6. இருபதாம் நூற்றாண்டு
நக்கீரர்
1. வாழ்வு

‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், டாக்டர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர்-‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர் ஆவர். இவர்தம் அம்மான் அருணாசல நாயகரின் மைந்தர் சுப்பிரமணிய நாயகர், ‘தேனிருந்த சோலை சூழ் தென்விளசை நன்னகர்’ என்று செல்வ வளத்தாற் பாராட்டப் பெற்ற எட்டையபுரத்தினைக் கோநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்துசாமி எட்டப்ப நாயகரின் நண்பராவர். எட்டையபுரத்துக் குறுநில மன்னர் சென்னைக்கு வரும்போதெல்லாம், சுப்பிரமணிய நாயகரைப் பார்த்து அளவளாவிப்போதல் உண்டு. அரசரின் அழைப்பிற் கிணங்கிச் சுப்பிரமணிய நாய்கர் சென்னை விடுத்து எட்டையபுரம் சென்று, ‘எட்டப்ப பிள்ளை’ என்ற புதுப் பெயருடன் அரசரின் உட்படுகருமத் தலைவராய் விளங்கினார். இவர் மணம் செய்திருந்தும் மகப்பேறு கிட்டாத காரணத்தால், அரசர் தூண்டுதலின் பேரில் அரண்மனையில் வளர்ந்து வந்த முத்தம்மாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார்.

பிறப்பு

இவ்விருவரின் மனமொத்த இல்வாழ்வின் பயனாய். கி.பி. 1879-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் ஒர் ஆண் மகவு பிறந்தது. இம்மகவுக்குத் தம் உறவினரும், சைவ சித்தாந்தக் கடலாகவும் விளங்கிய சோமசுந்தர நாயகரின் பெயருடன் ‘சத்தியானந்த’ என்ற அடை மொழியையும் சேர்த்துச் ‘சத்தியானந்த சோமசுந்தரம்’ என்று பெயரிட்டனர்.

இளமை வாழ்வு

அரண்மனையில் அரசியாரின் ஆதரவில் இளமை தொட்டு இக்குழந்தை வளர்ந்தது. ஐந்தாம் அகவை நிகழும் பொழுது அரண்மனை ஆத்தான ஆசிரியர் சங்கர சாத்திரி யாரிடம் தமிழ். வடமொழி எனும் இரண்டு மொழிகளிலும் எழுத்தறிவிக்கப் பெற்றார். மேலும் அவ்வூர்ப் பெருமாள் கோவில் கூடத்தில் நடைபெற்று வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தெய்வசிகாமணி ஐயங்கார் எனும் ஆசிரியரிடம் ஒரு சில நாள் கல்வி பயின்றார் சோமசுந்தரர். பள்ளி ஆசிரியர் தன் பக்கலில் அமர்ந்திருந்த மாணவனிடம் கடுமை யாக நடந்து கொண்டதனால், இவர் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து, அரசியார் கொடுத்த செல்லத்தில் தம் பதின்மூன்றாவது வயது வரையிலும் விளையாடியே வீணே பொழுது போக்குவாராயினர். இவர்தம் வளர்ப்பு அன்னையார் மறைவிற்குப் பின்னர் இவர் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் சென்று எட்டையபுரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்துப் பின்னர்த் திருநெல்வேலி சென்று ‘சர்ச் மிஷன்’ உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு வரை-அக்காலத்தில் F. A, (Fellow of Arts) என வழங்கப் பெற்ற இண்டர்மீடியட் வகுப்பு வரை பயின்றார். ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்று இரண்டு பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றார். இதன் பின்னர், சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் புகழ் பெற்ற வில்லியம் மில்லர் என்னும் பெருமகனாரிடம் பயின்று பட்டம் பெற்றார். அது காலை அங்கு இவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் இருவர். ஒருவர் தனித்தமிழ் இயக்கங்கண்ட மறைமலையடிகளார்; மற்றொருவர் பரிதிமாற் கலைஞர் எனத் தம் பெயரையே தமிழ்ப் படுத்திக் கொண்ட வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்.

