சாயங்கால மேகங்கள்/3
தமிழ்நாட்டு இளைய தலைமுறைக்குத் திரு. வி. க. வைத் தெரியவில்லை. சிவாஜி கணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை. ஜெயமாலினியைத் தெரிகிறது... உருப்படுமா இது?
தனி மனிதனின் சிறிய துயரங்கள் எந்த நகரத்தின் பெரிய வாழ்க்கை வேகத்தையும் எள்ளளவு கூடத் தடுத்து நிறுத்துவதில்லை. ஒரு நகரத்தின் அடையாளம் புரியாத பொது உல்லாசங்களை அடையாளம் புரிந்த தனி மனிதர்களின் துயரங்கள் ஒரு விநாடிகூடத் தடுத்து நிறுத்த முடியாது, .. இயலாது, செளகரியப்படாது.
மாபெரும் சென்னை என்கிற ஜன ஆரண்யத்திற்குள் பூமி தாயை இழந்ததும், சித்ரா தந்தையை இழந்ததும் நடந்து மறந்த நிகழ்ச்சிகளாக’ : மறைந்து மங்கிவிட்டன. மறைந்தவர்களை மறப்பதும் மறந்தவர்களை மறைப்பதும் பெரிய நகரங்களின் கலாச்சார குணாதிசயங்களில் ஒன்று.
பூமி இரண்டு மூன்று நாட்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். பயம், சோர்வு இவற்றை என்னவென்றே அறியாத அவன், முதல் முதலாகப் பயத்தின் ஆரம்பங்களான வெறுமையையும் தனிமையையும் தன்னைச் சுற்றி உணரத் தலைப்பட்டான்.
எங்கும் ஓடியாடிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவனுக்குப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும், படித்துக் கொண்டே வீட்டில் புதைந்து கிடப்பது அலுப்பூட்டுவதாயிருந்தது. தேங்குகிற தண்ணீர் மெல்ல மெல்ல நாற்றமெடுத்துக் கொசு மொய்ப்பதற்கு இலக்காகி விடுவதைப் போல இயக்கமற்றுப் போகிற மனிதனும் ஆகிவிடுகிறான். உடலால் இயக்கமற்று முடங்குவதைவிட மோசமானது மனத்தால் இயக்கமற்று முடங்குவது.
தன் தாயின் மரணம் பூமியின் உடல் இயக்கத்தை மட்டும் பாதிக்கவில்லை, மன இயக்கத்தையும் பாதித்திருந்தது. தாயைப் பிரிந்து வாழவே முடியாத அளவு செல்லப் பிள்ளையாக அவன் வளர்ந்துவிடவில்லை. ஆனாலும் தாயின் பிரிவு அவனைப் பாதிக்கவே செய்திருந்தது. பாரதியாரின் கவிதைகள் அவனுக்குத் தெம்பும், நம்பிக்கையும் ஊட்டின். தமிழ்ப் பத்திரிகைகளின் நைந்து போன ஃபார்முலா எழுத்துக்கள் அவனுக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஊட்டின. வைக்கோலை தின்பது போல் சக்கை சக்கையாயிருந்தது. வாழ்க்கையின் ஆழத்தையும், அகலத்தையும் அவை சார்ந்திருக்கவில்லை. வீடுதோறும் விளங்கி அலங்கரிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் படு பிரபலமான குடும்பப் பத்திரிகை ஒன்று ‘வெல்வெட் விநோதாவுக்கு தோளில் மச்சமிருக்கிறதா இடுப்பில் மச்சமிருக்கிறதா?’ என்பதைக் கண்டுபிடிக்கும்படி தன் வாசகர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவில் ஒரு போட்டி வைத்திருந்தது. கொஞ்சம் சிரமமானாலும் வாசகர்கள் தலைஎழுத்து. அதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
இயல்பாகப் பூமி, தமிழ்ப் பத்திரிகைகளை அதிகம் படிப்பதில்லை. தமிழில் பாரதியார், புதுமைப்பித்தன், கு. ப. ரா போன்றவர்களின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வீக்லி, இண்டியா டு டே முதல் பல பத்திரிகைகளையும் படிப்பது அவன் வழக்கம்.
