சிக்கிமுக்கிக் கற்கள்/சாமந்தி-சம்பங்கி-ஓணான் இலை

சாமந்தி
சம்பங்கி
ஓணான் இலை


அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா' பன்றபோது, கீரைக்காரி மாரியம்மாள் தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் 'ஓம் விகடாயநம' என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், சும்மா 'கும்'முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த ஓட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாடி நரம்பு எங்கும் ஓடிக் கொண்டிருந்த 'தண்ணி' அப்படி ஆட்டி விட்டது! கடைகளும், மனிதர்களும் ஒன்றான வேளை.

மத்தியான வெயிலுக்காக சற்று தொலைவிலுள்ள தூங்குமூஞ்சி மரத்தருகே நிறுத்தி வைத்திருந்த பழ வண்டியை தள்ளிக் கொண்டு சின்னானும், அவன் மனைவி பார்வதியும், பஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது, "தோ.. அந்த சோமாறி நெஞ்சை பார்த்து நீட்டா உருட்டுப்பா... தத்தேரி கயிதே... இந்தண்ட வான்னா காதுல ஏறல..." என்றாள் பூக்காரி தாயம்மாள். வாய் பேசினாலும், கைகள் அவை பாட்டுக்கு சாமந்திப்பூவைக் கட்டிக் கொண்டிருந்தன. உடனே சின்னான் மனைவி, "நானுந்தான் உன்கு எத்தனைவாட்டி சொல்றது? ஆறுவயசு பையனை அம்மணமா விட்டா எப்பிடி... டேய் சோமாறி நெஜார் பூடாண்டா.." என்று சொல்லியபடியே வாழைப் பழங்களை வண்டியில் பரப்பினாள். நிஜார் போடாத அந்தச் சிறுவனின் உடம்பைப் பார்த்ததும் பார்வதி எதேச்சையாக தன் கிழிந்த ஜாக்கெட்டை நைந்த புடவையால் மூடிக் கொண்டாள்.

நிஜார் போடாத அல்லது போட விரும்பாத அந்தச் சின்னப்பையன், "நம்ம கிட்ட ராங் காட்னே கத்தியாலே கீச்சிப்புடுவேன்." என்று சொல்லிவிட்டு, பிறகு எல்லா மெட்ராஸ் ரவுடிகளையும்போல ஓடினான். சாலையின் பிளாட்பாரத்துக்குக் கீழே பள்ளமான ஓர் இடத்தில் செருப்புக்களை தைத்துக் கொண்டிருந்த சீனன் (அதாவது சீனிவாசன் என்ற பெயரின் சுருக்கம்) போதையில் ஆடிக் கொண்டிருந்த தாயம்மாவின் ஆம்புடையானைப் பார்த்தான். தாயம்மா கணவனை கடிந்து கொண்டிருந்தாள்...

"இனிமே காட்டி... இந்தப் பிள்ளையாரப்பன்தான் ஒன்னைக் கேட்கணும். நான் பூவிலே சம்பாதிக்கிறத, நீ தண்ணியிலே விடற."

'தண்ணிக்காரர்' பதிலடி கொடுத்தார்.

"இன்னாமே... படாப் பேஜார் பண்றே... ஒன்காக காலங்காத்தாலே மொந்தை மொந்தையா பூ வாங்கிக்கினு வரணும். நீ ஆருகிட்டேயாவது 'பைட்டு'க்குப் போனால் நான் உதைக்கப் போணும்... சும்மா ஒரு கிளாஸ்பூட்டா இன்னாமே... ஏய், வுன்னை..."

மனைவியைப் பார்த்து நோக்கி நடந்த பூக்காரரை, சின்னான், தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், தூங்குமூஞ்சி மரத்துக்குக் கீழே கொண்டுபோய் புரள வைத்தான். தாயம்மாவிற்கு அருகே, பிளாட்பார சுவருக்கம் - ஒரு மரத்திற்கும் இடையே வைக்கப்பட்டிருந்த சதுரப்பெட்டியில் ஓணான் இலைகளை தவளை மாதிரி மடித்துக்கட்டி அதற்கு மேல் துலுக்கச் சாமந்தி, சம்பங்கி, செவ்வரளி முதலிய பூக்களை அடுக்கடுக்காக - அழகாக கட்டிக்கொண்டிருந்த ராமன் கீழே குனிந்து அதட்டினான்.