இவ்விருவரின் தொடர்பு இயல்பிலேயே தமிழார்வமும் தமிழறிவும் மிக்கிருந்த சோமசுந்தரரை மேலும் உயர்வுடையோராக்கியது.

வழக்கறிஞர் வழக்கு

பி.ஏ. படிப்பு முடிவுற்றதும், சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். படிப்பைப் பல இடையூறுகளுக்கிடையில் 1905ஆம் ஆண்டில் முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பொதுவாகச் சட்டக்கல்லூரியிற் படிப்பை முடித்தவர்கள் ஏற்கனவே சட்டம் முடித்துப் பெயர் பெற்ற வழக்கறிஞராக இருப்பவரிடம் சில காலம் பயிற்சி பெற்ற பின்னரே தனியாக வழக்காடுதல் வழக்கம். ஆயினும் நாவலர் எடுத்த எடுப்பில் தாமே தனியே வழக்குகளை நடத்தத் துணிந்தார். இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வழக்குகளை மேற்கொண்டு நடத்திய காரணத்தால், அதன் பொருட்டு அடிக்கடி தேவகோட்டைக்குச் சென்றுவர வேண்டி வந்தது. இதனாற் பெரும் பொருட் செலவும் காலக்கழிவும் ஏற்பட்டதனால் நகரத்தார் பெருமக்கள் செட்டிநாட்டுக்கு அண்மையிலுள்ள மதுரைக்கு வந்து தொழில் நடத்துமாறு இவரிடம் பலமுறை. வற்புறுத்தவும், இவர் 1920ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலூரை விட்டு மதுரைக்கு வந்து தொழில் நடத்தத் தொடங்கினார் தொடக்க நாள் தொட்டு இவர் நேர்மையுடனும் நியாயத்துடனும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பேரும் புகழும் பணமும் இவரைத் தேடிவந்தன. தம்மிடம் வரும் வழக்கு எத்தன்மை வாய்ந்ததாயிருப்பினும் நாளொன்றுக்கு ஒரு நூறு ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் வாங்கமாட்டார். தம் வழக்கறிஞர் பணிக்கிடையேயும் தாமாகமே 1913ஆம் ஆண்டில் எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றியும் பெற்றிருந்தார்.

அரசியல் வாழ்வு

நாட்டு விடுதலையில் நாட்டமிக்கவராய் நம் நாவலர் வீறுடன் விளங்கினார். சுதேசிக் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களுடன் நெருங்கிய நேயம் கொண்டி ருந்தார். திங்கள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேல் வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்து. நூறு ரூபாய் திங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பினைத் திறம்பட நடத்தினார். இஃது இவரது கரைகடந்த நாட்டுப் பற்றினைக் காட்டும். இரண்டு கப்பல்களை உடைத்தாயிருந்த வ. உ. இ. மூன்று கப்பல்கள் தம்மிடம் உள்ளது என்று கூறுவர். மூன்றாவது கப்பல் எங்கே என்றால், “எஸ். எஸ். (Steam ship) பாரதி என்ற தமிழ்க் கப்பலை ஏன் மறந்து விட்டீர்கள்?” என்பார். அதுகாலை வ. உ. சி. யோடு தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அன்னிய ஆங்கில அரசினர் குற்றக்கண் கொண்டு நோக்கினர். எனவே ஐயப்பட்டியலில் நாவலர் பெயரையும் சேர்த்தனர். 1905 முதல் 1919 வரையில் இவர் பெயர் ஐயப்பட்டியலில் இருந்தது. நண்பர் கள் பலர் வற்புறுத்தியும், அருமை வாய்ந்த அரசாங்கப் பணி யினை வாங்கித் தருவதாக நயங்காட்டிப் பலர் அழைத்துங் கூட நாவலர் நாட்டு விடுதலை வேள்விக்கான தம் பணியி லிருந்து நீங்கினாரல்லர்.

காங்கிரஸ் மாநாடுகள்

எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் ரெளலட் சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத்துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன் முதல் அண்ணல் காந்தியைத் தென் கோடித் தமிழகத்திற்கு வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்த பெருமை நம் நாவலரையே சாரும். இரு நாள்கள் தூத்துக்குடியில் தங்கிய காந்தியார் நாவலர் வீட்டிற்கும் வந்து போனார். ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் ஒருவராக நாவலர் அஞ்சாநெஞ்சத்துடன் கையெழுத்திட்டார்.

