சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 24

24

“ஸார்! என் மதருக்கு ஏதாவது ஆபத்தென்று ஆள் வந்திருக்கிறதா? அல்லது தந்தி வந்திருக்கிறதா? ஏனென்றால், என் தாயார் இதய பலவீனப்பட்டவள் ; இந்த அதிர்ச்சியினால், எப்போது அவள் உயிர் போய் விடுமோ? என்ன விஷயம் எப்போது வந்து விடுமோ என்று பயந்து, நான் இரவு பகல் பகவானை வேண்டி, என் தாயாருக்கு அத்தகைய விபத்து ஏதும் வாராது காப்பாற்றும்படி, ப்ரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்; அதனால்தான் அப்படி பயந்து கேட்கிறேன்” என்று பதறியவாறு கேட்டான்.

ஜெயிலர் வெகு சாந்தத்துடன், “ஸார்! அப்படி எல்லாம் ஒன்றும் பயப்பட வேண்டாம்; உங்கள் மனிதர் யாரும் வரவில்லை, நான் உங்களை ரூலுக்கு விரோதமாய் ஒரு முக்ய காரியமாய் அழைத்தேன். கைதியொருவனுக்கு பலமான அடிபட்டு, ஆபத்தான நிலைமையிலிருக்கிறான். ஜெயில் டாக்டர் வெளியில் சென்றிருக்கிறார். அவர் வருவதற்குள் என்ன ஆகி விடுமோ? என்று பயமாயிருப்பதாலும், வேறு டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டுவதை விட, நீங்கள்தான் அன்றே இம்மாதிரி தொழில் செய்வதாகக் கேட்டுக் கொண்டதாலும், அவசரம், ஆபத்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து விட்டதாலும், உங்களைக் கூப்பிட்டேன். ஆஸ்பத்திரிக்கு வாருங்கள். அந்தக் கைதியைக் கவனிக்க வேண்டும்.”

என்று கூறியதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு ஆனந்தத்தினால், முகம் பூரித்து ஒரு குதி குதிக்கச் செய்தது. தன்னை விடுதலை செய்திருந்தால் கூட, இத்தனை சந்தோஷம் உண்டாகியிருக்காது. தனது இதயத்தில் கொந்தளிக்கும் ஸேவையின் துடிதுடிப்பையும், ஆனந்தத்தையும் அப்படியே எடுத்துக் காட்டுவது போல், “ஸார்! இதோ காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறிக் கிளம்பினான்.

ஆஸ்பத்திரியை அடைந்ததும், அந்த அடிபட்ட கொலைகாரக் கைதி, ப்ரக்ஞையே அற்றுக் கிடப்பதையும், கட்டை வெட்டும் கோடாலியால், காலில் வெட்டுப்பட்டு விட்டதால், ரத்தம் ப்ரவாகம் போல் பெருக்கெடுத்துப் போய் விடவே, அவனுக்கு மயக்கம் போட்டு விட்டதையும் உணர்ந்த ஸ்ரீதரன் உடனே ரணத்திற்கு வேண்டிய மருந்துகளைப் போட்டுக் கட்டியவாறு, பேஷண்டை நன்றாக உற்றுக் கவனித்தான். மூச்சு இருக்கிறதா? இல்லையா?… என்கிற ஒருவித சந்தேகமே உண்டாகி விட்டது. பல உயர்ந்த மருந்துகளை ஊசி குத்தியவாறு, நோயாளியை வெகு கூர்மையாய், ஏதோ அதிர்ச்சியுடன் ஆழ்ந்து கவனித்தான்… ஊசி குத்துவதற்காகக் கையை எடுத்துப் பார்த்த போது, தீயை மிதித்தவன் போல், கூறத் தரமற்ற அபாரமான அதிர்ச்சியுடன், அந்தக் கையை அப்படியே பார்த்துக் கதி கலங்கி விட்டான்… கையில் ராஜரத்னம் என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததோடு, ஒரு பக்கம் சிறிய படகும், ஒரு பக்கம் தாமரைப் புஷ்பம் போன்ற கோலமும் பச்சை குத்தியிருந்ததைக் கண்டான்.

