சமுதாயப் புரட்சி/சமுதாயப் புரட்சி

சமுதாயப் புரட்சி

அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே,

இந்த ஆண்டு மேதின விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா நம் கழகச் சார்பாகக் கூடிய கூட்டத்தில் பேசியதாகும்.

வானமுகட்டிலே, நிலா பட்டொளி வீசிப் பறக்கிறது. நிலா மலர்ந்த இரவிலே நாம் கூடியிருக்கிறோம். இன்று நல்ல நிலவு இருப்பதால்தான் கவிஞர் ஹரீந்திரநாத் அழகாகப் பேசினார். நிலா மலர்ந்த இரவிலேதான் கவிஞர்களுக்கு அழகிய கவிதைகள் தோன்றும். கவிஞர் அழகிய கவிதை ஒன்றை நம் முன்னர் படித்ததைப் பார்த்து நாம் மகிழ்ந்தோம்.

மேலே நல்ல நிலவு; கீழே பார்த்தால் ஒரே இருள். இங்கு மக்கள் குழுமியிருக்கும் மாபெருங் கூட்டத்தின் அளவை தொலை தூரத்தில் இருக்கும் வீதியிலே செல்லும் மோட்டார்கள் உமிழ்கின்ற விளக்கு வெளிச்சத்தின் மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு தூரத்திற்கு மக்கள் இந்த மேதினத்தில் குழுமியிருக்கிறார்கள்.

மேதின சிறப்புகளைப்பற்றியும் உலக நிலைமையைப் பற்றியும் கவி ஹரீந்திரநாத் விளக்கியதோடு நான் ஒரு திராவிடர் அல்ல என்றும் குறிப்பிட்டார். அது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

யார் யார் சனாதனக் கோட்டைகளைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கருதுகிறார்களோ, யார் யார் மக்கள் உள்ளத்தில் படிந்துள்ள மாசுகளைத் துடைத்துச் சீர்திருத்த வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, யார் யார் மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்க வேண்டுமென்று முனைகிறார்களோ அவர்களெல்லாம் திராவிடர்கள். அவர்கள் வங்கத்திலே பிறந்தாலும் சரி, சிந்துவிலே இருந்தாலும் சரி அவர்கள் திராவிடர்கள்தான், திராவிட நாடு பலபேரை சுவீகாரம் எடுத்திருக்கிறது. திராவிட நாட்டுக்கு - ஹரீந்திரநாத் சுவீகாரப் பிள்ளையாகக் கிடைப்பாரானால் அதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

நம்முடைய தொழிலாளர் நிலையைப் பற்றியும், ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் நண்பர் விளக்கமாக எடுத்துரைத்தார். இன்று சென்னையில் எட்டு இடங்களிலே மே தினக் கொண்டாட்டம் நடக்கிறது. இதே தினத்தில் ஒரு இடத்தில், தோழர் அந்தோணிப்பிள்ளை, மற்றொரு இடத்தில் தோழர் ராஜமன்னார், இன்னொரு இடத்தில் தோழர் ஷெட்டி பேசுகிறார்கள். இப்படிப் பலபேர்கள் பேசும் இந்த நேத்தில் காங்கிரஸ்காரர்கள் மட்டும் பேசாமல் இருப்பார்களா? அவர்களும் இன்று பேசுகிறார்கள். எங்கே? ராஜாஜி மண்டபத்திலே! நமக்கும் அவர்களுக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் திறந்த வெளியிலே பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ளோம். அவர்கள் மூடிய மண்டபத்திலே, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலே ஒரு சிறு கூட்டம் கூடியுள்ளார்கள். நாம் சாதாரண மக்கள்; அவர்கள் மாஜி மந்திரிகள், மாஜி மந்திரிகள் மந்திரி சபையில் ஆட்டம் கொடுத்தவர்கள், மந்திரிகளாக விரும்புவோரெல்லாம் அங்குப் பேசுகிறார்கள்.

மேதினத்திற்கு மேதினியின் சரித்திரத்தை அறித்தவர்கள் தேவை; உள்ள உரம் கொண்ட உழைப்பாளிகள் தேவை; அவர்கள். இங்கு ஏராளமாகக் கூடியுள்ளார்கள், மேதினத்திற்கு முக்கியமாக வேண்டியவர்கள் வீரர்கள், நாணயஸ்தர்கள், அவர்கள் இங்கு ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களிடம் எனக்குப் பூரணாம்பிக்கையுண்டு. மேதினத்தில் மேதினியின் சிறப்பைப்பற்றிப் பாடுவதற்குச் சிறந்த கவிஞர் தேவை, இதோ ஹரீந்திரநாத் இருக்கிறார்.

நாம் மட்டுமா மேவிழாக் கொண்டாடுகிறோம்! இல்லை நமக்கு வழிகாட்டி, ஆனால் இப்பொழுது நம்மை விட்டுப் பிரிந்தவர், எனக்குக் குரு, திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் இன்று புதுச்சேரியிலே பேசுகிறார்; நண்பர் நெடுஞ்செழியன் கோவையிலே பேசுகிறார்; அன்பர் அன்பழகன் திருச்சியிலே பேசுகிறார்; இன்று நம்முடைய தோழர்களில் பலர் பல இடங்களிலே தொழிலாளர் முரசைக் கொட்டுகிறார்கள், நமக்கு இது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆனால் சர்க்காருக்கோ இது மருட்சிக்குரிய செய்தியாகும். இதுபோன்ற கூட்டங்களுக்கு சர்க்கார் இனி தடை விதித்தாலும் விதிக்கலாம்.

”உம்மால் ஆனதைச் செய்யுங்கள்” என்ற வாசகம் ஒன்றைக் கவிஞர் அழகுற எடுத்துரைத்தார். நம்மை ஆளும் சர்க்கார் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

”சூளையில் நடைபெற்ற கூட்டத்திலே, 'எம்மை ஆளும் சர்க்காரே! உம்மால் ஆனதைச் செய்யும்’ என்று சொன்னீர்களே! சொல்லலாமா! வாருங்கள் சேலம் சிறைக்கு” என்று சர்க்கார் நம்மையெல்லாம் அழைத்தாலும் அழைக்கலாம்.

