சிக்கிமுக்கிக் கற்கள்/வெள்ளித் திரையும், வீதித் திரையும்
வெள்ளித் திரையும்
வீதித் திரையும்
அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். தூங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் - அப்படிப்பட்ட பெருஞ் சத்தம். அந்த மாவட்டத் தலைநகரில் சந்து பொந்துகளையும் சாக்கடை மூடிகளையும் கூட விட்டுவைக்காமல், ஒட்டப்பட்ட கட்டப்பட்ட போஸ்டர்களில் காணப்பட்ட
நாடு போற்றும் நாயகனே!
நாளைய முதலமைச்சரே!
இன்றைய இளவரசே!
கனவின் நனவே!
நினவின் கனவே!
முத்தமிழின் முக்காலமே!
முக்காலத்தின் முத்தமிழே!
என்பன போன்ற தெருவாசகங்கள், இப்போது சொல்லிழந்து, பொருளிழந்து, அத்தனைபேர் வாயிலும் கூச்சல்களாய் வெளிப்பட்டன.
நடிப்புச் சக்கரவர்த்தி அக்னிநாத்தை வரவேற்பதற்காக கூட்ட முகப்பில் நின்ற மாநில அக்னிநாத் நற்பணி மன்ற தலைவர் அக்னிதாசன் எம்.ஏ. பில், துணைத் தலைவர்களான அக்னி அடியான் எம்.காம், டாக்டர் அக்னிராஜன், அக்னிதுரை, மாவட்டத் தலைவரான பாண்டியன் அக்னி பி.ஏ. பி.இடி., பொதுச் செயலாளர் மாரிமுத்து அக்னி பி.எஸ்.சி., ஆகியோர், அக்னியைப் பார்த்து ஓடியபோது அவர்கள் கூட்டிவந்த கூட்டமே, அவர்களை ஒரங்கட்டிவிட்டு, பாய்ந்தது. அதற்குள் முழு உடம்பையும் காட்டிய அக்னிநாத்தை, அலாக்காகத் துர்க்கி தலையில்போட்டு கூத்தாடியது. அவன் நடித்துப் பாடிய 'அடே பைக்கா... படே சுக்கா' என்ற பாடலை ஆடி ஆடி இசைத்தது.
அக்னிநாத், கூட்டத்தில் மிதந்தான். கைவேறு கால்வேறாகவும், தலை தனியாய்க் கிடப்பது போலவும் காணப்பட்டான். அந்தக் கும்பலில் அடிக்கடி மூழ்கியும் போனான். யார் யாரோ கிள்ளுகிறார்கள். முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். கன்னங்களை வருடுகிறார்கள். அவை அத்தனையும் உபாதையின் உச்சம். ஆனாலும் வழக்கமான புன்னகையைப் படரவிட்டபடியே சிக்கிக் கொண்டிருந்த கைகளை மேலே தூக்கி, அங்குமிங்குமாய் ஆட்டினான். இதற்குள் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகன், போலீசாரை கூட்டிவந்தான். அமைச்சருக்காக பாராவாய் வந்தவர்கள் ஆரம்பத்தில் யோசித்தார்கள். இவன், நீலகிரி மாவட்டத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு, பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி.யை, புரட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ததை, ஏகன் அவர்களுக்கு நினைவுப்படுத்தினான். உடனே அவர்கள் அவனுக்கு முன்னாலேயே ஓடினார்கள். ரசிகப் பெருமக்களை லத்திக் கம்புகளால் நெம்பிநெம்பி, அக்னிநாத்தை வெளிப்படுத்தி, அவனைச் சுற்றி பாதுகாப்பு வளையமாய் நின்றுகொண்டார்கள். அப்படியும் பாய்ந்து வந்த ரசிகர்களை நோக்கி, லத்திக் கம்புகளை ஆட்டினார்கள். ரசிகப் பெருமக்கள் ஓரளவு அமைதிப்பட்டு, அக்னிநாத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவனது திரைப்படப் பிம்பங்களில் முக்கால்வாசியே அவன் காணப்பட்டதில், திரைப்பட வித்தை தெரியாத அவர்களுக்கு சிறிது ஏமாற்றந்தான். ஆனாலும் அவன்மீது பதியம் போட்ட கண்களை எடுக்கவில்லை. சராசரிக்கும் அதிகமான உயரம் களையான தோற்றமோ இல்லையோ கலையான தோற்றம். தொப்புள் வரை பட்டன்போடாத சட்டை.. நிர்வாண மார்பு... அதற்கு கோவணம்போலான டாலர் செயின்.... காதுகளில் இருந்து தொங்கிய தங்கச் செயினின் இரு முனைகளையும் இணைத்து மார்பில் கவிழ்ந்த மூக்குக் கண்ணாடி போர்வீரர்கள் அணியும் இழைதழை பேண்ட். அவன் உருவங்களையே பல்வேறு கோணங்களில் டிசைன் செய்த பொம்மைச் சொக்கா...
