1


ஞானமில்லாத செருக்கும் செருக்கில்லாத ஞானமும் சோபிப்பதில்லை

சில விநாடிகளே நீடித்த அந்த மௌனத்தில் கவிதையின் அமைதி நிலவியது. அவள் அவளை நன்றியுணர்வு சுரக்கப் பார்த்தாள், அவனோ கடமையைச் செய்து முடித்து விட்ட சத்தியமான பெருமிதத்தோடு அவளைப் பார்த்தான். அருள்மேரி கான்வெண்ட் பள்ளி முகப்பிலேயே அவளைச் சந்திக்க முடிந்திருந்தது.

“உங்கள் முகவரியைத் தெரிந்து கொள்வதற்காகப் பையைத் திறந்து பார்க்கும்படி ஆகிவிட்டது. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்...”

“பரவாயில்லை! செய்ய வேண்டியதைத்தானே செய்திருக்கிறீர்கள்! இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?...”

“அப்படியில்லை ...... வந்து......?

“எப்படியில்லை .......?”

“ஒரு பெண்ணின் கைப்பை என்பது மற்றொருவர் பிரித்துப் பார்த்து விட முடியாத இங்கிதங்களும், அந்த ரங்கங்களும் நிறைந்தது..... அதை நான் பிரித்துவிட்ட தவற்றுக்காக.........”

அவளிடம் மறுபடி அந்த, அழகிய மெளனம். ஏதடா ஓர் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் என்னென்னவோ கதாநாயகன் மாதிரி வசனமெல்லாம் பேசுகிறானே என்று அவள் நினைத்திருக்க வேண்டும், போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய்க் கொடுக்காமல் தன்னிடமே நேரில் தேடிக் கொண்டு வந்து கொடுத்தானே என்று முக மலர்ச்சியோடு கனிவாக இரண்டு வார்த்தை நின்று பேசினால், எல்லை மீறிப் போகிறதே என்று அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டதோ என்னவோ? அதன் விளைவு அடுத்த கணமே தெரிந்தது.

விருட்டென்று பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் அந்தப் பெண். பேச்சும் புன்னகையும் முறிந்து ரூபாயில் கணக்குத் தீர்க்கிற எல்லை. வந்ததும் அவன் சுதாரித்துக் கொண்டான். அழகிய மௌனங்கள் உடைந்து இறுக்கமான புழுக்கம் சூழ்ந்தது.

“மன்னிக்க வேண்டும், பணத்துக்காக நான் இந்த உதவியைச் செய்யவில்லை. தயவு செய்து நான் யோக்கியனாயிருப்பதற்கு உதவி செய்யுங்கள், போதும். விலை நிர்ணயித்து விடாதீர்கள். நானும் உங்களைப் போல் படித்துப் பட்டம் பெற்றவன் தான். வேறு வேலை கிடைக்காததால் ‘ஸெல்ஃப் எம்ப்ளாய்மெண்ட்’ திட்டத்தின் கீழ் பாங்க் லோன் மூலம் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.”

இதைச் சொல்லியபடியே ஸீட்டைத் தூக்கி அதற்கு அடியிலிருந்து. மகாகவி பாரதியார் கவிதைகள், ராஜாராவின் ஆங்கில நாவல், ஸெர்ப்பெண்ட் அண்ட் தி ரோப், நிரத் சௌத்ரியின் ஆடோபயாகிராஃபி ஆஃப் ஆன் அன்னோன், இண்டியன்’... என்று சில புத்தகங்களை அடுக்கி எடுத்துக் காட்டினான் அவன். அவள் முகத்தில் வியப்பு மலர்ந்தது.

ஆட்டோவில் ஞாபகப் பிசகாகத் தான் மறந்து வைத்து விட்டு வந்த பணமும் தங்க வளைகளும் இருந்த பையை நாணயமாகத் திரும்பக் கொணர்ந்து சேர்த்த ஒரு டிரைவர் என்ற மதிப்பீட்டில் அதற்குப் பத்து ரூபாய் நன்றித் தொகை நிர்ணயித்த அவள் இப்போது தயங்கினாள்.

