாம் பாடம் கேட்கவும் எண்ணம் பிறந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுகுறிப்புக்களும், இமயம் முட்டிய வீரத்தைப் பற்றிய இனிய பாடல்களும், கனக விசயன் தலையில் கல்லேற்றிய கதையும், கங்கையும் கடாரமும் கொண்டது பற்றிய கல்வெட்டுகளும், கரிகாலன், ராஜ ராஜன், குலோத்துங்கன், ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், ஆடலரசன், ஆட்டனத்தி, என்று வரும் பெயர்ப்பட்டியலும் கிடைத்தனவேயன்றி, மற்ற நாட்டு மாவீரர்களின் வரலாறுகள் போலக், கட்டுக்கோப்பாக இன்னமும் கிடைக்கவில்லை. கிடைக்காத காரணத்தால் செயலாற்றும் பக்குவத்தில் உள்ள வீர இளைஞர்களின் மனதைக் கவரக்கூடிய மகத்தான சாதனத்தைப் பெற முடியாமற் போய்விட்டது.

அபட், எழுதிய 'நெப்போலியன் வரலாறு,' கிப்பன் எழுதிய 'ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் இரு ஏடுகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன.

அடிமைத் தளையிலிருந்து விடுபட வீர போர்ப் புரிந்த நாடுகளின் வரலாறுகள், அவைகளிலே இடம் பெறும், ஆற்றல் மிக்கோரின் வாழ்க்கைக் குறிப்புக்கள், ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் சொந்த வாழ்க்கையில் வறுமைத் தேள் கொட்டினாலும், பழி எனும் பாம்பு கடித்தாலும், பதறாமல், சலிக்காமல், விடுதலைப் போர் நடத்திய வீரச் செயல்களைப் படிக்கும்போது, கோழையும் வீரனாகிறான்--கூனனும் சற்று நிமிர்ந்து நிற்கிறான். 'சைமன் போலீவர் காரிபால்டி', ஆகியோர் பற்றிய புத்தகங்கள். என்னைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அதே முறையிலே தீட்டப்படவில்லை என்ற போதலும், சிந்திச் சிதறிக்கிடக்கும் அளவிலேயும், 'கட்டபொம்மு,' 'தேசிங்குராஜன்' ஆகியோரின் கதைகளும், 'நரசிம்ம பல்லவன்' காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து பம்பாய் அருகேயுள்ள வாதாபி எனும் நகர்மீது படை எடுத்துச் சென்று, சாளுக்கிய மன்னன் 'புலிகேசி'யைத் தோற்கடித்த பரஞ்சோதியின் பேராற்றல் பற்றிய சிறு குறிப்புக்கள், என் மனதைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

நாடு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலே, விடுதலை வீரர்களின் கதைகள் மனதைக் கவரும் அளவுக்கு, விருதா கிடைத்தான பிறகு, அதே வகை ஏடுகள், உள்ளத்தைக் கவருவதில்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது மாம்பழம் சாப்பிடுவது போலாகி விடுகிறது.

பொதுவாகவே. வீரத்தைக் கண்டு வியந்திடும் பருவத்தைத் தாண்டி, வீரத்தால் விளைந்தது என்ன என்று கணக்கிடும் பருவம் செல்கிறோம், மீண்டும் புத்தகப் பட்டியல் மாறுகிறது. அந்நிலையில் வீரர்களின் வரலாறுகளைவிட நீதிக்காகப் போராடியவர்கள், மேட்டுக் குடியினரின் அட்டகாசத்தை எதிர்த்து நின்றவர்கள், புனிதப் போர்வை யில் உலவிய புலிகளிடமிருந்து, மனமருள் கொண்ட மான் கூட்டத்தை விடுவித்தவர்கள், நசுக்கப்பட்ட மக்களுக்குக் கை கொடுத்தவர்கள், ஆதிக்கப் பீடங்களான அரன்மனைகளையும், மடாலயங்களையும் அச்சமின்றி எதிர்த்து நின்று அறப்போர் நடத்தி மக்களின் நல் வாழ்வுக்குப் பாடுபட்டவர்களின் வரலாறுகள், மனதைக் கவருகின்றன. இந்த வரிசையில் அறியாமை இருளைக் கிழித்தெறிந்த அறிவுச் சுடர்; ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்தெரிந்த பகுத்தறிவுப் படைத் தலைவன், வக்கிர புத்தி கொண்ட வைதீகத்தின் வைரி, 'வால்டேர்', "அரசாங்கம் என்னை அழிக்க முயற்சிக்கலாம். படை பலம் பாய்ந்து வரலாம், உலகே கேலியும் செய்யலாம். எனினும் நீதியை நிலைநாட்டி, ஏழையின் கண்ணீரைத் துடைத்தே தீருவேன்" என்று வீர முழக்கமிட்டுப் போரிட்டு வெற்றி கண்ட இலக்கிய வீரன், 'எமிலி ஜோலா', ஆகியவர்களின் வரலாறும், அவர்கள் அளித்து அறிவுரைகளைக் கொண்ட ஏடுகளையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இதே முறையில், 'இங்கர்சாலின் பகுத்தறிவு வசனக் கவிதைகள் எழுச்சி யூட்டி என் மனதைக் கவர்ந்திருக்கிறது.