அக்னிநாத், போலீஸ் பாதுகாப்போடு ரசிகக் கூச்சலோடு நடந்தான். 'பொல்லாதப் பயலுக... இவனுகள நெருங்க விடாதிங்க...' என்று இன்ஸ்பெக்டரிடம் கீழே குனிந்து, அவர் காதுகளில் கிசுகிசுத்துவிட்டு, மீண்டும் தலையை நிமிர்த்தி, ரசிகர்களைப் பார்த்து, தன்பக்கம் வரும்படி கையை ஆட்டினான். இதனால் சில ரசிகர்களை லத்தி, குத்தியது. அவர்களது அம்மாக்களும் அக்காக்களும் வம்புக்கு இழுக்கப்பட்டார்கள். அக்னிநாத், அந்த லத்தித்தனமான வார்த்தைகள், தன் காதில் விழாததுபோல் பராக்குப் பார்த்தபடியே நடந்தான். அந்த ரயில் நிலையத்தின் சிரங்கு பிடித்த சுவர்களில் ஒட்டப்பட்ட தனது பல்வேறு உருவப்படங்களை ரசித்துப் பார்த்தான். கராத்தே அக்னிநாத்... சிலம்பன் அக்னிநாத்... படுக்கையறைக் கில்லாடி அக்னிநாத்... துப்பாக்கி இன்ஸ்பெக்டர் அக்னிநாத்... முரட்டுக் கொள்ளைக்காரன் அக்னிநாத்...
இந்த நிலையத்திற்கு அப்பால், இருபதடி உயரத்திற்குமேல், ஒரு கழுதையின் உயரத்திற்கும் ஒரு பன்றியின் அகலத்திற்குமான 'கட்-அவுட்டை' ரசித்துப் பார்த்தபடியே நடந்தான். ஆனாலும், ஒரு வித்தியாசமான போஸ்டர், அவன் கண்ணை உறுத்தியது. 'எதிர்கால ஆளுநரே... எங்கள் அக்னிநாத்தே' என்ற வாசகத்தோடு, தலையில் கிரீடமும், கையில் செங்கோலுமாய் தோன்றிய தனது உருவத்தைப் பார்த்து, அவன் மூட்-அவுட் ஆகி அப்படியே நின்றான். அந்தச் சமயம் பார்த்து ஒரு துடுக்கான இளைஞர், சில மினுக்கமான மனிதர்களோடு வந்து, லத்திக் கம்பு வளையத்தின் ஒரு பக்கத்தை அலட்சியமாகத் தள்ளியபடியே, உள்ளே போனார். அக்னிநாத்தின் நீட்டப்படாத கைகளை இழுத்துப்பிடித்து ஒரு குலுக்கு குலுக்கியபடியே இப்படிப் பேசினார்.