"உங்க பொழப்ப பாருங்களேமே... இது என்ன புச்சாவா குடிக்கறாரு..."

கீழே சம்மணம் போட்டபடி பூக்கட்டிக் கொண்டிருந்த சாந்தியும், ஒரு காலை தூக்கிவைத்து, அதிலே முகம் பதித்து. ஆள் உயர மாலை ஒன்றிற்கு ரோஜாப் பூக்களால் அச்சாரம் போட்டுக் கொண்டிருந்த துலுக்காணமும், தங்கள் புருஷனை அண்ணாந்து பார்த்தார்கள். ஒருத்திக்கு இப்போதுதான் அபார்ஷன் ஆனது. இன்னொருத்திக்கு ஏழு மாதம். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்ட அந்த இரண்டு பொண்டாட்டிக்காரன், "மன்ஷன்னா குடிக்கத்தான் செய்வான்" என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு, எதிரே நின்ற வாடிக்கையாளரைப் பார்த்தான்.

"எத்தனை முயம் சாமி?"

"முழம் எவ்வளவு?"

"சாமந்தி அம்பது பைசா. சம்பங்கி அறுபது பைசா."

"நேத்து முப்பது பைசாதானே."

"இன்னிக்கு சிவராத்திரி சாமி!"

"அதுக்காக இப்படி அநியாய விலையா?"

புரண்டு கொண்டிருந்த புறநானூற்று வீரனான புருஷனை பார்த்தபடியே தாயம்மா இடைமறித்தாள்.

"எங்க பொயப்பு அப்படி சாமி! மழை வந்திட்டா அம்புட்டும் அழுகிடும்... அப்போ எங்க போய் முட்டிக்கிறது...?"

வாடிக்கையாளர் தயங்கிக் கொண்டிருந்தபோது, "இங்கே வா சாமி எங்கிட்டே ரோஜாப்பூக் கீது. தாமரை கீது. உன்னோட சட்டைக்கு இந்த ரோஜா மாட்ச்சாகும்" என்ற குரல் கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

தாயம்மாவின் பலகைக் கடைக்கு பத்தடி தள்ளி, ஒட்டை மேஜை ஒன்றில் வண்ண வண்ண பூக்களை வைத்தபடி கண்களை வெட்டிக் கொண்டிருந்த காந்தா, ஒய்யாரமாகச் சிரித்தாள். இருபத்திரெண்டு வயதுக்காரி, வெளுத்த செவ்வரளி நிறம். சம்பங்கிப் பூவின் சாயல், சாமந்திப்பூ குவியல் போன்ற அடர்த்தியான தலைமுடி. அவள் பார்வை தாளமாட்டாது வாடிக்கைக்காரர். ராமனை விட்டுவிட்டு, அவள் அருகே போய் நின்று, ஆண்டவனுக்காக பூ வாங்காமல், தன் சட்டைக்கு மேட்சாக ரோஜாப் பூவையும், உதட்டுக்கு மேட்சாக... அவள் கன்னத்தையும் மாறி மாறிப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார்!

தாயம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தபோது, சின்னான் ராமனைப் பார்த்தான். காந்தா, அந்த வாடிக்கையாளர் சட்டையில் ஒரு ரோஜா இதழை தன் கைபட மாட்டினாள். எல்லோரும் கண்களை சிமிட்டியபடி ஆகாயத்தைப் பார்த்தார்கள். பொதுவாக, ராமனிடம் பூ இல்லாவிட்டால், வேண்டிய பூக்களை அவள் ராமனிடமே கொடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கக் சொல்வாளேதவிர, அவள் ராமன் 'கிராக்கியை' கூப்பிடமாட்டாள். ராமனும் இப்படித்தான் ஒரு தடவை பூவோடு பூவாக விற்கட்டும் என்று வாழைப் பழங்களை வாங்கி வைத்திருந்தான். 'வண்டிக்கார' சின்னான், 'என்னோட சேல்ஸ் பூடும்பா' என்று சொன்னபோது, ராமன்தான் வாங்கிவந்த பழங்களைச் சின்னானிடமே கொடுத்து விட்டான்.

இப்படி எழுதப்படாத ஒரு தொழில் தர்மம் அங்கே நடந்து வரும்போது, இந்த காந்தா நடந்துகொள்ளும் விதம், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவள். அங்கே கடை போட்டிருந்த செருப்புக்கடை சீனன், அவளுக்காக இடம் விட்டு, பள்ளத்தைப் பார்த்துப் போனான். ஆனால், இந்த காந்தாவோ இப்போது எல்லோருக்கும் பள்ளம் வெட்டிக் கொண்டிருக்கிறாள். அவளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவள் சேர்ந்திருக்கும் இடம் அப்படி..

