சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 22

22

ம்மா! நீங்கள் இப்படியே சதா கண்ணீரும், கம்பலையுமாய்ப் படுத்திருந்தால், சின்ன அண்ணனுக்கு அது மிகவும் விசனமாக இருக்கிறது. அவர் தனது பழைய நிலைமை மாறி, முற்றிலும் புனர்ஜென்மம் எடுத்துப் பெரிய அண்ணனைப் போல், நல்ல முறையில் வரும் நோக்கத்துடன் இருக்கையில், உங்கள் பரிதாபம் தாங்காது, உடல் மெலிந்து நோயாளி போலாகி விட்டார். அதை நீங்கள் பார்க்க வேண்டாமா? அம்மா! எழுந்து உட்காருங்கள்” என்று உஷாதேவி மிகவும் சாந்தத்துடனும், கனிந்த அன்புடனும் கூறிக் கமலவேணியம்மாளைத் தூக்கி, உட்கார வைத்துத் தானே தாங்கிக் கொண்டாள்.

கமலவேணியம்மாளுக்கு, உஷாவினிடம் உண்டாகியுள்ள அளப்பரிய வாத்ஸல்யத்தின் தன்மை கூறத் தரமில்லை. உஷாவைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, “செல்வீ ! பூகம்பம் வருகிறது… அதில் ‘எத்தனையோ கட்டிடங்கள் பூமியில் மறைந்து போவதும், பூமியில் புதைந்திருந்த கட்டடம் மேல் நோக்கி எழும்புவதும் வியப்பிலும் வியப்பு!’ என்று கூறக் கேட்கிறோமேயன்றி… நாம் கண்ணால் காணவில்லை. அந்த விசித்திரத்தை விடப் பன்மடங்கு விசித்திரமாக உள்ளது உன்னுடைய மாறுதலும், தாமோதரனுடைய மாறுதலும். கண்மணீ! உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம், குளிர்ந்த சோலையைப் போன்று குளுகுளுவென்றிருந்த உன்னுடைய உள்ளத்தில் மகாபாவியாகிய நான்…”

“அம்மா! நிறுத்துங்களம்மா! சோலைவனமாவது? பாலைவனமாவது? இம்மாதிரி இனி பேச வேண்டாம், தாயே! என்னுடைய நல்ல காலத்தின் புண்ணிய வசத்தினால், அவிந்து போகவிருந்த என் கண்கள் ப்ரகாசம் பெற்றுப் புனிதமாகியது கண்டு நான் பூரிக்கின்றேன். அத்தகைய சன்மார்க்கத்தைக் காட்டிய உங்களையா நான் நொந்து கொள்வேன்? எதற்காக நீங்கள் இம்மாதிரி நினைக்க வேண்டும்? தாயை மகனும், தங்கையை அண்ணனும் மணக்க நாம் என்ன ம்ருக ஜாதியா? அம்மா! இந்த மாதிரி எண்ணத்தையே நீங்கள் இனி விட்டுவிட வேண்டும். நான் இன்று முக்யமான ஒரு விஷயத்தையே கூற வந்திருக்கிறேன். அதாவது: என் படாடோபத்திற்கெல்லாம் ஆஸ்பதமாயிருந்த ஆடையாபரணங்களை எல்லாம் ஒருமுறை எடுத்துப் பார்த்தேன்!…

தாயே ! என்னையே நான் வெறுத்துக் கொண்டு, உண்மையில் கண்ணீரே விட்டேன். எத்தனையோ கோடிக் கணக்கான மக்கள் அன்றாடம் கஞ்சிக்கில்லாமல் பஞ்சாய்ப் பறக்கும் நிலைமையை அடியோடு மறந்து, எனது நாற்றச் சரீரத்தை அழகு படுத்தவும், அதைக் கண்டு பிறர் மனம் சலிக்கவுமான பாதகத்தையல்லவா செய்தோம்!.. என்று மனது துடித்தது…

உடனே அவைகளை மானங்கெட்ட தாசி வகுப்பில் உள்ள சிலருக்கு விற்றுப் பணமாக்கியதில், 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதை உங்கள் மூலமாக அண்ணாவின் அனாதை நிலயத்திற்குக் கொடுத்து விட்டு, உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அதோடு பெரிய அண்ணனைச் சிறையில் சென்று அம்மாவும், நானும் பார்க்கப் போகிறோம்—அதற்காக உத்திரவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை நீங்களும் சின்ன அண்ணனும் கூட வருவீர்களோ என்று தெரிந்து கொண்டு போகத்தான் வந்தேன். வீணாகக் கவலைப்பட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதில் பலனேது? சின்ன அண்ணா எங்கேம்மா?”…

