சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 1

ஸ்ரீ:

சாந்தியின் சிகரம்
1

“உலகத்தில் மக்கள் எப்போதும் இன்பத்தையே கோருவார்கள். இம்மைக்கும், மறுமைக்கும் சேர்ந்த இனிய வாழ்க்கையைத்தானே மக்கள் பகவானிடம் பக்தி செய்து சதா வேண்டுவார்கள். அதே போலத்தானே, நானும் விரும்புகிறேன். ஸ்ரீதரா! என் வார்த்தையைக் கேள். இனியும் தட்டாதே. பெற்ற தாயின் உள்ளத்தை மகிழ்விப்பதே மக்களின் கடமையாகும். அதை நீங்கள் செய்து முடித்த பிறகுதான், என் மனம் சாந்தியடையும். ஏதோ உளறுகிறாள் என்று நீ நினைக்கிறாயேயன்றி, பெற்ற மனத்தின் பதைபதைப்பை நீ உணரவில்லையே ஸ்ரீதர்! இதோ இந்தப் புகைப்படத்தைப் பார்!” என்று கமலவேணியம்மாள் தன் மகனிடம் மிக்க அன்புடன் கேட்டாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன் “அம்மா! உன் விருப்பத்திற்கு மாறாக நான் எப்போதாவது நடக்கிறேனா? நீ விரும்பிய படியே, சகல விதத்திலும் நடந்து கொண்டு டாக்டராகவும் ஆகி, உன் மனத்தைக் களிப்பிக்கவில்லையா! இந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் நீ என் விருப்பப்படி விட்டுத்தான் கொடுக்க வேண்டும். இப்போது விவாகத்திற்குச் சம்மதிக்கவே மாட்டேன் நான். என்னுடைய இதயக் கடலில் கொந்தளிக்கும் லக்ஷ்ய அலைகளும், எண்ணற்ற ஆவலும் நீ அறிய மாட்டாயம்மா! என்னுடைய லக்ஷ்யம் ஈடேறுவதற்கு நீ விரும்புகிற கல்யாணம் தடை செய்து என்னை ஏமாற்றிவிடுமேயன்றி, வெற்றியளிக்காது. இதுதான் எனது நம்பிக்கை…”

தாயார் (இடைமறித்து)… “என்… என்ன! கல்யாணம் செய்து கொண்டால், உன் லக்ஷ்யம் தடைபடுமா? ஸ்ரீதர்! நான் இம்மாதிரியான ஒரு வார்த்தையை, உலகத்தில் கண்டதே இல்லையே! கேட்டதுமில்லையே! அப்பா, குழந்தாய்! கல்யாணமில்லாத ஒண்டிக்கட்டை வாழ்வு ஒரு வாழ்வா? உப்புச்சப்பற்ற வெறும் வரட்டு வாழ்க்கையல்லவா! மகா தபஸ்விகளை எல்லாம் ஆட்டி வைக்கும் கல்யாண ஆசை உன்னை மட்டும் விலக்கிவிட்டதா?…” என்று பேசும் போது, அவள் குரலில் துக்கத்தின் கரகரப்பும், கம்மலும் காணப்பட்டன.

ஸ்ரீதா:— அம்மா! இந்த அல்ப விஷயத்திற்காகவாம்மா கண்ணீர் விடுகிறாய். உன்னைப் பாட்டியாக்கவும், குடும்பத்தைக் கிளை கிளையாகப் பெருக்கவும், தம்பி தாமோதரன் இருக்கையில், ஏனம்மா கவலைப்படுகிறாய்? பெற்ற தாயின் மனத்தை மக்கள் மகிழ்விப்பது போல், பெற்ற மக்களின் உள்ளத்தையும் தாயார் களிக்கச் செய்ய வேண்டாமா?… அம்மா!… இந்த அல்பமான மணவாழ்க்கையில், நான் விரும்பும் லக்ஷ்யத்தை அடைந்து, சாந்தியின் சிகரத்தை எட்ட முடியாது என்பதுதான் என் துணிபு. என்னுடைய லக்ஷ்யம் சேவை, த்யாகம், தயை, பரோபகாரம் முதலிய படிகளில் ஏறி, சாந்தியின் சிகரத்தை அடைந்து, பேராநந்தத்தை அனுபவிப்பதேயாகும்— என்று வீராவேசத்துடன் சொல்லும் போது, டெலிபோன் மணி கணகணவென்று அடித்தது. ஸ்ரீதரன் ஒரே தாவாகத் தாவிச் சென்றான். பெற்ற மனம் பித்தல்லவா! அந்த இதயத்தின் தாங்க முடியாத தாகத்தையும், பேராவலையும் பிறந்த மனம் அப்படியே அறிய முடியுமா! தவிக்கும் உள்ளத்துடன் பின்னாலேயே ஓடினாள். ஆனால், இடைமறித்துப் பேச தைரியமின்றி மவுனமாக நின்றாள்.

ஸ்ரீதர:— ஹல்லோ… யாரு!… தீன தயாளு வீட்டிலா… சரிதான்; இதோ வருகிறேன்… என்ன! 105 டிகிரியா… பரவாயில்லை பயப்பட வேண்டாம். இன்று மாலைக்குள் இறங்கி விடும். சரிதான்—என்று கூறி ரிஸீவரை வைத்த போது… தம்பீ! இதோ பாரு! நான் யாரைப் பற்றிப் பேச வந்தேனோ, அவர்கள் வீட்டினரே இப்போது உன்னிடம் பேசியதைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். தீன தயாளுவின் வீட்டிலிருந்து அவருடைய சகோதரி நேற்றுதான்

பக்கம் 2

இங்கு வந்திருந்தாள். தீன தயாளுவின் மூன்றாவது மகளை உனக்குக் கொடுக்க மிகவும் விரும்புவதாயும், அதை உடனே முடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதைத் தெரிவிப்பதற்காகத்தான் வந்தேன்…

என்று அந்தம்மாள் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்ரீதரன், “அம்மா நமஸ்காரம்!… எனக்கு அபாரமான வேலை இருக்கிறது. நான் போய் வருகிறேன்” என்று வரட்டுச் சிரிப்புடன் கூறியவாறு ஓடி மறைந்தான். பெற்ற தாயாரின் அன்பு உள்ளத்தில் ஏமாற்றமென்கிற அம்பு பாய்ந்து வதைத்ததால், அவள் தம்பித்து நின்று விட்டாள்.

