28

விவரந் தெரிந்த கோழைகளுக்கும் விவரம் தெரியாத முரடர்களுக்கும் நடுவே சிக்கி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன.

சித்ராவின் தோழிகளான அந்த ஆசிரியைகளின் பிரச்னைகளைப் பற்றி முதலில் லெண்டிங் லைப்ரரி பரமசிவமும் பூமியும் கலந்து ஆலோசித்தார்கள். பின்பு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற கல்வித்துறைப் பிரமுகர் ஒருவரைத் தேடிப் போய்ச் சந்தித்தார்கள். எல்லாரும் ஒரே குறையைத்தான் சொன்னார்கள்.

“புடித்த வர்க்கத்தை ஒன்று சேர்ப்பது ரொம்பச் சிரமம். நெல்லிக்காய் மூட்டையைப் போலத்தான். சாக்கைக் கொஞ்சம் பிரித்துத் தளர்த்தினால் போதும. மூலைக்கொருவராகச் சிதறி ஓடிவிடுவார்கள். துணிந்து தாங்களே முன் வந்து தீமையை எதிர்ப்பதற்குப் பயப்படுவார்கள். யாரோ ஒரு தைரியசாலி வெகுஜன விரோதியாகி அத்தனை விரோதத்தை யும், அத்தனை கெட்ட பேரையும் சம்பாதித்துக் கொண்டு துணிந்து முன் நின்று தீமையை எதிர்த்து நல்லதைச் சாதித்த பின் முன்பு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த அத்தனை பேரும் அந்த நல்லதில் பங்கு கேட்டு வருவார்கள். இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கம் அல்லது வெள்ளைக்காலர் வர்க்கத்தின் இலக்கணம் இதுதான்.

“அந்த இலக்கணத்தை இனிமேலாவது மாற்றியாக வேண்டும் அல்லது மீறியாவது தீர வேண்டும்.”

“என்னுடைய முப்பத்தெட்டு வருட உத்தியோகம் அநுபவத்தில் இதை மாற்ற முயன்றவர்களையும் மீற எத்தனித்தவர்களையும் குறைந்த அளவில் கூட பார்த்ததில்லை.”

“அது பழைய தலைமுறை! இனி இந்தத் தலைமுறையில் இது அப்படி இராது. தீவிர மாறுதல் ஏற்படும்”

“நம் நாட்டைப் பொறுத்தவரையில் தலைமுறைகள்தான் மாறுகின்றனவே ஒழிய மனிதர்கள் ஒன்றும் மாறுவதில்லை.”

அந்த ஓய்வு பெற்ற கல்வித்துறைப் பிரமுகர் நாட்டின் மந்த கதியைப் பற்றி மிகவும் சசப்புடன் கோபத்துடனும் பேசினார்.

இன்று இருக்கும் அதே இலட்சிய வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் சுயமரியாதை உணர்வுடனும் தான் தமது இளமையில் தாம் இருந்ததாகவும் அதற்கு இந்த நாடு தயாராகவோ பக்குவமாகவோ இல்லை என்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

“சில சமயங்களில் விளக்கின் அடியில்தான் இருட்டு அதிகமாக இருக்கும். அந்த மாதிரிக் கல்வித் துறையில் தான் ஊழல்களும், பொருமையும் அதிகம் என்பது என் அநுபவம்.”

அவரிடம் அதிக நேரம் பேசி யோசனை கேட்டுக் கொண்டு திரும்பினார்கள் பூமியும் பரமசிவமும், ஆசிரியைகளின் குறைகளையும், அவர்கள் சார்ந்திருந்த பள்ளியின் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒரு மகஜராகத் தயாரித்து, அந்த மகஜரில் மனத்தாங்கல் உள்ள அத்தனை ஆசிரியர்களிடமும் கையெழுத்து வாங்கி டி.இ.ஓ. கல்வித்துறைச் செயலாளர், மத்திய கல்வி போர்டு, அமைச்சர்கள் ஆசியோருக்கு அனுப்பும்படி யோசனை கூறியிருந்தார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

பூமியும் சித்ராவும் வேறு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகஜரைத் தயாரித்து அதை டைப் செய்வதற்கும், பிரதிகள் எடுப்பதற்குமாகப் பத்து ரூபாய் வரை கைப்பணத்தைச் செலவழித்தார்கள். மகஜரின் கீழே முதல் கையெழுத்தைச் சித்ராவே போட்டாள். மற்றவர்களின் கையொப்பங்களை வாங்க முயன்றபோது அவர்கள் ஒவ்வொருவராகச் சாக்குப் போக்குச் சொல்லி நழுவ முயன்றார்கள். ஒதுக்கினார்கள். தட்டிக் கழித்தார்கள்.