ஒரு சர்க்கார் மிக்க பலம் பொருந்தியதாயிருப்பதாலும், வாய்ப்புகளும் வசதிகளும் பல பெற்றதோடு பிரசார பலம் பெற்றதாயிருப்பதாலும், அந்த அளவு மக்களிடம் அச்சத்தைத் தங்களால் உண்டாக்க முடியும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். பெரும்படை, பட்டாளம், போலீஸ், ஜயில் இவை இருப்பதால் உரிமைப் போராட்டம் நடக்க வழியில்லையென்று எந்த சர்க்காரும் எண்ண வேண்டாம். சர்க்கார் நாட்டைக் காடாக்குகிறது. ஆனால், அவர்கள் காட்டை நாடாக்க வேண்டும். அதைச் செய்கிறதா நம் சர்க்கார்? நாடு காடாகும் நிலையை வளரவிடக்கூடாது. நாடு காடானால் மக்கள் உரிமை உணர்ச்சி நிச்சயமாக வளரும். கவிஞரும், நாமும் உரிமை உணர்ச்சியோடு சொல்வதை யெல்லாம் -- சர்க்கார் -- கேட்பார்களா? கவிஞர் பேசிய பேச்செல்லாம் சர்க்காருக்குக் கேட்கும் என்றா எண்ணுகிறீர்கள்?

ராஜாஜிக்குத்தான் கேளாக்காது. தனம் குமாரசாமி ராஜாவுக்குக் கேளாக்காதில்லை. இந்த சர்க்கார் நாம் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும்.

கவிஞர் பேசும்பொழுது குறிப்பிட்டார், எல்லாவற்றிற்கும் ஒரே பழிச்சொல் சொல்கிறார்களென்று. மாஸ்கோ கூலிகள், துரோகிகள், கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே பழியைக் கூறி நாட்டிலே ஏற்பட்டுள்ள சுதந்திரக் கிளாச்சியை சர்க்கார் கொடுமையாக அடக்கப்பார்க்கிறது. நம்முடைய காங்கிரஸ் தோழர்கள் ஒருகாலத்திலே நம்மை தேசத் துரோகிகள் கம்யூனிஸ்டுகள் என்றார்கள். இப்பொழுது நம்மை கம்யூனிஸ்ட்கள் அல்ல என்றாலும் — கருங் கம்யூனிஸ்டுகள் (Black Communist) என்று சொல்லுகிறார்கள். அகராதியில் (Black Cormmunist) என்ற ஒரு புதிய பதம் சேர்க்கப்படுவதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

பொதுவுடைமைத் தத்துவத்துக்கும், நம்முடை கழகக் கொள்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை கம்யூனிஸ்ட்கள் பொருளாதாரத் துறையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் சமுதாயத் துறையிலே நாட்டம் செலுத்துவதில்லை. சமுதாயத்துறையிலே, சமூக சீர்திருத்தத்திலே முதலில் நாட்டம் செலுத்திய பின்னர்தான் பொருளாதாரத் துறையிலே சர்க்காரிடம் போரிட வேண்டுமென்மன்பது நம் விருப்பம், அப்போதுதான் வெற்றியும் எளிதில் கிடைக்கும். கம்யூனிஸ்ட்களுக்கு ஏழை — பணக்காரன் ஒரே பிரச்சினைதான் முக்கியமாக இருக்கிறது.

பொதுவுடைமைக் கட்சி பலாத்காரத்தில் இறங்குகிற பொழுது - நாம் அதைக் கண்டிக்கச் செய்கிறோம். "பொதுவுடைமைத் தோழர்கள் - பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சர்க்கார் குற்றம் சாட்டியபோது கம்யூனிஸ்ட்கள் அதை மறுத்து ஒருவித அறிக்கையையும் வெளியிடவில்லை. பலாத்காரத்திலே நமக்கு நம்பிக்கையில்லையென்று பலமுறை சொல்லியிருக்கிறோம். நாம் பலாத்காரத்தை விட்டுப் பிரிந்திருக்கிறோம். தமிழில் நான் பேசுவது கவிஞருக்குச் சற்று புரியாமல் இருக்கலாம். நான் அவருக்கு அதனைத் தனியே சமயம் வாய்க்கும்போது விளக்கிக் கூறுவேன் சமுதாயத் துறையிலே ஒரு புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான் மக்கள் லெனினை வரவேற்றார்கள். ஒரு வால்டேர் தோன்றிய பின்னர் தான் ஒரு லெனின் தோன்ற முடிந்தது. லெனின் தோன்றுவதற்கு முன் ஒரு வால்டேர், ஒரு ரூஸ்ஸோ தோன்றியாக வேண்டும்.

போப்பின் கொடுமையைக் களைந்து எறிய - உலகம் தட்டையாக இல்லை, உருண்டையாக உள்ளது என்று சொல்ல -- அண்டத்தில் உள்ளவற்றைத் தூரதிருஷ்டிக் கண்ணாடியால் கண்டு தெரிவிக்க, அலைகடலின் ஆழத்தை அறிந்துகூற, பல அறிஞர் தோன்றிப் பாதையை அழகுறச் செப்பனிட்ட பின்னர்தான் புரட்சித்தேவன் லெனின் தோன்றி வெற்றியுடன் உலாவ முடிந்தது.

நம் நாட்டிலே உண்மைச் சரித்திரம் நிலவவேண்டுமானால் ஜாதிபேதம் ஒழிய வேண்டும், ஜாதிச் கோட்டையை இடித்துத் தகர்த்தால்தான் அடிப்படை இறுகிக் கெட்டியாக இருக்கும். மூடப் பழக்க வழக்கங்களை முறியடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் அஸ்திவாரம் பலமாக இருக்கும். அந்த வேலையைத் தான் இன்று திராவிட முன்னேற்றக்கழகம் செய்துவருகிறது. அதற்கு -- ரஷ்யாவிலே -- அடிப்படை பலமாக இருந்ததால்தான் ஜார் அரசன் கவிழ முடிந்தது. ஜார் அரசன் கவிழ்ந்த பின்னர்தான் மாஸ்கோ மணம் மாநிலமெங்கும் கமழும் நிலை ஏற்பட்டது.

எதிர்ப்புப் புரட்சியை ஆங்கிலத்தில் கவுன்டர் ரிவல்யூஷன் (Counter Revolution) என்று சொல்வார்கள். நம் நாட்டிலே நடப்பது எதிர்ப்புப் புரட்சி.

