சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 13

13

ன்ன ஆச்சரியம் அண்ணா! நம் பிதாவின் செய்கை இத்தனை மோசமானதா! எங்களால் நம்பவே முடியவில்லையே… அம்மாவின் நீங்காத வருத்தத்தின் காரணம் இப்போதல்லவா தெரிகிறது…” என்று வியப்பே வடிவமாய் இந்திராவும், சந்திராவும் ஸ்ரீதரனிடம் கேட்டார்கள்.

ஸ்ரீதர:-(சிரித்துக்கொண்டே) உம். இந்த விஷயம் உங்களுக்குப் புதிதாக இருப்பதால், ப்ரமாதமான ஆச்சரியப்படுகிறீர்கள். எனக்கு இந்த விஷயம் ஆறிப் புளித்துப் போய் விட்டதேயாகும். சொன்னால், வெட்கக்கேடு: கூடுமான வரையில், நான் அவரால் நிராதரவான நிலையில் உள்ள அனாதைகளுக்கு உதவியும் செய்து வருகிறேன். இந்தம்மாள் தேவதாசி குலத்தவளாகையால், பரம்பரை செல்வம் சிறிதிருந்திருக்க வேண்டும். கச்சேரி செய்தும், சினிமா நடித்தும் செல்வச் சீமாட்டியாயிருக்கிறாள். நான் முதலில் வாசலில் அந்த உஷாவைப் பார்த்த போதே, என்னை அறியாத சந்தேகம் தட்டியது. நம் தாமோதரனின் சாயலே இவளுக்கும் இருக்கிறதே, சந்திராவைப் போலவே இவளும் பேசி, குறுகுறுப்பாய்ப் பார்க்கிறாளே… என்று எண்ணி இமை இசைக்காமல் பார்த்தேன்; அதீதமான நாகரீகத்தையும், நடத்தையையும் நான் வெறுத்தேன். இதை எப்படி தட்டிக் கழிக்கப் பார்க்கலாம்? என்று யோசித்தேன். கடவுளே என் பங்கிலிருந்து ஒரேயடியாக மாற்றி விட்டார். அம்மாவுக்கும் அது மிக சந்தோஷமாகி விட்டது. தம்பி வந்த பிறகல்லவா இருக்கிறது விஷயம்.

இந்தி:- என்ன அண்ணா! நம் பிதாவின் நடத்தை அத்தனை மோசமானதாகவா இருந்தது.

சந்தி:- இதென்ன கேள்வி இந்திரா! மோசமானதாக இல்லை என்றால், இத்தகைய விதி அவருக்கு வருமா! ஏதோ, நாம் செய்த பாக்யம் நம் மாமியார் வீடுகளில் நாம் கவுரவமாக வாழ்கிறோம். அதற்கும் அண்ணாதான் காரணம்; பெரிய அண்ணாவுக்குள்ள பாரபுத்தியும், கவுரவமும், படிப்பும், சாந்தமும் சின்னவனுக்கு இருக்கிறதா! அதுவும் குடும்பத்து சாபந்தான் என்று சொல்லும்போது, “குடும்பத்து சாபமாம் சாபம்! எந்த அதிசயமான சாபத்தைக் கண்டு, இப்படி எல்லோரும் அத்தனை பெரியவர்களின் முகத்திலடித்தது போன்று, அவமானப் படுத்தி விட்டு, எழுந்து வந்தீர்கள். வேண்டுமென்று என்னை மட்டந் தட்டி, ஏளனம் செய்வதற்காகவா நீங்கள் வந்தீர்கள். அவர்களுடைய நாகரீகத்தைக் கண்டு ப்ரமித்தபோதே, நான் நினைத்தேன்…”

“தம்பீ! பதறாதேப்பா! நாகரீகமோ! படாடோபமோ! எதுவாயினும் சகித்துக் கொண்டு, உன்னிஷ்டத்தை நிறைவேற்றவே நினைத்தேன். பிறகு அவர்கள் தேவதாசி குலத்தவர்கள் என்று தெரிந்தது. அதைக் கூட உனக்காகப் பொறுத்து, உன் சந்தோஷத்தையே நிறைவேற்ற எண்ணினேன். ஆனால் உன்னுடன் பிறந்த சகோதரியையே நீ மணப்பதென்றால், அது எந்த தெய்வத்திற்கு அடுக்கும் தம்பீ ! உஷா இனி உன் சகோதரி, உன் ப்ரேமைவல்லி இல்லை! இதோ பார் புகைப்படங்கள்!” என்று அழுத்தமாகக் கூறியபடியே ஆல்பத்தைக் காட்டினான்.

