சிக்கிமுக்கிக் கற்கள்/பாம்புக் கயிறு

பாம்புக் கயிறு

"இவருல்லாம் கிளாஸ் ஒன் ஆபீசராம்... பொல்லாத கிளாஸ் ஒன்."

"அதிலென்னடி சந்தேகம்? ஒண்ணாவது கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறாரோ இல்லியோ..."

அலுவலக வாசல் படியில், திரைத்துணி மூடிய இரட்டைக் கதவுகள்போல நின்றபடி வாயாடிக் கொண்டிருந்த 'கேஷியர்' வசந்தாவும், வம்பாடிக் கொண்டிருந்த அஸிஸ்டெண்ட் மங்கையும், மூன்றடிக்கு அப்பால், காட்டுப் பன்றி மாதிரி, முகத்தை நீட்டியபடி, மூக்கால் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த அதிகாரி அர்ச்சுனனைக் கவனிக்கவில்லை. வசந்திக்குப் பதிலளிக்கும் வகையிலும், தனக்கு சிலேடை வரும் என்று காட்டிக் கொள்ளும் கங்கணத்தோடும் மங்கை, ஒரு போடு போட்டாள்.

"இந்த அர்ச்சுனனைப் பாரு, சொல்லுக்குச் சொல் 'நான் குரூப் ஏ அதிகாரியாக்கும்' என்கிறார். அதுவும் சரிதான். லேடீஸ் இருக்கிறதைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாமல் அவர் வாயில் 'ஏ' வார்தைகள்தானே வருது."

கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிய இரண்டு இளம் பெண்களும், புலியை நேருக்கு நேராய் சந்தித்ததால் ஸ்தம்பித்துப் போன மான்கள்போல், அவரையே மருண்டு மருண்டு பார்த்தார்கள். ஐம்பது வயதிலும், எண்பது கிலோ எடை கொண்ட உடம்பில், முன் தள்ளிய அவரின் வயிறும், பின் தள்ளிய கழுத்தும் சிவப்பேறிய கண்களும், அவர்களைப் பயமுறுத்தின. 'இந்தக் கிராதகனுக்கு. பேசுனது கேட்டிருக்குமோ... இல்லாட்டா ஏன் அப்படிப் பார்க்கிறார்? அய்யய்யோ.... அம்மம்மோ....'

உரத்த சத்தத்தில் மூச்சு விட்டபடி ஒன்றும் பேசாமல், அவர்களையே முறைத்துக்கொண்டிருந்த அர்ச்சுனனைப் பார்த்து, வசந்தா, தட்டுத் தடுமாறி, "குட்மார்னிங் ஸார்" என்றாள். மங்கை "கும் மோர்னிங் ஸார்" என்றாள். அர்ச்சுனன், அட்டகாசமாகக் கேட்டார்.

"என்னம்மா நீங்க.. காலங்காத்தால வழிமறிச்சுக்கிட்டு? நிற்கறதே நிற்கிறீங்க ஆபீஸுக்கு உள்ளே நின்னு தொலையுங்களேன். வேலை வெட்டி செய்யாட்டியும் பொம்பிளைங்க ஆப்ஸூக்கு உள்ளே இருக்கணும். படிதாண்டி தெருவுக்கு வரப்படாது."

வசந்தா வலது கையால் இடது மணிக்கட்டைத் தடவி விட்டபடி மெளனமாகி நின்றாள். மங்கை, அர்ச்சுனனை மலங்க மலங்கப் பார்த்தாள்.

அர்ச்சுனன், தனது எண்பது கிலோ எடையை குரலில் காட்டினார்.

"என்னம்மா காட்டெருமை மாதிரி நின்னுக்கிட்டு? உள்ளே போங்க இல்லன்னா எனக்காவது வழி விடுங்க, ஐ ஸே... ஒங்களைத்தான். ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர்கிட்டே நடந்துக்கிற முறையா இது? அட வழி விடுங்கம்மா."

இந்த இரண்டு பெண்கள், பக்கமாய்ப் பிரிந்தபோது, அதிகாரி அர்ச்சுனன். அவர்களுக்கு இடையே புகுந்தார். பத்தடி நடந்துகூட முடித்தார். அந்தப் பெண்கள் நிம்மதி மூச்சு விட்டபோது, அர்ச்சுனன், திரும்பி நடந்து வந்து அதட்டினார்.

