சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 19

19

ன்னுடைய முட்டாள் தனத்தையும், தகாத வழியில் நடந்து கொண்டு, காலத்தைக் கடத்தியதையும் எண்ணி, எண்ணி ஏங்கியவாறு வீட்டிற்கு வந்தான். தாயாரின் பரிதாபமும், வீடு உள்ள களையற்ற, அலங்கோல நிலைமையும் பளிச்சென்று தெரிந்து, பின்னும் விசனத்திலாழ்த்தியது. இதுகாறும் இருந்த இரும்பு நெஞ்சம் எப்படியோ மாறிப் போய், பூராவும் இலவம் பஞ்சு நெஞ்சாகிக் கண்ணீரைக் கக்கும்படிச் செய்து விட்ட ஆச்சரியத்தை, அவனாலேயே அடக்க முடியவில்லை. நேரே தன் அண்ணன் விடுதிக்குச் சென்றான். இதுகாறும் அண்ணனிடம், இவ்விடுதியில் நின்று சுமுகமாகப் பேசியறியாத தாமோதரனுக்கு, அவ்விடத்தைப் பார்த்ததும் வெறிச்சென்று தோன்றி, கபீரென்று அலறும்படியாயும், தாளாத துக்கம் பீறிக் கொண்டும் வந்து விட்டது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல், ப்ரமை பிடித்தது போல், நின்றான். பிறகு, மேஜை மீதிருந்த டாக்டரின் தினக் குறிப்பு டயரி கண்ணில் பட்டதும், அதை எடுத்துப் பார்க்கலாமா? கூடாதா? என்ற யோசனையுடன் குழம்பினான்.

‘ஒரு வேளை இந்தக் கொலை வழக்கிற்கு இவனுக்கு ஸாதகமானது, ஏதாவது குறிப்புகள் இருக்குமோ?’ என்ற நோக்கத்துடன் பார்த்தான். அது வெறும் டயரியாய் இல்லாமல் ஏதோ ரஸமான—ஸ்வாரஸ்யமான—கதைகள், பாடங்கள், தோத்திரங்கள் படிப்பது போன்ற ஆனந்தமான விஷயங்கள் காணப்பட்டனவேயன்றி, அசட்டுப் பிசட்டு வார்த்தைகளோ, காதல் கீதல் பிதற்றல்களோ காணப்படவே இல்லை. அந்த டயரியில், இவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சில பாகங்களைத் திரும்பத் திரும்பப் படித்தான். அவைகள் வருமாறு:-

தேதி…… மாதம்…
இன்றய சம்பவங்களில், மாதவன் வீட்டில் நடந்தது ஒரு வியப்பிலும் வியப்பானதாகும்! ரதியோ, தேவ கன்னியோ, வன மோகினியோ என்றெல்லாம் வர்ணித்து, ஒரு பெண் தெய்வத்தை என்னெதிரில் கொண்டு நிறுத்தி, அவளை மணக்கும்படி வேண்டினார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அவளை விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் போல் தோன்றியது. அதை நான் தெரிவித்த போது, என்னை நம்பாது, அவர்கள் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு என்னை அசைக்கவில்லை. அதே சமயம் அங்கு மாட்டப்பட்டிருந்த பகவானின் படம் என்னைப் பார்த்து, புன்முறுவல் பூத்து, “சபாஷ்! ஸ்ரீதர்! இந்த உறுதியை நான் மெச்சுகிறேன்” என்று சொல்லியது போன்ற ஒரு தோற்றம் உண்டாகியது. அதுவே எனக்குப் போதும். நான் பார்க்கும் சகலமான பெண்களும், என் கண்ணுக்கு தெய்வங்களாகவே தோன்றுகிறது. இதுவே, எனக்குப் பேரானந்தமாயிருக்கிறது.