1950-ஆம் ஆண்டிலே, அமெரிக்காவும் இந்தியாவும் கைகுலுக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவில் நடைபெறாத நிகழ்ச்சி ஒன்று நம் நாட்டில் நடைபெறுகிறது. வடநாட்டிலே கும்பமேளா! கும்பமேளாவிலே மக்கள் பெருவாரியாகக் கூடியிருந்தார்களாம். கூடியிருந்த மக்கள் பலர் நிர்வாணக்கோலத்திலே செல்லும் கோலாகலாக் காட்சியைக் கண்டு களித்தார்களாம். பலர் நிர்வாணக் கோலத்துடன் கங்கையிலே மூழ்கினால் மோட்சலோகத்துக்கு வழியிருப்பதாக எண்ணுகிறார்களாம். இப்படி 1950-ஆம் ஆண்டிலே ஒரு செய்தியைப் பிற்போக்குப் பத்திரிகைகளிலே காண்கிறோம். அதுபற்றிய விளக்கங்களையும் படங்களையும் அந்தப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இத்தகைய நாட்டிலே எப்படி மா சேதுங் தோன்றுவான்? நம் நாட்டிலே ஒரு மா சேதுங், ஒரு லெனின் தோன்றாமல் புரட்சி எப்படி மலரும்?

இன்று தொழிலாளர்கள் இன்பமாய் வாழவேண்டுமானால் முதலில் அடிப்படையில் மாற்றம் செய்தாக வேண்டும்.

இன்று தொழிலாளர்களில் பலர் மாயாப் பிரபஞ்ச வாழ்வைப்பற்றியும், ஆண்டவன் திருவடியில் இரண்டறக் கலப்பது எப்படி என்பதைப் பற்றியும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்களே, அதை முதலில் போக்கடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முதலில் வாழ்க்கையிலே உள்ள சலிப்பைப் போக்கவேண்டும். இந்த உலகம் பெரியது, விழுமியது, வளமுள்ளது என்ற விரிந்த மனப்பான்மை அவர்களிடையே தோன்றவேண்டும். நாம் வாழப் பிறந்துள்ளோம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

மானைக் கொல்லப் புலியார் ஏன் விரும்புகிறார்? மானைக் கொன்றால்தான் புலியார் வாழ முடியும். நம்மைச் சுரண்டித்தான் பிர்லாக்கள் பிழைக்கவேண்டும் என்ற நிலையிருந்தால், நாட்டுக்கும் காட்டுக்கும் என்ன வித்தியாசம்? இப்பொழுது மனமாற்றம் நிச்சயமாகவேண்டும். ஏற்படுத்துகிறார்களா அறிஞர்கள் -- படித்தவர்கள்? இல்லை!

ஹிந்து பத்திரிகையைப் படிப்பது பாமரர்களல்ல; படித்தவர்கள் -- பாராளுமன்றத்திலே இருக்கும் உறுப்பினர்கள். ஹிந்து பத்திரிகையின் அன்றாட நிகழ்ச்சியிலே அவர்கள் என்ன காண்கிறார்கள்?

வேண்டுமா பட்டியல்? இதோ!

திருவல்லிக்கேணியிலே -- கீதார்த்த தத்துவம்.
புரசவாக்கத்திலே -- சீதாகல்யாணம்.
மயிலையிலே -- அனுமான் சேதுபந்தனம்.
மாம்பலத்திலே -- ஒரு இடத்தில் ஜீவன் முக்தி விவேகத்தைப்பற்றி விளக்கம்,
மற்றொரு இடத்திலே -- கம்பி ராமாயண உபந்நியாசம்.
அடையாற்றிலே பயங்கரதேவ வழிபாடு.

சென்னை பேசுவது இதுமட்டுமல்ல; தெருவுக்குத் தெருவு திருப்புகழ் பஜனை, தெருவுக்குத் தெருவு உடுக்கைச் சத்தம், வீதிக்கொரு பிள்ளையார் கோவில் இப்படி இருந்தால் இந்த நாட்டில் எப்படி லெனின் பிறப்பான்? எப்படி மா சே துங் பிறப்பான்?

என்னதான் தஞ்சாவூர் சம்பா -- அருமையான விதையாக இருந்தாலும் -- பதமான விதைதான் என்று பாறையிலே தூவினால் அது விளையுமா? விளையாது, தஞ்சாவூர் தோழர் தியாகராஜனுக்கும், சாமியப்பாவுக்கும் வளமையைத் தந்த நெல், தம்பிரானார் சடையிலே பொன் பூக்கவைத்த அருமை நெல் என்று பாறையிலே தூவினால் விளையுமா?

இந்த நாட்டிலே முதலில் மேடுபள்ளங்களைத் திருத்த வேண்டும். மேடுபள்ளங்கள் என்றால் மக்கள் உள்ளத்திலே நீண்ட காலமாக இடம் பெற்றிருக்கும் மேடுபள்ளங்களைத் திருத்தவேண்டும். கும்பமேளா பாறையைத் தீவிரமாகத் திருத்த முயலும்போது கஷ்டங்கள் பல ஏற்படும். வைதீக வல்லூறுகளும் சனாதனச் சர்ப்பங்களும் சீறி எழும்! சர்க்கார் தம் அதிகாரத்தைப் பிரயோகிப்பர். இந்தச் சர்க்கார் ஏமாந்த நோத்திலே ஓட்டுபெற்ற பலத்தால் ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருக்கிறார்கள். நான் தைரியமாகக் கூறுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே நின்றால் இன்றுள்ள மந்திரிகளில் பலர் முக்காட்டுடன் உலவவேண்டி வரும்; மக்களின் உரிமைப் போராட்டத்தில் சர்க்கார் தலையிடுவது கூடாது, கூடாது.

ஆனா, ஆவன்னா தெரியாத குழந்தைகளுக்கு எழுத்தை எண்ணித் தருவது போல, இந்த சர்க்கார் உரிமையை அளந்து -- நிறுத்து -- உரை கல்லில் உரைத்துப் பார்த்துத் தருகிறார்கள்.

சுதந்திர நாட்டிலே சர்க்கார் விரும்புகிற பேச்சு உரிமையைத் தரவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை நாட்டில் இல்லையென்றால் அது நாகரிக சர்க்காருக்கு அழகாகுமா?

மேதின விழாவில் நம் சர்க்கார் ஒற்றர்களை அனுப்புகிறார்களே, ஏன்? மேதின விழாவில் நாம் என்ன பேசுவோம்? மேதின விழாவில் மேதினத்தின் சரித்திரத்தைப் பற்றியும், தொழிலாளர்கள் நலம் பற்றியும் தானே பேசுவோம். இதற்கு ஏன் சர்க்கார் ஒற்றர்? இங்குப் பேசுவதையெல்லாம் சர்க்காரின் ஒற்றர் ஏன் எழுத வேண்டும்?