அவ்வளவுதான்!… வானமே இடிந்து, இவன் தலையில் விழுந்து விட்டது போன்றும், உலகமே தட்டாமாலை ஆடுவது போல், சுற்றுவது போன்றும் ஒரு உணர்ச்சி வேகம் அவனைச் சுற்றிக் கொண்டு வதைத்துத் திக்குமுக்காடச் செய்து விட்டதால், அவனே மயக்கம் போட்டு விழுந்து விடுவான் போலாகி விட்டான்! தனக்குள் “ஹா !… சோதனையே! இத்தகைய வேடிக்கையும், நீ பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாயா? இவர் என் பிதாவல்லவா! என் சிறிய பிராயத்தில், இதே பச்சைக் குத்து வடுவையும், கன்னத்திலுள்ள ஆபரேஷன் காயத்தையும் பார்த்தது இன்னும் மறக்கவில்லையே! இவரா கொலைகாரக் கைதி?… இவருமா இங்கிருக்க வேண்டும்? ஐயையோ ! இந்த ரகஸியத்தை வெளியாரறியாதவாறு எப்படி மறைப்பது ?”… என்றெல்லாம் தனக்குள் பல விதம் எண்ணியவாறு, ஊசி குத்தாமல், திக்ப்ரமை பிடித்தது போலிருப்பதைக் கண்ட ஜெயிலருக்கு ஒன்றும் புரியாத சந்தேகம் உண்டாகி விட்டது. எதற்காக, இம்மாதிரி அதிர்ச்சியினால் தாக்கப்பட்டவன் போலிருக்கிறான்? ஒரு வேளை, உயிர் போய் விட்டதா?… என்ற சந்தேகத்துடன்… "ஸார்! என்ன யோசிக்கிறீர்கள்? … கைதியின் உயிர் போய் விட்டதா?… என்ன? சீக்கிரம் சொல்லுங்கள்” என்றார்.

பக்கம் 171

அப்போதுதான் விழித்துக் கொண்ட டாக்டர், இந்த பரம ரகஸியத்தை வெளியிடவே கூடாது; எப்படியும் தன்னைத் தன் பிதா அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், தன்னை வெகு இளமையில் பார்த்தது. அதோடு இப்போது தாடியும், மீசையும் வளர்ந்திருப்பதால், முதலே தெரிந்து கொள்ள முடியாது. ஆகையால், இந்த ரகஸியத்தை—மர்மத்தை—மறைத்தே பேசி, நாம் இவ்விடத்தை விட்டு எப்படியாவது, வேறு ஜெயிலுக்கு மாற்றிக் கொண்டு போய் விட வேணும். என்ற உறுதி தோன்றியது. அதனால், தன்னைத் தான் மெல்ல சமாளித்துக் கொண்டு, “ஸார்! உயிர் போகவில்லை. ஆனால், போய் விடுமோ என்கிற சந்தேகமாயிருக்கிறது. உடம்பிலிருந்து, ரத்தம் அதிகமாய்ப் போய் விட்டதால், மருந்துகள் வேலை செய்வது கஷ்டம் என்று தோன்றுவதால், என் சரீரத்திலிருந்து முதலில் வேண்டிய அளவு ரத்தத்தை ஏற்றுவதற்காகவே யோசனை செய்கிறேன். உத்தரவு கொடுத்தால், ஒரு கைதிக்கு ஒரு கைதி இந்த முறையில் உதவி செய்தால், கட்டாயம் பிழைத்துக் கொள்ளலாம். நான் திட சரீரமுடையவன் ; ஆகையால், என்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அதிகாரியும் உடனே உத்திரவு கொடுத்து விட்டார்.