"நான்... மேக நாதன் ஐ.ஏ.எஸ்.... இந்த மாவட்ட ஆட்சித் தலைவர். மாண்புமிகு அமைச்சர் அற்புதன் அவர்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறார். அதோ முதலாம் வகுப்புப் பயணிகள் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார். இந்த மாவட்டத்தில் நடக்கிற ஜாதிக் கலவரங்களைக் கண்டறிந்து, இப்போது விளக்கிக் கொண்டிருக்கிறார். இத்தனை நெருக்கடியிலும் உங்களைக் காண விரும்புகிறார். கையோடு கூட்டி வரச்சொன்னார்... போகலாமா?..."
அக்னிநாத் வழக்கம்போல், 'இயக்குநர் பிரமிப்பு' ஏகனை. வளைத்துப் பார்த்தான். அவன் பார்வைகளை அர்த்தப் படுத்துவதற்காகவே பிறவி எடுத்ததுபோல், அவன் முகத்தையேப் பார்த்த இயக்குநர் பிரமிப்பு, ஆட்சித் தலைவருக்கு விட்டான் ஒரு விடு.....
"எங்க அண்ணன்தான், உங்க அமைச்சருக்குத் தேவை. உங்க அமைச்சர் எங்க அண்ணனுக்குத் தேவையில்லை... இன்னும் ஐந்து நிமிடம் டைம் கொடுக்கேன்... வேணுமின்னா ஓங்க அமைச்சர இங்க வந்து, அண்ணனப் பார்க்கச் சொல்லுங்க... என்னய்யா இது... நாட்டுல தராதரமே இல்லாமப் போயிட்டு..."
அக்னிநாத், ஆமோதிப்பாய், தலையாட்டியபோது, புலியாய் வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இப்போது சூடுபட்ட பூனையாய், திரும்பிப் பாராமலே நடந்தார். அவரது பரிவார மனிதர்களும் ஆட்சித் தலைவர் திரும்பிப் பார்க்காததால், நேராகப் பார்த்தபடியே நடந்தார்கள்.
அக்னிநாத், அமைச்சரின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்தான். அந்தச் சமயம் பார்த்து ரயில் நிலையத்தில் ஒரு பூவரசு மரத்துக்கு அடியில், அக்னிநாத்தை எதிர்பார்த்து கும்பலாய் கூடி நின்ற கல்லூரி மாணவிகள், அவன் நின்றதைப் பார்த்ததும், தலைவிரி கோலமாக ஓடிவந்து கூட்டத்துள் கலந்தார்கள். மொட்டை மரமாய்த் தோன்றிய ஆடவர் கூட்டத்தில், பெண் பூக்களாய்ப் மலர்ந்தார்கள். தேர்வு நேரந்தான். அது வரும்... போகும். ஆனால், காதல் சிங்காரன் அக்னிநாத் அப்படி அல்லவே... எப்போதோ வருகிறவன். விட முடியுமா....? "சார் சார்... அக்னிசார்.... ஆட்டோகிராப் போடுங்கசார்... ப்ளீஸ் அக்னி.... போட்டுத்தான் போகணும் அக்னி... இல்லாட்டா நடிகை கம்பா, உங்கள 'காதலோ காதல்' படத்தில வழிமறிப்பு செய்ததுபோல வழிமறிப்புமாக்கும்..."
எதிர்கால அமைச்சருக்குரிய அத்தனைத் தகுதிகளையும் கொண்ட ஒருத்தி, உரக்கச் சொன்னதும் ஒரே சிரிப்பு.... ஒரே முட்டல்மோதல்... ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு நோட்டுப் புத்தகம், தலைக்கு மேல் போய் பறவையாய் சிறகடித்தது.... விசிறியாய் விரிந்தது... அக்னிநாத்தும் சிரித்தபடியே கையெழுத்துப் போடப் போனான்... அந்தச் சமயத்தில் - கெடுமுடிவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே ஒரு தடித்த மனிதர், தனது கைத்தடி மனிதர்களோடு ஓடிவந்தார். கரைவேட்டி.... கரைத்துண்டு... ஆங்காங்கே கரைகளும் கொண்ட முகம்.... கூட வர மறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரை, சென்னையில் அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒரு துருப் பிடித்த நாற்காலியில் துணைச் செயலாளராக அமர்த்திவிடுவது என்ற ஆவேசத்தோடு நெருப்பாய் வந்தவர், நீராய்ச் கொட்டினார்... அக்னிநாத்தை ஆரத் தழுவியபடியே ஆனந்தக் கூச்சலிட்டார்.
