8. புதுவை தங்த புரட்சிக் கவிஞர்

கவிஞன் தான் பிறந்த காலத்தின் கருவாகவும் பின்னர்க் கருத்தாவாகவும் துலங்கக் காணலாம். தன்னைக் சுற்றிலுமுள்ள சூழலை, சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது என்பது ஒருமுறை: அச்சமுதாயத்தை விவரிக்கவும் செய்து தன்னுடைய கருத்துகளைப் பரப்பி ஒரு புதிய மறுமலர்ச்சிக்குச் சமுதாயத்தினைப் படைக்க வ்ேண்டும் என்ற பேரார்வத்தில் பிறங்கிடுவது பிறிதொரு வகை. முன்னவர் உள்ளதை உள்ளவாறே கூறுபவராகவும். பின்னவர் உள்ளதை உணர்ந்தவாறு கூறுபவராகவும் அமைவர்.

உள்ளதை உள்ளவாறு உணர்த்துபவர், உருவத்தைப் பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி போல்பவராவர். கவிஞன் காலத்தின் கண்ணாடியாக மட்டும், இருந்தால் போதாது. காலத்தின் கருத்தாவாகவும் அவன் துலங்குதல் வேண்டும். அப்போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் பூந்தோட்டமாக மட்டும் அமையாமல் காய்கறித் தோட்டமாகவும் அமைந்து பலன்தர முடியும்.

“மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்” (Poets are the unacknowledged legislators of the world) என்று கவிஞர் ஷெல்லி குறிப்பிட்டார். பொதுமக்களின் வாக்குரிமை பெற்றுச் சட்டமன்றத்தில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் திட்டத்தினைக் தீட்டிச் செயலாற்றும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கவிஞர்களோவெனில் கற்பனையில் சில காட்சிகளைக் கண்டு, அக்கற்பனைக்காட்சிகள் நடைமுறை வாழ்வில் நனவுகளாகி மக்களுக்குப் பயன் நல்க வேண்டும் என்ற விழுமிய நோக்கம் உடையவர்களாகத் துலங்குவர். அமெரிக்கர்கள் நிலவுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக் கவிஞர் பாரதியார் “சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்” என்று பாடிவிட்டார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” சுதந்தரப் பள்ளுப் பாடினார். “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்றும் பாரதியார் பாடியுள்ளமை அவர்தம் எதிர்கால நோக்கினைப் புலப் படுத்தும். “கங்கையில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று என்றோ பாடிவிட்டுப் போனார். இன்று கங்கையையும் காவிரியையும் இணைக்க முடியுமா? என்று உலக நிபுணர் குழு ஆராய்வதனைக் காண்கின்றோம்.

நாட்டின் விடுதலைக்கு-நாட்டு மக்களின் நல் வாழ்விற்குச் சில பல கருத்துக்களைப் பாரதியார் எண்ணியுரைத்தமை போன்றே. அவர் பால் கொண்ட ஈடுபாட்டால் தம் இயற்பெயரான கனகசுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்ட புதுவைக் கவிஞர்புதுமைக் கவிஞர்தம்-புரட்சிக் கருத்துகளை இனிக் காண்போம்.

காலத்திற்கேற்பக் கவிஞர் தோன்றுவர் என்பது பொது நியதியாகும். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்திருந்த பொழுது அவரோடு தொடர்பு கொண்டார் நம கவிஞர் பாரதிதாசன். ஒரு விருந்தில் சந்தித்தனர் இருவரும். பாரதியார் பாரதிதாசனைப் பாடுமாறு பணிக்க, “எங்கெங்குக் காணினும் சக்தியடா!—தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!” என்ற பாடலைப் பாரதிதாசன் பாடியதாக அறிகிறோம். இந்தப் பாடலை முழுதும் நாம் படித்துப் பார்த்தால் புரட்சிக் கவிஞர் எனக் கொண்டாடப்படுவதற் கேற்பப் புரட்சி வித்துகள் இம்முதற் பாடலிலேயே தென்படக் காணலாம்.