அடுத்து. நாவலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், காந்தியடிகள் தம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்கத் தென்னகச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். காந்தியடிகளை அண்ணாமலை நகருக்கு வருமாறு நாவலர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பலரும் காணிக்கை வழங்கிய கூட்டத்தில், மற்றவர்களுக்குத்தான் முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் மகள்களான மீனாட்சி, லலிதா ஆகிய இருவரும் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் லலிதா பாரதி எனும் இளைய மகள் மேடைக்குச் சென்று காந்தியடிகளிடம் தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்து மேடைக்குச் சென்ற மூத்த மகள் மீனாட்சி பாரதி தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மேடை யினின்று கீழே இறங்கிய பின்னர்த் தன் கையிலிருக்கும் வளையல்களையும் கழற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் மீதுாரவும், மீண்டும் மேடையேறிச் சென்று தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்றிக் காந்தியாரிடம் தந்தார், “யாருடைய மகள் இச் சிறுமி?” என்று தம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து வினவிக் கொண்டே, தம்மிடமிருந்த கதர் மாலை ஒன்றையெடுத்து மீனாட்சி பாரதி கழுத்தில் போட்டார் காந்தியார். அருகிருந்தோர் அடுத்திருந்த நாவலரைச் சுட்டிக்காட்ட, “பாரதியாரின் குழந்தையா! அப்படியானால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை” என்று காந்தியார் கூறினாராம். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற நாவலர், தாம் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றித் தரவேண்டும் என்று மட்டும் கூறியிருந்த அளவில், கை வளையல்களையுங் கழற்றித் தந்த தம் மகள் மீனாட்சியைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.

காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகிச் சிலர் சுயராச்சியக் கட்சி என்றதொரு புதிய கட்சியை உருவாக்கினர். பண்டித மோதிலால் நேருவும் சி.ஆர். தாசும் இந்தியர் ஒத்துழையாமை இயக்கத்தை விட்டு விட்டுச் சட்டமன்றங்களுக்குச் சென்று அங்கே போராடி உரிமைகளைப் பெறவேண்டும் என்றனர். 1926ஆம் ஆண்டில் சி. ஆர். தாசை மதுரைக்கு அழைத்துப்

சா—7 பொதுக்கூட்டத்தில் பேசச் செய்ததோடு, அவர்தம் பேச்சையும் நாவலர் தமிழில் மொழிபெயர்த்தார். சைமன் கமிஷனை எதிர்த்து 1930ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நாடெங்கும் நடைபெற்ற ‘உரிமை நோக்க நாள்’ பின்னாளில் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கும், உப்புச் சத்தியாகிரகத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாகத் தலைவர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நாடெங்கும் நடந்த இக் கிளர்ச்சிக்குப் பணம் தேவைப்பட்டது. தென்னாட்டில் ஒரு திரளான நன்கொடை திரட்டித் தந்தவர்களில் நாவலர் குறிப்பிடத்தக்கவராவர். இம்மட்டோடன்றித் தாமும் தம் வருவாயிலிருந்து திங்கள்தோறும் நூறு ரூபாய் நன்கொடை அனுப்பி உதவினார். மேலும் நாவலர் குடும்பமே நாட்டுப் பணியில் தலைநின்றது எனலாம். காரணம் நாவலர் தம் இரண்டாவது மகன் இலட்சுமிரதன் பாரதி, மகள் இலக்குமி பாரதி, மருகர் கிருட்டிணசாமி பாரதி ஆகிய மூவரையும் காங்கிரஸ் தொண்டர்களாக்கி. அவர்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிப்பு

“தாழ்த்தப்பட்டோருக்குத் திருக்கோயிலில் நுழையும் உரிமை இல்லை” எனும் இழிநிலையை எதிர்த்துக் காந்தியடி கள் 1933 மேத் திங்கள் 3ஆம் நாள் உண்ணா நோன்பு தொடங்கினார். இருபத்தொரு நாள்கள் நீடித்த இவ் வுண் ணா நோன்பின் விளைவாக அண்ணல் காந்தியடிகளால் அரிசனங்கள் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மக்கள் கோயில் உள் நுழையும் உரிமை கோரினர். இயல்பிலேயே தாழ்த்தப்பட்டோரிடம் தாயன்பும் தனியன்பும் காட்டி வந்த நாவலர் அவர்கள் மாடமதுரையில் கோயில் நுழைவு இயக்கத் தைத் தொடங்கி, மதுரை மாவட்டத்தின் திண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முதல் தலைவராக விளங்கினார்.