தேதி…… மாதம்…
என் தம்பியின் நடத்தையைப் பற்றிப் பிறர் குறை சொல்லக் கேட்கும் போது மிகவும் மனம் கலங்கித் தவிக்கிறது. என் தாயாரிடம் எத்தனை சொல்லியும் அவள் பிடிவாதமாக, என் விவாகத்திலேயே நிற்கிறாள். எனக்கோ, இதைப் பற்றி நினைக்கவும் பிடிக்கவில்லை. அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்து, தம்பிக்கு அவன் விரும்பும் பெண்ணையோ, அல்லது அன்று மாதவன் வீட்டில் பார்த்தவளையோ, மணம் செய்து வைத்தால், சந்தோஷமாயிருக்கும். என்ன செய்வேன்! என் மனத்திலுள்ள ஆவலை யறியாது, அவன் என்னை விரோதி போல் எண்ணுகிறானே! பகவான்தான் மாற்றி, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். சகல சொத்துக்களையும் நான் அவனிடமே கொடுக்க, என்றும் தயாராயிருக்கிறேன். இப்போதே அவனிடம் கொடுத்து விட்டால், அநியாயமாய் அழித்து விடுவான்… அத்தகைய சகாக்களும், சந்தர்ப்பமும் நேர்ந்து விடும் என்ற பயத்தால், பேசாமலிருக்கிறேன். விவாகமாகி விட்டால், பொறுப்பு உண்டாகும். சொத்தைக் கொடுத்து விடலாம். கடவுள் என்னுடைய எண்ணத்தைப் பூர்த்தி செய்து வைக்க வேண்டும்.

தேதி…… மாதம்…
இன்று துரைக்கண்ணனுடைய உடம்பு குணமாகியதற்காக, இரண்டாயிரம். ரூபாய் தனது நன்கொடையாகக் கொடுத்தார். தர்ம வைத்திய சாலைக்கும், அனாதை நிலையத்திற்கும் உதவி கிடைத்தது பற்றிச் சந்தோஷந்தான். ஆனால், அவருடைய மகளை நான் மணக்க வேண்டுமென்று கேட்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனோதிடமும், சங்கல்பமும் பிறருக்கு எப்படித் தெரியும்? உம்!… கடவுள் க்ருபை கை கூடுமானால், அவரிஷ்டப்படி தம்பிக்கு மணம் முடிக்கலாம்… போகப் போகப் பார்ப்போம்.

தேதி…… மாதம்…
அடாடா! இத்தனை வயதான கிழவன் மனம் துணிந்து, நான்காந் தாரத்தை மணந்திருப்பது என்ன அநியாயம்! கிழவன் படுக்கையில் கிடக்கையில், அவனுடைய வ்யாதியைக் கூட மறந்து, அந்த நான்காந் தாரமாகிய பெண், என்னிடம் பேசுவதை எத்தனை விபரீதக் கண்களுடன் பார்த்து, அந்தப் பெண்ணைத் திட்டி, உள்ளே அனுப்பினான். இந்த ஆச்சரியந்தான் என்னெஞ்சை விட்டு அகலவேயில்லை. தகாத காரியம் செய்யும் எவருக்கும் புத்தி இப்படித்தானிருக்கும் போலும். தகாத சகவாஸம் செய்யாதே; பக்தியாயிரு; ஊதாரித்தனம் வேண்டாம் என்று நானும், அம்மாவும் எத்தனையோ சொல்லியும், தம்பி கேட்கிறானா? தான் செய்வது தெரியாமல், எங்கள் மீது கோபங் கூட வருகிறது! உலகமே இப்படித்தான் போலும். எப்படியாவது என் தம்பி நல்ல வழியில் திருந்தி, உலகம் போற்றக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டால் போதும்.

இதற்கு மேல், தாமோதரனால் படிக்க முடியாதுk கண்ணீர் முட்டித் தடுத்து விட்டது. தன் மீது, அண்ணனுக்கிருந்த அளவிட முடியாத விச்வாஸத்தின் ஆழத்தைப் பின்னும் நன்றாக அறிந்து கொண்டான். ‘உன்னுடைய மதிப்பையும், அன்பையும் இதுகாறும் அறியாத பாவியாக இருந்த நான், இனிமேல் அறிந்து கொண்டதைக் கைவிடாது, காப்பாற்றிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்து, பகவான் ரக்ஷிக்க வேணும்' என்று வேண்டிக் கொண்டான்.