“கையெழுத்தெல்லாம் வேண்டாம்! நம்ப முயற்சி பலிக்காமப் போயி யார் யார் கையெழுத்துப் போட்டு மகஜர் அனுப்பினோம் என்கிற விவரம் எப்படியாவது மேனேஜ்மெண்டுக்குத் தெரிஞ்சு போச்சுன்னா நம்மைப் பழி வாங்கிடுவாங்க. அதனால் யார் பேரையும் கீழே போடாமல் மகஜரை டைப் செஞ்சு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள்னு மட்டும் மொட்டையா எழுதி தபாலில் போட்டுவிடலாம்.” என்று சித்ராவுக்கு அவர்களே மாற்று யோசனை வேறு கூற முன்வந்தார்கள்.

“கையெழுத்துப் போடப்படாத மொட்டைக் கடிதாசியை யாரும் மதிக்க மாட்டார்கள். அம்மாதிரிக் கடிதங்களை அடிப்படையாக வைத்து எந்த அதிகாரியும் மேல் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். கையெழுத்துப் போட்டு விலாசத்தோடு அனுப்புகிற முறையான கடிதங்களைக் கவனிக்கவே சர்க்கார் அலுவலகங்களில் மாதக் கணக்கில் ஆகும்போது மொட்டைக் கடிதாசியை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்று சித்ரா சுடச் சுடக் கேட்டாள். அவர்கள் பதில் பேசாமல் விழித்தார்கள்.

அவளுடைய கேள்விக்குப் பின்பு மகஜரில் இன்னொரு கையெழுத்து வந்தது. அது அவளுடைய தோழியும் சிநேகிதியுமான தேவகியின் கையெழுத்து.

அதற்குப் பின் அந்த மகஜரில் மூன்றாவது கையெழுத்து எதுவும் வாங்கவே முடியவில்லை. தன்னிடம் வந்து குறை கூறிய ஆசிரியைகளை மீண்டும் பூமி சந்திக்க விரும்பினான். ஆனால் அவர்கள் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள்.

பள்ளிக்கு வந்து சந்திப்பதற்கு அவர்கள் தயாராயில்லை என்றும் பூமியைத் தேடி வந்து சந்திப்பதற்கு அவர்கள் தயாராயில்லை என்றும் சித்ரா நிலைமையை விளக்கினாள். ஐலண்டு மைதானத்தில் நடக்கும் ஒரு எக்ஸ்பிஷனுக்காக மாணவர்களை அழைத்துக்கொண்டு அன்று பிற்பகலில் ஆசிரியைகள் போக இருப்பதாகச் சித்ரா கூறினாள்.

முன் தகவல் எதுவும் தெரிவிக்காமலே திடீரென்று அவர்களை அங்கே வந்து தான் சந்தித்துக் கேட்கப் போவதாகப் பூமி கூறினான்.

“எங்கே வந்து கேட்டாலும் பயனில்லை, நீங்கள் சந்தித்த பழைய கல்வி அதிகாரி உங்களிடம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். இவர்கள் பயந்து சாகிறார்கள். இந்த தேசத்தில் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் படிப்பும் கோழைத்தனமும் இரட்டைப் பிறவிகளாக இருக்கின்றன."என்றாள் சித்ரா.