இந்தி எதிர்ப்புப் போர்

1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்ச ராகப் பதவியேற்ற இராசகோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து மாநில மெங்கும் கிளர்ச்சி யெழுந்தது. காங்கிரஸ் கட்சியில் தமிழ் மொழிப் பற்றுத் தலைதூக்கி நின்ற சிலரும் இத்திட்டத்தை முழு மூச்சாக எதிர்த்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களுள் தலைமையேற்று நின்றவரும், தகவுடன் போரிட்டுப் பின்னாளில் வென்றவரும் நம் நாவலர் ஆவர். 5, 6-9-1937 இல் சென்னை மாநகரில் ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நிகழ்ந்தது. முதல்நாள் மாநாட்டுக் கூட்டத்திற்கு நாவலர் தலைமை தாங்கிச் சாதி, சமய, கட்சி வேறுபாடு இன்றித் தமிழர் அனைவரும் கட்டாய இந்தியை எதிர்ப்பது கடமையாகும் என்றார். அடுத்து 4-10-1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகச் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் வீறுடன் பேசினார். 20-11-1937இல் கருவூரில் அறிவுதயக் கழகச் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்திலும் பேசினார். 25-10-1937இல் முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியாருக்கு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஒரு ‘வெளிப்படைக் கடிதம்’ (An open letter) எழுதினார். நாவலர் விடுத்த இக்கடிதத்தினாலும் நாடெங். கிலும் எழுந்த காட்டுத் தீ போன்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினாலும் அரசு கட்டாய இந்தித் திணிப்புத் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் மீண்டும் 1948 ஆம் ஆண்டில், சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி விங்கம் செட்டியார் இந்தியைப் புகுத்த முற்பட்டார். அவருக்கும் 27-6-1948இல் ஒரு கடிதம் எழுதினார். மேலும் திருச்சி தமிழறிஞர் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கண்ட தமிழர் கழகத்தின் தலைவரா னார். 14-2-1948இல் சென்னையில் கூடிய அகிலத் தமிழர் மாநாட்டின் தலைமையை நாவலர் ஏற்றார். பின்னாளில் தொடங்கப்பெற்ற தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராகவும் திகழ்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக அரும்பணி

அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கண்ட செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை அரசர் அழைப்பின் பேரில் திங்கள் ஒன்றுக்கு ஈராயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்துக் குறைந்த வருவாயே கிட்டும் எனத் தெரிந்தும் 1933ஆம் ஆண்டில் இரண்டு நிபந்தனைகளின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவர் விதித்த இரு நிபந்தனைகள் வருமாறு:

(1) தமது நிர்வாகத்தில் எவரும் குறுக்கீடு செய்தல் கூடாது.

(2) பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிற பேராசிரியர்களைவிட உயர்ந்த ஊதியம் தருதல் வேண்டும்.

தமிழ்ப் பணி

மாணவர்க்கு இலக்கணமாயினும், இலக்கியமாயினும், இலக்கியத் திறனாய்வாயினும் பாங்குற ஐயந்திரி பிற்கிட மின்றி மாணவர் மனத்திற் பசுமரத்தாணியெனப் பதியும் வண்ணம் பாடஞ்சொல்லுதலில் நாவலர் வல்லவராயிருந்தார். மாணவர்களைத் தம் நண்பர்கள் போற் கருதி, நடத்தினார். இயற்றமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டே இசைத் தமிழ்த் தொண்டும் ஆற்றினார். தேவார திருப்புகழ் வகுப்புகளை அங்கு இசைக்கல்லூரியில் தொடங்கு வித்தார். இவ்வாறு மாட்சியுடன் தமிழ்ப்பணி புரிந்த நாவலர் 1938ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் கல்வி பயின்றோரிற் குறிப்பிடத் தக்கவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், திருவாளர்கள் அ. ச. ஞானசம்பந்தன், க. வெள்ளைவாரணனார், பூ.ஆலாலசுந்தரஞ்செட்டியார், சி. ஆறுமுக முதலியார், இராசரத்தினம் அம்மையார், இராசமணி அம்மையார்,அ. மு. பரமசிவானந்தம், ப. சோதிமுத்து, ஆ, முத்துசிவன், எஸ், உருத்திரபதி, பி. ஆர் மீனாட்சிசுந்தரம் முதலியோர் ஆவர்.