“என்ன ! உஷா என் சகோதரியா ! என்ன அண்ணா உளறுகிறாய்…” என்றபடியே ஆல்பத்தைப் பார்த்தான். தன் பிதாவின் பலவிதமான படங்கள் அதில் அலங்காரமாயிருப்பதையும், உஷா சிறு குழந்தையாயிருக்கையில், அதை அவர் கையில் வைத்துக் கொண்டுள்ள புகைப்படத்தடியில், “என் கண்மணி உஷாவின் பிறந்த நாள் இன்று; அவள் சகல மங்களத்துடனும் வாழ வேண்டும்…” என்று அவர் கைப்பட எழுதியிருக்கும் எழுத்துக்களையும் பார்த்த தாமோதரனுக்குத் தன் மீது இடிஇடித்தது போலாகி விட்டது.

தன் பிதாவின் புகைப்படங்கள் வீட்டிலுள்ளதை எல்லாம் இதோடு ஒப்பிட்டுப் பார்த்தான். அவருடைய எழுத்துக்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தான். இன்னது சொல்வது, செய்வது என்பதே தெரியாமல், தடை கட்டிய நாகம் போல் தர்பித்து நின்று விட்டான். திரும்பத் திரும்ப அவைகளை உற்று, உற்றுப் பார்த்தான்… உஷா என் சகோதரியா!… உஷா ஒரு தேவதாசியின் மகளா… என்கிற வார்த்தைகள் அவன் இதயத்தில் மாறி, மாறி ஒலித்து இம்ஸை செய்து வாட்டுகின்றன… சில வினாடிகள் ரௌத்ராகாரமான நிலைமையில் மவுனமாக இருந்தவன், திடீரென்று,தன் அண்ணனை நோக்கி, “அண்ணா! இவைகளெல்லாம் உண்மையான விஷயமா…” என்று அசட்டுக் கேள்வியை, முரட்டுத்தனமாகக் கேட்டான்.

ஸ்ரீதரன் சிரித்துக் கொண்டே “தம்பீ! இதென்னக் கேள்வியப்பா! நம்மை விட்டு நம் தந்தை பிரிந்து, எத்தனையோ நாளாகி விட்டது. அவர் இங்கு இருந்த காலத்தில், இப்படங்கள் எடுத்திருப்பதை இதோ ப்ரத்யக்ஷமாக, இவைகளே காட்டுகின்றன. இதை யாராவது மாற்றவோ, சூது வாதுகள் செய்யவோ முடியுமா! யோசித்துப் பாரு தம்பீ! இன்னும் வேணுமானால், அப்பா எழுதிய பழய கடிதங்கள் கிடக்கின்றனவே! அவைகளையும் ஒத்திட்டுப் பாரு… இனி அனாவசியமாய், இவ்விஷயத்தில் சர்ச்சை செய்வது, மிகவும் கேவலமாகி விடும். எந்த ஒரு கீழ் ஜாதியில் கூட, தன் சகோதரியைத்தான் மணப்பது என்ற மிருகத்தன செய்கையை இதுவரையில் கண்டதில்லை. எல்லாம் நல்லதற்கே என்கிற பழமொழிப்படி, சகலத்தையும் நன்மைக்கென்றே நீ நம்பி, மனத்தைத் தேற்றிக் கொண்டு, சாந்தியை அடை. நம் தாயாரையும் சாந்தியடையச் செய்… கேவலமான மிருக வாழ்க்கை வாழ்ந்து, கடைசியிலும் தன்னைத் தானே நாசமாக்கிக் கொண்ட நம் பிதாவின் செய்கையே, என் மனத்தைக் கல்லாக்கி, வைராக்ய நிலையில் நிறுத்தி விட்டது. அதைப் பின்னும், ஊர்ஜிதப் படுத்துவதற்காகவே, இத்தகைய சம்பவங்களை பகவான் எனக்குக் காட்டி, என்னை ரக்ஷிக்கின்றார் என்றுதான் நான் சந்தோஷப்படுகிறேன். தம்பீ! நாம் இங்கிருந்து புறப்படும் போது, நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாய் என்பதை நானறியவில்லை என்றுதானே நீ நினைக்கிறாய்… அந்த தேவலோக ரம்பையைக் கண்டு, நான் எங்கே மோகித்து, சொக்கிப் போய், உனக்குப் பங்காளியாகி விடுவனோ என்றல்லவா நீ நினைத்தாய் ! தம்பீ! இந்த ஜென்மத்தில் எனக்கு பகவான் அத்தகைய புத்தியைக் கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி எனக்கு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுமானால், அப்போதும் இம்மாதிரி முறை தவறி நடக்க, சத்யமாய் முன் வரமாட்டேன். இதை மட்டும் கடவுள் மீது ஆணையாக நம்பு…” என்று உணர்ச்சி ததும்பக் கூறினான்.