இயற்கை நுட்பங்களைக் கண்டறிந்து, மனித சமுதாயத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இதம் தந்து, உலகைப் புதியதாய், வசதியதாய் ஆக்கித் தரும் விஞ்ஞான வித்தகர்களின் வாழ்க்கை வரலாறுகளும், ஆராய்ச்சிகளும் இன்றைய நிலையில் சுவையும், பயனும் தந்து மக்கள் உள்ளத்தைக் கவரவல்ல, அருமையான நூற்களாக அமைகின்றன.

தனி மனிதன் மட்டுமல்ல; உலகமே இந்த முறையிலே தான் அந்தந்தக் காலத்திற்கேற்ற முறையில் நூற்கள் மாறினாலும், இறந்தகால ஏடுகள் அனைத்தும் இறந்துவிடுவதில்லை.

'புத்தர்' துறவு, 'சாக்ரடீஸ்' வழக்கு மன்றத்தில் நின்று பேசுவது, 'ஏசு' சிலுவையில் அறைபடுவது, இளங்கோவடிக'ளின் துறவு, 'மனிமேகலை'யின் மன உறுதி. 'கண்ணகி'யின் கேள்விக் கணைகள், 'மாதவி'யின் மனநெகிழ்ச்சி, 'அசோக'னின் துக்கம், 'சகுந்தலை'யின் சோகம் போன்ற நிகழ்ச்சிக் கோவைகள் எப்போதுமே நெஞ்சை நெகிழச் செய்வன.

இன்னின்ன புத்தகங்களைப் படித்ததாக ஏற்பட்டால் தான், உள்ளத் தூய்மையும் மேதையும் இருப்பதாக உலகு கருதும் என்ற எண்ணம் கொண்டு சிலர், சில புத்தகங்களை குறிப்பிட்டுக் கூறுவதுண்டு எழுச்சியுடன்.

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்.'

'திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலிவாலே ஒருத்தரை மதிப்பதில்லை உந்தன் அருளாலே.'

ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. நைடதம் புலவர்க்கு ஒளடதம். கல்லாடம் படித்தவருடன் சொல்லாடாதே."--என்றெல்லாம் வழங்கப்படும் புகழ் மொழிகளைமட்டும் கொண்டே புத்தகப் பட்டியலைத் தயாரித்துவிட இன்றைய உலகம் தயாரில் இல்லை.

அறிவுத் துறையின் முனைகள் இப்போது ஒன்று பலவாகப் பெருகியபடி இருக்கிறது. பல்வேறு துறைகளிலே உள்ள பிரச்சினைகளிலே தெளிவும், பண்பாட்டுக்கு ஓர் விளக்கமும், சமுதாய அமைப்புமுறை, அரசு அமைப்பு முறை, அறநெறி ஆகியவைபற்றிய கருத்துரையும் ஒருங்கே கொண்டதாய் மக்களை, அறிவும் ஆற்றலும் அறமும் கொண்டவர்களாக்க வல்லதாய், அமைந்துள்ள பெருநூல் இன்று நமக்கிருப்பது திருக்குறள். நமது உள்ளத்தை கவருவது மட்டு மல்ல, திருத்தவும் உதவுவது. எனினும் அறிவு ஓர் தொடர்கதை-அதற்கு ஆசிரியர்கள், தொடர்ந்து தோன்றியபடி இருக்கிறார்கள்--இனியும் தோன்றுவார்கள்--உள்ளங் கவர் புத்தகங்கள் மேலும் பலப்பல வெளிவந்த படித்தான் இருக்கும்.