சுப்பிரமணிய பாரதியார் தொடர்பு

கவிஞர் பாரதியாரும் நாவலர் பாரதியாரும் பல வகைகளில் ஒற்றுமைப்பாடு உடையவர்கள், இருவரும் எட்டையபுரத்தினர்; இருவரும் கவிஞர்கள்; பாரதி பட்டம் பெற்றவர்கள்; ஒத்த வயதினர்; இளமையில் மணம் முடித்தவர்கள்: நாட்டுத் தொண்டில் திளைத்தவர்கள்; உணர்ச்சி மிக எழுதுவ திலும் பேசுவதிலும் வல்லவர்கள்; அஞ்சாமையும் வீறும் உடையவர்கள்; தமிழாசிரியர் பணி புரிந்தவர்கள்.

பாரதியார் கவிதையைப் பண்டிதர்கள் எள்ளி நகையாடிய காலத்தில் பாரதியார் கவிதையின் நயத்தை மேடை, கட்டுரை, செய்தித்தாள்கள் வாயிலாகப் பாமரரும் புரிந்து கொண்டு பாராட்டவைத்த தனிப்பெருமை நம் நாவலரையே சேரும்.

“பாரதியார் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும், பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண்பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்டமும் சுவையும் உடையன, இப்புலவரின் நூல்களைப் படிப்பவருக்கு நிகண்டு, அகராதிகள் வேண்டா. கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவனமும், தமிழில் ஆர்வமும் உடையார்க்கு இப்புலவர் இதயம் வெள்ளிடை மலையாம். எளிய இனிய இவர் கவிநடை நீரொழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று நிற்கும். பாப்பாப் பாட்டு. முரசு கவிகளால் முழன்று, பள்ளும் கிளிப்பாட்டும் பயின்று விடுதலை, தாய்நாடு பாடி, பாஞ்சாலி சபதம் கூறி, கண்ணன் பாட்டு சிவன் முக்திகளில் வீறிய இவர் கவிதை நலம் பண்ணேறி விண்ணுயர்ந்து உலவுவதாகும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவர் ஒத்தாரைக் காண்பதரிது. மிக்கார் இலராவர்,”

என்பதே நாவலர் மதிப்பீடாகும்.

தமிழ்த் தொண்டு

1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம்மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத் தலைவராக இருந்து சீரிய கருத்துக்களைச் சிறக்க வெளியிட்டார். 1930, 1936, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈழநாடு சென்று சொற்பொழிவுகள் ஆற்றி நாவலர்' என்ற பட்டம் பெற்றார். மதுரைத் திருவள்ளுவர் சமுகத்தார் 11-1-1954இல் ‘கனக் காயர்’ பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தனர். 1955இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெள்ளி விழா கொண் டாடியபொழுது, இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. 1957இல் சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவலரின் நற்றமிழ்த் தொண்டைப் பாராட்டிக் கேடயம் வழங்கியது.

இவ்வாறு பெருவாழ்வு வாழ்ந்த நாவலர் தம் எண்பதாம் ஆண்டு முடிவுற்ற சில திங்களில் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இரவு 7-40 மணிக்கு இயற்கை எய்தினார். தமிழ்நாடு தன் சீரிய தொண்டரை இழந்தது. தமிழன்னை தன் அரிய மைந்தனை இழந்தாள். தமிழினம் தன் தானைத் தலைவனை இழந்தது.

