சரிந்த சாம்ராஜ்யங்கள்/சரிந்த சாம்ராஜ்யங்கள்

சரிந்த சாம்ராஜ்யங்கள்

வாளின் ஒளியைவிட ஜோதியாய், அதன் கூர்மையைவிட மகாக் கொடியதாய், மின்சாரத்தைவிட வேகமாய்ப் பாயக்கூடியதான கோதையர்களின் கண்வீச்சால் கருத்தழிந்து சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். பலவித வேறுபட்ட பண்பாடுகளால் நாடுகள் ஒன்றோடொன்று முட்டி மோதி ரணகளத்தில் கைசலித்து வேறு வகையில்லாமல் வாளைத் தூர எறிந்து எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்னர்கள் ஒடிப்போனதால் வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அகழியில் நீர் வற்றியதால், அயலார் கோட்டையின் தலை வாயலிலே நுழைய, அதே நேரத்தில் அவர்களைத்தடுத்து நிறுத்தத் திறமற்று கோட்டையின் கடைவாயில் வழியாக கானகம் ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட உதவாக்கரை மன்னர்களால் வீழ்ந்துவிட்ட வல்லரசுகள்.

சட்டத்தால் மனிதன் புரத்தையும், சம்பிரதாயத்தால் மனிதனின் அகத்தையும் அடக்கி ஆண்டுகொண்டிருந்த இரட்டைக் கொள்ளைக்காரர்களான மதகுருவுக்கும், மன்னனுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். தேவையைத் தேடித் தேடித் திரிந்தும் பெறமுடியாமல் திகைத்த மக்கள் ஒருபுறமும், தேவைக்கதிகமான தேக்கத்தில் திளைத்து மதம் பிடித்து அலைந்த மன்னர்கள் ஒருபுறமும் நின்று போர் செய்து, இறுதியில் மக்கள் சக்தியை எதிர்த்து நிற்கமுடியாமல் மக்களுடைய ஆவேசக்கனலால் கருகி சாம்பலான சாம்ராஜ்யங்கள்.

வேட்டுச் சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்த போது மக்களைக் காட்டிக்கொடுத்து தானும் தன் குடும்பமும் சுரங்க வழியால் வெளியேறியதால் வேதனைக்குள்ளான சாம்ராஜ்யங்கள். வற்றிய அகழி, வான் பறவைகள் வட்டமிட்டப் பிணக்குழி, பொலிவிழந்த பவனம், நாயும் நரியும் நாவை நீட்டிக்கொண்டு பிணங்களின் மேல் திரியும் காட்சி, அரசியல் பங்கீட்டில் போட்டி, அதிகாரத்தைச் செலுத்துவதில் சுயநலம், மக்களையடக்க நானேதான் என்ற இருமாப்பு, மங்கையர்களை சிறைபிடித்ததால் ஏற்பட்ட முற்றுகை, "நீ அந்த மங்கையை விரும்பினால் மணிமுடியைத் தரமாட்டோம் என்றெழுந்த சம்பிரதாயத்தொனி, காலத்தால் ஞாலத்தைப் பார்க்காமல் கணக்கெடுக்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலைக்கண்டு களம்புகுந்த அறியாமை, மண்ணுக்குடையவன் நான், ஆகவே மண்டலாதிபனும் நான் தான். மக்களே ! நீங்கள்தான் மண்ணிலும் கேடான வர்கள்" என்று ஏளனம் பேசியதால் அதே மக்களால் அதே மண்ணக் கெளவிய கேலிக்கூற்று. மணியுருட்டிகள், தீக்குண்டத்தார், தேவதூதர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டோர், தர்ப்பையேந்திகள், ஆந்தை விழியார், ஆபாசச்சின்னங்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து மன்னர்களைத் தம் மந்திரங்களென்ற விளையாட்டுக் கூச்சலாலடக்கி மக்களின் மதியையும் நிதியையும் சூறையாடி, அவர்கள் விதியைத் தம்மால் மாற்றமுடியும் என்ற வெட்டி வேதாந்தம் பேசி, இதை நம்பிய மக்கள் பலவாண்டுகள் தங்கள் வாழ்வில் மாற்றங் காணாததால் செய்த புரட்சியால் புதையுண்டுப் போன சாம்ராஜ்யங்கள் ;  அவைக்களத்தில் அவமதிக்கப்பட்டோம் என்ற ஆத்திரத்தால் அலைகடல் கடந்து ஆயுதமேந்தி வந்தவனுக்கு பூரண கும்பமும் புலால் விருந்தும் அளித்து உள்ளே அழைத்து வர, தன் பரம்பரைக்கு புராதனமாக வாழ்வளித்து வந்த புரவலர்களின் கோட்டைச் சாவியைக் கொடுத்துத் தானும் புதுப் பதவியேற்றதால் புலியெனப் பாய்ந்த மக்களால் நார் நாராகக் கிழித்தெறியப் பட்ட சாம்ராஜ்யங்கள்.