“உங்கள் பெயர்......?”

“பூமிநாதன்.”

"படித்துப் பட்டம் பெற்றவராக இருந்தால் பணம் வாங்கி கொள்வது தப்பா? மீட்டரில் ஆன தொகையைக் கேட்டு வாங்கிக் கொண்டீர்களே, அது போல் தானே இதுவும்?”

“மீட்டர் ஆட்டோவுக்குத்தான்! உதவி, நன்றி. விசுவாசம் இதற்கெல்லாம் மீட்டரும், ரேட்டும் கிடையாது, கூடாது...”

“நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள், சொல்கிறீர்கள். உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன், ஆனால் உண்மையில் இந்த நகரத்தில் நீங்கள் குறிப்பிட்ட நல்லுணர்வுகளுக்கும் கூட மீட்டர், ரேட் எல்லாம் ஏற்பட்டு விட்டன.”

அவன் சிரித்தான். துணிந்து அவளைப் பேர் சொல்லி அழைத்துப் பேசினான்.

“மிஸ் சித்ரா! உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது! உங்கள் புன்னகையில் கவிதை இருக்கிறது. அவையே எனக்குப் போதும்.”

இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் அழகுகாட்டுவது போல் முகத்தைக் கோணிக் கொண்டு அவனை உறுத்துப் பார்த்தாள் சித்ரா. சினிமாக் காதலன் போல் அவன் ரெடி மேடாகப் பேசுவதாய் அவளுக்குத் தோன்றியது.

“உங்கள் குரலையும் வார்த்தைகளையும் கேட்கக் கொடுத்து வைத்த இந்த கான்வென்ட் குழந்தைகள் பாக்கியசாலிகள்.”

“உங்கள் உ.தவிக்கு நன்றி. ‘பிரேயர் பெல்’ அடித்து விட்டார்கள். நான் உள்ளே போக வேண்டும்.”

சித்ரா அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவனிடமிருந்து கத்தரித்தாற் போல் அவசர அவசரமாக விலக்கிக். கொண்டு பள்ளியின் உள்ளே சென்றாள்.

சுற்றிலும் எல்.கே.ஜி. யு.கே.ஜி. பட்டுப் பூச்சிகளாகக் குழந்தைகள் நிறைந்த மைதானத்தை நோக்கி அவள் செல்கிற வனப்பில் சிறிது நேரம் திளைத்து நின்றான் பூமிநாதன். காலை வேளையில் வாய்த்த அழகிய சவாரியும், அவள் மறந்து விட்டுச் சென்ற பையைத் திரும்பக் கொடுப்பதற்காகச் சென்று சந்தித்த சந்திப்பும் அவன் உள்ளத்தில் கிளர்ச்சியையும் மலர்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கி யிருந்தன.

காலை வேளையில் மைலாப்பூர்க் குளக்கரையிலிருந்து பாண்டி பஜாரில் வந்திறங்கிய முதல் சவாரி இப்படிக் கைப்பையை ஆட்டோவில் விட்டு விட்டுப் போனது, அவன் வடபழநி கோயில்வரை காலியாகச் சென்று அங்கே மற்றொரு சவாரியை ஏற்றிக் கொண்ட போதுதான் தெரிய வந்தது.

கோயிலிலிருந்து வெளியே வந்து “நுங்கம்பாக்கம் அவென்யூ ரோடு போகணும்”....என்று ஏறியவர், “இதென்னப்பா...லேடிஸ் ஹேண்ட் பாக் கிடக்குது...யாராவது மறந்து விட்டுட்டுப் போய்ட்டாங்களா?” ... என்று அதை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவள் கைப்பையை விட்டு விட்டுப் போயிருப்பது முதல் முதலாக அவன் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது அப்போதுதான்.