இப்படி வீட்டிலே அடைந்து கிடக்கிறானே என்று அவன் மேல் இரக்கப்பட்டுக் கன்னையன் லஸ் கார்னரிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து தள்ளியிருந்த தமிழ்ப் பத்திரிகைகள் பல இரண்டு வாரக் காலம் வெந்நீர் அடுப்புக்கு உதவுகிற அளவு போதுமானவை.
தாயின் படம் ஒன்றை என்லார்ஜ் செய்து வீட்டு முகப்பில் மாட்ட வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது. தனித்தனியான பாலிதின் உறைகளில் சேர்த்து வைத்துக் கொணர்ந்திருந்த சிங்கப்பூர் நெகடிவ்களைத் தேடிக்குடைந்து, தாய் சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் அருமையான படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான் பூமி. சாயங்காலம் அதை இராயப்பேட்டை ஹைரோடிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் கொடுத்துப் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்டான்.
கிருஷ்ணாம்பேட்டை மயானத்து முகப்பில் தாயின் இரண்டாம் நாள் காரியத்துக்காகப் போயிருந்த காலை வேளையில் சித்ராவைச் சந்தித்த பின் மறுபடி பூமி இன்று வரை அவளைச் சந்திக்க நேரவே இல்லை.
அன்று இரண்டாம் நாள் காலையில் சந்தித்தபோது தான் பாலாஜி நகரில் குடியிருப்பதாக அவள் கூறியிருந்தது, . பூமிக்கு நினைவு வந்தது. பாலாஜி நகரிலிருந்து மாம்பலத்தில் உள்ள பிரைவேட் நர்ஸரி ஸ்கூலுக்கு வேலை செய்யப் போகிறாள் என்பதை நினைத்தபோது கொஞ்சம் அநுதாபமாகக்கூட இருந்தது. தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வருகிறவர் களின் தொலைவை நினைத்தபோது இவள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றியது. பாலாஜி நகரில் வசிப்பவள் முதல் முறையாகத் தன் ஆட்டோவில் ஏறி நேர்ந்தபோது எப்படி மயிலாப்பூரில் ஏறினாள் என்று சிந்தித்தான் அவன். ஏதாவது காரியமாக அவள் அங்கே வந்திருக்க வேண்டும் என்று அநுமானிக்க முடிந்தது.
வெளியே ஆட்டோவில் சவாரிக்காகவும், சவாரியோடும் சுற்றுகிறபோது புத்தகம் படிக்க விரும்புகிற மாதிரி இப்போது வீட்டில் அடைந்து கிடக்கிறபோது அதிகம் விரும்ப முடியவில்லை, திகட்டியது. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இருந்தன. அப்பட்டமான வர்த்தக யந்திரத்தின் போட்டி வெறி என்ற வக்கிரமான கலாசாரத்தில் இதழ்கள் சீரழிந்திருப்பதைத்தான் கன்னையன் வாங்கிக் குவித்திருந்த பத்திரிகைகள் நிரூபித்தன.
பத்திரிகைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. அவனுக்கு வழக்கமாகப் புத்தகங்களை வாடகைக்குத் தரும் லெண்டிங் லைப்ரரி லாயிட்ஸ் சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கிற முனையில் இருந்தது.
‘திரு. வி, க, நூல் நிலையம்’ என்ற பெயரில் அந்த லெண்டிங் லைப்ரரியை நடத்தி வந்த பரமசிவமும் பூமியைப் போலவே ஒரு படித்த வேலையில்லாப் பட்டதாரிதான்.
அவன் சுயமுயற்சியாக அந்த லெண்டிங் லைப்ரரியைத் தொடங்கியிருந்தான். மாதம் ஐந்து ரூபாய் சந்தாவில் முந்நாறு முந்நூற்றைம்பது பேர் சேர்ந்திருந்தார்கள். கிடைக்கிற மொத்த வருமானத்தில் இட வாடகை, தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் புதிய புத்தகங்கள் வாங்கி முதலீடு ஆகியவை போகப் பரமசிவத்துக்கு மாத ஊதியமாகக் கொஞ்சம் மிஞ்சியது. ஊதியம் கொஞ்சமென்று பாராமல் அயராமல் உழைத்தான் பரமசிவம்.