அவ்வறையிலுள்ள சகலத்தையும் பார்த்தான். பீரோக்கள் நிறைய, வைத்ய சாஸ்திரப் புத்தகங்களும், உயர்ந்த ஞானததை வளர்க்கும் புத்தகங்களும் இருந்தனவேயன்றி, புத்தியை மயக்கும் குப்பை கூளங்கள் ஒன்று கூட இல்லாததைக் கண்டு வியந்தான். ‘இத்தகைய அண்ணனுடன் கூடப் பிறந்த பாவியான நான், எப்படியெல்லாம் நடந்து, அவருக்கும் மீளாப் பழியை உண்டாக்கி விட்டேன்’ என்று மனங் கலங்கியவாறு, தடதடவென்று தன்னறைக்குச் சென்றான். அங்கு மதியை மயக்கும் கண்ட கசடாப் படங்கள் நிறைந்த புத்தகங்கள், ஆபாஸப் படங்கள் நிறைந்த ஆல்பம்கள், பத்ரிகைகள், சகலத்தையும் எடுத்துத் தோட்டத்தில் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தினான்: “எரிந்து சாம்பலாகி விடுங்கள்! இனி தாமோதரனின் விடுதியில் கூட உங்களுக்கு இடமில்லை” என்று தனக்குள் எண்ணிக் களித்தான். சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ட சினிமாக்காரிகளின் படங்களையும் கழற்றி வீசி எறிந்தான். உத்தமமான சிறந்த கடவுளின் படங்களையும், புண்ய புருஷர்களின் படத்தையும், தன் அண்ணாவின் படத்தையும் மாட்டி, முதலில் தன் விடுதியைப் புனிதமாக்கி விட்டுத் தாயாரிடம் ஓடி வந்தான். தலை தூக்காமல் புலம்பும் கமலவேணிக்கு, ஆறுதல் சொல்லிக் கொண்டு, தன் சகோதரிகள் பக்கத்திலிருப்பதைக் கண்டான்.

அதே சமயம், தபால்காரன் சந்திராவுக்கு ஒரு கடிதம் கொண்டு கொடுத்தான். அதையவள் படித்து, அப்படியே விம்மி விம்மி அழத் தொடங்கினாள். இதைக் கண்ட தாமோதரன், ஒன்றுமே புரியாமல், “என்ன சந்திரா! கடிதத்தில் என்ன இருக்கிறது?”… என்று அன்புடன் கேட்டான். சந்திரா கடிதத்தையே அவனிடம் கொடுத்தாள். தாமோதரன் மனத்திற்குள் படிக்கலானான்:

“சந்திராவுக்கு; இன்று பத்ரிகையில் அதிர்ச்சியான விஷயத்தைப் பார்த்து, எங்கள் மானம் போகிறது. உங்கப்பன் பவிஷை எப்படியோ மறந்து, நாங்கள் உங்களைச் சம்மந்தம் செய்து வாழ்வது போதும்! கொலைகாரனின் தங்கைகள் என்கிற வசைச் சொல்லுக்கும், இழிவுக்கும் உள்ளாக வேண்டிய காலம் வந்து விட்டது பற்றி, மிக மிக விசனித்து வெட்கமடைகிறேன். இந்திராவின் கணவனும், இங்குதானிருக்கிறார். நீங்களிருவரும் இந்த ஆபாஸம் நடந்தவுடனேயே, வீட்டை விட்டு வந்திருக்க வேண்டும். இன்னும் வராததால், இதை எழுதுகிறேன். கண்ணியமான வாழ்க்கை வாழ
வேணுமாயின், நீங்களிருவரும் உடனே புறப்பட்டு வந்து சேருங்கள். கள்ள வேஷச் சாமியாரா யிருந்தவன், கொலைகாரனாகி விட்டதுடன் போதும்! ஏற்கெனவே, சந்தி சிரிக்கும் உன் சிறிய அண்ணனின் சகவாசமே வேண்டாம். மரியாதையாய்க் கிளம்பித் தாயார் வீட்டின் உறவைத் தலை முழுகி விட்டு வரவும். இன்று தவறினால் கூட, உங்களை இனி ஏற்றுக் கொள்ள முடியாது ஜாக்ரதை!”