அதே சமயம், இந்தம்மாளின் சிறிய மகன் தாமோதரன் வெகு ஆத்திரத்துடன் அங்கு வந்து, “என்னம்மா சாதித்து விட்டாய்? நான் அப்போதே சொன்னேனே! அது சரியாகத்தானே போய் விட்டது! அண்ணாவாவது, நீ சொல்கிறபடி கேட்பதாவது? அவனுடைய ப்ரவர்த்தகமும், அவனுடைய நடத்தையும் உனக்கென்னம்மா தெரியும்?… “"ஏதோ, மகன் மகா புத்திசாலி, அதி சீக்கிரத்திலேயே, படித்து டாக்டராகி விட்டான்; புகழ் தேவதையும் வெகு விரைவில், அவனைக் கருணையுடன் கடாட்சித்து விட்டாள். இனி எத்தகைய குறைவுமில்லை. நிறைய பணம் சம்பாதிக்கிறான். எங்கு பார்த்தாலும், டாக்டர் ஸ்ரீதரன் நல்ல கைராசிக்காரர், அபாரமான சாமர்த்தியசாலி என்று பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள். இதை விட, வேறு என்ன வேண்டும்” என்று நீ எண்ணிப் பூரித்து, அதோடு நின்று விட்டாய்! என்னைப் பற்றி உனக்கு நினைப்பு ஏது? நான் உன் கண்ணிலேயே படவில்லை! அந்தத் தடியனுக்காக நான் விவாகமில்லாமல் எத்தனை நாளைக்கு தடிக் கட்டையாய் நிற்க வேண்டும் என்கிறாய்? அண்ணனுக்குக் கல்யாணமாகாமல், தம்பிக்கு ஆகக் கூடாதென்று எந்த மடையன் சொல்லி வைத்தானோ, தெரியவில்லையே! அம்மா! நான் பல தரம் சொல்லியாகி விட்டது; என் வார்த்தையை இனி நீ லக்ஷ்யம் செய்யவில்லை என்றால், கட்டாயம் என்

இஷ்டப்படிக்கு நான் விவாகம் செய்து கொண்டு, தனியாய், சுகமாய் வாழ்க்கை நடத்துவேனேயன்றி, உன்னை எதிர் பார்க்க மாட்டேன். பிறகு, என் மீது குறை கூறிப் பயனில்லை” என்று வெடுக்கென்று மிகவும் பதட்டத்துடன் கூறினான்.

இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கும் கமலவேணியம்மாளின் இதய தாபம், ஆத்திரமும், துடிதுடிப்பும் கொண்டுள்ள மகனுக்கு என்ன தெரியும்? இரண்டு கண்ணும் எத்தனை முக்யமோ, அத்தனை முக்யமான உணர்ச்சியுடன் இரண்டு மகனுடைய க்ஷேமத்தையும், கோரித் தவம் கிடக்கும் கமலவேணியின் கண்களில் நீர் நிறம்பி வழிந்தது. அதைத் துடைத்துக் கொண்டு, “தம்பீ! தாமோதரா! பதறி விடாதேப்பா! பதட்டத்தினால், நன்மை ஒன்றும் உண்டாகாது. உங்களிருவருக்கும் கல்யாணத்தைச் செய்து கண்ணாரக் கண்டு களிக்க, என் தாயுள்ளம் எத்தனை ஆவலுடன் துடிதுடிக்கின்றது தெரியுமா? ஏற்கெனவே உன் பிதாவின் கரும்புள்ளிச் செயல் ஒன்று நம் குடும்பத்தின் கண்ணியத்தைச் சிதைத்து, அழியா வடுவை உண்டாக்கி விட்டதை, நாம் எத்தனை ஜென்மமெடுத்தாலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது!...அந்த ஒரு அதிர்ச்சியினால் அளிந்த புண்ணாகி விட்ட என் உள்ளம் சாந்தி… சாந்தி… என்று தேடியலைந்து திரிகிறது. அந்தத் துடிப்பான மனத்திற்கு, உங்களிருவராலாவது ஒரு கடுகளவு சாந்தியும், அமைதியும் உண்டாகுமா? என்று இராப்பகல் நான் துள்ளித் துடித்துத்தான் வருகிறேன். ஏற்கெனவே, உள்ள களங்கத்தை மறைத்து, மறந்து நாம் தலை நிமிரும் சமயம் இந்தச் சிறிய விஷயங்களில், அண்ணனுக்கு விரோதமாய் நடப்பது தர்மமா! நமக்கு ஏராளமான பணமிருப்பதனால், ஏதோ ஒரு வகையாய் இருக்கிறோம். அப்படிப் பணமிருந்தும், உன் சகோதரிகள் மூலம் படும் இம்ஸை சொல்லி முடியாது. இதெல்லாம் தெரிந்தும், நீ அவசரப்படலாமா? என் வார்த்தையைக் கேள்!…பெற்ற தாயாகிய நான், என்றும் உனக்கு ஹிதமே செய்வேனேயன்றி வேறு விதம் செய்யமாட்டேன்…