டாக்டருடைய உள்ளத்தில் செய்யும் வேதனையும், நடக்கும் போராட்டமும் சொல்லி முடியாது. தன் பிதாவைப் பற்றி, அவன் எந்த விதமாகவும் நினைக்கவுமில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. அந்த காலத்தில், கொலைக் குற்றத்திற்காக அந்தமானுக்கு அனுப்பிய கைதியைப் பற்றி, யார்தான் என்ன எதிர் பார்க்க முடியும்? இத்தகைய சோதனையாய், இதே சிறையில் கைதியாகவே கண்டு துடிக்கும்படியான விதியமைந்தாலும், தன்னருமைத் தாயாரின் ஸௌமாங்கல்ய வளர்ச்சிக்காகவும், அவளுடைய மனம் கலங்காமலிருப்பதற்காகவும், தன் பிதா உயிர் பெற்றெழுந்தால் போதும். இம்மாதிரி இங்கிருக்கிறார் என்பதை அம்மா அறிந்தால் கூட, சந்தோஷப்படுவாளேயன்றி, துக்கப்படமாட்டாள். ஆனால், இந்த சமயம் நாம் எதையும் வெளியிடக் கூடாது. எல்லாவற்றையும், ரகஸியமாகவே நடத்த வேணும்—என்கிற திடமான உறுதியுடன், ரத்தத்தை ஏற்றியதோடு, மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சையை, வெகு கனிகரத்துடன் அழகாகச் செய்வதைப் பார்க்க, ஜெயிலதிகாரிக்கு இவனுடைய டாக்டர் தொழிலில் உள்ள திறமையையும், சுருசுருப்பாய் செய்யும் அழகையும் பார்க்கப் பார்க்க, இவனைப் பற்றி வந்துள்ள கடிதங்கள் பொய்யே இல்லை. உண்மையான மதிப்புரைகள்தான் என்றும் தோன்றி, ஊர்ஜிதப்படுத்தியது.. பாவம். விதியின் கொடுமையினால், இப்படியொரு படாப்பழி வந்து விட்டது. பொறுமை என்றால், இம்மாதிரியல்லவா இருக்க வேணும் என்று தனக்குள் எண்ணியபடியே, கவனித்து வந்தார்.

டாக்டர்:- ஸார்! இதோ இந்த மருந்தைத் தருவித்துக் கொடுத்தால், ஊசி குத்துகிறேன். அது செய்தால்தான், இதயம் சரியாக வேலை செய்யும். அதோடு மருந்துகள் உள்ளே வேலை செய்யும் சக்தியை உண்டாக்கும், இல்லா விட்டால், உபயோகமில்லாது போய் விடும். இது மிகவும் விலை உயர்ந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு கொலைகாரக் கைதிக்கு சர்க்காரில் இத்தனை பணம் செலவிடுவதற்கு யோசிப்பது சகஜந்தான்..ஸார்! கடவுள் எனக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் எத்தனையோ ஏழைகளுக்காக தர்ம வைத்யசாலை வைத்து நடத்தி வருகிறேன்;. அந்தக் கணக்கோடு இதுவும் சேரட்டும். என் பணத்தில் இந்த மருந்தை தயவு செய்து, உடனே வரவழைத்துத் தாருங்கள். அர்ஜண்டாக அதை ஊசி குத்தினால்தான் சகலமும் பயனளிக்கும். எனக்காக நீங்கள் கருணை காட்ட வேண்டும். நானும் ஒரு கைதிதானே என்று என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காதிருக்கக் கூடாது ஒரு கைதியின் உயிரைக் காப்பதற்கு ஒரு கைதியின் வேண்டுகோளை அங்கீகரிக்க வேண்டும்—என்று மிகவும் அழுத்தமாயும், ஒரு வித உணர்ச்சியுடனும் கூறினான்.