என்று எழுதியிருந்ததைப் படித்ததும், தாமோதரனுடைய தலை மீது இடி இடித்த மாதிரி இருந்தது. “இத்தகைய படாப்பழியைத் தீர்க்கத் தாமும் முன் வந்து உதவி செய்து பாடுபடுவது போக, இப்படியா எழுதியிருக்கிறார்கள்! உலகத்தின் விசித்ரம் இதுதானா?”… என்று தனக்குள் குழம்பினான்.

தங்கைகளைத் தனியே அழைத்து, இந்த விஷயத்தைத் தாயாருடன் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்வதற்குள், கமலவேணியம்மாள் மிகவும் தீர்க்காலோசனை உடையவளாகையால், இப்படித்தானிருக்கும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டு, “தாமோதரா! இப்படி வாப்பா! நீ உலகானுபவம் போறாதவன். நான் குட்டுப்பட்டுத் தேறியவள். கொலைகாரன் ஒரு அண்ணன்! சோதா—காமுகன்—இன்னொரு அண்ணன்! ஆகையால், உடனே வந்து விடும்படியாகத்தானே எழுதியிருக்கிறார்கள். மிக்க சந்தோஷம்… தம்பீ! உடனே தகுந்த நம் ஆளுடன் இவர்களைக் கூட்டி அனுப்பி விடு… போய் வாருங்களம்மா! நீங்களாவது கணவனுடன் சுகமாய் வாழுங்கள்! நான் பட்ட… படும்… அவஸ்தை போதும்! பெண்களுக்குத் தாய் வீட்டில் எத்தனைதான் உயர்விருப்பினும், அது பெருமையல்ல. கஞ்சிக்குப் பஞ்சாய்ப் பறந்தாலும், கணவன் வீட்டில் வாழ்வதுதான் பேரின்பம்… கண்ணியம்… சகலமும் ஆகும். அண்ணாவின் விதியும், என் விதியும் எப்படி பகவான் நிர்ணயிக்கிறானோ, அது போலாகட்டும். நீங்கள் உடனே கிளம்புங்கள்… தாமோதரா! முடிந்தால், காரிலேயேயனுப்பி விடு… என்ன தயங்குகிறாய்?… எனக்கு பகவான் துணை போதும். உம்!… புறப்படுங்கள். இவ்விருவருடைய கவலையாவது எனக்கு இல்லாமலிருக்கட்டும்…” என்று வெகு அழுத்தமாகக் கூறித் தானே, அவர்களுக்கு வேண்டிய சகலத்தையும் செய்து, காரில் ஏற்றி அனுப்பி விட்டாள்.

இந்தத் தீரச் செயலைக் கண்ட தாமோதரனுக்குக் கூறத் தரமற்ற வியப்பும், மனிதர்களின் போக்கு இப்படியா இருக்கிறது என்ற திகைப்பும் உண்டாகியது. “பெற்றோர்கள் இல்லாதிருப்பினும், சீரும், சிறப்புமாகச் செய்தால், அப்போது பிறந்தகத்தின் பெருமையும், சகோதரர்களின் மகிமையும் தெரியும். ஏதாவதொரு சங்கடம் உண்டாகி விட்டால், இத்தகைய மனோவேறுபாடுகள் உண்டாகி விடுவதா மனித இயல்பு?” என்று தனக்குள் எண்ணியவாறு, மறுபடியும் தாயாரிடம் வந்து பேசத் தெரியாமல், கண்ணீர் பெருக உட்கார்ந்து, “அம்மா!” என்று தழுதழுத்துக் கூப்பிட்டான்.