“இயற்கை அனைத்தும் அழகே, அந்த அழகு செந்தாமரை யென்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் செல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள் என்று அழகின் சிரிப்பு நூலின் முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுவர்.

இயற்கை வருணனையிலும் புரட்சி உள்ளம்

இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து நோக்கும் கவிஞர்தம் மதி வியத்தற்குரியது. கடலைகளைப் பார்க்கும் கவிஞர்க்கு இளைஞர் தம் எழுச்சியும் ஒருங்கே நினைவுக்கு வருகின்றன.

“நேரிடும் அலையோ, கல்வி
கிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும்
புரண்டிடும், பாராய் தம்பி”

—அழகின் சிரிப்பு : கடல் : 1.

அடுத்து, புறாவின் வாழ்வினை வருணிக்க வருகின்ற கவிஞர் புரட்சிக் கருத்துக்களை நம் முன் படைக்கின்றார். ஓர் ஆண் புறாவிற்கு ஒரு பெண் புறா என வாழும் கற்பு நெறியின் திண்மையினை நமக்கு எடுத்துக் காட்டு கின்றார்.

“ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்:
ஒரு பெட்டை மத்தாப் பைப்போல
ஒளிபுரிங் திடநின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்று மற் றொன்றை நாடும்,”

—அழகின் சிரிப்பு; புறாக்கள் : 5

ஆணோ பெண்ணோ ஒருவர் இறந்தபின் மற்றவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நேரிய செயல் என்பதனையும் இறுதி அடியிற் புலப்படுத்தி விடுகின்றார்.

கிளியை வருணிக்கப் புகுகின்ற கவிஞர், நெஞ்சத்திலே ஓர் எண்ணமும், நடைமுறை வாழ்வு நலத்திற்காகப் பிறி தொரு செயலுங் கொண்டு இலங்கும் இரட்டை வேடத் தினரைச் சாடக் காணலாம்.

“காட்டினில் திரியும்போது
கிரீச்சென்று கழறு கின்றாய்
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தை போல் கொஞ்சு கின்றாய்
வீட்டிலே துரத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!”

—அழகின் சிரிப்பு: கிளி; 7.

நிலவைப் பாடிய கவிஞர் பலர் நிலவினைக் காதல் வாழ்வு ஏற்றம் பெற அமையும் பின்புலமாகக் கண்டுள்ளதனைப் பார்க்கலாம். நற்றிணைத் தலைவன் பொருள்வயிற் பிரிந்து, பொருள் முற்றித் தம் மனை நோக்கி மீளும்போது நிலவைக் காண்கிறான். பின் வருமாறு பாடுகிறான்.

“குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லனோ யானே......
........................................................
எமது முண்டோர் மதிநாள் திங்கள்”

—நற்றிணை : 62.

இதுபோன்றே திருவள்ளுவம் காமத்துப்பாலில், தலை மகன்-ஒருவன் நிலவை நோக்கி, நின் முகமும் என் தலைவி யின் முகமும் அழகு-அமைப்பு-கவர்ச்சி முதலியவற்றில் ஒன்றேயெனலாம், ஆயினும் இருவரிடையிலும் ஒரு வேறு பாடு உளது என் தலைவி நான் காணமட்டுமே தோன்று வாள்; நீயோ பலரும் காண நாணமின்றி வான வீதியில் உலா வருகின்றாய்' என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

“மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி”

—திருக்குறள் : 1119.

நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து,

“பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுன காகாதே!”

—நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல்.