எங்கே தன்னுள்ளத்திற்குள் புதைந்து கிடக்கும் புதிய உணர்ச்சியின் வேகத்தில், மர்மம் வெளியாகி விடுமோ! என்கிற பயத்தினால், இதயம் படபடவென்று அடித்துக் கொள்கின்றது. பரிதாபகரமாய், ஜெயிலர் முகத்தை, மறுபடியும் கெஞ்சுவது போல் பார்த்தான். மறு பேச்சின்றி, ஜெயிலர் அப்போதே அந்த மருந்தை வாங்கி வருவதற்கு வார்டரிடம் உத்திரவிட்டார். ஸ்ரீதரனின் முகத்தை எதனாலோ கூர்ந்து கவனித்த ஜெயிலர், “ஸார்! மிகவும் பரோபகாரி, இளகிய மனதுடையவர், என்றெல்லாம் ஜனங்கள் உங்களைக் கொண்டாடி கணக்கு வழக்கற்ற கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறார்கள். அந்த உண்மையை இன்று ப்ரத்யக்ஷமாகப் பார்க்கிறேன். இருப்பினும், இந்த மனிதன் பெருங் கொலையாளி! மகாபாவி பண்ணிய பாவங்கள் எல்லாம் போதாமல், இந்த சிறைச்சாலையில், இத்தனை சிறுமைப்பட்டுத் தவித்தும், அவனுக்கு புத்தி என்பதே இல்லாமல், இங்கேயும் சதா சண்டையும், சச்சரவும் கலகமும் செய்து கொண்டிருப்பதால், இவனைக் கண்டாலே, இங்குள்ள சகலருக்கும் வெறுப்பு. இவன் சாக மாட்டானா என்று கூட சில கைதிகள் சொல்வதுண்டு. அத்தகைய பாவிக்கு, நீங்கள் இப்படி கருணை காட்டுகிறீர்கள்…” என்று அந்த கைதியைப் பற்றி விமர்சனம் கொடுப்பதைக் கண்ட, ஸ்ரீதரனின் வயிற்றில் தாள மாட்டாத சங்கடத்தைச் செய்து வாட்டுகிறது. பதில் பேசவும் முடியவில்லை; பேசாதிருந்தால் என்ன நினைப்பாரோ என்கிற பயமும் உண்டாகி விட்டது. அத்தனை கலவரப் போராட்டத்தில், மெல்ல சமாளித்துக் கொண்டு… “உம்… இந்த மனிதன் அப்பேர்ப்பட்டவனா! ஆச்சரியமாயிருக்கிறதே. பாவம் செய்வதைக் கண்டு, பயந்து அஞ்சுகிறவர்களுக்கு, அதைப் பற்றி நினைப்பதற்கே பயம் தோன்றும். எங்கே தன்னைத் தெரியாமல், பாவம் செய்து விடுகிறோமோ என்றும் நடுங்குவார்கள். பாவம் என்கிற ஒரு பயங்கரம் உலகில் இருக்கின்றது என்பதையே மறந்து, முடிவில் பாவத்திற்கே தான் அடிமையாகி விடுபவர்களுக்கு, அளவு வைத்துக் கூற முடியுமா ஸார்! நள மகாராஜனை சனீச்வரன் பிடிக்கக் காத்திருந்தானாம். ஒரு கடுகளவு பாவம் கூட, அந்த நளனிடம் காணப்படவில்லையாம். ஒரு தினம் சாப்பிட்டு விட்டு, காலை அலம்பும் போது, எங்கேயோ ஒரு சிறிய இடத்தில் ஜலம் படாது போய் விட்டதை நளன் கவனிக்கவில்லையாம். இதையே ஒரு பாவம் செய்ததாக வைத்துக் கொண்டு, சனீச்வரன் நளனைப் பிடித்துக் கொண்டதாக நாம் படிக்கிறோம். இக்காலத்திலோ, சாப்பிட்ட கையைக் கூட சரியானபடி அலம்புவதில்லை. அனேகர் சாப்பிட்ட தட்டிலேயே ஜலத்தைத் தெளித்து போன பத்தும், போகாத எச்சிலுமாய் அலம்பி விடுகிறார்கள். இதில் பாபமேது, புண்ணியமேது ஸார்?” என்றான்.