"மேதின விழாவில் சர்க்காரைக் கண்டித்துப் பேசினார்களா? அப்படிப் பேசியவர்களை யெல்லாம் பிடி! ஜெயில் சும்மா இருக்கிறதே! பிடி அண்ணாதுரையை, பிடி கவிஞரை, இங்கு பேசியவர்களையெல்லாம் பிடி, பிடித்தவர்களை யெல்லாம் சிறையில் போடு!” என்கிறார்கள். யாராகிலும் இங்குப் பேசாமல் இருந்தால், "ஏன் நீங்கள் பேசவில்லை. சர்க்கார் உங்களுக்கும் சிறைச்சாலையில் வரவேற்பு அளிக்கப்போகிறார்களாம். வாருங்கள் சிறைக்கு” என்று நம் அனைவரையும் அழைத்துச் சென்றாலும் செல்லலாம்.

இதுவரை எத்தனைப்பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பத்திரிகைகளிலே பார்த்தால் நன்கு தெரியவரும். வாழ வைப்பதாகச் சொல்லும் சர்க்கார் சிலரைச் சாகவும் வைக்கிறது. இதை விஷப் பாம்புகள் செய்யுமே? இதற்கு ஆயிரம் ஆயிரமாகச் சம்பளம் வாங்கும் மந்திரிகள் எதற்கு?

"8 Communists Hunted Down To-day 8Communists Shot Down Dead எட்டு கம்னியூனிஸ்ட்கள் இன்று வேட்டையாடப்பட்டனர், எட்டுக் கம்யூனிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்” என்ற செய்தியை நீங்கள் சாதாரணமாகப் பத்திரிகைகளிலே காணலாம். விலங்குகளை வேட்டையாடுவதைப்போல கம்யூனிஸ்ட்களை சர்க்கார் ஏன் வேட்டையாடவேண்டும்? சர்க்காருக்கு வேட்டையாட மிருகங்கள் அகப்படவில்லையா? அல்லது மிருகங்களை வேட்டையாட சர்க்கார் அஞ்சுகிறார்களா?

‘எங்கள் காட்டிலே நாங்கள் புலியைக் கொல்லவில்லை; கொடிய மிருகங்களைக் கொல்லவில்லை; 8 கம்யூனிஸ்ட்களை இன்று கொன்றோம்” என்று கூசாமல் கூறுகிறார்கள், இதுவா காருண்யமுள்ள காங்கிரஸ் அரசாங்கம்! இப்படியெல்லாம் சுட்டுக் கொன்றால் அடுத்த தேர்தலிலே வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

சென்ற ஆண்டு சியாங் கெய் ஷேக் இருந்த இடத்தில் இன்று மாசேதுங் இருப்பார் என்று யாரானும் எண்ணியிருப்பார்களா? சீனாவிலே சென்ற ஆண்டு சியாங்கெய் 'ஷேக் -- இன்று மாசேதுங்!

பிரிட்டிஷாரின் செல்வப்பிள்ளை, அமெரிக்காவுக்கு மிகமிக வேண்டியவர், அதிகமாக டாலர் உதவிபெற்றவர், அசகாயசூரர் -- சியாங்கெய்ஷேக் இன்று பார்மோஸா தீவிலே ஒளிந்துகொண்டிருக்கும் நிலை வருவானேன்?

பயங்கரமான பலம்படைத்தவர் படேல் என்று கூறுகிறார்கள், ஆனால் பத்திரிகைகளிலே பார்த்தால் அவர் முகத்திலே சோகக் காட்சியைக் காணலாம். பண்டித ஜவகர்லால் நேரு முகத்திலே அதிகமாக முதுமை இருப்பதைக் காணலாம். இவர்கள் பலம் என்னவாயினும், சியாங்கெஷேக் -- இன்று பலமின்றி பார்மோஸா தீவிலே பதுங்கிக்கிடக்கிறார். அதனால்தான் நம் ஆளவந்தாருக்கு நாம் எச்சரிக்கை செய்கிறோம். என்ன எச்சரிக்கை?

பார்முழுதும் புரட்சித்தீ பிடிக்கா முன்னர் திருத்திக்கொள்ளுங்கள். நம் சர்க்கார், நம்முடைய தோழர்களால் நடத்தப்படும் சர்க்கார். இதனை ஆகவேதான் திருத்திக்கொள்ளும்படி எச்சரிக்கிறோம். மக்கள் நிளைத்தால் மாற்றியமைக்க முடியும்.

இந்தியாவில் மேல்நாட்டு மூலதனம் கோடிக்கணக்காக குவிந்து கொண்டிருக்கிறது. டில்லியில் ஹிந்து பத்திரிக்கையின் நிருபராக இருக்கும் தோழர் சிவராவ் நகைச்சுவையாகச் சொல்லுகிறார் "பண்டித நேரு அமெரிக்காவுக்குக் கருப்பு யானைகளை அனுப்புகிறார். அதற்குப் பதிலாக, அமெரிக்கா இந்தியாவுக்கு வெள்ளையானைகளை அனுப்புகிறது” என்று, தோழர் சிவராவ் வெள்ளையானையென்று கூறுவது அமெரிக்க டாலர்களைத்தான்.

சுதந்திரம் பெற்றவுடனே கடன்வாங்கும் நிலை சர்க்காருக்கு ஏற்பட்டது. இந்தியாவுக்குக் கடன் தரலாமா என்பதை விசாரித்தரிய 14 அமெரிக்கர் கொண்ட தூது கோஷ்டியொன்று இந்தியாவுக்கு வந்தது. அவர்கள் தாஜ்மகாலைக் கண்டு களிக்க வரவில்லை ! ஹிமாலய மலையின் உயரத்தைக் கண்டு வியக்க வரவில்லை! கங்கையில்மூழ்க வரவில்லை ! காவேரியில் நீராட வரவில்லை! அவர்கள் வந்தது, இந்தியாவில் எவ்வளவு பொன் இருக்கிறது? தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு இருக்கின்றன? தொழில் வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? என்பதையெல்லாம் தெரிந்து செல்லத்தான்.

