13

செயலுக்குச் சோம்புகிறவர்களை விட செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச் சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள்.


முத்தக்காளுக்கு ஒரு பிரமிப்பே ஏற்பட்டிருந்தது, எதிரிகள் துவம்சம் பண்ணிவிட்டுப் போயிருந்த நிலையில் நீண்ட காலத்துக்கு அந்த மெஸ்ஸை ஒழுங்கு செய்து நடத்தவே முடியாமற் போகுமோ என்று பயந்திருந்தாள். அப்புறமும் அதை அங்கே நடத்த விடுவார்களோ என்று தயங்கும் அளவிற்கு அவளை அச்சுறுத்திவிட்டுப் போயிருந்தார்கள் கலகக்காரர்கள். அதனால்தான் அவளுடைய ஆற்றாமையும் கோபமும் கலந்த மன நிலையில் ‘இவ்வளவிற்கும் காரணம் பூமிதானே?’ என்று ஆத்திரம் ஏற்பட்டிருந்தது. பூமியும் சித்ராவும் தன்னைப் பார்க்க இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்தபோது கூட அவள் ஆத்திரத்தோடும் மனத்தாங்கலோடும்தான் அவர்களை எதிர்க் கொண்டாள்.

இப்போது அப்படி முன்பு நடந்து கொண்டதற்காக முத்தக்காளே உள்ளூர வருந்தினாள். பூமி அசுர சாதனை செய்து மெஸ்ஸை மறுபடி உயிர்ப்பித்திருந்தான். உண்மையில் அது அசுர சாதனையாகத்தான் தோன்றியது முத்தக்காளுக்கு. தானோ வேறு யாராவது தனக்கு வேண்டியவர்களோ முயன்றிருந்தால் கூட இவ்வளவு விரைவில் மெஸ்ஸை நடத்த முடியுமா என்ற மலைப்பு இப்போதும் அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

மாலைவேளை முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் சித்ரா தற்செயலாக மெஸ் பக்கம் வந்தாள். அவள் வந்தபோது மெஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பின் பக்கத்து அறையில் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து படுத்திருப்பதைச் சொல்லி அவளோடு சிறிது ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்குமாறு சித்ராவை அனுப்பி வைத்தான் பூமி.சித்ரா அவன் சொன்னபடியே செய்தாள்.

நீண்டநாள் பழக்கமுள்ள வாடிக்கையாளர்களான வேறு இரண்டொரு டாக்ஸி டிரைவர்களும் முத்தக்காளைப் பார்த்துப் பேசவேண்டுமென்று பூமியிடம் கேட்டுக்கொண்டு பின்பக்கத்து அறைக்குப் போய் விசாரித்துப் பேசிவிட்டு வந்தார்கள். மற்றபடி மெஸ் விஷயமாக அவளை யாரும் போய்த் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான் பூமி. மனமும் உடலும், நொந்து போயிருக்கும் அவளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று பூமி எல்லாவற்றையும் மற்றவர்களும் தானுமாகச் சமாளித்துக் கொண்டான்.

ஆட்டோ டாக்ஸி, டிரைவர்கள் யூனியன் பூமியின் மேல் கொடுக்கப்பட்டிருந்த புகாரையும் வழக்கையும் சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறச் செய்யும்படி முயன்று கொண்டிருந்தது. அந்தத் தகவலையும் சம்பந்தப்பட்ட ஓர் ஆள் வந்து தெரிவித்து விட்டுப் போனான். மெஸ் தாக்கப்பட்டது சம்பந்தமாக யூனியன் முயற்சியால் மயிலாப்பூர் தேரடியில் ஒரு கண்டனக் கூட்டத்துக்கு வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

தாக்கப்பட்டு மறுபடி புதிதாக நடக்கத் தொடங்கிய பிறகு மெஸ்ஸில் கூட்டமும் வரவும் அதிகரித்திருந்தன. டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களின் ஒற்றுமை உணர்வு முன்னெப்போது இருந்ததையும் விட அதிக இறுக்கமாகி இருந்தது.

அந்த வார இறுதியில் சித்ரா அப்பர்சாமி கோயில் தெருவில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வீட்டிற்குக் குடியேறிவிட்டாள்.

பூமியின் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டுக் காலையிலும் மாலையிலும் அவள் மெஸ்ஸுக்கு வந்து வரவு செலவு சரி பார்ப்பது, கணக்கு எழுதுவது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டாள்.

அதிகாலையில் கொத்தவால்சாவடியிலிருந்து மொத்தமாகக் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வந்து போடும் பொறுப்பைப் பூமியின் ஆட்டோ உட்பட நாலைந்து ஆட்டோக்கள் தங்களுக்குள் நாள்முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிச் செய்தன.