ஒரு மணிநேரம் ஓடிவிட்டது.

லைட் இல்லாத சைக்கிளில் காக்கி யூனிபாரம் போட்ட ஒருவர் லாவகமாக வந்தார். பிளாட்பாரச் சுவரில் ஒரு கையை , வைத்துக்கொண்டு, சைக்கிளை அங்குமிங்குமாக ஆட்டியபடியே கடைகண்களை நோட்டமிட்டார். ஆஜானுபாகுவான தோற்றம். சைக்கிளின் ஹாண்ட் பாரில் தொங்கிய லத்திக் கம்பு மாதிரி அமைந்த, அழுத்தம் திருத்தமான உடற்கட்டு. குதறுவதுபோல் இருந்த கண்கள். காய்ப்பு ஏறிய கைகள். ஆசாமிக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அதட்டினார்:

"ஏண்டா... சோமாறிங்களா... டிராஃபிக் இடைஞ்சலாகல? டேய் சின்னான்... இங்கே ஏண்டா வண்டியை நிறுத்தற... ஒரம் கட்டுடா கயிதே!"

சின்னானும், அவன் மனைவியும் எதுவும் பேசாமல், வாழைப்பழ வண்டியை முன்னால் நான்கு அடி நகர்த்தி, பிறகு பின்னாலும் நான்கு அடி நகர்த்தி, அதை இருந்த இடத்திலே நிறுத்திக் கொண்டிருந்தபோது

போலீஸ்காரர் சீனனை அதட்டினார்.

"என்னடா சீனா, குரோம்பேட்டை பாக்டரியிலிருந்து திருட்டுத்தனமா தோல் வாங்கிறியாம்... மாமியார் வீடு கேட்குதா..."

"அப்படில்லாம் ஒண்ணம் கிடையாது சாமி... வாணும்னா வந்து பாரு" என்று சொல்லியபடியே, சீனன் அத்தனை செருப்புக்களையும் எடுத்து, அவர் முகத்துக்கு எதிரே ஆட்டினான். போலீஸ்காரர் திருப்தி அடைந்தவராய் பிளாட்பார சுவரில் கை வைத்தபடியே, சைக்கிளை தள்ளியபடியே, காந்தா பக்கம் போனார். பிறகு அவள் மேஜை மேலே ஒரு கையை ஊன்றிக் கொண்டு அவளைப் பார்த்தார்.

காந்தா பேசவில்லை. சிரிக்கக்கூட இல்லை. ஒரு வெள்ளை ரோஜாவை எடுத்து அவர் காக்கிச் சட்டையில் வைத்தாள். அதற்குப் பிறகுதான் இருவரும் சிரித்தார்கள். என்னவெல்லாமோ 'கிசுகிசு' பேச்சுக்கள். அவள் யாரைப் பற்றியோ பேசியிருக்க வேண்டும். இல்லையென்றால், போலீஸ்காரர், அவள் பேசப்பேச அப்படி திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, காந்தா அவசர அவசரமாக கடையை எடுத்து வைத்தாள். "கடையை கொஞ்சநேரம் பார்த்துக்கணும்" என்று எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக உத்தரவு போடுவதுபோல் பேசிவிட்டு, போலீஸ்காரரின் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அந்த சில்லறைக் கடைக்காரர்களின் தலைகள்போல், சைக்கிள் சக்கரங்களும் சுழன்றன. கீரைக்காரி மாரியம்மாள் கொதித்தாள்:

"இப்டியே விட்டுக்குனு போனால், அவன் எல்லாரையும் படுக்கச் சொல்வான். அவள மட்டும் கவனிக்கப்படாது. அவனையும் சேர்த்துக் கவனிக்கணும்... தட்டுக்கெட்ட மூதேவியாலே நம்ம எல்லாருக்குமே ஆபத்து வந்திருக்கு... நேத்து பார்வதியைக் கூப்பிட்டான். நாளிக்கு துலுக்கானத்தைக் கூப்பிடுவான்... அப்பாலே சாந்தியைக் கேட்டான்... இந்த காந்தா மூதேவி பண்றதனாலே, அவன் எல்லா ஏழைப் பொம்மனாட்டியும் கூப்பிட்டா வந்திருமுன்னு நினைக்கான். இந்த நெனப்பை நாம மாத்திக் காட்டணும். அவன் நெஞ்சிலே கீற மஞ்சாசோத்தை எடுத்து, அவன்கிட்டயே தின்னக் கொடுக்கணும். அப்போதான், என் மனசு ஆறும்..."