என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை: 

“முழுமை நிலா! அழகு நிலா
முளைத் ததுவிண் மேலே-அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே
..............................................
குருட்டுவிழியும் திறந்தது போல்
இருட்டில் வான விளக்கு”

—இசையமுது ; நிலவு

இம்மட்டோடு நிற்கவில்லை கவிஞர். பிறிதோரிடத்தில் பசித்த மக்கள் பசியாற உண்ண உணவு தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண் சோற்றினைக் காணும் இன்பமே வெண்ணிலவைக் காணும் இன்பம் என்று வாழ் வோடு ஒப்புமைப்படுத்திக் காண்கின்றார்,

“உனைக்காணும் போதினிலே என் உள்ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”

—பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி :

புரட்சிக்கவி.

புரட்சிக் கவி

பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக் கவி’ என்றே ஒரு நெடுங்கவிதையினைப் படைத்துள்ளார். பெயருக்கேற்பவே . இந்நெடுங்கவிதையில் பல்வேறு புரட்சிக் கருத்துக்கள். நிறைந்திலங்கக் காணலாம். 

“காரிருளால் சூரியன்தான்
மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிறர் சூழ்ச்சி செக்தமிழை
அழிப்ப துண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு
மறைந்து போமோ?”

என்று ‘புரட்சிக் கவி’யில் முழங்குகின்றார் கவிஞர்,

முதலாவது நால்வருணம் என்று மக்களைப் பிரித்து வைத்த கயமைப் பண்பினைச் சாடுகின்றார் :

“சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம்

ஏனிரங்கும்?”

என்று கேள்விக் குரல் எழுப்புகின்றார்.

ஏற்றக் குறைவற்ற இனியதொரு சமுதாயத்தினைப் படைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும் எனப் புரட்சிக் கவியிடம் அவன் காதலி அமுதவல்லி கூறக் காண்க :

“சாதி உயர்வென்றும்
தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப
பொதுத்தொழிலாளர் சமூகம்

சா–9

மெத்த இழிவென்றும் மிகுபெரும்
பாலாரை யெல்லாம்
கத்திமுனை காட்டிக்
காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப்
பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும்
அர்ப்பணம் செய்வோம்”

“அரசென ஒருசாதி-அதற்கு
அயலென வேறொரு சாதியுண்டோ?”

என்றும்,

“--------------------- அநீதிசெய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டுமக்கள்
கற்பாடம் கற்பியா திருப்பதில்லை”

என்றும்,

“............ அவரெல்லாம் இந்தநேரம்
எலியாக முயலாக இருக்கின்றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேடம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?”

என்றும்,

“ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், இத்தேசம் ஒழிதல் நன்றாம்”

என்றும் வரூஉம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சிலே என்றும் நிலையாகக் கொள்ளத் தக்கவைகளாம்,

சமுதாயப் புரட்சிக் கருத்துகள்

பாரதிதாசன் அவர்களின் நோக்கு. பெரிதும் சமுதாயச் சீர்திருத்தத்தினை நோக்கியே சிந்தித்துச் செயல்பட்டது எனலாம். சமுதாயத்தினைப் புரட்டிக் கீழ் மேலாக்கிப் புதுமையினைப் புகுத்திப் புதியதொரு மறுமலர்ச்சிச் சமுதாயத்தினைக் காணவேண்டுமென்று தம் வாழ்நாள் இறுதிவரையில் அயராது பாடுபட்டவர் அவராவர்.

மகளிர் சமுதாயத்தின் சரிபாதிப் பகுதியாவர்; ஏன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரேயாவர். இறைவனையே உமையொருபாகனாகக் கண்ட இத்திரு நாட்டில், ‘இல்லாள்’ என்றும், ‘வாழ்க்கைத்துணை’ என்றும் திருவள்ளுவர் மகளிரைப் போற்றியெழுதிய இத்திருவிடத்தில். மகளிர் நிலை மதிப்பிற்குரியதாக இல்லை என்று பாடுகிறார், பாவேந்தர் அவர்கள்.

