சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 16

16

னது இரண்டு குமாரர்களும், ஜெயப்ரதமான விஷயத்துடன் திரும்பி வரப் போகிறார்கள் என்று கமலவேணியம்மாள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கையில், துரைக்கண்ணனுடையவும், அவருடைய மகளுடையவுமான கொலை விஷயம் ஊர் பூராவும் காற்றுப் போல் பரவி விட்டது மட்டுமின்றி, ‘டாக்டர் ஸ்ரீதரன் குற்றவாளியாய் கைது செய்யப்பட்டு விட்டாராம்’ என்ற விஷயம் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து விட்டதால், ஸ்ரீதரனுடைய சினேகிதர்கள், அபிமானிகள், டாக்டர் சினேகிதர்கள் ஆகிய பலர் கும்பல் கும்பலாக, சிலர் துரைக்கண்ணன் வீட்டிற்கும், சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சிலர் ஸ்ரீதரன் வீட்டிற்குமாய் ஓடிச் சென்றார்கள். ஏற்கெனவே தன் கணவன் விஷயமாய் மனமுடைந்து, கேவலப்பட்டுத் தவித்துக் கொண்டுள்ள கமலவேணியம்மாள் காதில் இந்த வார்த்தைகள் விழுந்ததுதான் தாமதம், “ஹா… என் மகனா! கொலைக் குற்றவாளியாகி, கைதியாகி விட்டானா, என் ஸ்ரீதரன்!… என் கண்மணி டாக்டர் ஸ்ரீதரனா! சத்யசந்தனாகிய ஸ்ரீதரனா? மகா த்யாகியும், சிறந்த ஞானியுமாகிய ஸ்ரீதரனா கொலையாளி! ஸ்ரீதரனா கொலையாளி,” என்று தன்னை மறந்து கதறியபடியே, வீதியில் ஓடத் துடங்கி விட்டாள். பாவம். எங்கு போகிறோம், என்ன செய்கிறோம், என்பதே அவளுக்குத் தெரியாது தடுமாற்றமான நிலைமையில், அவளுடைய பெண்களும், மற்றவர்களும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து, வீட்டில் படுக்க வைத்தார்கள். அவளை எத்தனை அடக்கியும், அடங்காத வெறி பிடித்த நிலைமை உண்டாகியதால், “எங்கே என் ஸ்ரீதரன்? என் ஸ்ரீதரனைக் கைது செய்த போலீஸ்காரன் எங்கே? அவனைக் கொன்று விடுகிறேன், குத்தி விடுகிறேன். என் ஸ்ரீதரனா கொலைகாரன், என் ஸ்ரீதரனா குற்றவாளி” என்று மறுபடியும் கத்தியவாறு வீதிக்கு ஓடுகிறாள்.

“அந்த ப்ரபுவின் வீட்டிற்கு என்னை அழைத்துப் போங்கள்; என்னை இங்கு தவிக்கச் செய்ய வேண்டாம்; நான் உடனே என் ஸ்ரீதரனைப் பார்க்க வேண்டும்;” என்று கத்துவதைக் கண்டு, ஊர் ஜனங்களின் மனம் உருகிக் கண்ணீர் வழிந்தது.

இவர்களுக்குத் தெரிந்த ஒருவர், உடனே காரில் இந்தம்மாளையும், சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றார். தாயின் தவிப்பும், பெத்த வயிற்றின் துடிதுடிப்பும், கைம்மாறு கருதாத தாயன்பின்

பக்கம் 113

உயர்வும் ஒப்பிட்டுக் கூற முடியுமா! ஸ்ரீதரனா! கொலைகாரன்? ஸ்ரீதரனா கைதியாகி விட்டான்? ஏ! கடவுளே! உனக்குக் கண்ணில்லையா! உனக்கு நியாயமில்லையா! நீதி நிர்ணயமற்றக் கட்டையா நீ! உனக்கு இதயமில்லையா! உனக்கு பச்சாத்தாபமில்லையா! மகா விவேகியாய், சிறந்த பக்த சிகாமணியாய், த்யாகியாய் விளங்கும் என் கண்மணி ஸ்ரீதரனா கொலை செய்வான்! பரோபகாரத்திற்கே பாடுபடும் உத்தமனாகிய ஸ்ரீதரனா கொலை செய்வான்? ஸாராஸார விவேகமற்ற உன்னையா கருணாநிதி, பக்தவத்ஸலன், தீன தயாளன், தயாநிதி என்றெல்லாம் மக்கள் கூறுகிறார்கள்.”