சவாரியை அவென்யூ ரோட்டில் இறக்கி விட்டு விட்டுத் திரும்பும்போது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்தி விட்டுத் தயங்கினான். காலையில் மயிலாப்பூர் குளக்கரையில் ஏறிப் பாண்டி பஜாரில் இறங்கிவிட்ட அழகிய இளம்பெண்ணின் அடையாளங்களைச் சொல்லிப் பையைப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாமா என்று ஒருகணம் தோன்றியது.

அதன் சாதக பாதகங்களைச் சிந்தித்தான் அவன். பையை நாணயமாக ஒப்படைக்கும் தன் மேலேயே சந்தேகப்பட்டு ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள் என்பதும், பைக்கு உரியவர் தேடி வந்து கேட்டாலும் பல சிரமங்களுக்குப் பின்பே அது அவருக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதும் சுலபமாகவே அனுமானிக்கக் கூடியவையாயிருந்தன. இந்திய மக்களுக்கு வெள்ளைக்காரரிடமிருந்து சுதந்திரம் கிடைத்து விட்டாலும் போலீஸ்காரர்களிடமிருந்து. சுதந்திரம் கிடைக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும்போல் தோன்றியது. அப்பாவியான நல்லவர்களுக்கும்-பாமரர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் தொந்தரவு கொடுப்பதும், சந்தேகத்துக்குரியவர்களையும் திருடர்களையும் அயோக்கியர்களையும் நல்லவர்களாக நினைத்து விட்டுவிடுவதும் நமது போலீஸின் அபூர்வ குணாதிசயங்களில் ஒன்று என்று நினைக்குமளவு போலீஸ் இலாகாவை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருந்தார்கள், சீரழியப் பண்ணியிருந்தார்கள்.

பூமிநாதனுக்கே சொந்த முறையில் போலீஸைப் பற்றி நினறய அநுபவங்கள் இருந்தன. அதிகாலையில் விடிந்ததும் விடியாததுமாகச் சவாரியை எதிர்பார்த்து எழும்பூரிலோ சென்ட்ரலிலோ வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினால் “மாமூல் என்றும், ‘நாஷ்டாவுக்கு எதினாச்சும் குடுப்பா’ என்றும் வந்து நிற்கும் போலீஸ்காரர்களைப் பார்த்து அவன் அருவருப்பு அடைந்திருக்கிறான்.

வெறும் நாலணா எட்டணா, லஞ்சத்துக்கே சலாம் போடும் இந்தப் போலீஸ்காரர்கள்தான் லஞ்சம் வாங்கியவர்களையும் ஊழல் செய்தவர்களையும் திருடுபவர்களையும் கைது செய்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும் பூமிநாதனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும். நியாயங்கள் என்னவென்றே புரியாதவர்கள் எப்படி அவற்றைக் காக்க முடியும்? தர்மங்கள் எவை என்றே புரியாதவர்கள் எப்படி அதர்மங்களைத் தடுக்க முடியும்?

பையை போலீஸ் ஸ்டேஷனில் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன். அதே சமயம் அந்தப் பெண் ஏறிய இடம், இறங்கிய இடத்தை வைத்து எந்த விலாசம் என்று கண்டு பிடிக்க முடியாமலுமிருந்தது. மைலாப்பூர்க் குளக்கரையிலோ, பாண்டி பஜாரிலோ அவளை எந்த விலாசத்தில் தேடுவது?

வள்ளுவர் கோட்டத்தின் அருகே ஆட்டோவை ஓரங்கட்டி ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் பையைப் பிரித்தான் அவன், அழகிய பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் உண்டா இல்லையா என்ற பழைய இலக்கியச் சர்ச்சையைக் கேலியாக நினைவு கூர்ந்தபடி நறுமணம் அழகிய பெண்களின் கைப்பைக்கு உண்டா இல்லையா என்ற கேள்வியுடன் பிரித்தால் வாசனை கமகமத்தது. அந்த நறுமணம் அதற்குரியவளையே அருகில் கொண்டு வந்து விட்டாற்போன்ற நளினங்களை உணர்த்தியது.