ஒரு பழங்காலத்துத் தண்ணீர்ப் பந்தலைப்போல நடந்து வந்த பழைய மெஸ்ஸைப் புதிதாகவும், பெரிதாகவும், விரிவாகவும் ஆக்கியிருந்தான். பூமி.

அந்தச் சில நாட்களில் அவன் ஆட்டோ பக்கமே போகவில்லை. எடுத்துக் கொண்ட சவாலை ஏற்று வெற்றியாக்கிக் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் பூமி பம்பரமாகச் சுறுசுறுப்புடன் உழைத்தான். நடுவில் ஒருநாள் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கூட வந்து பார்த்து விட்டுப் போனார்.

“உண்மையான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் செய்து காட்ட முடியும் பூமி! இன்று இந்த நாட்டில் உழைக்க முடியாத உழைக்க நினைக்காதவர்களை விட உழைக்க வேண்டும் என்று நினைக்கவே சோம்பல் படுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். செயலுக்குச் சோம்புகிறவர்களை விடச் செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச்சதை போல் வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை உன் அருகில் கூட அண்டவிடாதே” என்று பூமியை அக்கறையோடு எச்சரித்துவிட்டுப் போயிருந்தான் பரமசிவம்.

பயிற்சி வகுப்புகள் அறவே நின்று போயிருந்ததால் பூமியின் கராத்தே மாணவர்கள் வேறு தேடி வரத் தொடங்கினார்கள். சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு அவன் சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. முத்தக்காள் உடல் நிலை தேறி எழுந்து நடமாடுகிற அளவு அபிவிருத்தி அடைந்திருந்தாள். அவளுக்கு வேண்டியவர்களெல்லாம், “காலம் ரொம்பவும் கெட்டுக் கிடக்கு, இனிமே நீ தனி ஆளா மெஸ்ஸை நடத்தறது முடியாத காரியம். அந்தப் பையன் பூமியையும் கூட இருக்கச் சொல்லு. விட்டுவிடாதே!” என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

முத்தக்காளுக்கும் அந்த யோசனை சரி என்றே பட்டது. ஹோட்டலோ; சினிமாக் கொட்டகையோ எதுவானாலும் அக்கம் பக்கத்திலே நாலு பேர் பரிந்து கொண்டு வருவதற்கு இல்லாவிட்டால் எந்த சமூக விரோதி வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கலகம் பண்ணுகிற மாதிரித்தான் ஆகியிருந்தது.

எல்லாப் பகுதிகளிலும், எல்லாப் பேட்டைகளிலும். மிரட்டி ஏய்த்துப் பிழைக்கிற ரெளடிக் கூட்டம் ஒன்று. இருந்தது. சில சமயங்களில் அப்படிக் கூட்டம் ஏதாவதோர் அரசியல் கட்சியின் சார்பையும் தோதாகத் தேடி வைத்துக் கொண்டிருந்தது. வசூல்களே சில கட்சிகளின் அன்றாடக் கொள்கையாக இருந்தன. பிளாட்பாரத்தில் கடை வைக்கிற பங்காரம்மாள் முதல் பளபளப்பான ஷோரூமுடைய கடை வரை எல்லாரையும் மிரட்டிப் பணம் பண்ண அவர்கள் கற்றிருந்தார்கள்.

முத்தக்காள் பூமியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்தத் தம்பி தன்னோடு இருந்து, மெஸ்ஸை நிர்வாகம் செய்ய ஒப்புக் கொள்ளுமா கொள்ளாதா என்பது அவளுக்குப் புரியவில்லை. அநுமானிக்க முடியாமலும் இருந்தது அது.

ஒரு நாள் மாலை இதைப் பற்றி பேசுவதற்காக முத்தக்காள் பூமியை அழைத்துக் கொண்டு தன்னுடைய பின் பக்கத்து அறைக்குப் போனாள்.

அந்த நேரத்தில் சித்ரா கல்லாப் பெட்டிக்கு அருகே அமர்ந்து பில்களுக்கு பணம் வாங்கிப் போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது சில்க் சட்டை முகத்தையே மறைக்கிற அளவு பெரிதாகக் கருப்புக் கண்ணாடி, வாயில் பைப், சகிதம் மினுமினுப்பான மேனியோடு ஓர் இரட்டை நாடி சரீர ஆள் பூமியைத் தேடி வந்தார்.

“இங்கே பூமிங்கறது யாரும்மா?”

“உள்ளே வேலையா இருக்காரு... உட்காருங்க... இதோ. வந்துடுவாரு." வந்த ஆள் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி “எனக்கு உட்கார நேரமில்லே...அவசரம்! நான் பூமியை உடனே பார்த்தாகணும்” என்று பறந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/13&oldid=1028941" இலிருந்து மீள்விக்கப்பட்டது