“ஆடை அணிகலன்,
ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச்
சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும்
ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக்
கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில்
வலிவற்ற ஒர்பகுதி”

—பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி :

—வீரத்தாய்

எனவே பெண் கல்வி இன்றியமையாதது என்பதனை, 

“கல்வியில் லாதபெண்கள்
களர்நிலம் அங்கிலத்தில்
புல்விளைந் திடலாம்! நலல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை யுடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்”

—குடும்ப விளக்கு : இரண்டாம் பகுதி.


என்று திறமாகக் குறிப்பிட்டு, தந்தை பெண்ணுக்குக் கூறும் ‘இசையமுது’ பாடலில்,

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள்
உன் அன்னை”

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையினைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துப் பெண்ணுரிமை வேண்டி முதன் முதலில் கவிதையில் புரட்சி செய்தவர் என்பது கீழ்க்காணும் பாடற் பகுதியால் விளங்கும்.

“பெண்ணுக்குப் பேச்சுரிமை
வேண்டாம் என் கின்றீரோ? -
மண்ணுக்குக் கேடாய்
மதித்திரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும்
பேசுங் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல்
முயற்கொம்பே!”

—சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம்’ என்பர் ஆன்றோர். ஒட்டும் இரண்டுள்ளத்தைத் தம்மில் ஓங்கிய காதலினைக் குட்டை மனத்தாலே கோபப் பெருக் காலே வெட்டிப் பிரிக்க வரும் வீணரைச் சாடி,

“காதலிருவர்களும்—தம்
கருத்தொருமித்த பின்
வாதுகள் வம்புகள் ஏன்? இதில்
மற்றவர்க் கென்ன உண்டு”

என்றும்,

“............ புவியே—இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால்—நீ
நிச்சயம் தோல்வி கொள்வாய்”

என்றும்,

“மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்?”

என்றும் கூறிக் காதல் மணத்தை வாழ்த்தி வரவேற்கின்றார்.

வயது முதிர்ந்த ஆடவனுக்கு இளம் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் தந்து இளமை வாழ்வினைப் பலியாக்கும் அநீதியினைச் சாடுகிறார்.

‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர். விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார்.

“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

—பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி,

என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்’ என்று கைம்மைப் பழியினைக்களைய முனைகிறார் கவிஞர்.

‘மனைவியை அவள் முதிய பருவத்திலும் அவள் கணவன் அன்பு செய்து வாழ வேண்டும் எனும் அறிவுரை சங்க இலக்கியங்களிலே காணப் பெற்றாலும் கூடப் பாரதிதாசன் அக்கருத்தைக் கூறும் நயம் போற்றற்குரியது. குடும்ப விளக்கில் முதியோர் காதற் பகுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம் அ வட்கு
வறள்கிலம்! குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
“இருக்கிறாள்” என்ப தொன்றே”

—குடும்பவிளக்கு : முதியோர் காதல்.

இன்று விரிவாக, விளக்கமாக விளம்பரமாகப் பேசப்படும் குடும்பக்கட்டுப்பாட்டினையும் அன்றே கவிஞர் கூறியிருக் கின்றார் என்பதும் அறியத்தக்கது. பகுத்தறிவுப் புரட்சி

“இருட்டறையில் உள்ளதடா!
உலகம்! சாதி
இருக்கின்ற தென்பானும்
இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர்
வாழ்கின் றாரே!
வாயடியும் கையடியும்
மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில்
கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று
சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே!
இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும்
ஒன்றே யாகும்”

—பாண்டியன் பரிசு; இயல் 36—3

இதனால் பகுத்தறிவின் பான்மையும் சிறப்பும் புலப்படும். பெண் குழந்தைத் தாலாட்டில்,

“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”

என்றும், ஆண் குழந்தைத் தாலாட்டில்,

“‘எல்லாம் அவன் செயலே’
என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி
விழுங்கும் மனிதருக்கும்