ஜெயி:- உம்மைப் பார்த்தால் இப்போது ப்ரஸங்கியோ! கதாகாலக்ஷேப உபன்யாஸகரோ என்று தோன்றுகிறது. நீங்கள் இத்தனை தொல்லைகளுக்கும் மத்தியில், எப்படி இத்தகைய விஷயங்களில் மனத்தைச் செலுத்திப் படிக்க முடிந்தது. இத்தனை வயதாகிக் கூட, என்னால் உத்யோக உழைப்பைத் தவிர, வேறெந்த வேலையையும் கவனிக்கவே நேரமில்லை. அதில் நோக்கமும் விழவில்லையே ஸார்!

டாக்டர்:- ஒரு தாயானவள், குழந்தையின் பசியறிந்து வேளாவேளைக்கு ஆகாரத்தை ஊட்டி விடுவது தன் கடமையாகக் கொண்டு, முதல் காரியமாய் அதைச் செய்து விடுகிறாள். அதோடு தாயின் கடமை முடிந்து விட்டதாக, சில அறிவிலித் தாய்மார்கள் நினைத்து விடுகின்றார்கள். ஆனால், அவளுடைய கடமை அதுவல்ல, ஆகாரத்தை ஊட்டி தேகத்தை வளர்ப்பது போல், அறிவுப் பாலூட்டி, ஆத்ம ரக்ஷணத்திற்கான அஸ்திவாரத்தைப் போட்டு வளர்ப்பதும், பெத்த தாயின் பொறுப்பாகும். இதே போலத்தான், நாம் உத்யோகம் செய்யும் வரையில் அந்த முறையிலேயே, கவனத்தை மாடு போல் உழைத்து விட்டால், ஆகாரத்தை ஊட்டி, சரீரத்தை வளர்த்த தாயின் பொறுப்பு போலாகி விடுகிறது. அறிவுப் பாலை ஊட்டும் தாயைப் போல், நாம் நமக்குத் தாயாகி ஆத்ம ரக்ஷணத்திற்கான வழியையும் செய்து கொள்ள வேண்டும்.

ஸார். ஏற்கெனவே என்னை ப்ரஸங்கி. உபன்யாஸி என்று சொல்லி விட்டீர்கள். அதையே நான் நிரூபிப்பது போல், தொணதொணவென்று பேசுகிறேன். நமது வாழ்க்கைப் பாதையை, எந்த விதத்தில் பகவான் வழி வகுத்துக் காட்டுகிறானோ, அந்த மார்க்கத்தில் நடத்திய படியே மூன்று தத்துவங்களை நாம் மறக்காமல் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது நினைத்துப் பார்க்க வேண்டும் ஸார்…

ஜெயி:- என்ன! மூன்று தத்துவங்களா! அதென்ன ஸார்! சொல்வதுதான் சொல்கிறீர்களே, மருந்து வரும் வரையில் விரிவாகச் சொல்லி விடுங்கள், கேட்கலாம்.

டாக்டர்:- ஸார்! நான் வைத்யத் தொழில் சேவையுடன் இவைகளையும் சேர்த்தேதான் செய்து வருகிறேன். சமயம் வாய்க்கும் போது, எதையும் விடக் கூடாது. மூன்று தத்துவங்கள் எவை என்றால், நாம் என்று பூமியில் பிறந்தோமோ, இறப்பது நிச்சயம். அதை எத்தகைய மகான்களாலும், தடுக்க முடியாது. இறந்து விட்ட பின், பிறப்பு என்பதை இல்லாமல், நாம் ஜீவித்திருக்கும் போதே, அதற்கான முறையில் வாழ்க்கையை நடத்த வேண்டும். இது ஒன்று.