'என் பெயர் அற்புதன்.... அமைச்சராய் இருக்கேன்... ஒங்க எல்லாப் படங்களுமே எனக்கு அத்துபடி. என் மனைவிக்கும் ஒங்கள ரொம்பப் பிடிக்கும்... இந்தாப்பா கேமரா... எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் எடு... பி.ஆர்.ஓ! நானும் தானைத்தளபதி அக்னிநாத்தும் இருக்கிற படங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பிடு. ஒங்களப் பார்த்ததே என் கண்கள் செய்த பாக்கியம்!
அமைச்சரின் பேட்டிக்காக வந்திருந்த அத்தனை செய்தியாளர்களும், தொலைக்காட்சி நிபுணர்களும், நிபுணிகளும், அமைச்சரை விட்டுவிட்டு, அக்னிநாத்தை மொய்த்தார்கள். அவனோ, தன் காலடியில் கண்களைக் குவித்த அமைச்சர் அற்புதனை கட்டியணைத்து, பிற்கு நெஞ்சுக்கு நேராய் நிமிர்த்தி, ஒரு கையை மட்டும் தூக்கி ஆட்டிக்காட்டி அவரை ஆசீர்வதித்தான். அதுவரைக்கும் காத்திருந்த செய்தியாளர்கள் அடுக்கடுக்காகக் கேட்டார்கள்...
'அக்னிநாத்!... ஒங்க மாநில அக்னிநாத் நற்பணி மன்ற மகாநாட்டில், மன்றத்தை ஒரு அரசியல் கட்சியாய் அறிவிக்கப் போறீங்களாம்... இது உண்மையா?'
அக்னிநாத், அமைச்சரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு செய்தியாளர்களை நெருங்கி சிரித்தபடியே பதிலளித்தான்.
'மாநாடு மாலையில் துவங்குகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...
'அப்புறம் மிஸ்டர் அக்னி...! இந்தச் சாதிக்கலவரங்களப் பற்றி என்ன நினைக்கிறீங்க?...
'சாதி என்றவுடன், எனக்கு நினைவுக்கு வரும் வார்த்தை 'பெண்சாதி'தான். அந்த நினைப்போடதான் என் தாய்மாமா வீட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்.'
'மண் வாசனைய தூளாக்கிட்டிங்க அக்னி... இப்பவும் கிராமங்களுல மனைவிய 'பெண்சாதி'ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆமா அங்க என்ன விசேஷம்?'
'என் மாமா மகள் கயல்விழியை கட்டிக்கப் போறேன்...'
செய்தியாளர் கூட்டம் முண்டியடித்தது. பொக்காரான் அணுகுண்டு வெடிப்பு அறிவிப்பு பேட்டியில்கூட, அப்படி முண்டியடித்திருக்க மாட்டார்கள்... கேமராக்கள் பளிச்சிட்டன... தொலைக்காட்சி வீடியோக்கள் ஒளியிட்டன... மிக முக்கியமான நிகழ்ச்சி.... அதுவும் தலைப்புச் செய்தி... ஏனோதானோன்னு இருக்க முடியாது...
'வாழ்த்துக்கள் அக்னிசார்! இது காதல் திருமணமா?'
'நோ... நோ... எங்க மாமா பொண்ண, பத்து வயசுச் சிறுமியா பார்த்தது... அதுக்குப் பிறகு பத்து வருடமா பார்க்கவே இல்ல... என்னோட கிராமத்து வேர்கள் விட்டுடப்படாதுன்னும் என்னை சின்ன வயதில் ஆதரித்த தாய்மாமாவுக்கு நன்றிக்கடனாயும் கயல்விழியக் கட்டிக்கப்போறேன்.'