பூப்போட்ட சிறிய கைக்குட்டை, வெங்காயச் சருகு போன்ற மெல்லிய ரோஸ் நிறத்தாளில் சுற்றிய இரண்டு ஜோடி தங்க வளையல்கள், ஒரு பத்து ரூபாய் நோட்டுக் கற்றை முப்பதோ நாற்பதோ இருக்கலாம். ரோஸ் காகிதச் சுற்றலில் மஞ்சள் மின்னலாய் மின்னும் நெளி நெளியான வளையல்களுக்கு அடியில் முன்புறம் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருப்பது மடிப்பில் பின்புறமே தெரிகிற அளவு ஒரு கடிதம். கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

மிஸ் சித்ரா, எம். ஏ. எம், எட். மாம்பலம், வெங்கட நாராயணா ரோடு வட்டாரத்திலுள்ள அருள்மேரி கான்வென்ட் பள்ளியில் சமீபத்தில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டதற்கான நியமனத்தாள் அது. அதை வைத்துத்தான் அவளைத் தேடி அந்த நர்ஸரிப் பள்ளிக்குச் சென்று அவளது கைப்பையைத் திருப்பி கொடுத்திருந்தான் பூமி

நினைவுகள் அருள்மேரி கான்வெண்ட்டிற்குள் அவளைப் பின் தொடர்ந்து போய் நுழைந்து கொள்ள ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பனகல் பார்க் முனையும் வெங்கட நாராயணா சாலையும் சந்திக்குமிடத்தில் மர நிழலில் வந்து காத்திருந்தான்.

காத்திருக்கும் நேரங்களில் படிப்பதற்காக ஆட்டோவில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எப்போதும் நாலைந்து புத்தகங்கள் வைத்திருப்பது பூமிநாதனின் வழக்கம்.

மகாகவி பாரதியார் கவிதைகளை எடுத்தான். புதுமைப் பெண் என்ற பெண் விடுதலைப் பாடல் அச்சாகி இருந்த பக்கம் தற்செயலாக விரிந்தது.

"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.”

என்ற வரிகள் அவன் பார்வையில் பதிந்தன, நவீன உலகம் பேசுகிற பெண் விடுதலை இயக்கம் பற்றி அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கும் தமிழ்நாட்டு மகாகவியின் தீர்க்கதரிசனம் அவனை மெய்சிலிர்க்கச் செய்தது.

‘ஞானச் செருக்கு’ என்ற அந்தக் கம்பீரமான பதச்சேர்க்கையின் அழகும் சற்றுமுன் சந்தித்த சித்ராவின் அழகும் உடன் நிகழ்ச்சியாகச் சேர்ந்தே அவன் நினைவில் மேலெழுந்தன.

நேரெதிர் எதிர்க்குணமுள்ள நெருப்பின் பிரகாசத்தையும், சந்தனத்தின் குளிர்ச்சியையும் அளவாய் இணைத்தாற் போல் ஞானம் என்கிற உடன்பாட்டுக் குணத்தையும், செருக்கு என்ற எதிர்மறை குணத்தையும் அளவாக, ஆழகாக இணைத்த பதச்சேர்க்கையில் மனம் நெகிழ்ந்து களித்தான் அவன். ‘ஞானமில்லாத செருக்கும், செருக்கில்லாத ஞானமும். சோபிப்பதில்லை’ என்பதை எவ்வளவு நாசூக்காக உணர்த்துகிறார், மகா கவி -- என்று பூமிதாதன் அந்தப் பதப்பிரயோகம் என்கிற சொல் ராகமாலிகையிலும், அதேபோல் அளவாய், அழகாய் இணைந்திருந்த சித்ரா என்கிற சௌந்தர்ய ராகமாலிகையின் தோற்ற மயக்கத்திலும் மூழ்கினான்.

அந்த இடத்தில் சவாரி எதுவும் சிக்கவில்லை. அவன் வந்து நிறுத்திய பின், அரைமணி நேரத்திற்குள் மேலும் இரண்டு மூன்று ஆட்டோக்கள் வேறு வந்து நின்றுவிட்டன்.