II. படைப்புத் திறன்

தயரதன் குறையும் கைகேயி நிறையும்

நாவலர் பெரிதும் ஈடுபாடு கொண்ட காப்பியம் கம்பராமாயணமாகும். தாம் பன்முறை ஆழ்ந்து ஆழ்ந்து அக் காப்பியத்தைப் பயின்றபோது தோன்றிய கருத்துகளை நண்பர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் மேடைகளில் அக்கருத்துக்களை குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் அக் கருத்துகளுக்கு நூல் வடிவு தந்தார். அந்த நூலே ‘தயரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்பதாகும்.

தயரதன் அறம் திறம்பா நெஞ்சினன் என்றும், கைகேயி மாகயத்தி என்றும் இராமாயணம் படிப்போர் இயல்பாகக் கருதி நிற்க, நாவலர், தயரதன் கன்யா சுல்கமாகப் பரதனுக்குத் தரவேண்டிய நாட்டை இராமனுக்களிக்க முன்வந்தது தவறென்றும், பரதனைக் கேகய நாட்டிற்கனுப்பி வைத்தது தவறென்றும், இராமன் முடிசூடுதலைக் கேகய நாட்டுறைந்த பரதனுக்குத் தெரிவிக்காமற் போனது தவறென்றும், எடுத்துக்காட்டி, கல்கச் சூளறம் பொய்த்துப் பழிவெள்ளத்து நீந்தாது தயரதனுக்கு அக் கல்கச் சூளறத்தை நினைவுறுத்தி அவனை அப் பெரும் பழியினின்றும் மீட்டது கைகேயியின் கற்பு மேம்பாட்டுடன் கூடிய நிறையென்றும் எடுத்துக் காட்டிய பெருமை நாவலரைச் சாரும்.

திருவள்ளுவர்

தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர் குறித்து வழங்கும் கதைகள் பலப்பல, அவை அனைத்தும் ஒருவகையில் திருவள்ளுவர் புகழை மாசு படுத்துவதாகவே உள்ளன. பல்வேறு இலக்கியங்களை ஆராய்ந்து திருவள்ளுவர் பற்றிய திட்டவட்டமான கருத்தினை முதற்கண் வெளியிட்ட பெருமை நாவலரைச் சாரும். அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு:

“வள்ளுவர் கடைச்சங்க காலத்திற்கு மிகவும் முற் பட்டவர். திருக்குறளே தமிழின்கண் தோன்றிய தனிமுதல் அற நூல் திருவள்ளுவர் புலைச்சியின் புதல்வரல்லர். ஏலேல சிங்கனின் கொடையால் உயிர்த்த பிறவியல்லர். தமிழ் முடி மன்னரிடத்து உட்படு கருமத் தலைவராய்த் தம் ஆற்றலும் அறிவும் வாய்ந்தவர்.”

முதன் முதலாக இவ்வாராய்ச்சிச் சொற்பொழிவினை 25-1-1929ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம், கிறித்தவ இளைஞர் சங்கம் இவற்றின் ஆதரவில், மறைத்திரு. எச்.ஏ. பாப்லி துரை தலைமையில் நிகழ்த்தினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் பெருமக்கள் பலர் குழுமியிருந்த அவையில் வெளியிட்டார். அங்குக் கூடியிருந்த பெரு மக்களில் குறிக்கத்தக்கவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர், மு. இராகவையங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை முதலியோ ராவர். இந்நூலைப் படித்து டாக்டர் உ. வே. சா. அவர்கள் கருதிய கருத்து, நாவலர் ஆழமான ஆராய்ச்சி அறிவு நுட்பம் வாய்ந்தவர் என்பதாகும்.

