சாளரம்
சாளரம்
1
தொகுஅடையார் பஸ் மயிலாப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. பஸ்ஸுக்குள் இருந்த மங்கிய 'பல்ப்' வெளிச்சம் இருட்டை எடுத்துக் காட்டுகிறது. பிரயாணிகளின் முகமும் மார்பும் தவிர வேறொன்றும் தெரியவில்லை.
"டிக்கெட் ப்ளீஸ்" என்று கத்தினான் கண்டக்டர்.
"இந்தாப்பா, மயிலாப்பூருக்கு ஒன்று" என்றார் நரைத்த தாடியுடைய ஒரு கிழவர்.
"ஸார்! நீங்களா! எங்கிருந்து இந்த இருட்டில்?" என்றார் ஓர் உச்சிக்குடுமி.
"பெஸண்ட் அம்மையாரின் மரணத்தைக்குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. அம்மையார் ஆவியுலகிலிருந்து தந்த ஆசிமொழிகள் - ஹா! என்ன அருள்வாக்கு!" என்று பதில் சொன்னார்.
"ஒரு மதமும் பின்பற்றாத ஒரு ஸ்திரீ. அவள் போனதே நல்லது" என்றார் ஓர் அரை மீசைப் பாதிரியார்.
"உமக்கென்ன தெரியும்? அம்மையாரின் சாவு, இந்தியாவுக்கு அல்ல, இந்த உலகத்துக்கே ஒரு பெரிய நஷ்டம்" என்று சொல்லி ஏற இறங்கப் பார்த்தார் அந்த தியாஸபிக் கிழவர்.
"ஆனால் அவர் இத்தனை நாள் படுத்த படுக்கையாய்..." என்று ஓர் இருள் பிழம்பு பேச ஆரம்பித்தது.
"அப்படிக் கிடந்து போனாலும் பரவாயில்லை! ஒரு சமாதானமாவது இருக்கும். இன்றைக்கு மத்தியானம் பாருங்க, ராயப்பேட்டையிலே ஒரு புதுவீடு கட்டுறாங்க. பாருங்க, தூண் கல் தூண், தூக்கி நிறுத்தறப்ப கீழே ஒரு ஆள். மேலே பாருங்க பொத்தென்று விழுந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்குள்ளே, பாருங்க, ஆள் டன், - தீந்து பூட்டான்" என்றார் ஒரு 'பாருங்க' பேர் வழி.
2
தொகு"என்ன, என்ன, எங்கே? ராயவரத்திலியா? யாரு, எந்தத் தெரு?" என்று ஆத்திரப்பட்டார் மூட்டையை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த ஒருவர்.
"இல்லிங்க, ராயப்பேடையிலிங்க பாருங்க, அவன்..."
"ஓ! சரிதான்! ராயபுரமாக்குமென்று கேட்டேன். நமக்கு அங்கேதான்" என்றார் அந்த மூட்டைக்காரர்.
"இறந்தவர் யார்?" என்று கேட்டார் உச்சிக்குடுமியார்.
"அவன் பறயனுங்க. பாருங்க அவன்..."
"இதற்குத்தானா! அன்னிக்கு பேப்பரிலே, சார்! நீங்க பார்த்தீங்களா? குற்றாலத்தில் திடீரென்று வெள்ளம் வந்து ஆள்களை அடித்துக்கொண்டு போய்விட்டதை. நம்ம சேஷன் நேத்து அங்கிருந்துதான் வந்தான். ஆறு பிராம்மணாள் கூடப் போயிட்டாளாம்" என்று மீண்டும் விஸ்தரித்தார் உச்சிக்குடுமி.
"பாப்பான்னா என்ன, பறையன்னா என்ன? சாவிலே! விதி கொண்டு போய்த் தள்ளிற்று என்று சொல்லுவீர்கள். இதற்கென்ன சொல்லுகிறது? நம்ம வீட்டுப் பக்கத்தில் ஒரு பையன். இன்கம்டாக்ஸ் ஆபீஸ் கிளார்க். நேற்று ஆபீஸிலிருந்து வந்தான். என்னமோ மார்பு வலிக்கிறாப்பலே இருக்கு என்று உட்கார்ந்தான். அவ்வளவுதான்" என்றார். இதுவரையும் பேசாத ஸ்தூல சரீரி.
3
தொகு"எங்கே? எங்கே?" என்றார்கள் இரண்டுபேர்.
"இங்கேதான் பஸ்ஸருக்குப் பக்கத்தில் அவன் வீடு."
"என்ன நம்ம கிருஷ்ணப்பிள்ளையா? போயிட்டானா! ஆளைப் பார்த்தால் பிரம்ம களை அப்படியே முகத்தில் ஜொலிக்கும்" என்றார் அந்த உச்சிக்குடுமி நண்பர்.
"அவரு கூடவா? பாருங்க நம்ம கடைக்கு அவருதான் போட்டாரு. நல்ல மனிதன். நூற்றுக்கொன்று."
"கலி முற்றிவிட்டது. கொஞ்ச நாளில் உலகம் முடிந்துபோகும்" என்று மழலை மாறாத ஒரு சிறு குழந்தைக்குரல் கேட்டது. நாங்கள் அத்திசையை நோக்கினோம். புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமக்கும் ஒரு சிறு மாணவன், பெரிய தலை, பெரிய கண்ணாடி. எல்லோரும் மௌனமாக அவனையே பார்த்தார்கள்.
"காலம் எல்லாம் அப்படியே புரண்டு கிடக்கு; விலைவாசியோ கேட்க வேண்டாம். எதற்குத்தான் இப்படிப் போகுதோ?" என்று தத்துவ விசாரணையில் இறங்கினார் ஒருவர். பஸ்ஸும் மயிலாப்பூர் ஸ்டாண்டில் நின்றது. நாங்களும் இறங்கினோம். தூரத்தில் காந்த வெளிச்சங்களுடன் ஓர் ஊர்வலம் தெரிந்தது. அப்பொழுது நாகஸ்வரக்காரன் மிகுந்த சுவாரஸ்யமாக, "சாந்தமுலேக்" என்று கீர்த்தனத்தை அப்படியே உருக்கி வார்த்துக் கொண்டிருந்தான்.
"கல்யாணமோ? பெரிய மோக்ளா போல இருக்கிறது?" என்றார் ஒருவர்.
நாங்களும் அவிழ்த்து உதறின நெல்லிக்காய் மூட்டை மாதிரி பிரிந்தோம்.
(முற்றும்)
ஆனந்த விகடன், 12-11-1933 (புனைப்பெயர்: பித்தன்). இக்கதை புதுமைப்பித்தனால் எழுதப்பட்டதா இல்லையா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. “பித்தன் என்ற பெயரைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தியதற்குச் சான்று இல்லை; 'ஆனந்த விகட'னில் எழுதியதாகவும் சான்றில்லை ” என்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட “புதுமைப்பித்தன் கதைகள்” என்ற நூலில் எழுதிய “பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்“ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். )