'எதுக்கும்மா... இங்கே நிற்கிங்க... பதில் சொல்லுங்க. சொல்றிங்களா.. இல்ல, சொல்ல வைக்கணுமா?"

வசந்தா, வாய் தவறி 'கேன்டீனுக்கு ஸார்' என்று சொல்லி விட்டாள். பிறகு, சொன்ன வார்த்தையை திரும்பப் பெறப் போவதுபோல், உதடுகளைக் குவித்தாள். மங்கை, அவளை எரித்துப் பார்த்தாள்.

அர்ச்சுனன், தலையை முள்ளம் பன்றி மாதிரி உசுப்பிக் கொண்டே, ஒரு சிரிப்புச் சிரித்தார். அது கோபச் சிரிப்பா, சாதாச் சிரிப்பா அல்லது சோதாச் சிரிப்பா என்று அந்தப் பெண்கள் அனுமானிக்க முடியாமல் அல்லாடியபோது, அர்ச்சுனன் ஆணையிட்டார். "போங்கம்மா. போய்த் தொலையுங்க. அப்படியே எனக்கும் ஒரு மசால்தோசை வாங்கிட்டு வாங்க, அட போங்கம்மா. ஆபீஸ்ல, சாப்பிடுறதுக்காகத்தானே வேலை பார்க்கிறோம். அதனால சாப்பிடுறதையே ஒரு வேலையா வச்சால் என்ன தப்பு?"

அந்தப் பெண்களுக்கு மரித்தெழுந்தது போன்ற உற்சாகம். அப்புறம் லேசாய் பயம். அதிகாரி அர்ச்சுனன், இளக்காரமாய் கிண்டல் செய்துவிட்டுப் போகிறாரா? கேன்டீனுக்கு போகலாமா? போனால் 'அது' திட்டுமா... இல்லே போகாட்டி திட்டுமா. அர்ச்சுனனிடம் கேட்கலாம் என்பதுபோல் குதிகாலைத் தூக்கிய மங்கையின் கரத்தை வசந்தா பற்றிக் கொண்டாள். அவளுக்கு அகோரப் பசி, இந்தச் சமயத்தில், அதிகாரி அர்ச்சுனன், உள்ளே இருந்த ஊழியர்களை சட்டை செய்யாமல், தனது அறையின் புஷ் டோரை வேகவேகமாகத் திறந்து நுழைந்தபோது"

‘பி.ஏ.' சண்முகம் உள்ளே வந்தான்.

அர்ச்சுனன் ஆணையிட்டார்.

"டில்லிக்கு எஸ்.டி.டி. போட்டு டெப்டி டைரக்டருக்குக் கனெக்ஷன் கொடு. தேர்ட் புளோர்ல அஸிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர் டூர் போயிட்டு எப்போ வருவார்னு கேட்டுட்டு வா... குயிக்"

"பர்ச்சேஸ் அஸிஸ்டெண்ட்' தண்டாயுதபாணி, பேசிக் கொண்டே உள்ளே வந்தான்.

"ஸார். நீங்க நேற்று சொன்னபடியே ராம் அண்ட் சீதாவுக்கு போன் செய்து இன்னைக்கே சரக்கை லாரியிலேயோ டெம்போவுலயோ கொண்டு வந்து டெலிவரி செய்யணுமுன்னு சொல்லிட்டேன் ஸார். இப்பவும் டெலிபோன் செய்தேன் ஸார்... லாரியில ஏத்திக்கிட்டு இருக்காங்களாம்."

"நீதான் சொல்லப் பொறுக்க மாட்டியே! ஒனக்கு ஏதும் கமிஷன் கிடைக்குறதா?"

"ஸார்"

"ஏய்யா, குரலை உயர்த்துறே? நேத்து பேச்சுவாக்குல, அதுவும் ஈவினிங்ல சொன்னேன். இன்னைக்கு ஒரு வாட்டி என்கிட்டே செக்கப் செய்துட்டு, போன் செய்திருக்கலாமே. ராம் அண்ட் சீதாவைவிட கோவிந்தா அண்ட் கோ, சீப் ரேட்டுக்குத் தரேன்னு எனக்கு நேத்து நைட்லே போன் செய்தாங்க. அதனால சரக்கை அனுப்ப வேண்டாமுன்னு ராம் அண்ட் சீதாவுக்கு போன் போட்டுச் சொல்லிடு."