இரண்டாவது. பாபம் என்கிற ஒரு பயங்கரம், மனிதனைச் சுத்தியலைகிறது. அதைத் தெரிந்து செய்தாலும் குற்றம்,. தெரியாமல் செய்தாலும் குற்றம் என்பதை முதலில் உணர வேண்டும்…

ஜெயி:- என்ன! தெரிந்து செய்தால்தான் குற்றம். தெரியாமல் செய்தால், எப்படி ஸார் குற்றமாகும்? நான் தெரியாமல் செய்து விட்டேன் என்று ஒப்புக் கொண்டால், அதற்கு தண்டனை கூட குறைக்கப் படுகிறதே…

டாக்டர்:-ஸார்! உங்கள் வார்த்தையையே வைத்துக் கொண்டு பாருங்கள். தெரியாது செய்த குற்றத்திற்கும் தண்டனை உண்டு என்றும், குறைக்கப்படுகிறதென்றும் சொல்கிறீர்கள். அப்போது என்ன அர்த்தம். தெரியாது முள்ளின் மேல் காலை வைத்தாலும், குத்துகிறது. தெரிந்து வைத்தாலும் குத்துகிறது. பாவமென்றே நினைக்காமல், புண்ணியமாகவே எண்ணிச் செய்யும் சில காரியத்திற்கும் தண்டனை உண்டு என்று பெரியவர்கள் உதாரணத்துடன் கூறுகிறார்கள், அதாவது ஒரு ராஜா மகா தர்மிஷ்டன். பாவம் என்பதையே அவன் அறியாதவன். பரம பக்த சிகாமணி. தெய்வ வழிபாடுகளைத் தனது ஜீவநாடியாகச் செய்து வருபவன். அத்தகைய அரசன் ஸம்ஸ்க்ருத பண்டிதன். மற்ற எந்த பாஷையையும் வெறுத்து, மட்டமாக நினைப்பவன். அவன் சமூகத்திற்கு ஒரு ப்ராம்மணன் கவி பாடுவதற்காக வந்து, தமிழ் பாஷையில் பகவானின் மீது கவிகள் பாடினான். அரசன் அதை வெறுத்து, உத்க்ருஷ்டமான ஸம்ஸ்க்ருத பாஷையில் பாடாமல், தமிழில் பாடியதற்காக ப்ராம்மணனைச் சிறையிலிட்டு விட்டானாம். ஸம்ஸ்க்ருத பாஷையைத் தவிர, வேறு எந்த பாஷையில் பாடினாலும் குற்றம் என்று அவன் எண்ணம். காலாந்தரத்தில் அரசன் உயிர் நீத்த போது, அவனை எமபடர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்ல வந்தார்களாம். நான் என் மனமறிய பாபமே செய்ததில்லையே, எனக்கெதற்காக நரக தண்டனை என்று கேட்டு வருந்தினானாம் அரசன்.

நீ பாவம் என்று அறியாமலேயே செய்த பாவத்திற்காக, இந்த தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும். பகவானின் நாமத்தைப் பாடுவதற்குத் தமிழ் பாஷையானால் என்ன! வேறு எந்த பாஷையானால்தான் என்ன? விஷயந்தானே ப்ரதானம்! பகவானின் நாமத்தை நீ கவனியாமல், பாஷையில் விரோதங் கொண்டு, ஒரு ப்ராமணனை தண்டித்தது மகா பாதகத்தில் சேர்ந்ததல்லவா… என்றானாம் எமதர்ம ராஜன். பாவம் என்று நினையாத செய்கைக்கே இப்படியாயின், பாவத்தையே தெரிந்து, அறிந்து மனம், வாக்கு, காயம், மூன்றாலும் செய்யும் பாவிகளுக்கு, எத்தகைய பயங்கரமான கொடிய நரகம் இருக்குமோ! என்று அரசன் நடுநடுங்கினானாம்…

இம்மாதிரியான நீதிக் கதைகளையாவது நாம் கேட்டு அறிந்தால், ஒரு சிறிதாவது பயம் தோன்றும். கொலை, களவு, முதலிய கொடும் பாவத்தையாவது செய்யாமல், தன்னைத் தான் காத்துக் கொள்ளலாமல்லவா?