சேரர் பேரூர்

முடியுடை மூவேந்தரில் முதலாமவரான சேர மன்னரின் கோநகரமாம் வஞ்சி யாண்டுளது என்பது குறித்து:ஆராய்ச்சி கள் பல எழுந்தன. சிலப்பதிகார உரையாசிரியராம் அடியார்க்கு நல்லாரும், டாக்டர் உ. வே. சாமிநாதையரும் மேற்கடற்கரையிலுள்ள பேராற்றின் கரைக்கண்ணது வஞ்சி என்பர். அறிஞர் வி கனகசபைப் பிள்ளை மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் ஒரு பாழுருக் குத்திருக்கரூர் என்னும் பெயர் வழங்குவது கொண்டு அப்பா மூரையே வஞ்சி என்று கொண்டனர். ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற ஆராய்ச்சி நூலையளித்த பேராசிரியர் மு இராகவை யங்கார், வஞ்சியென்பது திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதி ஆற்றின் மேலதாக அமைந்திருக்கும் கருவூரானிலை அல்லது கருரே வஞ்சியென்பர். ‘தமிழ் வரலாறு’ எனும் அரிய ஆராய்ச்சி நூலைத் தந்த தஞ்சை அறிஞர் கே. சீனிவாசப் பிள்ளை, இச்சிக்கலைத் தீர்க்குமாறு நாவலரை வேண்டிக் கொள்ள, நாவலர் இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து ‘சேரர் பேரூர்’ என்னும் நூலைத் தமிழுலகிற்குத் தந்தார். “வஞ்சியெனப்படும் சேரர் கோநகரம், மலைநாட்டில் மேற்குக் கடற்கரையில் டோரியாற்றின் கழிமுகத்தில் அமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊரேதுமாகாது” என்று அவர் ஆராய்ந்து முடிந்த முடிபாகக் கருத்து வெளியிட்டார்.

இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’(Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார்.

சேரர் தாய முறை

சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர் தாய முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

இன்றைய கேரள மாநிலமாம் அந்நாளைய சேர நாட்டில் ஆண் மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வராக அமைந்தாலும், அவருக்கன்றி, அத் தந்தையாரின் உடன் பிறந்தாள் புதல்வர்க்கே அச்சொத்து உரிமையுடையதாகும் இதுவே ‘மருமக்கள் தாய முறை’ என இப்பொழுது வழங்கப்படுகிறது. இவ்வழக்கு இடைக்காலத்தது என்பர். ஆனால் நாவலர் பாரதியார் அவர்கள் இதனை நன்காராய்ந்து சேர நாட்டில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது மருமக்கள் தாய முறையே என்றும், பழந்தமிழக முழுவதும் அக்காலத்தே இததாய முறையே வழிவழி மரபிலிருந்தது என்றும் ஆராய்ந்து கண்டு ‘சேரர் தாய முறை’ என்னும் நூலை எழுதினார்.

‘system of Succession in the Chera Kingdom’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் நூலை யாத்தார்.

மாரி வாயில்

நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது ‘மாரி வாயில்’ என்னும் கவிதை நூலாகும். வடமொழியில் காளிதாசர் இயற்றிய ‘மேக சந்தேசம்’ என்னும் நூலைப் போன்றது இந்நூல். பஞ்சபாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனான அருச்சுனனுக்கு அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூது அனுப்பியதாகக் கற்பித்துக் கூறும் கவின் மிகு நூலாகும் இது. இந்நூல் கற்பனை வளம் மிக்கது: காதலறத்தை விளக்குவது; பழந்தமிழ் இலக்கணமாகிய நூலிற்கு இலக்கியமாகத் திகழ்வது; இருநூற்றிருபத்திரண்டு பாக்களைக் கொண்டு கழிபேரின்பம் பயப்பது; பெரும் புலவர் அருணாசலக் கவிராயரால் “சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப் பெற்ற தமிழ்ப் பிரபந்தங் களுள் இம் ‘மாரி வாயில்’ பொருள்வளம் சொல்லின்பங்களில் சிறந்து விளங்குவது” என்று பாராட்டப்பட்டுள்ளது.