"ஸார். சரக்கை இந்நேரம் லாரியில் ஏற்றி..."

"எத்தன பெர்சண்டுய்யா?"

"என்னது ஸார்?"

"ஒனக்குக் கமிஷன் எத்தனை பெர்சண்டுன்னேன்.

"இயல்பிலேயே முன்கோபமும் முரட்டுத்தனமும், போதாக் குறைக்கு நேர்மையும் கொண்ட தண்டாயுதபாணி, அர்ச்சுனனிடம், அதே கேள்வியைத் திருப்பிக் கேட்கப் போனான். அப்போது, அவன் வாய்க்கும், வயிறுக்கும் இடையே கடுமையான போர். இறுதியில் வெற்றிபெற்ற வயிற்றைக் கையால் குத்தியபடியே, அவன் பேசாமல் இருந்தபோது அர்ச்சுனன் அதட்டினார்.

"போய்யா. மொதல்ல சொல்றதைச் செய்... ஒங்களுக்கெல்லாம் மெமோ கொடுத்தால்தான் புத்தி வரும்."

இவரைப்போல், பல்வேறு காரணங்களுக்காக, பலப்பலவான அதிகாரிகளை எதிர்த்துப்பேசி, பல்லுக்கு ஒன்று வீதம் சுமார் முப்பத்திரண்டு மெமோக்களை வாங்கியிருக்கும் தண்டாயுதபாணி, தண்டமான முண்டம்போல் வெளியேறினான். அறை வாசலில் அந்தப் பெண்கள் நீதான் கொடுக்கணும் என்று மசால் தோசையை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் திணித்துக் கொண்டிருந்த போது, இன்னும் இருக்கையில் உட்காராத அர்ச்சுனன், அவர்களை இடித்துக்கொண்டே வெளியே வந்து பி.ஏ. சண்முகத்திடம் கர்ஜித்தார்.

"யோவ்... இன்னுமாய்யா... டில்லிக்கு லைன் கிடைக்கல?"

"இப்போதான் தேர்ட் புளோர். அஸிஸ்டெண்ட் சால்ட் ஆபீசுக்குப் போயிட்டு வர்றேன் ஸார். இன்னும் அரை மணி நேரத்துல ஏ.ஸி. வந்துடுவாராம்."

அர்ச்சுனன் ஏசினார். "ஒனக்கு அறிவிருக்காய்யா? டில்லி முக்கியமா? தேர்ட் புளோர் முக்கியமா? நீ சரியான தேர்ட் ரேட் பெல்லோ மொதல்ல டெல்லிக்கு எஸ்.டி.டி போடுய்யா"

பல்லோர் முன்னிலையில் தன்னைப் படாத பாடுபடுத்திய அர்ச்சுனனின் வாயில் மானசீகமாய் இரண்டு குத்துக்களை விட்டபடியே, சண்முகம் டெலிபோனைச் சுழற்றியபோது, அர்ச்சுனன், தலையை ஒரு சுழற்றுச் சுழற்றியபடி தனது அறைக்குப் போனார். வாசலில், அந்த மசால் தோசைப் பெண்கள் இருப்பதைப் பார்க்காமல், அதே சமயம் அவர்களை இடித்தபடியே இருக்கையில் வந்து தொப்பென்று உட்கார்ந்தார்.

அந்த அர்ச்சுனப் பூனையிடம், யார் மசால் தோசையைக் கட்டுவது என்று வாதம் செய்த வசந்தாவும் மங்கையும் இறுதியில் சமரசப்பட்டு அந்தச் சின்ன தோசையை, ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்தபடி, ஏதோ எலியைத் தூக்கிக் கொண்டு வருவதுபோல் அவர் மேஜை முன்னால் போட்டார்கள். அர்ச்சுனன், கொடுத்தவர்களைப் பார்க்காமல், கொடுத்ததையே பார்த்தார். பிறகு, ஐந்து நிமிடத்தில், இலையைத்தான் விட்டு வைத்தார். அவர் சாப்பிடுவது வரைக்கும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றார்கள். அர்ச்சுனன் வாஷ் பேசினுக்குச் சென்று வாயைக் கழுவாமல், கைக்குட்டையில் அதை துடைத்தபோது, வசந்தா உதடுகளை ஈரமாக்கியபடி கேட்டாள்.