என்று மடை திறந்த நீரைப் போல், கண்ணீர் பெருகியவாறு கதறுகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம், துரைக்கண்ணன் பங்களாவின் வாசலில் வண்டி வந்து நின்றது. அங்குள்ள கூட்டமும், போலீஸாரின் தடபுடலும், ஆளுக்கு ஒன்றாகப் பேசும் விமர்சனமும், அளவிட்டுச் சொல்ல முடியாது. வெறும் வேஷச் சாமியாராயிருந்து சரியானபடி கை வைத்ததனால், ஆள் அகப்பட்டுக் கொண்டான். லக்ஷக்கணக்கான ரூபாய்களுடன், ஒரு பெண்ணை தான் அடித்துக் கொண்டு போக நினைத்த போது, அவனுக்குப் போட்டியாய் ஒரு வெள்ளைக்காரனே வந்து விட்டான் என்றால்… கோபம் பாபம் சண்டாளம் என்பது பொய்யாகுமா! ஆத்திரத்தின் தீ அவனையே எரிக்கத் தொடங்கி விட்டது என்று பலவிதமான வார்த்தைகள் சொல்வது இந்திரா, சந்திராவின் காதில் விழுந்து துடிக்கிறார்கள். மகா மானியான அண்ணாவுக்குமா இத்தகைய படாப்பழி, இதென்ன உலகம்…

என்று துடிக்கிறார்கள். மெல்ல கும்பலைக் கலைத்துக் கொண்டு, கார் கேட்டுக்குள் சென்றதும், கமலவேணியம்மாள் ஒரே கதறலுடன், "ஸ்ரீதர்! ஸ்ரீதர் ! இதென்னடா கண்றாவி… ஐயையோ! உன்னையா நான் இந்த நிலைமையில் பார்ப்பது… ஐயோ! என் மகனின் உத்தம குணமும், பரோபகார சிந்தையும் உங்களுக்குத் தெரியாதா! என் மகனா கொலை செய்வான்? அனியாயம், அக்ரமம்!” என்று கதறியவாறு, ஸ்ரீதரனைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, தன்னை மீறிய துக்கத்தில் புலம்புகிறாள். “அண்ணா” என்று சகோதரிகள் கதறுகிறார்கள்.

தன் தாயாருக்கும் இச்செய்தி எட்டி விடும்; இத்தனை சடுதியில் இங்கு வந்து விடுவாள் என்று ஸ்ரீதரன் நினைக்கவில்லை. இந்த விஷயத்தைக் கேட்டு எப்படித்தான் அவளுடைய உயிர் துடிக்கும். அவளை யார் தேற்றி, தக்கப்படி வைத்யம் செய்வார்கள்? என்று தனக்குள் எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரனும், தன் தாயைக் கண்டதும் “அம்மா!”வென்று தாய்ப் பசுவைக் கண்ட கன்றைப் போல் அவனும், கன்றைக் கண்ட தாய்ப் பசுவைப் போல் அவளும், ஏககாலத்தில் கதறி விட்டதால், அங்குள்ள கல் நெஞ்சம் படைத்த வெள்ளைக்காரியின் கண்களிலும் நீர் முட்டி விட்டது என்றால், வேறு கேட்க வேண்டுமா? அங்குள்ள அத்தனை பேர்களின் உள்ளமும் உருகியது.

தாயாரைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு கதறிய ஸ்ரீதரன், சற்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, தம்பியை நோக்கி… “தம்பீ ! விதியை விலக்க மனிதனால் முடியாது. விதியை மதியால் வெல்லலாம் என்கிற பழமொழிப்படிக்கு சாமான்ய விஷயங்களாயின், ஒரு சிறிது கை கூடும். இத்தகைய மகத்தான சோதனையை உண்டாக்கிய பகவானே, அதைத் தீர்க்க முடியுமேயன்றி, மற்றவர்களால் முடியாது. ஒரு விஷ மருந்தைக் கொடுத்த டாக்டர்தான், அதற்கு மாற்று மருந்தையுங் கொடுத்துத் தீர்க்க வேண்டுமேயன்றி, அதற்கு மாற்று பிறருக்கு எப்படித் தெரியும். ஏதோ பகவானை நம்பி, நான் நல்ல காரியத்தை எண்ணி, இங்கு உன்னையும் அழைத்து வந்தேன். பூர்வ கர்மாவின் செயல் என்னைச் சுற்றியடிக்கிறது, இந்த இடத்தில், இந்தக் கண்றாவி காட்சியைப் பார்க்க நம் தாயார் இங்கு கூடியிருப்பது சரியில்லை. இத்தகைய பயங்கர அதிர்ச்சியான வழியைக் காட்டிய பகவான், இதற்கு விமோசனத்தையும் காட்டி ரக்ஷிக்காது, கைவிட மாட்டான். என் பாபம் அதையும் தடுத்தால், உலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகளுடன் நானும் இன்பமாய், தூக்குமேடையில் தொங்கலாடி, சாந்தியின் சிகரத்தையடைந்து மகிழ்வேன்! நீ இனி அனாவசியமாய், அழுது கொண்டு நிற்பதில் உபயோகமில்லை; அம்மாவை முதலில் அழைத்துக் கொண்டு போய், கண்ணே போல் காப்பாற்று. இனி இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்; வக்கீலை வைத்து வாதிக்கவும் வேண்டாம். பகவான் திருவுள்ளம் துணிந்து என்னைக் கைதியாக்கியது போல், சீக்கிரத்தில் தூக்கிலிட்டும், வேடிக்கைப் பார்க்கட்டும்! தம்பீ! அம்மாவை அழைத்துச் சென்று விடு; அன்புடன், ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள். கஷ்டப்படுவதற்கே ஜென்மமெடுத்துள்ள, நம் தாயின் கடைசி காலத்தில் உயிர் போகும் தருவாயிலாவது, சாந்தியைக் கொடுத்துக் கடவுள் காக்கட்டும். அன்று எந்த ஒரு கடிதத்திற்காக நம் வீட்டில் பல குழப்பங்கள் நேர்ந்ததோ! அதே கடிதத்தை இப்போது பலரறிய, எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறியவாறு, தனது சகல சொத்துக்களையும் தம்பியே அடைந்து வாழ வேண்டியது என்று வக்கணையாக வரைந்து, தம்பியின் கையில் கொடுத்தான்.