ஆனால், தாமோதரன் எத்தகைய பதிலும் சொல்லவே இல்லை. முகத்திலுள்ள கோபக்கனலும், ஏமாற்றத்தின் எதிரொலியும் மட்டும் மாறவே இல்லை. மறுபடியும் டாக்டரே பேசத் தொடங்கி, “தம்பீ! வாழ்க்கை என்பது ஒரு கப்பல்; அந்தக் கப்பல் சம்ஸார ஸாகரத்தில் போகும் போது, எத்தனையோ அபாயங்கள் தோன்றி, கப்பல் உடையவும், ஆட்டங் கொடுத்துத் தவிக்கவும், கவிழ்ந்து போகவும், மலைகளில் மோதுண்டு தப்பிக்கவும், நீர்வாழ் துஷ்ட ஜந்துக்களினால் விபத்துக்குளாகியும், பலபல விதங்களில் சிக்கினாலும், அதை ஜெயித்து நீந்தியடித்துக் கொண்டு, அக்கரை செல்பவனே சரியான மாலுமி; அவனே சாந்தியின் சிகரத்தை எட்டி, ஆனந்தானுபவம் செய்ய முடியும். அதை விட்டு, சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் மனத்தை பறி கொடுத்து அலட்டிக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படியப்பா! இந்த சம்பவம், வாழ்க்கைப் பாதையில் ஒரு படிப்பினையைக் காட்டியதாக எண்ண வேணும். இம்மாதிரி விசித்திரங்கள் உலகத்தில் எல்லோருக்கும் நடக்காது. எங்கோ, ஆயிரத்தில் ஒரு இடத்தில்தான் நடக்கும். க்ரகண மூளி எங்கேயோ ஒருவருக்குத்தான் வரும் என்பார்கள் பார், அது போல், நம் குடும்பத்தில்தான் இந்த வினோத சம்பவம் நடந்திருக்கிறது. இதை எண்ணியே, வீணாகக் கவலைப்படாதே.

இந்த காரணத்திற்காக, விவாகம் தடைபட்டு விட்டது என்பது பிறருக்குச் சொல்ல வேண்டாம். அவர்கள் தேவதாசிகள் என்பது உலக ப்ரஸித்தம். அந்த ரகஸியம் தெரியாமல் முதலில் விசாரித்தோம், இந்த விவரம் தெரிந்ததும், நிறுத்தி விட்டோம் என்று சொன்னால், பொருத்தமாகவிருக்கும். இதைப் பற்றிக் கவலைப்படாதே. வேறு உனக்குப் பிடித்தமான பெண்ணைச் சொல்லு; உடனே ஏற்பாடு செய்கிறேன், இந்திராவும், சந்திராவும் ஊருக்குப் போவதற்குள், இதை முடித்து விட்டுப் போகலாம். இன்று பூராவும் நீ யோசனை செய்து பதில் சொல்லு…” என்று கூறினான்.

அதே சமயம், டாக்டருக்கு அவசரமான டெலிபோன் அழைப்பு வந்ததால், பரபரப்புடன் எழுந்து சென்று விட்டான். அதே சமயம் தாமோதரனுக்கும் டெலிபோன் வந்தது; உடனே சென்று பேசத் தொடங்கினான்… “ஹல்லோ… யாரு … உஷாவா…”

உஷா:- ஆம் அண்ணா! நமஸ்காரம்…

தாமோ:- இதென்ன உஷா…

உஷா:--என்னவா! இன்னும் புரியவில்லையா! பழய சகாப்தம் முடிவடைந்து விட்டது…நான் தேவதாசி வகுப்பில் பிறந்து விட்டாலும், என் தாயின் சீல குணத்திற்கும், மாசு, மருவற்ற தூய வாழ்க்கைக்கும் கட்டுப்பட்டவள். என்னுடைய வாழ்க்கை ரகஸியம், நாம் ஒரே பிதாவின் மக்கள் என்ற பரம ரகஸியம் இந்த நிமிஷம் வரையில் எனக்குத் தெரியாதிருந்தது; இப்போதுதான் என் தாயாருக்கும் தெரிந்தது. இனி நம்முடைய வாழ்க்கைச் சக்கரங்களின் பாதையே வேறு விதமாக மாறி விட்டது. இனி பழயபடியான நேசத்தில் என்னை நினைக்காமல், உங்களுடைய இரண்டு சகோதரிகளைப் போல், மூன்றாவது சகோதரியாய் என்னையும் எண்ணுங்கள் என்று கேட்பதற்காகவே கூப்பிட்டேன். பெரிய அண்ணாவுக்கு என் நமஸ்காரம் கூறுங்கள்.. குட்பை…

தாமோ:- ஹல்லோ… ஹல்லோ… உஷா!… உஷா சடக்கென்று வைத்து விட்டாளே… என்று வருத்தத்துடன், அப்படியே நாற்காலியில் சாய்ந்தான். அவன் இதயத்திலடிக்கும் புசல் காற்றிற்கு, எல்லை வைத்துக் கூற முடியாது போய் விட்டது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".