தங்கச் சுரங்கத்தையும், காபி-தேயிலைத் தோட்டத்தையும் பார்வையிட்ட பின்தான் அவர்கள் கடன்தரத் துணிந்தார்கள். நம்முடைய சர்க்கார் அயல் நாட்டாரிடம் கடன் வாங்கும் நிலையில் இருந்தால் தொழிலாளர் வளம் எப்படி உயரும்? நேரு அமெரிக்காவுக்குச் சென்ற பொழுது நேருவுக்கு அமெரிக்காவில் அமோகமான வரவேற்பு அளித்திருப்பதைப் பத்திரிகைகளிலே உள்ள படங்கள் வாயிலாக நீங்கள் கண்டிருக்கலாம். அவருக்கு அமெரிக்க துரைமார்கள் கொடுத்த வரவேற்பை, ஒட்டலில் உட்கார்ந்துகொண்டு -- துளிர் வெற்றிலையைச் சுவைத்துக்கொண்டே தினமணி பத்திரிகையில் படிக்கும் பொழுது, நம்முடைய காங்கிரஸ் தோழர்களுக்கு உள்ளத்திலே ஒரு பூரிப்பு! நேருவைப் போன்று வேறு யாருக்கும் அமோகமான வரவேற்பு நடக்காதென்பது அவர்கள் முடிவு. இன்று லியாகத்அலிகான் அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருக்கும்தான் டாக்டர் பட்டம் தரப்படுகிறது. அவருக்குத்தான் அமோகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் நாட்டிலே மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் யார் யாரோ அவர்களையெல்லாம் வரவேற்றால்தானே அமெரிக்கர்கள் காரியத்தைச் சாதிக்க முடியும்?

ஆப்பிரிக்காவிலிருந்து அதன் தலைவர் சென்றாலும், ஈரானிலிருந்து ஷா சென்றாலும் இதே வாவேற்பு அளிக்கப்படும். நம்முடைய நாட்டிலே சங்கராச்சாரி தங்கப் பல்லக்கிலே சென்றால் இதைவிட சிறிது அதிகமாகவே வரவேற்பு இருக்கும். நேருவுக்கு அமெரிக்காவில் வரவேற்புக்கு மேல் வரவேற்பு, உபசாரத்திற்கு மேல் உபசாரம், விருந்துக்கு மேல் விருந்து இவ்வளவும் ஏன்? நேருவை அமெரிக்க முதலாளிகளிடம் சிக்கவைப்பதற்காகவே.

"இந்தியாவிலே உணவுப் பஞ்சம்; கோதுமை உங்கள் நாட்டிலே வேண்டிய அளவு உள்ளது; மக்களினமும் விலங்கினமும் உண்டு. மிகுந்ததை விலைக்குத் தந்தால் போதும். இதற்குப் பதிலாக எங்கள் நாட்டிலேயிருந்து இராமாயணம், பகவத்கீதை போன்ற அரிய நூல்களை தருகிறோம்” என்று பண்டிதகேரு கேட்டாரா? இல்லை.

விருந்தளித்தோரிடம் நேரு கோதுமையை என்ன விலைக்குத் தருகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அதற்கு அளித்த விடை என்ன தெரியுமா?

"கோதுமை வேண்டுமென்றால் அது வேறு விஷயம். கோதுமையின் விலையை - கோதுமை வியாபாரிகளிடமே கேட்டுக்கொள்ளுங்கள், விருந்தென்றால் விருந்து, வியாபாரமென்றால் வியாபாரம்” என்பதுதான். இதேமாதிரிதான் நம் நாட்டிலே உள்ள மார்வாடிகள் கூட!

”வட்டியில் ஏதாகிலும் சலுகை காட்டப்பா" என்றால் ”வட்டியென்றால் வட்டி, கணக்கென்றால் கணக்கு, வேண்டுமானால் ஒரு கப் காபி சாப்பிடு” என்கிறான் மார்வாடி. இதைத்தான் அங்கு பெரிய மார்வாடி கூறிவிட்டார். பண்டித நேரு — காந்தியாரின் சுவீகாரப் புதல்வர்; அபேதவாதி. நேரு அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்றால் ராபில்ஸ் சகிதம் போட்டா பிடிக்கச் செல்கிறார்கள். நேரு அமெரிக்கா செல்வதற்கு முன்னரே கூட நேருவின் படங்கள் அங்குக் காட்டப்படுகின்றன. சினிமா வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் நேரு அங்கு நன்கு விளம்பரம் செய்யப்படுகிறார். இப்படி விளம்பரம் செய்யப்பட்ட நேரு அவர்களாலேயே நம் நாட்டுக்குக் கோதுமையைக் கொண்டுவர முடியவில்லை! எனக்கு முன்னர் பேசிய கவி ஹரீந்திரநாத் அழகாகக் குறிப்பிட்டார். ”இந்தியா அமெரிக்க முகாமில் சேர முயல்கிறது. அது தவறு. அவ்வாறு செய்ய முயலாதீர்கள்" என்றார் கவிஞர். ரஷியா முகாமில் இந்தியா சேர வேண்டுமென்பது அவர் கருத்தல்ல.

மணிமுடி தரித்த மன்னர்கள், குருமார்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், தம்பிரான்கள் முதலியோரால் ஒரு நாட்டின் முற்போக்கு தடைபடுகிறது.

"ஓடும் செம்பொன்னும் ஒக்கநோக்குவர்" என்று ஒரு வாசகம் உண்டு. கையிலே வைரமோதிரம், காதிலே அழகிய குண்டலம், பாதத்திலே பொன்னாலான பாதகுறடு அணிந்திருக்கும் திருவாவடுதுரை தம்பிரான்களிடம் சென்று ஒரு கையில் சிறிது மாற்றுக் குறைந்த தங்கத்தையும் மற்றொரு கையில் செம்பும் கொடுங்கள். அவர் தங்கத்தையும் செம்பையும் உரை கல்லில் உரைத்துப் பார்த்து ”இது சிறிது மாற்றுக் குறைந்து தங்கம் இது செம்பு" என்றே சொல்வார், தம்பிரானார் செம்பொன்னையும் ஓட்டையும் எப்படி ஒக்கநோக்குவார்?

ஹைதராபாத்து நிஜாம், பரோடா மன்னர், முடியிழந்தும் பதவியை இழக்காத பவநகர், பாரிசில் சிற்றரசர்கள் — ஆகியோரெல்லாம் இன்னும் எக்காளமிட்டுச் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜமீன்தாரர்களுக்குப் பெரும்பொருளை நஷ்ட ஈடாகத்தந்து புதிய பணக்காரர்களை சர்க்கார் உற்பத்தி செய்திருக்கிறார்கள். கனம் பக்தவத்சலனார் ஆயிரங்கால் மண்டபங்களிலே பள்ளிகள் அமைக்க வேண்டுமென்கிறார். காரணம் என்ன?

மந்திரி பக்தவத்சலனார் முற்போக்கு நோக்கத்தோடு இந்த செய்தியைக் குறிப்பிட்டாரென்ற எண்ணுகிறீர்கள்? பள்ளிகளைக் கட்டுவதற்கு வேண்டிய பணமில்லையே என்ற பஞ்சபுத்தியால்தான் மந்திரியார் இதைக் கூறுகிறார். பஞ்சாங்கமில்லாத வீடுகளை நீங்கள் காண முடியாது.