இது பரியந்தம் வேறு உணர்ச்சியுடன் இருந்த தாமோதரன், கடிதத்தை வாங்கி சுக்கலாகக் கிழித்தெறிந்தான். “அண்ணா! சாந்தியை அடைய பல மார்க்கங்களை, பகவான் காட்டியிருந்தும், நான் அதை அடைய வழி தவறி, அவதிப்பட்டு என்னையும், உன்னையும் சேர்த்து அலட்டிப் பாழாக்கி விட்டேன். எனக்குப் பெண் பார்ப்பதற்காக, நீ இங்கு வந்ததனாலல்லவோ, நமக்கு இத்தகைய பேராபத்து, இந்தச் சண்டாள ஆங்கிலேயப் பாவிகளால் விளைந்தது. நம் குடும்பமே சின்னாபின்னமாய்ச் சிதறிப் பாழாகிய பிறகு, நீயே இக்கதிக்கு வந்த பிறகு, எனக்கு இனி சொத்தா! சுதந்திரமா; வாழ்க்கையில் இன்பமா? அண்ணா! என் கண் திறந்து விட்டது. என்னிதயம் உணர்ச்சியை அறிந்து நடக்கும் சக்தியைப் பெற்று விட்டது. இனி எனது வாழ்க்கை, புதிய பாதையில் ஆரம்பமாகி விட்டது. நீ என்ன சொன்னாலும், நான் இந்த வழக்கில் என்னுயிரைக் கொடுத்தாவது, நீ நிரபராதி என்பதை ருஜுப்படுத்தாமல், நான் இருக்கப் போவதில்லை. அது வரையில், நான் தீக்ஷை வளர்த்து, ஒரு வேளை புசித்து, வ்ருதமிருந்து பகவானை பூஜித்து வேண்டித் தொழுது, சத்யத்திற்கு ஜெயத்தைக் கொடுத்து, ரக்ஷிக்கும்படி நான் போராடுவேன். நான் வெற்றி பெறவில்லை என்றால் ,சத்யத்திற்கு மதிப்பில்லை. தர்மத்திற்கு ஜெயமில்லை—என்றதை கடவுளே காட்டி விட்டால், நானும் தயை தாக்ஷிண்யமின்றி, இந்த வெள்ளைக்காரனை, வேண்டுமென்று கொலை செய்து விட்டு, அங்கு உன்னுடன் வந்து விடுகிறேன்…” என்று அதீத உணர்ச்சியுடன் கூறும் வார்த்தைகளைக் கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டார்கள். கதறித் துடிக்கும் தாயின் நிலைமையை கவனியாமல், இருவரும் இப்படிப் பேசுவதும், சபதம் செய்வதையும் கண்ட பொதுமக்கள் வியப்புற்றார்கள். போலீஸார் எத்தனை தடுத்தும் கேட்காமல், உணர்ச்சிப் பெருக்கால் பொங்கி வரும் துக்கத்துடன், தாமோதரன் துடிக்கிறான்.

ஸ்ரீதரன் தாமோதரனைக் கட்டியணைத்து… “தம்பீ, நீ முற்றிலும் மாறிப் போய், புனர்ஜென்மம் எடுத்து விட்டதையறிந்து, நான் பரம சந்தோஷமடைகிறேன். நீ புனர் ஜென்மம் எடுத்ததன் பலன் நீயும் ராக்ஷஸனாகி, கொலைகாரனாகி விடுவது சற்றும் பொருந்தாது. என்னை நீ முற்றிலும் நம்புகிறாயா! உன்னிதய பூர்வமாய் நேசிக்கிறாயா!” என்றான்.

தாமோ:- சத்தியமாய், என்னிதயக் கோயிலில் உன்னை சாதாரண அண்ணனாகக் கொள்ளாமல், அண்ணன் என்கிற மகிமையை விளக்கிக் காட்டிய சாக்ஷாத் ஸ்ரீராமசந்திரனைப் போலவே, உன்னை நான் மதித்துப் பூஜிக்கிறேன் அண்ணா.

ஸ்ரீதர:- பேஷ்! தம்பீ! என் ஜென்மம் இன்றே சாபல்யமாயிற்று. நீ எந்த ராமசந்திரனாக என்னை பூஜிக்கிறாயோ! அது போல், உன்னைப் பரம பக்த சிகாமணியான பரதனாகவே நான் கருதுகிறேன். அண்ணன் இட்ட கட்டளைப்படியே பரதன்நடந்தான்; அது போல், நீயும் என் கட்டளைப்படியே நடக்க வேண்டும்; இது சத்யம். ஸ்ரீ ராமசந்திரன் மீது ஆணையாக, இது சத்யம்: உனக்கு நான் ப்ரமாண பூர்வமாய் கட்டளை இடுகிறேன். நீ அதீத ப்ரவ்ருத்தியில் இறங்கி, நம் தாயைக் கொலை செய்த பாதகத்தில் இறங்காதே. அவர்களை இப்போதே அழைத்துச் சென்று விடு. இனி என்னைப் பற்றி நினைக்கவே நினைக்காதே…