பகவானின் நாமத்தைத் தவிர, நமக்கு வேறு துணையோ சார்த்தகமோ! கிடையாது. அவன் திருவடிதான் தஞ்சம் என்பதை உணர்ந்து விட்டால், மனிதனை அந்த நாமமே காத்து ரக்ஷிக்கும். இதுதான் மூன்றாவது தத்துவம்” என்று சொல்கிற போது, மருந்துக்குச் சென்ற ஆள் வந்து விட்டான். உடனே ஸ்ரீதரன் வெகு கனிகரத்துடன் அந்த மருந்தை ஊசி குத்தினான்.

ஸ்ரீதரனின் வார்த்தைகளைக் கேட்டு, மனத்திற்குள் ஒரு விதமான ஆச்சரியமும், இத்தகைய மனிதனின் தலையில் இம்மாதிரியொரு விதியமைந்துவிட்ட பரிதாபமும் கூடி வதைத்தது. இதையே பார்த்துக் கொண்டிருக்கையில், “ஸார்! ஒரு வேண்டுகோள்!” என்று ஸ்ரீதரன் மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டான்.

ஜெயி:-பேஷ்! இப்போதுதான் நானும் சந்தோஷப்படுகிறேன். அப்பீல் செய்வதற்காக…

ஸ்ரீத: (கடகடவென்று சிரித்தான்.) ஸார்! நீங்கள் அப்படித்தான் நினைப்பீர்கள் என்று நான் அப்போதே நினைத்தேன். அப்பீல் செய்வது என்பது இந்த ஜென்மத்திலில்லை. நான் இந்த சிறைச் சாலையை, என்னுடைய லக்ஷ்யத் தவச் சாலையாகவே கருதி இதிலேயே இருக்க விரும்புவதால், இதிலுள்ள பாவப் பிண்டங்களாகிய ஆத்மாக்களுக்கு, ஹிதோபதேசம் செய்து, அவர்களுக்கு தெய்வ பக்தியை உண்டாக்கி, ஸத் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும்படி ஒரு ஸேவை செய்ய உத்தேசம். அதனால் நான் பல ஊர்களிலுள்ள சிறைச்சாலைகளிலும் இருக்க ஆசைப்படுகிறேன். தயவு செய்து, என்னை வேறு ஊர் ஜெயிலுக்கு மாற்றி விடும்படி சிபார்சு செய்து உதவினால், அதுவே போதும்.

ஜெயி: - அட ராமா! என்னவோ! ஏதோ என்று எண்ணினேன்! சரி. உமது இஷ்டப்படி அதற்கு ஏற்பாடு செய்கிறேன். உமது தங்கையாமே! உஷாதேவி. அந்தம்மாள் உங்கள் அனாதை நிலயத்தைப் பற்றியும், தர்ம வைத்யசாலையின் விஷயமாகவும் நேரில் சில விஷயங்கள் பேச வேண்டுமாம். அதனால் கட்டாயம் பார்க்க அனுமதி கொடுக்கும்படி எழுதியிருக்கிறார்; உங்கள் சகோதரரும் எழுதியிருக்கிறார். அவர்களுக்கு என்ன பதிலனுப்புவது… என்றார்.

இதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு மிகுந்த குழப்பமும், வருத்தமும் உண்டாகி விட்டது. தன் பிதாவைப் பார்த்தது முதல் எப்படியாவது இந்த ரகஸியச் செய்தியை அம்மாவுக்கு தெரிவித்தால், அம்மா பரம சந்தோஷத்தை அடைவாள். தம்பியும் பூரித்துப் போவான். உயிருடன் இருக்கிறாரோ! இல்லையோ! என்பது கூட தெரியாமலிருக்கும் நிலைமையில் தவிக்கின்றவர்களுக்கு, கைதியாகவாவது உயிருடனிருக்கிறார் என்றால், எத்தனை மகிழ்ச்சி உண்டாகும். அம்மாவின் ஸௌமாங்கல்ய பாக்யத்தைக் கண்டு, அம்மாவின் இதயம் ஆனந்த மயமாய்ப் பொங்குமல்லவா! கைதியாயிருப்பினும், தனது தெய்வமாகையால் தூரவிருந்தாவது தரிசிப்பாளல்லவா! உஷாவுக்கும், அவள் தாயாருக்கும் கூட எத்தனை சந்தோஷமாயிருக்கும் என்று தனக்குள் ப்ரமாதமான யோசனையிலாழ்ந்து, தம்பித்து விட்டதால், பதிலே பேசாமல் மவுனியானான்.