"ஸார்... மசால் தோசை ஒன் பிப்டி. காசு கொடுக்கிறீங்களா?"

அர்ச்சுனன், மீண்டும் கோபமாக இருக்கையை விட்டு எழுந்தார். மசால் தோசையை திண்பது போல் வாயை வைத்துக்கொண்டு பயங்கரமாய்க் கத்தினார்.

"ஏம்மா வசந்தா ஏம்மா மங்கை நான் ஒரு கிளாஸ்-ஒன், குரூப் ஏ ஆபீசர். ஒரு மசால் தோசைக்குப் பெறமாட்டேனா? ஆப்டர் ஆல், ஒன் பிப்டி சீ... இந்தாங்கம்மா. ரெண்டு ரூபாய், ஒன் பிப்டி தோசைக்கு. பிப்டி பைசா அதை நீங்க கொண்டு வந்ததுக்குக் கூலி. ஏம்மா பொம்மை மாதிரி நிற்கிறீங்க? பிசையற கையை எடுத்து அந்த ரெண்டு ரூபாயைத் தூக்குங்கம்மா. ஐ ஸே டேக் தி டு அண்ட் கெட் அவுட் ஒன் திங்... யூ அண்டர்ஸ்டாண்ட். நீங்க இவ்வளவு சில்லியா நடந்தாலும், நான் சில்லியாய் நடந்துக்க மாட்டேன். ஏதோ ஈவினிங்ல எங்கேயோ போய்த் தொலையுறதுக்கு ஒன் அவர் பெர்மிஷன் வேணுமுன்னு நேத்து கேட்டிங்களே... தாராளமாய் போகலாம்... அதுக்கு முன்னால. ரெண்டு ரூபாயைப் பொறுக்கிறீங்களா? இல்ல டிஸிபிளினரி ஆக்ஷன் எடுக்கணுமா... என்னமோ சொன்னான் கதையில... எவளோ ஒருத்தி சேலையை அவிழ்த்து..."

வசந்தாவும். மங்கையும் ஒரு மூலையில், மின்விசிறி காற்றில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இரண்டு ரூபாய் நோட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். போனவாரம், இதே மாதிரி பூரி கிழங்கு வாங்கி கொடுத்துவிட்டு, காசு கேட்காமல் போனபோது, இதே இது "ஏம்மா நான் இன்ன பிச்சைக்காரனா? காசு கேட்காம போறீங்களே என்று கத்தியது. அந்தப் பெண்கள் ஒன்றும் புரியாமல் நகர்ந்த போது, அர்ச்சுணன் அவர்களைப் பார்த்து 'சண்முகத்த வரச்சொல்லுங்க.... உங்கள மாதிரி அவனும் ஒரு தண்டம் என்றார்.'

சண்முகம் வந்தான். அர்ச்சுனன், அதட்டிக் கேட்டார்.

"தேர்ட் புளோர் போனியா?"

"இல்ல ஸார். டில்லி கால் டிரை பண்றேன்."

"ஒனக்கு அறிவிருக்காய்யா... டில்லி அபிஷியல்... தேர்ட் புளோர் பெர்சனல். இந்தக் காலத்துல. மொதல்ல பெர்சனல் சமாசாரத்தைக் கவனிக்ணும். கவர்மென்ட்ல கழுதையும் குதிரையும் ஒன்றுதான். அதனால தேர்ட் புளோருக்குப் போய்யா... போய்த் தொலய்யா."

சாதுவான சண்முகத்திற்குக் காடு தாங்காத சினம் வரப்போனது. சொந்த வேலைக்கு என்ன விரட்டு விரட்டுகிறார்? விடுவிடுன்னு விடணும்... சண்முகம் குத்தலாய்க் கேட்கப் போனபோது, அர்ச்சுனன் முந்திக் கொண்டார்.