என்று சகல விஷயத்தையும் தானே முடுக்கி விட்ட மிஷின் போல் சொல்வதைக் கேட்டு, கமலவேணியம்மாள் தம்பித்துத் திகைத்துப் போய், பதிலே பேசத் தெரியாமல் ப்ரமித்தாள். அதிக துக்கம் வந்தாலும், அதிக சந்தோஷம் வந்தாலும், சிலருக்கு ஒரே மவுன நிலைமையில், வாய் அடைத்து விடுவது சர்வ சகஜம் ! சிலருக்கு ஒரேயடியாய்ப் பொருமித் தள்ளி விடும்படி ஆவேசம் உண்டாகும்! சிலர் தீரமாய் யோசித்து நிதானித்து பதில் பேசுவார்கள்! உலகம் பலவிதமல்லவா?

அதே போல், கமலவேணியம்மாளுக்கு நிலை தெரியாத மவுனமும், ஆனால், ஒரு வித உணர்ச்சியின் வேகமும் உண்டாகி, பரம சந்தோஷத்தையளித்தது. உஷாவை மீண்டும் சேர்த்துக் கட்டித் தழுவி முத்தமிட்டாள்… “கண்மணி! நீ என் வயிற்றிலேயே பிறந்திருக்கும் பாக்யத்தை நான் செய்யவில்லையே என்று வருந்துகிறேன். உன் சகோதரிகளின் விஷயம் தெரியுமல்லவா?…” என்ற போது, கண்ணீர் முட்டி விட்டது. “அம்மா! சகலமும் எனக்குத் தெரியும்; எப்படி என்று கேட்பீர்களோ? சந்திராவின் புருஷன் அகாரணமாய், அனாவசியமாய், என்னைத் தாறுமாறாகத் திட்டியும், இல்லாத பொல்லாத வசை பாணங்களைத் தொடுத்தும், தனக்குத் தோன்றியபடி எல்லாம் கடிதம் எழுதியிருக்கிறார்.” என்றாள்.

கமல:-என்ன ! என்ன! உனக்கா கடிதம் எழுதியிருக்கிறான்? உனக்கும், அவனுக்கும் என்ன சம்மந்தம்?

உஷா:--அம்மா ! திட்டுவதற்கும் வீணாக தூஷிப்பதற்குமே, நாக்கைத் தீட்டிக்கொண்டு காத்திருப்பவர்களுக்கு காரணமும் சம்மந்தமும் வேணுமா?… தம் வாய்த் தினவைக் கையால் எழுதித் தீர்த்துக் கொண்டு விட்டால், அவர்களின் ஆத்திரம் அடங்கி விடுகிறது போலும். இதனால் எனக்கென்னம்மா குறைவு? கரை காணாத சமுத்திரத்தில், புனித கங்கை, யமுனை போன்ற உயர்ந்த நதிகளின் ப்ரவாகமும் வந்து சேருகிறது. சாக்கடையும் வந்து சேருகிறது. அதனால் சமுத்திரத்திற்கு எங்காவது இழிவு உண்டாகுமா? அல்லது அதை, இந்த அல்ப நீர்கள் கலக்கிப் பாழாக்கி விட முடியுமா? அது போல், கடலின் பரந்த வெளியில் எது வேணுமாயின் வந்து குவிவது போல், நமது அப்பழுக்கற்ற விசால நிலைமையில் எதுவாவது வந்து விட்டுப் போகட்டுமே!… நமக்கென்னம்மா குறைவு?…”

கமல:-கண்மணீ! உனது அதிக உண்மையானதும், ஆழமானதுமான வார்த்தையைக் கேட்டு, நான் எனது அபாரமான துக்க நிலையிலும் பூரிக்கின்றேன்… தான் செய்த குற்றத்தைத் தானே உணரச் செய்வதற்கு ஆயுதம் பொறுமைதான்… என்று பெரிய அண்ணா அடிக்கடி சொல்வான். அந்த அடிப்படை ஞானத்தையே நீயும் கைப்பற்றியிருக்கிறாய். இந்த விஷயங்களில் இன்று இத்தகைய அக்ரம மார்க்கத்தில் சென்றாலும், பிறகொரு நாள் தெரியாமலா போகும்? என்ன காரணத்திற்காக உன்னைத் திட்டியிருக்கிறான்?