பூமி நம்பிக்கை இழக்கவில்லை. சித்ரா சொல்லியதிலுள்ள உண்மை அவனுக்கு புரிந்தாலும் இன்னொரு தடவை அந்த ஆசிரியைகளிடம் பேசி முயன்று பார்க்கலாம் என்று இருந்தான் அவன். பயமும் கோழைத்தனமும் இந்நாட்டுக் கல்வியின் உடன் பிறந்தே கொல்லும் வியாதிகளாக இருந்து வருவது உண்மைதான். அறிவுள்ளவர்களின் பயமும் சரி, அறிவற்றவர்களின் துணிவும் சரி, இரண்டுமே இந்நாட்டில் தேவைக்கதிகமாக இருந்தன. அவர்கள் அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சிச் செத்தார்கள். இவர்கள் அஞ்ச வேண்டியதற்குக்கூட அஞ்சாத அளவு முரடர்களாயிருந்தார்கள். விவரந் தெரிந்தது. கோழைகளுக்கும், விவரம் தெரியாத முரடர்களுக்கும் நடுவில் சிக்கி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன. விவரந்தெரிந்தவர்கள் அளவற்றுப் பயந்து தயங்கிக் கூசினார்கள். விவரந் தெரியாதவர்கள் அளவற்றுத் துணிந்து முந்திக் கொண்டு எல்லாவற்றை யும் செய்ய முற்பட்டிருந்தார்கள்.

அன்று மாலை சித்ராவும், பூமியும் தீவுத்திடலில் அந்தப் பொருள் காட்சிக்கு போன போது வானம் மப்பும் மந்தாரமுமாக மூட்டம் போட்டிருந்தது. சூழ்நிலை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாகவும் இதமாகவும் இருந்தது.

சித்ராவின் தோழிகளான ஆசிரியைகள் மாணவர்களோடு பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். தேவகியையும் சித்ராவையும் தவிர மற்ற ஆசிரியைகள் பூமியைக் கண்டதுமே ஏதோ பேய் பிசாசைப் பார்த்துவிட்டதைப் போலப் பயந்து செத்தார்கள்.

அவர்களுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பலரைச் சந்தித்து அரும்பாடுபட்டுக் கைப் பணத்தைச் செலவழித்து தானும் சித்ராவுமாக அந்தப் பெட்டிஷனைத் தயாரித்ததை விவரித்தான் பூமி. அவர்கள் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே தயாராயில்லை. அந்தப் பேச்சைத் தவிர்த்தார்கள்.

பூமி விடாமல் வற்புறுத்தவே ‘எங்க கரஸ்பாண்டெண்டுக்கு எல்லா சர்க்கார் ஆபீஸ்லியும் நிறைய வேண்டியவங்க உள்கையா இருக்காங்க, பெட்டிஷன் அங்கே போனதுனு யார் யார் அதிலே கையெழுத்துப் போட்டிருக்கோம்ன்னு அவருக்கு உடனே தெரிஞ்சு போயிடும்’ என்று ஒரு மூத்த ஆசிரியை பயத்துக்குக் காரணத்தை விளக்கினாள்.

அரை மணி நேரத்துக்கு மேல் பூமி மன்றாடியும் பயன் விளையவில்லை.

ஏமாற்றத்தோடு சித்ராவும், பூமியும் திரும்பிய போது அங்கே பொருட்காட்சி இயங்கிக் கொண்டிருந்த ராட்-டினம் (ஜியண்ட் வீல்) ஒன்றைச் சுட்டிக் காட்டி, ‘எனக்கு அதிலே ஏறிச் சுத்திப் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு’ என்றாள் சித்ரா.

பூமிக்கு அப்போது அதில் ஈடுபாடு இல்லை என்றாலும் சித்ராவுக்காக உடன் வர இசைந்தான். ஜியண்ட் வீலில் ஆசனங்கள் இரண்டிரண்டு பேருக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக இருந்தன. கட்டணம் கட்டி டிக்கட் வாங்கிய பின்னர் பூமியும் சித்ராவும் ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்தனர்.

ராட்டினம் முதலில் மெதுவாக இயங்க ஆரம்பித்துப் பின் வேகமாகச் சுற்றத் தொடங்கியது. வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சித்ரா பயப்பட ஆரம்பித்தாள். அவள் முகத்தில் வேர்த்தது, பயமும் பதற்றமும் தெரிந்தன.

“பழக்கமில்லாதவர்களுக்கு அதிக வேகம் ஒத்துக் கொள்ளாது” என்றான் பூமி”.

“யாரைச் சொல்கிறீர்கள்?”

“தனியாக யாரையும் சொல்லவில்லை, எல்லா ஆசிரியைகளுக்குமே இது பொருந்தும்.”

“இல்லை பொருந்தாது! நானும் தேவகியும் மகஜரில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம்” என்று அவனை நோக்கிப் புன்னகையோடு பதில் கூறினாள் சித்ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/28&oldid=1029075" இலிருந்து மீள்விக்கப்பட்டது