"யோவ்... சால்ட் டிபார்ட்மெண்ட்ல... நீ ஒரு டெபுடேஷன் போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருக்கே பாரு! ஒனக்கே அதைக் கொடுக்கும்படி... அலிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர்கிட்டே சொல்லணும். அவன் போன் அவுட் ஆப் ஆர்டர். அதனால வந்துட்டானான்னு பார்த்துட்டு வா. நான் போய்... காதும் காதும் வச்சு முடிச்சுடுறேன். போய்யா... ஏய்யா... ஆந்தை மாதிரி பார்க்கறே? போற வழியில... தண்டாயுதபாணியை வரச் சொல்... அவனும் ஒன்னை மாதிரி ஒரு உதவாக்கரை."

சண்முகம், பரம சாதுவாகி, அவருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே போனான். சிறிது நேரத்தில், தண்டாயுதபாணி வந்தான். அர்ச்சுனன் கேட்கும்முன்பே பதிலளித்தான்.

“ராம்... அண்ட் சீதாவுக்கு போன் போட்டேன். சரக்கு வேண்டான்னேன். 'லாரில லோட் பண்ணிட்டோம். லோடிங் அண்ட் அன்லோடிங்கிற்கு ஒங்கப்பனா பணம் கொடுப்பான்'னு கத்தறான் ஸார். கடைசியில. எப்படியோ சம்மதிச்சுட்டான் ஸார்."

சண்முகம் பேச்சை, கண் துடிக்கக் கேட்ட அர்ச்சுனன், அவன் காது துடிக்க ஆணையிட்டார்.

"கோவிந்தா அண்ட் கோவைப் பற்றி சரியாய்த் தெரியாது... அதனால தெரியாத அந்த தேவதையைவிட... தெரிந்த இந்த திருட்டுக் கம்பெனியான ராம் அண்ட் சீதா தேவல... இப்பவே சரக்கை அனுப்பச் சொல்லி போன் போடு."

"இந்நேரம்... அன்லோட் செய்திருப்பாங்க ஸார்... வாயில் வந்தபடி திட்டுவாங்களே ஸார்."

அர்ச்சுனன், வாயில் வந்தபடி பேசினார்.

"நான் சொல்றதைக் கேட்கத்தான் நீ இருக்கே. நீ சொல்றதைக் கேட்க நான் இல்ல... வரவர ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகுது. நூற்று நாலு டிகிரி வெயிலடிக்கிற இடத்துக்கு மாத்தினால்... கொழுப்பு கரைஞ்சிடும். போய்யா... போய் போன் போடுய்யா. ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர் சொல்றேன். நீ பாட்டுக்கு நிற்கிறியே போய்த் தொலய்யா."

ஆஜானுபாகுவான தண்டாயுதபாணி, கூனிக்குறுகி வெளியே வந்து இருக்கையில் உட்கார்ந்தான். எல்லாவித அவமானங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல் பேசிக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்களைக் கோபங் கோபமாய் ஏசினான். "இந்த ஆசாமி எல்லாரையும் ஆடு மாட்டைப் விரட்டுறதுமாதிரி விரட்டுறான். பெண்டாட்டியைத் திட்டுறது மாதிரி திட்டுறான். யாராவது எதிர்த்துப் பேசுறிங்களா? வரவர நமக்கு மானங்கெட்ட பிழைப்புல ரசனை வந்துட்டுது. என்ன பேச்செல்லாம் பேசறான். யாராவது ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுறிங்களா..."

வசந்தா, எதிர்க் கேள்வி போட்டாள்.

"உங்களை யார் கேட்க வேண்டான்னது? சொல்லப் போனால் ஒங்களைத்தான் அதிகமாய் ஏசுறார்."

"ஏற்கனவே, பல மானேஜர்களுக்கும் எனக்கும் தகராறு. இது கூடயுமா..."

"அப்படியும் நீங்கதானே ஜெயிச்சிங்க? ஒங்க நேர்மை முன்னால நிற்க முடியாமல் ஒரு மானேஜரை... அந்தமானுக்கு மாத்துனாங்க. இன்னொருத்தி திருச்சிக்குப் போனாள். ஒருத்தன் டில்லிக்கு. ஓங்க தைரியம் யாருக்கு ஸார் வரும்? ஆனால் ஒன்று. இந்த மானேஜரை ஒங்களால ஜெயிக்க முடியாது. முடியவே முடியாது. பந்தயத்துக்கு வர்நீங்களா.."

"எவ்வளவு பந்தயம்."

"இருநூறு ரூபாய்."