படித்துப் பட்டம் பெற்றுவிட்டுத் தேசிய குணசித்திரங்களில் ஒன்றான சோம்பலுடனும் கையாலாகத்தனத்துடனும் பெற்றோர் செலவில் சாப்பிட்டுக் காலந்தள்ளும் பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவனாக இருந்து விடாமல் எதையாவது சுயமுயற்சியாகத் தொடங்க வேண்டுமென்று தொடங்கி நடத்தும் பரமசிவத்தைப் பூமி மிகவும் விரும்பினான். தானே முயன்று சொல்லியும் சிபாரிசு செய்தும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்கு நிறையச் சந்தாதாரர்களைச் சேர்த்து விட்டு உதவியிருந்தான் பூமி. பரமசிவம் அந்த லெண்டிங் லைப்ரரியையே ஓர் இலக்கிய இயக்கமாக நடத்தி வந்தான். பரமசிவத்தைச் சந்தித்துப் பேசினால் ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கும். பரமசிவம் தெளிவான திட்டவட்டமான மனிதன்.
பூமியின் தாய் இறந்த தினத்தன்று இரவு எல்லாரையும் போலப் பரமசிவமும் துக்கத்துக்கு வந்து விட்டுப்போயிருந்தான். அதற்குப் பின் பூமியும் பரமசிவமும் சந்தித்துக் கொள்ள நேரவில்லை. பரமசிவத்தின் மேல் பூமிக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தது ஒரு சம்பவம். பரமசிவத்தின் கொள்கைப் பிடிப்பும் திட நம்பிக்கையும் பூமிக்கு அப்போது தான் புரிந்தன.
முன்பு பூமி பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போயிருந்த ஒரு சமயம் ஒரு வாடிக்கைக்காரர் அவனோடு சத்தம் போட்டு இரைந்து கொண்டிருந்தார்.
“என்ன சார் லைப்ரரி இது? ரொம்ப ஸ்டாண்டர்டு புக்ஸா வெச்சிருக்கீங்க? எங்களுக்கு வேண்டியது செக்ஸ், கிரைம் இம்மாதிரிக் கதைப் பொஸ்தகங்கள்தான், படிச் சுட்டு உடனே மறக்கற மாதிரி லைட் புக்ஸ்தான் வேணும்.”
“மறக்கறதுக்குத்தான் படிக்கணும்னா நீங்க ஓ ஏன் படிக்கணும் சார்? மாட்னி ஷோவிலே தமிழ் சினிமா பாருங்க... இல்லாட்டி இந்திப் படம் பாருங்க...”
அந்த நாள்ளே வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதை நாயகி அம்மாள் எல்லாம் எழுதினாங்களே, அது மாதிரி விறுவிறுன்னு ஓடற நாவல்ஸ் வேணும் சார்.”
“வடுவூர் அய்யங்கார் மாதிரி எழுதறவங்க யாராவது இந்தக் காலத்திலேயும் இருப்பாங்க! தமிழ் மாகஸீன்ஸிலே தேடிப் பாருங்க. இங்கே மாகஸீன்ஸ் லெண்ட் பண்றதில்லே சமூக நலனுக்கும் இலக்கியத் தரத்துக்கும் எட்டுகிற மாதிரி உள்ள தமிழ், இங்கிலிஷ் புக்ஸ் மட்டும்தான் லெண்ட் பண்றோம்” என்று கூறியபடி அவருடைய சந்தா ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான் பாமசிவம்.
“இவ்வளவு ரஃபா பிஹேவ் பண்ணினா உங்க பிஸினஸ் என்ன ஆவும்? கொஞ்சம் கஸ்டமர்ஸைத் தட்டிக் குடுத்து அநுசரிச்சிப் போகணும் சார்!”
“தட்டிக் குடுக்கறதுக்கு எங்கியாவது ‘பார்க்’ பக்கமா ‘பாடி மஸாஜ்’ பண்றவன் காத்துக்கிட்டு இருப்பான். அவங்கிட்ட போய்க் கேளுங்க. தட்டிக் குடுத்து மஸாஜ், மாலிஷ் எல்லாமே பண்ணுவான்; இதமாக இருக்கும்.
“ரொம்பத் திமிராப் பேசறீங்களே?”
“சுயமரியாதைக்கு முட்டாள்கள் தருகிற புதுப் பெயர் திமிர் என்பது.”