நாள் பார்க்காத மக்களை நீங்கள் பார்க்க முடியாது.

சகுனம் கேட்காத ஜென்மங்களை நீங்கள் காண்பது அரிது.

மார்கழித் திருநாள் கொண்டாடாத மக்கள் மிகமிகக் குறைவு

சித்திரா பௌர்ணமிக்குப் பொங்கலிட்டுப் படைக்காத வீடுகளை நீங்கள் பார்க்கமுடியாது.

பஞ்சாங்கம் பார்க்கும் பழைய புத்தி அடியோடு ஒழிந்தாலொழிய மக்கள் பகுத்தறிவைப் பெறமுடியாது.

சொக்கநாதர், அரங்கநாதர், மீனாட்சி, காமாட்சி, கோயில்கள் இன்னும் இருக்கின்றன. இவைகள் குறைந்தால்தான் நாடு முன்னேறும். நாட்டிலே நல்லறிவு ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடுகிறது. நம்முடைய கழகத்தின் அடிப்படைக் கொள்கை நாட்டிலே நல்லறிவைப் புகுத்துவதுதான். நாட்டிலே நல்லறிவு பரவினால்தான் அடிப்படை பலமாக இருக்கும்.

பலாத்காரத்திலோ, நாசவேலையிலோ நாம் என்றும் ஈடுபட்டதில்லை! இனி ஈடுபடும் நோக்கமும் நமக்கு இல்லை! 1942-ல் இரயிலைக் கவிழ்த்ததைப் போல நமக்குக் கவிழ்க்கத் தெரியும், தந்திக் கம்பிகளை அறுக்கத்தெரியும். இதைச் செய்வது மிகவும் சுலபம். இதைச் செய்வதற்கு வேண்டிய சக்தியும் நம்மிடம் இல்லாமலில்லை. இந்த அழிவுச் சக்தியிலே நமக்கு விருப்பமில்லை என்று பல இடங்களிலே சொல்லியிருக்கிறேன்.

நடு இரவு 12-மணிக்குமேல் கொஞ்சம் தூக்கம் வராமல் இருக்கவேண்டும். கையிலே, ஒரு சுத்தியும் ஒரு பேனாக்கத்தியும், நெஞ்சலே கொஞ்சம் துணிவும், போலீஸ்காரர்களுக்குக் கொஞ்சம் ஞாபக மறதியும் ஏற்படும்படி செய்து விட்டால் போதுமே! இதுபோன்ற பலாத்காரச் செயல்களால் நாட்டின் நிலையை எப்படி உயர்த்த முடியும்? நாட்டிலே அறிவுக் கதிர்களைப் பரப்பிய பின்னர் தான் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்.

சர்க்கார், முதலாளிகள், கம்யூனிஸ்ட்கள் எல்லோரும் நம்மை சந்தேகிக்கிறார்கள். பத்திரிகைகளோ இருட்டடிப்பு செய்கின்றன என்றாலும் நாம் -- வேகமாகவே வளர்ந்து வருகிறோம்.

தோழர் காமராஜ் பரமக்குடியில் பேசும்போது குறிப்பிட்டாராம் :--

நிலத்தை உழுபவனுக்கு நிலம் சொந்தமானால், அரிவாள் வைத்திருப்பவனுக்கு அழகிய கதிரும், கோணி வைத்திருப்பவனுக்கு நெல்லும் சொந்தமாகிவிடாதா என்று! காமராஜரின் இந்த விளக்கம் உங்களுக்கு விந்தையாக இல்லையா?

நேரு சர்க்கார் எங்கு சென்றாலும் உற்பத்தியைப் பெருக்கு, உற்பத்தியைப் பெருக்கு என்றே சொல்லி வருகிறார்கள். ஒரு விதத்திலே நாட்டிலே உற்பத்தி (குழந்தை உற்பத்தி) அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. நாம் என்ன உண்ணாமல், உறங்காமல் இருக்கிறோம்? சர்க்கார் தினமும் உற்பத்தியைப் பெருக்கு, உற்பத்தியைப் பெருக்கு என்று சொல்லுகிறார்களே தவிர, உள்ள சூழ்நிலையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதேயில்லை! கிணற்றை ஒரு ஆணியைக் கொண்டு தோண்டிவிட முடியாது. கடைப்பாறை இருந்தால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தோண்டி முடிக்கலாம். ஆணியை உபயோகித்தால் கையில் காயம் உண்டாகும், மிக விரைவில் தோண்ட வேண்டுமானால் நமக்கு விஞ்ஞான சாதனங்கள் தேவை. விஞ்ஞான சாதனங்களைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு விஞ்ஞானத்திலே நம்பிக்கை ஏற்படும்படி செய்யவேண்டும், அப்போதுதான் உற்பத்தி பெருக வழியுண்டு. நாகரீகம், நாகரீகம் என்பதன் பொருள் என்ன! நாகரீகமென்பதன் பொருள் விலங்கினங்களைவிட மனிதன் குறைவாக வேலை செய்து அதிக பயன் அடைவது தான்.

B & C மில்லில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி விடியற் காலையிலே அயர்ந்து உறங்கும் ஆசை மனைவியிடம் “போய் வருகிறேன்" என்று சொல்லாமலே வெளியில் கிளம்பிவிடுகிறான். பால்மண மாறாப் பச்சிளங் குழந்தையின் பால்வடியும் வதனத்தைப் பார்த்துக்கொண்டே வெளியேறுகிறான். காலை 6 மணிக்கு மனிதனாக ஆலைக்குள் சென்று நீண்ட நேரத்திற்குப்பின் மாஜி மனிதனாகத் திரும்பி வந்தால் அவன் மனிதனாவது எப்படி? கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டனோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயாமல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான் தொழிலாளி. ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கைதான். நாகரீக நாட்டிலே, தன்னரசு தழைத்தோங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழவேண்டி யிருக்கிறது. மிருகங்களுக்குக் கிடைக்கும் ஓய்வுகூட ஏழைத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை! உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயரமுடிகிறதா? பாருங்கள்!