தான் ஆள முடியாவிட்டால், வேறு எவனேயும் ஆளவிடக் கூடாதென்ற பொறாமைத்தீயில் குதித்துவிட்ட மன்னர்களின் அழிவுக்குப்பின் தானாகவே அழிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், நாட்டைக் காப்பாற்றப் படையெடுத்து, கோட்டையின் மேல்தளத்தில் காமக் காற்றால் அசைந்தாடிக் கொண்டிருந்த சரசவல்லிகளிடம் தன் மதியைப் பறிகொடுத்து மீளாத காதலால் ரணகளத்திலிருந்து மீள முடியாமல் மண்மேடான சாம்ராஜ்யங்கள். நாட்டின் எல்லைக் கோடுகளை விரிவாக்கவும், மதக் கோட்பாடுகளைத் திணிக்கவும், மத குருவின் ஆசியைப் பெறவும், மண்டலம் பலவற்றிற்கு மன்னர் மன்னன் என்ற பட்டம் பெற வேண்டுமென்ற பேராசையும் குடிகொண்டு படையெடுத்து ஜெகமஞ்ச போரிட்டு, எதிரிகள் தன்னிடம் சரணாகதி யடையாமுன்னமே பாவையர்கள் மையலில் விழுந்து புரையோடிப்போன சாம்ராஜ்யங்கள்.

"மக்களையடக்க நான், மக்களின் உள்ளத்தையடக்க மதகுரு, இவ்வுலகுக்கு அதிபன் நான், அவ்வுலகுக்கு அதிபர் அவர், இந்த இரண்டுக்குமிடையே இங்குமங்குமாக பறந்துசெல்லும் அணுக்கள் மக்கள், பொருள் என்று கேட்டால் போர்முரசு கொட்டுவேன். வாய்திறந்தால் குதிரைக் காலடியால் அவர்கள் வாயிலிருந்து குறுதியைக் காண்பேன், எதிர்த்தால் இருட்டறை, சிந்தித்தால் சித்ரவதையோடு சிறைவாசம், ஏன்? என்று கேட்டால் ஆள்கொல்லி சட்டம், இனி என்னை எவனுமே அணுகமுடியாது. என் பொண்வண்டு தவிர” என்று பொற்கொடியைத் தாவி பூவிரித்த மஞ்சத்தில் சாய்ந்திருந்த மாமிசமலையை, மக்கள் வேங்கையென வரிப்புலியென பாய்ந்து அந்தக் குணக்கேடனின் உதிரத்தைத் தெளித்து வெற்றிவிழா கொண்டாடிய போது உமிழ்ந்த உதிரவாயோடு வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்.

பகுத்தறிவு பேசியதால் பாய்ந்து சீறிய பார்த்திபன், விளக்கம் கேட்டதால் வேதனையை வேலெனப் பாய்ச்சிய வேந்தன், சிந்திக்கத் தொடங்கியதால் சினம்கொண்ட சிங்காதனத்தான், வேத தூதர்களின் விஷவேலியைக் காத்த வெண்சாமரத்துக்குடையோன், கடவுள் சொன்னதா கற்பனையா என்று கடாவி அறிவின் கபாடக் கதவுகளைத் திறந்துவிட்ட தீனர்களை தீயில்தள்ளிய தீயர்கள், ஆண்டவனே வணங்கப் பணமேன் என்ற அறிவுரையை எழுப்பிய பகுத்தறிவு தூதர்களை பட்டப் பகலில் பகிரங்க மேடையில் நிறுத்திக் கொன்ற பாவிகள்.

உண்டு கொழுத்து வீணைவாசித்து மாதர் மையலில் சிக்கி, மதுவில் குளித்து, பதிகம்கேட்டு, பானம், பாவை, பதிகம் பக்தி இவைகளே பரமண்டலத்தின் திறவுகோல் என்ற மமதையில் திளைத்து எதிரிகளின் முற்றுகையை துளசித் தழைகளால் தடுக்க முடியும் என்று வேதியர்கள் சொன்ன யோசனையாலும், வேள் விழியாளின் அணப்பிலிருந்து விடுபட முடியாத உற்சாகத்தாலும்,  வேதபம்பரங்களை அழைத்து அவர்கள் வாயின்மூலம் மந்திரங்களை கிறு கிறுவென சுற்றவைத்து தானும் சுற்றி தன்னை எதிரியும் சுற்றி கைவிலங்கோடு கைதிகளான மன்னர்கள், ஹரே! ராமா ஆதரிக்கமாட்டாயா, என்ற பெருமூச்சோடு இருட்குகையில் இருளோடு இருளாய் விட்ட சோம்பேறிகளால் இடிந்துபோன சாம்ராஜ்யங்கள்.