"மாறப்படாது. அப்புறம் கெட்ட கோபம் வரும்."

"எனக்கு மட்டும் என்னவாம்?"

இதற்குள், உள்ளே இருந்து, "தண்டாயுதம்... தண்டாயுதம்" என்று அர்ச்சுனக்குரல் இடி முழக்கமிட்டது. தண்டாயுதபாணி, தன் சகாக்களை வீறாப்பாய்ப் பார்த்தபடி, "இன்னைக்கு 'அதை' எப்படிக் கேட்கப்போறேன். பாருங்க. உங்களுக்குக் கேட்கும்படியாய் கேட்கப்போறேன் பாருங்க.." என்று சவாலிட்டபடியே உள்ளே போனபோது, சகாக்கள் கலக்கத்தோடு நின்றார்கள். ஏனென்றால், இந்த தண்டாயுதபாணி கோபம் வந்தால் கை வைக்கவும் தயங்காதவன். மங்கை பந்தயம் போட்ட வசந்தாவை முறைத்தாள். மீனா, பியூன் ஏகாம்பரத்தை. அர்ச்சுனன் அறைக்குள் போய். அசம்பாவிதத்தைத் தடுக்கும்படி சைகை செய்தாள். தண்டாயுதபாணி, அதிகாரி அர்ச்சுனனை முறைத்த படியே, அடிமேல் அடி வைத்து முன்னேறினான். அவர் முன்னால், கண்ணில் விரலைவிட்டு ஆட்டக்கூடிய தூரத்தில் நின்று கொண்டு, கர்ஜித்தான்.

"ஸார்... மொதல்ல ஒரு விஷயத்தை நிர்வாகத்துல தெரிஞ்சுக்கணும். முதல்ல, ராம் அண்ட் சீதா என்கிறது. அப்புறம் கோவிந்தா அண்ட் கோ என்கிறது. அப்புறம் பழையபடியும் ராம் அண்ட் சீதாதான் டெலிவரி செய்யனும் என்கிறது. இதுல்லாம் துக்ளக் மாதிரி..."

மேற்கொண்டு ஆணித்தரமாகப் பேசப்போன தண்டாயுதபாணியை, அதிகாரி அர்ச்சுனன், அப்பாவித்தனமாய்ப் பார்த்தபடி, இடைமறித்துப் பேசினார்.

"யோவ்... சீதாதான், டெலிவரி செய்யனுமுன்னு நீ சொன்னதும், பல நாளாய் ஒன்கிட்டே சொல்ல நினைத்தது. இப்போ ஞாபகத்துக்கு வருதுய்யா... ஒன் ஒய்ப் டெலிவரிக்குப் போனதால, நீ சாப்பாடு கிடைக்காமல் தெருவுல நிற்கல்ல? நாளைக்கு மட்டும் அப்படி நிற்க வேண்டாம். என் வீட்ல ஒனக்கு டின்னர், ஒன் மூஞ்சிக்காகப் போடல, ஒன் வீட்டு கிரகப்பிரவேசத்துல, ஒன் ஒய்ப் சீதா என் தட்டுல என்னவெல்லாமோ கொட்டியபடியே 'அங்கிள்... அங்கிள்’னு என் சொந்த டாட்டர் மாதிரி அன்பைக் காட்டினாள்பாரு, தின்னதை சத்தியமாய் மறந்துட்டேன். ஆனால் அவளோட அன்பை மறக்கலய்யா. மட்டனா, சிக்கனா, எது ஒனக்குப் பிடிக்கும்? ஏய்யா... ரெண்டும் வேணும் என்கிற மாதிரி பார்க்கிறே? நான் கிளாஸ் ஒன் ஆபீசர்தான். ஆனாலும் என்னால ஒண்ணுதான் தர முடியும். சொல்லுய்யா. சொல்லி தொலய்யா..."

ஆயுதபாணியாய் வந்த தண்டாயுதபாணி நிராயுதபாணியாகி கண்ணிர் மல்கக் குரல் கம்மக் கேட்டான்.

“ஸார் எனக்கு சாப்பாடு போடுறிங்களோ, இல்லையோ இருநூறு ரூபாய் கடனாய் தாங்க ஸார். அடுத்த மாதம் தந்துடறேன். ஸார்!”


சாவி : 1-9-1985