சேலத்தில் 200-ம் நெம்பர் வேட்டியை நெய்கிற தொழிலாளி உடுத்துவதோ 30-ம் நெம்பர் மோட்டா வேட்டி, தொழிலாளி கட்டுகிறான் நான்கு அடுக்கு மாடிகள். அவன் வாழ்வதோ நாற்றமெடுக்கும் ஓட்டைக் குடிசையில், அந்த ஓட்டைக் குடிசையிலோ ஒன்பதுபேர். மூவாயிரம் வகை நெல் நம் நாட்டிலே பயிராகிறது, ஆனால பயிரிடும் விவசாயிக்கு உண்ணக் கிடைப்பது வரகோ, சோளமோதான். உற்பத்தி பெருகினால் மட்டும் தொழிலாளிக்குப் போதுமா? தொழிலாளிக்கு முக்கியமாக வேண்டியதென்ன? தேவைக்கேற்ற வசதி, சக்திக் கேற்ற உழைப்பு! சர்க்கார் இதை முறைப்படி வகுக்கவேண்டும். அதிகமாக வேலை செய்யும் மாட்டின் மீது நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். தொழிலாளிக்கோ என்றும் ஒரே நிலை! தொழிலாளி மேனி கறுக்க உழைக்கிறான். அவன் உற்பத்தியைப் பெருக்காவிட்டால் நமக்கு உணவேது? உடையேது? வெளியிலிருந்தெல்லாம் சென்னை வந்து குடியேறிய மக்களுக்கு வீடேது ?தொழிலாளியின் உழைப்பாலன்றோ பிர்லாவின் பணப்பை நிரம்பியது. மிட்டாதாரும், மிராசுதாரும் எப்படி உயர்ந்தார்கள். அவர்கள் நாட்டில் சில நாளும் நகரத்தில் சில நாளும் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? தொழிலாளியின் இடைவிடா உழைப்பாலன்றோ இவர்கள் வாழ்கிறார்கள். உழைத்து உழைத்து உருக்குலைந்த பாட்டாளி உரிமைகள் கேட்டால் சிறையிலே சுட்டுத் தள்ளப்படுகிறான். நாகரீக சர்க்காரா இதைச் செய்வது?

சென்னைமா நகரிலே அரிசியில்லையே என்று நாம் மத்திய சர்க்காரைக் கேட்டோம். உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியை பெருக்கிக் கொண்டிருந்த சமயத்திலே கேட்டோம்.

உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் உபரியை அனுப்பு என்று மத்திய சர்க்கார் கூறிற்று. அந்த உபரி அரிசியை சென்னைக்கு அனுப்பிய உத்திரப் பிரதேச சர்க்கார் உரிய விலையைவிட அதிக விலை ரூ. 108 லட்சம் வாங்கிக் கொண்டார்கள் சென்னை சர்க்காரிடமிருந்து! இது சர்க்காருக்கு சர்க்கார் நடத்தும் கள்ள மார்க்கெட் வியாபாரம்.

இச்சமயம் "ஒரு முதலாளி வெண்ணெய் விற்றால் ரூபாய் பத்து கிடைக்கிறது. சுண்ணாம்பு விற்றால் ரூ 15-0-0 லாபம் கிடைக்குமென்று யாரவது சொன்னால் உடனே வெண்ணெய் வியாபாரத்தை விட்டு விட்டு சுண்ணாம்பு வியாபாரத்தில் இறங்கிவிடுவான். முதலாளிகளின் நோக்கமெல்லாம் லாபம்தான்?" என்று உலகம் போற்றும் அறிஞர் பெர்னாட்ஷா முதலாளிகளைப் பற்றி நகைச்சுவையுடன் கூறியுள்ளது என நினைவுக்கு வருகிறது.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் -- ஆம்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறும் சர்க்கார், அபேத வாதத்திலே அதிக நம்பிக்கை கொண்டுள்ள நேரு சர்க்கார், முதலாளிகளை விடுவதில்லை. முதலாளிகளோ லாபத்தை விடுவதில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் முதலாளிகளைப்பற்றி நேரு கூறியதை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்:

"முதலாளிகள் லாபத்தை விடுவது இயலாத காரியம். ஆதலால் முதலாளிகள் லாபநோக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை! முதலாளிகளுக்கு வரும் வாபத்திலே முதலாளிகள் விரும்பும் தொகையை சர்க்காருக்குத் தரவேண்டும்" என்று கூறினார். குறள், சாத்திரம், இதிகாசம், இவற்றில் கூறியவைகளையே அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லையே! இவர் கூறியவற்றையா எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்! எடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல. நேரு தங்கள் பக்கம் திரும்பிவருகிறார் என்று முதலாளிகள் கூறவுந்தொடங்கிவிட்டார்கள்.

"புதிய தொழில்களை உற்பத்தி செய்வதற்குத் தக்க நிபுணர்கள் எங்களிடம் இல்லை" என்று நேரு சர்க்கார் சார்பாக படேல் கூறுகிறார். அமெரிக்கர்கள் இந்த செய்தியைப் பார்த்து கும்மாளம் போடுவார்கள். பாட்டாளிகள் பதைபதைக்க அமெரிக்க முதலாளிகள் பூரிப்பெய்த, ”திறமையில்லை, நிபுணர்கள் இல்லை" என்று கூறுகிறார் படேல்! "புதிய தொழில்களை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய பணமில்லை! என்கிறார் நேரு புதிய தொழிலை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய நேரம் இல்லை" என்கிறார் முகர்ஜி, புதிய தொழில்களை உற்பத்தி செய்வதற்கு ஒன்றும் அவசியமில்லை! தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்வோம்!" என்கிறார் காமராஜர்.

நம் நாட்டிலே உண்மையில் திறமைசாலிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை, தோழர் அம்பேத்காரை சட்ட மந்திரியாகக் கொடுத்திருக்கிறது நாடு, நிதி மந்திரி -- டாக்டர் -- ஜான் மத்தாய் அவர்களைத் தென்னாடு தந்திருக்கிறது. இன்னும் தொழிலை அழகுற நடத்த நம்மிடம் தோழர். ஜி. டி. நாயுடு இருக்கிறார். விவசாயத்துக்கு வேண்டுமா ஒரு ஆள்! மயிலையிலே பழத்தைப் பழுக்கவைக்கும் தோழர் -- சௌந்திர பாண்டியன் நம்முடன் இருக்கிறார். தோழர் -- சௌந்திரபாண்டியன் விவசாயத்திலே கண்டுபிடித்துள்ள நூதன முறைகள் நேரு சர்க்காருக்கு எங்கே தெரியப்போகிறது?