காப்பார் கடவுள் உமைக்
கட்டையில் நீர் போகுமட்டும்
வேர்ப்பீர் உழைப்பீர்
என உரைக்கும் வீணருக்கும்
மானிடரின் தோளின்
மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே
என்செந்தமிழே கண்ணுறங்கு”

என்றும் மூடத்தனத்திற்குச் சாவுமணி அடிக்கிறார். மேலும் அவர்,

“மதம் எனல் தமிழ் வையத்தின் பகை!
ஆள்வோர் என்றும் அடங்குவோர்
என்றும் பிறந்தார் என்பது சரடு
தனிஒரு மனிதன் தன்விருப்பப்படி
இனிநாட்டை ஆள்வ தென்பதில்லை
மக்கள் சரிநிகர்...................”

—கடல்மேற் குமிழிகள் 35

என்கிறார்.

“தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்
சரிநிகர் எல்லோரும் என்றோம்
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே”

—இறுதி அடிகள்

மேலும்,

“உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்”
என்றும், 

“ஒருகடவுள் உண்டென்போம்!
உருவணக்கம் ஒப்போம்
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்
மதம் ஒழிந்தால்
திருக்கோயில் தொழிற்சாலை”

என்றும்,

“நமது கொள்கை மக்களெல்லாம் நிகர்
நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே”

என்றும்,

“இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்
இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்”

என்றும்,

“நால்வகுப் பென்பது
நூல்வகுப்பா தமிழ்நாட்டில்!
நற்றமிழ் மக்கள் ஒரே வகுப்பே
தமிழ் ஏட்டில்”

என்றும் கூறும் அடிகளில் புரட்சித் தீயின் நாக்குகளை நன்கு காணலாம்.

பொதுவுடைமைப் புரட்சி

சாதி சமய பேதங்களைத் தகர்த்தெறிந்து, மூடப் பழக்கங்களை முறியடித்து, கண்மூடி வழக்கங்களை மண் முடிப் போகச் செய்து ஒரு புத்துலகம் காண அவாவுகின்றார் கவிஞர்.

“சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கிகடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்
பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்.”

ஏழை பணக்காரர் அற்ற சமத்துவ சமுதாயங் காண அவர் அறிவுறுத்தும் வழி வருமாறு :

“ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”

பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ‘மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்’ என்கிறார்.

“எல்லோர்க்கும் தேசம்,
எல்லோர்க்கும் உடைமைளலாம்!
எல்லார்க்கும் எல்லா
உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி
சுகாதாரம் வாய்ந்திடுக!
வல்லார்க்கும் மற்று முள்ள
செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும்
மனப்பான்மை போயொழிக!”

என்று பாரதிதாசன் அவர்கள் ‘பொதுவுடைமைச் சமுதாயம் ஒன்று பூக்க வேண்டும்’ என்று பூரிப்போடு பாடுகின்றார்.

“தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை! மக்கள்
தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்.”

—பாண்டியன் பரிசு : இயல்; 57: 18


என்று ஏழை பணக்காரன் பற்றிப் புதியதொரு புரட்சி விளக்கத்தினைத் தருகின்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இதுகாறும் எடுத்துக்காட்டப்பெற்ற செய்திகளால் பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் என்பதும், அவர் பாடல் களாகிய தோட்டத்தில் புரட்சி மலர்கள் பல பூத்துக் குலுங்கு கின்றன என்பதும் பெற்றாம். புரட்சிக் கவிஞர் அவர்கள் மறைந்தபொழுது சான்றாண்மைக்கு ஆழியெனத் திகழும் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், பாரதி தாசன் பற்றிக் கூறிய சொற்களை ஈண்டு நினைவிற் கொள்ளல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாகும்.

“புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிகமிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து, சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துகளையும் கடிந்து பாடிப், படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுக்களில் விழுமிய கற்பனையும் உண்டு. வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபும் உண்டு. புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர்தம் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/8&oldid=1017798" இலிருந்து மீள்விக்கப்பட்டது