இதைக் கண்ட ஜெயிலர், “ஏன் ஸார் இத்தனை கலக்கம்…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் சற்று தெளிவு பெற்றவனாய், “ஸார்! மன்னிக்க வேணும்.என் தாயார் மிகவும் பலவீனப்பட்டவள். அவள் என் விஷயத்தில் மிகவும் ஷாக்கடித்து நொந்திருக்கும் சமயம், கம்பிகளின் இடுக்கில் என்னைப் பார்ப்பது என்றால், எங்கே அவளுடைய மனோ வேதனையில் இதயமே நின்று விடுமோ என்று பயப்படுகிறேன். ஆனால், என்னைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவலின் துடிதுடிப்பால், இதயம் பாதிக்கப்படுமோ என்றும் தோன்றுகிறது. அதனால்தான் குழம்பித் தவிக்கிறேன்… சரி… தாங்கள் தயவு கூர்ந்து, என்னை வேறு ஊருக்கு மாற்றி விடுவது உண்மையானால், கடைசி தரமாக என் தாயின் விருப்பப்படிக்கு நான் பார்க்க சம்மதப்படுவதாகவே எழுதி விடுங்கள். கம்பிகளுக்குள் மிருகம் போல், நான் என் தாயாருக்கு காட்சி கொடுக்க வேண்டாமென்று நினைத்தேன். கடவுள் சித்தம்; அதுதான் அவருக்கு த்ருப்தி போலும்!” என்று கூறும் போது, அவனையுமறியாமல் கண்ணீர் முட்டி விட்டது.

ஜெயி:- ஸார் என்னாலாகிய உதவி உங்களை வேறு ஊருக்கு மாற்றுவதுடன், உங்கள் தாயார் உங்களைக் கம்பிகளுக்குள் பார்த்துப் பரிதவிக்காமல், பக்கத்திலேயே இருந்து பார்த்துக் களிக்கும்படிக்குச் செய்கிறேன். சரிதானே? —என்ற போது, ஜெயிலரின் முகத்தில் ஒரு புதிய உணர்ச்சி தவழ்ந்து கண்களில் ப்ரகாசித்தது.

இந்த வார்த்தையைக் கேட்ட ஸ்ரீதரன் உள்ளம் பூரித்துப் புளகிதமுற்ற வேகத்தில், தான் ஒரு கைதி, அதிலும் கொலைக் குற்றம் செய்ததாக தண்டனையடைந்த கைதி என்பதையே மறந்து, ஜெயிலரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, தனது சந்தோஷத்தையும், நன்றியறிதலையும் தெரிவித்து வணங்கினான். அதே சமயம், அடிபட்டுள்ள கைதி சிறிது கண்ணைத் திறந்து பார்க்கவும், நாக்கை நொணாசி தாகம் என்று தெரிவிப்பது போலும் செய்வதைக் கண்டு மிக்க சந்தோஷத்தை யடைந்த ஜெயிலர், அந்த கைதிக்கு ஜலம் சிறிது குடிக்க வைத்தார். ஜலம் குடித்த கைதி நன்றாகத் தெளிவு பெறாததால், அப்படியே மறுபடியும் கண்ணை மூடிப் படுத்து விட்டான். “சரி… எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் வருகிறேன் உங்கள் தம்பிக்கும், தங்கைக்கும் இன்றே கடிதம் எழுதி விடுகிறேன்” என்று கூறி விட்டு, பழயபடி காவல் பந்தோபஸ்துடன் ஸ்ரீதரனை ஜெயில் ரூமுக்கு அனுப்பி விட்டுச் சென்றார். ஸ்ரீதரனுக்கு மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத உணர்ச்சி, மனத்தில் கொந்தளித்தது.