உஷா:- தாயே ! அதைப் பற்றி நீங்கள் ஏன் இப்படி மனத்தை அலட்டிக் கொள்ள வேணும்? என்னால்தான், இந்த குடும்பத்திற்கு இத்தகைய விபத்து வந்ததாம். நான் இன்னும் சாகாமலிருப்பது பொறுக்கவில்லையாம்… சரி! சரி! அது கிடக்கட்டும்! நான் கேட்டதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் ?… பெரிய அண்ணாவைப் பார்க்க நீங்கள் வருகிறீர்களா? எனக்கு நேரமாகிறது… சின்னண்ணாவிடம், நீங்கள் இந்த 25 ஆயிரம் ரூபாயையும், அனாதை நிலயத்திற்காகக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறியவாறு நோட்டுகளாக உள்ள ஒரு கத்தையை, கமலவேணியின் கையில் கொடுக்கும் போது, தாமோதரன் அங்கு வந்து, “அம்மா! ஒரு நல்ல சமாச்சாரத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்… அட!… உஷாவா? என்னம்மா? சவுக்யமா? எங்கே உன்னைக் காணவே இல்லையே? ஒரு வேளை ஊருக்குப் போயிருக்கிறாயோ என்று எண்ணினேன். அம்மா சவுக்யந்தானே?… என்று களங்கமற்ற நிலைமையில் மிகவும் அன்புடன் கேட்டான்.

உஷா:- உட்காருங்கள் அண்ணா! ஊருக்குப் போனால், சொல்லிக் கொள்ளாமல் போவேனா? ஏதோ கொஞ்சம் வேலையிருந்தது. அதனால் வர முடியவில்லை… என்ன நல்ல சமாச்சாரம்?… அதைச் செல்லுங்களண்ணா!…

கமல:- தாமூ! வேலையாயிருந்ததன் பலன், இதோ உருவாகி இருக்கிறது! இதை உன்னிடம் கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தாள். நீயே வந்து விட்டாய்… இந்தாம்மா, உஷா! நீயே உன் அண்ணனிடம் கொடுத்து விடு—என்று 25 ஆயிரம் ரூபாயுள்ள பர்ஸை எடுத்துக் கொடுத்தாள்.

உஷா:- (அதைத் தடுத்து) ‘அம்மா ! இதென்ன விளையாட்டு? அண்ணனிடம் நீங்கள்தான் கொடுத்து ஆசீர்வதியுங்கள். நீங்கள் வேறு நான் வேறா? இனியுமா இந்தப் பிரிவினை வார்த்தைகள்?… அண்ணா ! வாங்கிக் கொண்டு, ஏதோ சந்தோஷ சமாசாரம் என்றீர்களே அதைச் சொல்லுங்கள்’—என்று ஆவலே வடிவாய்க் கேட்டாள்.

கமல:- தாமூ! பெரிய அண்ணனின் ஸ்தாபனங்களாகிய அனாதை நிலயமும், தர்ம வைத்யசாலையும் நன்றாக நடப்பதற்காக, உஷா தன் நகைகள், சகலத்தையும் விற்றுப் பணமாக்கி, இதோ, 25 ஆயிரம் ரூபாயாகக் கொடுத்திருக்கிறாள்! இம்மாதிரியொரு த்யாகபுத்தியுடைய சகோதரியை என்னாயுளிலேயே நான் கண்டது இல்லை! உங்கள் பிதாவின் மிகவும் கீழ்த்தரமான போக்கிற்கு, அந்த ஆபாஸ மனிதனின் வயிற்றில் இத்தகைய பரிசுத்தாத்மாக்களாயும், த்யாகச் சுடராயுமுள்ள அண்ணனும் தங்கையும் எப்படித்தான் பிறந்தீர்களோ!…என்று நான் வியக்கிறேன். உங்கள் லட்சியமும், ஈடேறி வெற்றி பெற வேண்டும்… தாமூ! என்ன விஷயம், நீ சொல்ல வந்தது; அதைச் சொல்லு.