பிற்போக்குப் பத்திரிகைகளிலே ஒரு படம் வெளி வந்ததை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். ராஜாஜி அவர்கள் ஏர் உழும் பாவனையில் அமைந்துள்ளது படம். கனம் ராஜாஜி, கவர்னர் ஜெனரல். ராஜாஜிகூட ஏர் உழுகிறாரே! இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இதை விளங்கிக்காட்டி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். மேலும் பரம்பரை பரம்பரையாக ஏர் உழாத மரபிலே வந்த ஆச்சாரியார் ஏர் உழுகிறாரே என்று வியந்தேன்! அவர் ஏர் உழுவதாக எடுக்கப்பட்ட புகைப்படம் சந்தேகத்தைக் கிளப்பியது. அவர் உழுவதாக எடுத்துப்போடப்பட்டிருந்த புகைப்படத்தின் மீது உங்கள் கண்ணோட்டத்தை விட்டால் அவருடைய காலில் செருப்பு அணிந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம்! செருப்புப் போட்டுக்கொண்டு யாரும் ஏர் உழவே மாட்டார்கள். இன்று கூட வயல்களிலே செருப்புப் போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று குடியானவர்கள் சொல்வதைப் பார்க்கலாம். சர்க்காருக்கு ஒரு நல்ல புகைப்படம் எடுப்பவர்கள் கிடைக்கவில்லையா? சர்க்கார் இனியாவது இதுபோன்ற காட்சிகளைப் படமெடுக்கும்பொழுது கைதேர்ந்த போட்டோ வல்லுனர்களைக் கொண்டு படமெடுக்கவேண்டும், குடியானவர்களிடம் காலிலே செருப்பணிந்து கொண்டு ”குடியானவர்களே! உற்பத்தியைப் பெருக்குங்கள் உற்பத்தியைப் பெருக்குங்கள்" என்று சொன்னால் எந்தக் குடியானவனும் உற்பத்தியைப் பெருக்கமாட்டான். முன்பு நான் சொல்லியதைப் போல 'உற்பத்தியைப் பெருக்கு' என்று சொல்வதற்கு முன்னர் குடியானவனின் சூழ்விலையை சர்க்கார் கவனிக்கவேண்டும்.

கவர்னர் ஜெனால் -- ராஜாஜி ஏர் உழுமுன் நமக்குக் கிடைந்தது 10 அவுன்ஸ் அரிசி. இப்பொழுது நமக்குக் கிடைப்பதோ 8 அவுன்ஸ் அரிசி !

வடநாட்டவர் தென்னாட்டவரை சுரண்டுவதை உடனே தடுத்தாக வேண்டும். வடநாட்டிலிருந்து தென் நாட்டைப் பிரிக்க வேண்டும். சர்க்காருக்கு ஒரு எச்சரிக்கை விடுகிறேன். அடுத்த மேதினம் வருவதற்குள் இங்குள்ள வெள்ளை முதலாளிகள் கையிலே உள்ள காபி, தேயிலை, முதலிய தோட்டங்களை சர்க்கார் தேசீய மயமாக்கி, ஸ்டர்லிங் கணக்குப் பார்த்து அவரவர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து விடவேண்டும். இதைச் செய்யுமா நம் சர்க்கார்?

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலிய இடங்களிலே உள்ள முதலாளிகள் யார் யார் என்றுதான் தெரியும். பெல்ஜியம், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின் முதலிய வேறுநாடுகளில் இருக்கும் முதலாளிகள், பணக்காரர்கள் யார் யார் என்று அந்த மக்களுக்குத் தெரியாது.

உலக மார்க்கெட் இருக்கிறது அமெரிக்க முதலாளிக்கு! காமன்வெல்த் நாடுகள் தான் பிரிட்டனுக்கு இருக்கும் மார்க்கெட் முதலாளிகள் சுரண்டுவதற்கு இருக்கவே இருக்கிறது இமயமும் குமரியும், இமயமுதல் குமரி வரை அவர்கள் சுரண்டும் தொழிலைச் செய்யலாம். இன்றுள்ள சர்க்கார் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளையாக இருப்பது வெட்கப்படக்கூடிய விஷயமாகும். சர்க்கார் முதலாளிமார்களிடம் போட்டியிடப் பயப்படுகிறது. சர்க்கார் போட்டியிட அஞ்சுவதை மறைக்க வேறு பார்க்கிறது. மறைப்பதால் புண்புரையோடி விடுமே தவிர புண் ஆறிவிடாது. டெலிபோன் நமக்கு நல்லகாரியத்திற்குப் பயன்படுகிறது. அதே சமயத்தில் தீய செயல்களுக்கும் பயன்படுகிறது. ஒரு விதத்திலே பார்த்தால் துப்பாக்கிக் கொடுமையைவிட டெலிபோன் மிகமிகக்கொடியது. டெலிபோன் மூலம் ஒரு முதலாளி வார்த்தை கூறினால் போதும்! முதலாளிக்கு முதலாளி ஏராளமான லாபம் கிடைக்கும்; ஆனால் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த ஒரு வார்த்தையால் சாகிறார்கள். பிளாக் மார்க்கெட் உச்சநிலையை அடைந்தது டெலிபோன்கள் மூலம்தான். இன்றுகூட வியாபாரி நினைத்தால் டெலிபோன் மூலம் விலையை ஏற்றிவிடலாம். முன்பெல்லாம் நமக்கு ஜாவா சர்க்கரை என்ன விலைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது தெரியுமா? 6 அணா விலைக்குக் கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்பதற்காக ஜாவா சர்க்கரையின் இறக்குமதி நிறுத்தப்பட்டது. முன்பு 6 அணாவுக்குக் கிடைத்த சர்க்க்கரையை ஒண்ணரை ரூபாய் கொடுத்து உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சர்க்கரை வாங்கு என்று சர்க்கார் நமக்கு உத்தரவிட்டது, ரூபாய் ஒன்றரை ஏன்? ரூபாய் இரண்டரை கொடுத்தாலும் சர்க்க்கரைக்குத் திண்டாட்டமா யிருக்கிறதே யென்று கூறினால், கருப்பட்டி போட்டுக்கொள் என்றுதானே சர்க்கார் கூறுகிறது ! உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் போதாது; உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏற்ற முறையிலே சர்க்கார் திறமையுடன் விநியோகிக்க வேண்டும். தொழிலாளர்களின் நலிவைப் போக்குவதிலே சர்க்கார் நாட்டம் செலுத்த வேண்டும். மேதிருநாளாகிய இந்த நல்ல நாளில் மக்களிடையே காணப்படும் மூடப் பழக்க வழக்கங்களை முறியடித்து ஜாதிமதக் கோட்டையைத் தகர்த்து சுக்குநூறாக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் வாக்குறுதியாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேதினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாட உதவி புரிந்த அன்பர்களுக்கெல்லாம் கழக சார்பாக என்னுடைய நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.