மங்கலங் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

இந்நூல் காதல், வீரம் ஆகிய இரு பெற்றியினையும் ஒருங்கே கூறுவதாகும். மங்கலங்குறிச்சி என்னும் சிற்றுார் பொதியமலை அடிவாரத்தில் உளது. தைத்திங்கள் தலை நாளில் நீராட வைகுறு விடியலில் ஆற்றுக்குச் சென்று தலைவி கால் தடுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்த அவளை அவ்வழியே வந்த தலைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். அன்று மாலையில் அவ்வூரில் நடந்த விலையர் போட்டியில் வெற்றி கண்டான் தலைவன். வேங்கைப் புலியை வீழ்த்திய கையோடு தலைவி கூந்தலிற் செருகி அழகு பார்க்க முல்லைக் கொத்தொன்றையும் வில்லாற் கொய்தான். இந்நிலையில் வீடு சென்ற தலைவியை மாமி பழித்தாள், மகளுக்காகப் பரிந்து வந்தாள் சித்தி. அதற்கிடையில் வெற்றி ஊர்வலம் வந்த தலைவனை அக்காட்சி பொறாத கெடுமதியாளன் ஒருவன் குத்தி விட்டான். குத்தியவனை இளைஞர் படை சிறைக்கூடம் சேர்த்தது. புண்பட்ட தலைவன் மருத்துவம் செய்யப் பெறும்போது தலைவியின் பெயரைத் தன்னை மறந்த நிலையில் உச்சரித்தான். செய்தியறிந்த தலைவி ஓடிச்சென்று தன் இனிய உரைகளால் உயிர்ப்பித்தாள்; அவனும் புண் தெளிந்து எழுந்தான். இருவரும் மணம் செய்து கொண்டு மனையறம் காத்தனர்.


தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும்

தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக தொல் காப்பியம் - பொருட்படலமும் புதிய உரையும்’ எனும் நூல் எழுதினார். இந்நூலில் அகத்திணையியல், புறத்தினையியல், மெய்ப்பாட்டியல் என்னும் மூன்றியல்களின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் புதியவுரையின் சிறப்பினைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், “நாவலர் இப்புத்துரை செய்ததன் வாயிலாகத் தமிழுக்கும் தமிழர்க்கும் எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார். தக்க மேற்கோளுடன் எவரும் மறுக்க முடியாத வகையில் பொருள் கூறித் தமிழர் பெருமையைக் காத்துள்ளார். அப் புத்துரையைப் பாராட்டி மக்களனை வரும் அதையே படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நூல்கள்

மேற்கண்ட நூல்களைத் தவிர, இவர் அவ்வப்போது இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளும், வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றன. அவ்வாறு வெளிவத்த நூல்கள் ‘நற்றமிழ்’, ‘பழந்தமிழ் நாடு’ என்பனவாகும். இவர்தம் ஆங்கிலக் கட்டுரைகள் ‘தமிழ் இலக்கியங்களும் தமிழகமும்’ (Tamil Classic and Tamīlaham)பெயரில் நூலாக அமைந்தது.

மேலும் இவர் கரிகாலனும் திருமாவளவனும் ஒருவரே என்ற கருத்தை மறுத்தும், பட்டினப்பாலையின் தலைவன் கரிகாலனல்லன் திருமாவளவனே என்றும், இத்திருமாவளவன் கரிகாலனுக்கு மகன் என்றும் ஆராய்ந்து கூறியுள்ளார்.

சீத்தலைச் சாத்தனாரும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் வெவ்வேறு புலவர் என்றும், மணிமேகலை பாடிய புலவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ஆவர் என்றும், இவரின் வேறான-புரவலரைப் போற்றி அவரால் பேணப்பட்டு வாழ்ந்தவரே சங்ககாலச் சித்தலைச் சாத்தனா ரென்றும் முடிவு கட்டினார்.

மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் மொழி பெயர்ப்பு நூலன்று, அது செந்தமிழில் எழுந்த முதல் நூல் என்றும், உருத்திரனும், சிவனும் ஒருவரல்லர், வெவ்வே றானவர் என்றும், உருத்திரன் அழிக்கும் கடவுள், தமிழரின் சிவன் எல்லாம் வல்ல இறைவன் என்றும் தக்க ஏதுக்கள் காட்டி எடுத்துரைத்தார்.

இவ்வாறாக டாக்டர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் இலக்கிய எழுஞாயிறாய் - இருபதாம் நூற்றாண்டு நக்கீரராய் இலங்கினார். நாட்டுப்பற்றில் வேர் ஊன்றி, தமிழ்ப்பற்றில் கிளைவிட்டுப் படர்ந்து, தமிழன மேம்பாட்டிற்குச் செழித்து விளங்கியது நாவலர் என்னும் நற்பயன் மரம் என்று கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/6&oldid=1017397" இலிருந்து மீள்விக்கப்பட்டது