தாமு :- இது வரையில், அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்டதற்கு, அண்ணா ஒரே பிடிவாதமாய்க் கண்டிப்பாய்த் தன்னை யாரும் பார்க்க வேண்டாம்; உத்திரவு கொடுக்க வேண்டாம் என்று ஜெயில் அதிகாரிக்குத் தெரிவித்து விட்டார். நானும் மாதாமாதம் அவரைப் பார்க்க வேண்டுமென்று போடுகிற விண்ணப்பத்தை நிறுத்தாமல் போட்டுக் கொண்டே வந்தேன். இதோ கடிதம் ஜெயிலரிடமிருந்து வந்திருக்கிறது: அண்ணா நம்மைப் பார்க்க இசைந்திருக்கிறாராம். வரும் போது, உஷாவையும், லேடி டாக்டர் துளஸிபாயையும் அழைத்து வரும்படியாக. அண்ணாவே எழுதச் சொன்னார்களாம். இதை விட, நல்ல சமாசாரம் நமக்கு வேறென்ன இருக்கிறதம்மா?…

என்று முடிப்பதற்குள், உஷா சிறு குழந்தையைப் போல் ஒரு துள்ளு துள்ளி குதித்து, “அடடா ! பழம் நழவிப் பாலில் விழந்தது போல் இருக்கிறதம்மா! என்றைக்குப் போகலாம்? இன்றே புறப்படலாமா?” என்று வெகு ஆர்வத்துடன் கேட்டாள்.

கமலவேணியம்மாளுக்கு மட்டும் தன் மகனைப் பார்க்கப் போகிற சந்தோஷத்தை விட, அவனை ஒரு கைதியாய் சிறையில் எப்படிப் போய்ப் பார்த்துச் சகிப்பது? என்கிற மகத்தான துக்கந்தான் பீறிக் கொண்டு வந்து விட்டதால், குலுங்கக் குலுங்க அழுது விட்டாள். கோர்ட்டில் தீர்ப்புச் சொல்கிற அன்று கூட துக்கம் தாங்காமல், வீட்டிலேயே புலம்பிக் கொண்டு கிடந்து விட்டாள். மகனைப் பார்த்து, எத்தனையோ யுகங்களாகி விட்டது போல், வேதனையும், சங்கடமும் உண்டாகி வதைக்கிறது. பார்க்கவும் ஆசை அடித்துக் கொள்கிறது. மகத்தான பதவியில் புகழ்மாலை சூடிப் பார்க்க வேண்டிய மகனைச் சிறைச்சாலைக் கம்பிகளுக்குள் கொலைகாரக் கைதியாய்ப் பார்ப்பதற்கு மனது சகிக்காமல் துடிப்பதால், போக வேண்டாம் என்றும் தோன்றுகிறது.

இந்தக் குழப்பத்தில் தவிக்கும் தாயாரை, தாமோதரன் தேற்றி, சமாதானம் செய்து ஒருவாறு அமர்த்தினான். மறு நாள், அதிகாலையில், எல்லோரும் கிளம்பிக் காரிலேயே போவது என்கிற தீர்மானம் முடிவாயிற்று. உஷாவும் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். இதே மனிதன்… இதே உஷா…இதே கண்கள்… இதே மனதுதான்…

ஆனால் அன்று இருந்த விசித்திரப் போக்கென்ன! இன்று பரிசுத்தமாய் ஸ்புடம் வைத்தது போன்று, அப்பழுக்கற்ற தூய சிந்தனையின் பரிமளமென்ன! பாசி பிடித்த இடத்தைச் சுண்ணாம்பு போட்டுத் தேய்த்துச் சுத்தம் செய்தால், எப்படி துலாம்பரமாய் இருக்குமோ, அது போல் தனது இதயம் பரிசுத்தமாய், தன்னாலேயே உணர முடியாத புதிய தேஜஸுடன் ப்ரகாசிப்பது போன்ற உணர்ச்சி உண்டாகியது. அதைக் கண்டு, தனக்குள் தானே வியுந்து கொண்டான். பிறந்த நாள் முதல் இத்தகைய பரிசுத்தத்திலேயே லயித்து, ஆனந்தமாய் பக்தியும், கருணையும் இதய தடாகத்தில் தேக்கிக் கொண்டு, பரம த்ருப்தியுடன் தொண்டு செய்து வந்த மகா மேதையும், உத்தமனுமாகிய அண்ணனின் அன்பையறியாது ஆதியில் மோசம் போனோமே! என்ற துயரமே உண்டாகி வருத்தியது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".