“அண்ணா! இதென்ன கொடிய தண்டனை, இப்படியா என்னை மடக்கி, வாய்ப்பூட்டுப் போடுவது? இதுவா எனக்கிடும் கட்டளை...” என்று பின்னும், ஏதேதோ சொல்ல வாயெடுத்த சமயம் போலீஸ்காரர்கள்... “ஸார்! இம்மாதிரி பேசிக் கொண்டு போவது சட்ட விரோதமாகும். தயவு செய்து, நீங்கள் விலகி விட வேண்டும். எங்கள் கடமைப்படி, எங்கள் வேலைகள் நடக்க வேண்டும். சந்தர்ப்ப சாக்ஷியமும், நேரடியான சாக்ஷியமும் எங்களுக்குக் காட்டும் உண்மைப்படி நாங்கள் செய்யக் கடமைபட்டிருப்பதால், இனி மேல், வீணாகப் புலம்பிப் புலம்பி, நேரத்தைக் கடத்த நாங்கள் அனுமதிக்க முடியாது. போய் விடுங்கள்.. அம்மணீ! இந்த இடத்திற்கு நீங்களேன் வர வேண்டும். இம்மாதிரியான பரிதாபகர காட்சியைக் கண்டு தவிப்பதைக் காண, நாங்களும் விசனிக்கிறோம். என்ன செய்வதம்மா! நீங்கள் வீட்டிற்குப் போய் விடுங்கள்,” என்று தனனையும் மறந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் கூறியதோடு, தாமோதரனையும் தேற்றினார்.

இனி அதிகம் கூறுவானேன்! அவர்களுடைய சட்டப்படிக்கு, மேலதிகாரிகள் வந்து சகல விசாரணையும் செய்து, பதிவாக்கிக் கொண்டு, ஸ்ரீதரனை மரியாதையாக அழைத்துச் செல்லும் சமயம், லேடீ டாக்டர் அலையக் குலைய ஓடி வந்து, கண்ணீர் விட்டுக் கலங்குவதைப் பார்த்த ஸ்ரீதரன், “அம்மணி! கடவுளின் சித்தப்படியே, சகலமும் நடக்கட்டும். நான் அதை ஆனந்தமாகவே ஏற்று நடக்கக் காத்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் வைத்துள்ள மதிப்பும், விச்வாசமும், கடவுள் மீது ஆணையாக இருப்பது உண்மையாயின், என் தாயாரையும், என் குடும்பத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்வதோடு, தர்ம வைத்யசாலையின் சகல நிர்வாகத்தை, தம்பி தாமோதரனுடன் சேர்ந்து நீங்கள் கவனித்து, வ்ருத்தியடையச் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஜீவியத்தில், நான் கோரிய லக்ஷியம், இதுதான் என் வாழ்க்கையின் இன்பம். இவைகளை நிறைவேற்றி வைத்தால், அதுதான் என்னிடம் நீங்கள் காட்டும் மரியாதையாகும். என் தாயாரை கவனித்துத் தேறுதல் கூறுங்கள்.”

பிறகு தன் தாயைப் பார்த்து, “தம்பியின் புனர் ஜென்மம் எனக்கு பரிபூர்ண சாந்தியைக் கொடுத்து விட்டது. இந்த வழக்கில் யாரும் எத்தகைய முயற்சியும் எடுக்கக் கூடாது. சத்யமே பகவான்! பகவானே சத்யம்! என்பது சாஸ்திரம். அந்த இரண்டு தத்துவங்களும் உண்மையாயிருப்பின், அதற்கு ஜெயத்தை பகவானே கொடுத்து, அதன் மகிமையை உலகறியச் செய்யட்டும். அதற்காக நீங்கள் நிச்சயமாய் பாடுபடக் கூடாது. இதுதான் என் கோரிக்கை. அம்மா… அம்மா ! உன் மனத்தைத் தளர விடாதே… வீட்டிற்குப் போங்கள்… சந்திரா!… இந்திரா… தாமோதரா… போகிறேன்,” என்று கல்லும் கரைந்துருகும்படிக் கூறியவாறு, காரில் அமர்ந்தான்.

காரும், பலருடைய கதறலையும் பீறிக் கொண்டு, கத்தியவாறு பறந்து சென்றது. அந்தோ பரிதாபம்! கல்யாணத்திற்காக பெண் பேச வந்த இடத்தில், இப்படியா விபரீதம் நடக்க வேண்டும்! என்று வானமே கண்ணீர் விட்டு அழுவது போல், சிறு தூரல் தூரவாரம்பித்தது.

“சாந்தியின் சிகரம்”
முதல் பாகம் முற்றிற்று
.