பேசிய வாய்கள் மூடிக் கொண்டன - வெடித்த எரிமலை சிறிது விட்டுக் கொடுப்பதுபோல்.

சைக்கிளில் காந்தாவும் போலீஸ்காரரும் வந்து கொண்டிருந்தார்கள். அவன் பின் இருக்கையில் இருந்து இறங்கி, காம்பவுண்ட் சுவரை லாகவமாகத் தாண்டி, மேஜைமீது பூக்களைப் பரப்பியபோது போலீஸ்காரர் அவள் கைகளை செல்லமாக வருடினார். அவள் கன்னத்தின் அருகே அவர் கை போனபோது, காந்தா தன் மோவாயால் அவர் கையைத் தட்டி விட்டாள். "சீ! அக்கம்பக்கத்துலே..." என்று செல்லமாக சிணுங்கினாள். அப்போதுதான் அவருக்கும் மற்றவர்கள் மனிதர்களாகத் தெரிந்தது.

சைக்கிளைவிட்டு இறங்கியபடியே சின்னான் அருகே போனார்.

"ஏண்டா சின்னா... சீக்கிரமா வண்டியை கொண்டு போயேண்டா. டிராஃபிக்கு ஏண்டா இடைஞ்சலா நிறுத்தறே? கயிதே... போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது..."

"எந்தப் போக்குவரத்துக்கு சாமி...?"

"என்னடா, எதிர்க்கேள்வி போடற? பஸ் ஸ்டாண்ட் பக்கமா வண்டி நிக்கப்படாது. வேணுமுன்னா அந்தப் பக்கமா போ... டேய் செருப்பு கண்ணு தெரியாத நேரத்திலே என்னத்தடா தைக்கிற? ஏய் கீரை வழியை அடைக்கிறாபோல ஏன் நெப்புற...?"

சின்னான், வண்டியோட வண்டியாய் நின்றான். சீனன் செருப்போடவே இருந்தான். கீரையம்மா ஒரு சுண்டு விரலைகூட நீட்டவில்லை.

போலீஸ்காரருக்கு பிரச்சினை தன்மானமாகியது.

"சொல்றது காதுலே விழலே. டேய், வண்டி கயிதே... வண்டியைத் தள்றியா, இல்லியா?"

சின்னான். இப்போது சவால் விட்டான்.

"அட சும்மா நிறுத்து சாரே... நீ யூனிபாரத்துக்கு தோதுவா நடந்துக்கினால், நாங்களும் அதுக்குத் தோதுவா நடந்துக்குவோம். நீ இன்னாடான்னா..."

போலீஸ்காரருக்கு ரத்தம் கொதித்தது. மிரட்டலோடு பேசினார்.

"இன்னாடா, திட்டம்போட்டு பண்றீங்களா? நாளைக்குப் பார்த்துக்கலாம். இந்த இடத்துலே உங்க கடை இருந்தா நான் தொப்பியை கழட்டி வச்சுறேன்!"

போலீஸ்காரர், எல்லா விவரங்களிலுமே அனுபவஸ்தர். புரிந்து கொண்டார். இது தனியாக கவனிக்கிற சமாச்சாரமில்லே... காந்தாவைப் பார்த்தபடியே சைக்கிளை உருட்டி, பிறகு அதில் ஏறிக் கொண்டு பெடல்களை அழுத்தினார்.

மறுநாள்.

பூக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பிய தாயம்மாவும், சின்னானும் ஆச்சரியப்பட்டார்கள். காந்தா பிள்ளையார் கோவில் முகப்பில், கடை போட்டிருந்தாள். தாயம்மா கண்ணைச் சிமிட்டியபடியே, "கோவில் பக்கம் கடை போடக் கூடாதுன்னு சொன்னாங்களே... இவ எப்படிப் போட்டா? ஒருவேளை, கோவில்காரன் எவனையாவது வளைச்சுப் பூட்டிருக்காளா...? எக்கேடும் கெடட்டும் தத்தேரி கயிதே..." என்றாள்.

ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். தாயம்மா உதிரிப் பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில் இருந்து விடுவித்துக் கொண்டு இருந்தாள். சின்னான் வாழைப்பழ வண்டியை முன்னால் இழுக்க, பார்வதி அதை பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தாள். துலுக்காணமும், சாந்தியும் ராமனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். மாரியம்மாள் தனது கீரைகளைக் கிள்ளிக் கொண்டு இருந்தாள்...

திடீரென்று போலீஸ் வேன் வந்து நின்றது.

பல போலீஸ்காரர்கள் கீழே குதித்தார்கள். அப்படி குதித்தவர்களில் 'காந்தா புகழ்' ஆசாமியும் ஒருவர்! அப்போது அவர் காந்தாவைப் பார்க்கவில்லை. அவள் யாரோ, தான் யாரோ என்பது போல் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். அவரோடு வந்த இதர போலீஸ்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி, கீரைகளைக் கூடையோடும், பூக்களை அதன் மேஜையோடும் வேனுக்குள் திணித்தார்கள். சின்னானின் பழ வகைகளை உள்ளே தூக்கி எறிந்தார்கள். சீனனை செருப்புப் பெட்டியோடு ஏற்றினார்கள்.

தலைமை போலீஸ்காரர் அதட்டினார்.

"இங்கே கடை போடப்புடாதுன்னு எத்தனை தடவை சொல்லியும் கேட்கல. உம்... ஏறுங்க..."

தாயம்மா பொறுக்க முடியாமல் கேட்டாள். காந்தாவின் கடைப்பக்கம் கையை நீட்டியபடியே கேட்டாள்.

"அதோ, அந்தக் கடை இருக்கே சாமி?"

"எந்தக் கடை இருந்தா உனக்கென்ன? அது கோவில் பக்கத்துலே இருக்குது; இருக்கலாம். மொதல்ல நீ வண்டிலே ஏறு சட்டமா பேசறே..."

சின்னான் காந்தாவைப் பார்த்தபடியே முனங்கினான்.

"மட்டமான ஒரு விவகாரத்துக்காக சட்டம் வந்ததை நினைச்சு தாயம்மா புலம்புது சாரே... புலம்பினாலும் தப்பாப் புலம்பல!"

"ஏண்டா சோமாறி... கயிதே... எதிர்த்தா பேசறே? உனக்கு ஆறு மாசம் வாங்கிக் கொடுக்கறேன். பார்..."

சின்னானின் பிடறியில் பட்டு பட்டென்று பிரம்படி விழுந்தது. வேனிற்குள் இருந்த இன்னொரு போலீஸ்காரர் அவன் தலைமுடியைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டார். வேறொருவர், சீனனின் கையை முறுக்கியபடி அவனை வண்டிக்குள் குப்புறத் தள்ளினார்.

தாயம்மா, மாரியம்மாள். துலுக்காணம், சாந்தி ஆகிய அத்தனைபேரும் அழுகிப்போன பூக்கள்போல வேனிற்குள் எறியப்பட்டார்கள். வண்டிக்குள் இருந்த தாயம்மா, கீழே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து "நயினா வந்துடம். விசயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே இரு" என்று விழியாட்டிப் பேச - சின்னான், 'பயப்படாதே' என்பதுபோல் மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுக்க, சீனன், தன் முகத்தில் பதிந்த போலிஸ் கீறலைப் பெருவிரலால் அழுத்த துலுக்காணமும், சாந்தியும், ராமனை ஆளுக்கொரு பக்கமாக பார்க்க, கீரைக்காரி மாரியம்மாள் சிதறிக் கிடந்த பொருட்களையும், கோவில் முகப்பில் பட்டும் படாததும்போல் பார்த்துக் கொண்டிருந்த காந்தாவையும் வெறுமையுடன் நோக்க...

போலீஸ்வேன் புறப்பட்டது. வேக வேகமாக ஓடியது. சுதந்திரமும் சுய மரியாதையும் வேறு வேறு என்று உணராத அந்த நிஜார் போடாத சின்னப்பயல் சிறிதுநேரம் திகைத்து நின்று விட்டு, பிறகு அந்த வேனுக்குப்பின்னால் ஓடினான். அந்த போலீஸ்வேன் கிளப்பிய புழுதியோ பிள்ளையார் கோவிலை மறைத்தது.

இதயம் பேசுகிறது, 14-11-82