'தப்பா நினைக்கப்படாது. ஒங்களுக்கும் நடிகை கம்பாவுக்கும் நெருக்கமுன்னும், நீங்க அவங்கள கட்டிக்கப் போறதாயும் ஒரு கிசுகிசு அடிபட்டதே...'
'அந்தக் கிசுகிசுவக் கிளப்பிவிட்டதே பிரஸ்தான் நானும், கம்பாவும் நல்ல நண்பர்கள்... ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையைக்கூட அது இல்லாமலே பகிர முடியும்.' 'கொன்னுப்பிட்டிங்க அக்னி... பெண்ணியத்தை இந்த அளவுக்கு யாரும் பெருமைப்படுத்தி பேசல...'
'சார்... நாங்க அமாவாசை தொலைக்காட்சியோட டீம்... ஒங்க மேடத்த... அதான் கயல்விழிய நேர்காணல் செய்யணும்... நீங்கதான் ஏற்பாடு செய்யனும் சார்...'
'அதுக்கென்ன... வாங்கிக் கொடுக்கிறேன்... கரும்பு தின்ன கூலி கேட்பாளா என்ன...'
அக்னிநாத், சிரித்தபடியே நடந்தான். முண்டியடித்த செய்தியாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக நடை மன்னன் ஆனான். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகனும், மன்ற நிர்வாகிகளும் நாலுகால் பாய்ச்சலில் ஓட வேண்டியதாயிற்று. விரட்டிவந்த கூட்டத்தை கையமர்த்தியபடியே, அக்னிநாத், தயாராக நிறுத்திவைக்கப்பட்ட ஒரு சொகுசுக் காரின் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, இயக்குநர் பிரமிப்பு முன்னிருக்கையில் ஏறிக்கொண்டான். மன்றத் தலைவர்கள் குறிப்பாக் அக்னிதாசன் எம்.ஏ. பி.எல், தனது தலையை மட்டும் சட்டென்று எடுக்காதிருந்தால், கார் கதவுக்குள் அது நசுங்கியிருக்கும்.
கருஞ் சிவப்பு வண்ணத்திலான அந்த சொகுசு கார், குட்டாம்பட்டிக்கு இட்டுச் செல்லும் கப்பிச் சாலையில் ஒடிக் கொண்டிருந்தது. இயக்குநர் பிரமிப்பு கேட்டான்.
'நீங்க மூட்அவுட் ஆனது மாதிரி தெரிஞ்சுதுண்ணே!'
பின்னே என்னடா... என்னை எதிர்கால முதலமைச்சரேன்னு போஸ்டர்ல போடாமல், ஆளுநரேன்னு போட்டா என்னடா அர்த்தம்? மன்றத் தலைவன மாற்றணுன்டா... வாங்குற காசுக்கு மோசம் பண்ணிட்டாண்டா... எச்சிக்கலப் பய....'
'யதார்த்தமா பேசுங்கண்ணே... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் முதலமைச்சர்னு முடிவாயிட்டு... அதனாலதான், ஒங்கள ஆளுநரா நியமிச்சிருக்காங்க.. கவலப்படாதிங்கண்ணே... முதலமைச்சரையே பதவி நீக்கம் செய்யிற பதவிண்ணே... முதலமைச்சர் ரஜினிகாந்த்தான் ஒங்கள அனுசரிச்சுப் போகணும்...'
குட்டாம்பட்டியில், தாய்மாமா வீடு, ஊர் முனையிலேயே இருந்தது நல்லதாய்ப் போயிற்று. அந்த ஊர் தெருக்கள், இந்தக் காரைவிட குறுகலானவை. ஊர் முனையில் அதன் அத்தனை ஜனத்தொகையும், திரண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, அக்னிநாத் குழப்பத்தோடு இறங்கினான்... தாய்மாமா முத்துலிங்கம், அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மினார்... வயிறு எக்கிய மனிதர். சதையை சட்டம் போட்டு வைத்திருப்பதுபோன்ற எலும்புக்கூடுகள்... அத்தைக்காரிதான் அவரது விம்மலுக்கு வர்ணனை கொடுத்தாள்.