இதைக் கேட்டுக்கொண்டு நின்ற பூமி ‘சபாஷ்’ என்று பரமசிவத்துக்கு ஆதரவாகக் கரகோஷமே செய்துவிட்டான். இந்தத் தலைமுறை இளைஞர்களில் கொள்கைத் தெரிவுள்ளவர்களுக்கே உரிய கம்பீரம் கோபம் எல்லாம் பரமசிவத்தினிடம் இருப்பதைப் பூமி இரசித்தான்.
இதற்குப் பிறகு பரமசிவத்திடம் பழகப் பழக மேலேயிருந்து கரும்பு தின்பது போல அந்நட்பில் ருசி நீடிக்கக் கண்டான் பூமி.
இரண்டு மூன்று நாள் அஞ்ஞாத வாசத்துக்குப்பின் தாயின் நெகடிவ்வை ஸ்டுடியோவில் பிரிண்ட் போடக்கொடுத்துவிட்டுப் பரமசிவத்தின்தின் ‘திரு. வி. க. லெண்டிங் லைப்ரரி’க்கும் போய்விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினான் பூமி.
லெண்டிங் லைப்ரரி இராயப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததால் அதே வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் திரு.வி.க. வின் பெயரை அதற்குச்சூட்டியிருந்தான் பரமசிவம். இந்தத் தலைமுறைத் தமிழ் வாசகர்களில் சிலர் “திரு.வி.க. என்பது யாருடைய பெயர்?” என்று விசாரிக்கிற அளவு அறியாமை நிறைந்தவர்களாக இருப்பது பற்றியும் பரமசிவமே பூமியிடம் மனம் நொந்து வருந்தியிருந்தான்.
“பூமி! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை; சிவாஜி கணேசனத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை; ஜெயமாலினியைத் தெரிகிறது. உருப்படுமா இது?”
கலாசாரச் சீரழிவு என்ற தொத்து நோயில் தமிழகம் திளைத்திருக்கிறது என்னும் பரமசிவத்தின் கருத்து பூமிக்கும் உடன்பாடுதான். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அதைப் பூமி ஒப்புக் கொண்டான். .
அன்று மாலை அவன் ஸ்டூடியோவுக்குப் போய்த் தாயின் ‘நெகடிவ்’வைக் காபினட் சைஸ் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டு திரு.வி.க. லெண்டிங் லைப்ரரிக்கு வந்தான்.
அப்போது பரமசிவம் அங்கே இல்லை. பரமசிவத்தின் தம்பி முருகேசன் இருந்தான். விசாரித்தபோது பரமசிவம் ஹோட்டல் ‘ஸ்வாகத்’ வரை காபி குடிக்கப் போயிருப்பதாவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவான் என்றும் தெரிந்தது.
நடந்து வந்திருந்ததால் பூமிக்கு மிகவும் நா வறட்சியாயிருந்தது. எதிர்ப்பக்கப் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் இஞ்சித் - துண்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து கரும்பு ஜூஸ் பிழிந்து வாங்கிக் குடித்தான் அவன். பரமசிவம் இன்னும் திரும்ப வரவில்லை.
தற்செயலாக அவன் மறுபடி நிமிர்ந்து லெண்டிங் லைப்ரரிப் பக்கம் பார்த்தபோது அங்கே சித்ரா ஓர் இளைஞனுடன் நின்று புத்தகம் தேடிக்கொண்டிருந்தாள். முருகேசன் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சித்ராவோடு நிற்கும் ஸ்ஃபாரி சூட் அணிந்த அந்த இளைஞன் யாரென்றுதான் பூமிக்குப் புரியவில்லை.
சித்ராவைப்போல் அந்த இளைஞனும் தனியாக லைப்ரரிக்கு வந்த வேறு ஒரு கஸ்டமராக இருக்கலாமோ என நினைக்கவும் முடியாமல் அவன் அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
பூமிக்கு அத்தனை தாகத்திலும் கரும்பு ஜூஸ் இரசிக்கவில்லை. ஐஸ் கட்டிகளோடு பாதி கிளாஸ் ஜூஸை அப்படியே மீதி வைத்தான் அவன். இன்னும் பரமசிவம் ஸ்வாகத்திலிருந்து திரும்பவில்லை.