மாம்பலத்தில் பஸ் ஸ்டாண்டு அருகேயும் சிவா விஷ்ணு கோவில் அருகேயும் சவாரிகள் கிடைக்கிற மாதிரி இந்த இடத்தில் கிடைக்காது. ஆட்டோ மினிமம் ஒரு ரூபாய் எழுபது காசுக்கு உயர்ந்த பின் பலர் ஆட்டோவில் டோவதையும் விட்டுவிட்டார்கள். டாக்ஸிக்காரர்கள் சவாரி கிடைக்காமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள் என்றால் ஆட்டோக்காரர் கொசு ஓட்ட வேண்டிமிருந்தது.

அவனுக்குப் பின் வந்து நிறுத்திய மூவருமே பொறுமை இழந்து சவாரி தேடி வேறு இடத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அவன் மட்டும்தான் அந்த இடத்தையும், அதன் இனிய நினைவுச் சார்புகளையும், நிழலையும் விட்டுப் போக மனமின்றி, அங்கேயே காத்திருந்தான்.

பாரதியார் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போதே மனம் மீண்டும் சித்ராவின் திசையில் திரும்பியது.

சித்ரா தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று கற்பனை செய்ய முயன்றன் பூமிநாதன், தான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுபோல் அவளும் தன்னைப் பற்றி நினைப்பாள் என்றே அவனுக்குத் தோன்றியது.

நிரத் சௌத்ரியையும், மகாகவி பாரதியாரையும் இரசிக்கும் அளவு ஐ. க்யூ. உள்ள ஓர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவனை அவளுடைய வாழ்நாளிலேயே முதல் தடவையாக இன்று காலையில்தான் அவள் பார்த்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

பத்து ரூபாயை எடுத்து இனாமாக நீட்டினால், அது போதாது என்ற கோபத்தில் எடுத்து நீட்டியவரை உதாசீனப்படுத்திச் சீண்டிவிடும் கொச்சையான ராஜதந்திரத்தோடு, “வேணாம் நீயே வச்சிக்க”.. என்று திருப்பித் தரும் ஆட்டோ , டாக்ஸி டிரைவர்களே நிரம்பிய நாகரிகமயானமான சென்னை நகரத்தில் தயவு செய்து நான் யோக்கியனாக இருப்பதற்கு விலை நிர்ணயித்து விடாதீர்கள்’ -- என்று புன்னகையோடு நாசூக்காகப் பணத்தை மறுத்த தன்னைப் பற்றி அவள் எப்படி உயர்வாக நினைப்பாள்?

இதைச் சிந்தித்தபோது அவன் உள்ளம் காதல் மயமாகி நெகிழ்ந்து போயிருந்தது. கையிலிருந்த புத்தகத்தைத் தோன்றியபடி எல்லாம் புரட்டியபோது “சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள்"---என்றொரு தொடர் தென்பட்டது. அந்தத் தொடர் சித்ராவின் குரலை நினைவூட்டியது.

பகல் மணி பதினொன்று: இனி இங்கே சவாரி கிடைக்காது என்ற முடிவுடன் புறப்படுவதற்காகப் பூமிநாதன் வண்டியை உலுக்கி ஸ்டார்ட் செய்தபோது அவன் தெருவில் அவனுடைய வீட்டருகேயே குடி இருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் கன்னையன் அங்கு வந்து சேர்ந்தான். கன்னையனிடம் ஒரே பரபரப்பு.

“பூமி! உன்னை எங்கேயெல்லாம்ப்பா தேடறது? உடனே ராயப்பேட்டா ஆஸ்பத்திரி ‘அவுட் பேஷண்ட்’ வார்டாண்டே போ... உங்க அம்மா... குழாயடிலே மூர்ச்சையா விழுந்திடுச்சு. நம்ப குப்பன் பையன்தான் அவன் வண்டிலே போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். நீ உடனே போ... சொல்றேன்.”

பூமி இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பறந்தான். நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்தில் ஒரே பதற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/1&oldid=1028928" இலிருந்து மீள்விக்கப்பட்டது