கமல:- தம்பீ! அண்ணன் வாய் ஓயாமல், ‘சாந்தியின் சிகரத்தை அடைய வேண்டும்; நிர்மல நித்யாநந்தத்தை அடைய வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததற்குக் குழப்பத்தின் மத்தியில் தத்தளிக்கும் விதியே அமைந்து விட்டது! இந்த விதியை, எப்படியாவது மாற்றியமைக்க நாம் பாடுபட வேண்டும். உன் சகோதரி உஷாதேவி வந்திருந்தாள். அவளும், அவள் தாயாரும் துப்பறியும் நாயுடுவினிடம் சென்றிருந்தார்களாம். என்ன ஆச்சரியம்! அதே நாயுடுவினிடம், கொலைக்குக் காரணமாயிருந்த வெள்ளைக்காரர்களுக்கு வேண்டியவர்களாம்—சில வெள்ளைக்காரர்கள்—அவரிடம் வந்து, தமக்குத் துப்புத் துலக்கி, வழக்கில் ஜெயத்தைக் கொடுக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டிருந்தார்களாம்.

மகா கெட்டிக்காரியான உஷாதேவி, தான் வந்துள்ள காரியத்தின் சகல விவரங்களையும் எழுதி, நாயுடுவினிடம் கொடுத்தாளாம். நாயுடு மிகவும் சந்தோஷத்துடன், இவர்களைத் தனியாகப் பார்த்துப் பேசி, தன்னாலாகிய வரையில் உழைத்து, டாக்டரின் பழியைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறாராம். அதை நம்மிடம் தெரிவித்து, நம்மைத் தேற்றி விட்டுச் செல்வதற்காக வந்தாளாம். என்ன அருமையான குணசாலியப்பா அவள்! உங்களுடன் பிறந்த சகோதரிகளுக்குத்தான் நிர்ப்பந்தம்; இவளாவது பாடுபட்டுக் காப்பாற்ற வந்திருப்பதும், ஒரு பாக்யந்தான். நீ அண்ணா சொல்லியுள்ளபடி சகலமும் செய்து நடத்து!… என்ன யோசிக்கிறாய்?…

தாமோ:- ஒன்றுமில்லையம்மா! அண்ணா அத்தனை பெரிய ஸ்தாபனங்களைத் தனது சொந்த உழைப்பின் வருவாயினாலேயே நடத்தி வருகிறார். இப்போதோ, வருவாய்க்கு வழியில்லை. நமது பணத்தையே செலவிட்டு நடத்த, உத்தரவு தர வேண்டும். அதைக் கேட்பதற்குத்தான் வந்தேன். என்னுடைய மூளை கெட்டதனத்தின் அலங்கோலமே, அண்ணாவுக்கு இந்தக் கதியாகி விட்டது எனபதை நன்றாக உணர்ந்து கொண்டேன். அம்மா! அண்ணா சாதாரண மனிதரல்ல. அவர் அவதார புருஷர் என்றால் தகும். எப்போது அவருடைய பழி நீங்கி, நல்ல காலம் பிறக்குமோ என்று ஏங்குகிறேன். இப்போது, மருந்துகள் வாங்குவதற்கும், உணவுப் பொருள்கள் வாங்கவும் 5 ஆயிரம் ரூபாய் வேணும். கொடம்மா!" என்றான்.

மறு பேச்சின்றி, கமலவேணி செக்கு எழுதிக் கொடுத்ததும், அதை எடுத்துக் கொண்டு சென்றான். அவனுள்ளத்தில் ஊற்றுப் போல் சுரக்கும் புதிய உணர்ச்சியை, அப்போதுதான் அவன் உணர்ந்து பூரித்தான். எனினும், அண்ணனின் நினைவு அலை மோதியது!