'எப்பவும் சொல்லுக்குச் சொல்லு 'எங்க அக்கா மகன் முனுசாமி படியேறி வந்து நம்ம கயல்விழியப் பெண் கேப்பான்'னு ஒவ்வொரு நாளும் பேசுற மனுசன்.. நீ இப்படி ஆனதுல இந்த அத்தைக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா முனுசாமி!
அக்னிநாத்திற்குள் பதுங்கியிருந்த முனுசாமி திடுக்கிட்டான். ஆனாலும் இப்போது அசல் முனுசாமியாவே கேட்டான்.'
'நான், கயல்விழியக் கட்டிக்கப்போறது ஒங்களுக்கு எப்படித் தெரியும்? ஒங்களுக்கு நேரில் இந்தச் செய்திய சந்தோஷ அதிர்ச்சியாத் தரணுமுன்னு நினைச்சேன்...'
அவன் கையில், ஒரு நோட்டைத் திணித்தபடியே ஒரு லோக்கல் விடலை விவரம் சொன்னான்.
'பெளர்ணமி தொலைக்காட்சி செய்தியில நீங்க கயல்விழிய கட்டிக்கப்போறதா ஒங்க படத்தோட செய்தி சொன்னாங்க...'
அக்னிநாத் திடுக்கிடவில்லையானாலும், அவனோடு வந்த அமாவாசைத் தொலைக்காட்சிக்காரன் திடுக்கிட்டான். அப்புறம் வருந்தினான்... பிறகு உறுதி பூண்டான். எஸ்.டி.டியில பேசி செய்தி சொல்லாதது தப்புதான். தாளிக்கப் போறாங்கதான்... ஆனாலும் அக்னிநாத்தோட திருமண ஏற்பாடுகளையே ஒரு அரைமணி நேர புரோகிராமா ஆக்கிக்காட்டி அந்தப் பெளர்ணமி தொலைக்காட்சிப் பயல தேய்பிறை ஆக்கணும். சாதிக்கலவரத்த படம்பிடிக்க வந்தது நல்லதாப் போயிற்று...
அக்னிநாத், தாய்மாமா வீட்டிற்குள் பரிசக்காரனாய் நுழைவதால், வலது காலை தூக்கி படிதாண்டினான். இயக்குநர் பிரமிப்பும், உள்ளுர் பிரமுகர்களும் இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டு உள்ளே போனார்கள். அவரைக்கொடியும், பாகற்காய் கொடியும் பந்தலிட்ட முற்றத்தில் ஏற்பாடாய்ப் போடப்பட்ட நாற்காலிகளில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். தயாராய் வைக்கப்பட்ட மோர் டம்ளர்களை தூக்கிக் கொண்டு சிறுவர் சிறுமியர் ஓடிவந்தனர். அக்னிநாத்தை பார்த்ததும் ஒரு சிறுமி 'ஹாய் அக்னி' என்று ஒரு குதி குதித்தாள். அவன் வாயில் மோர் டம்ளரை பொருத்தினாள். ஆங்கிலப் பள்ளியில் படிப்பவள். இப்போதோ நாளைக்கோ என்று இருப்பவள்.
அக்னிநாத், மீண்டும் இயக்குநர் பிரமிப்பைப் பொருள்பட பார்த்தான். மோவாயை நிமிட்டி காட்டினான். உடனே, அவன் இரண்டு பார்சல்களை, அவனது தாய்மாமாவிடம் நீட்டினான். அவன் நீட்ட நீட்ட அக்னிநாத் பின்னணிக் குரல் கொடுத்தான்.
'இந்தப் பெரிய பார்சலுல முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கின பரிசப் புடவை இருக்குது... சின்ன பார்சலுல பத்து லட்சத்துக்குரிய நகைகள் இருக்குது... எடுத்திட்டுப் போய் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு கயல்விழிய சீக்கிரமா வரச்சொல்லுங்க அத்தே... எனக்கு மாநாட்டுக்கு நேரமாகுது. அப்புறம் அடுத்த மாதம் இந்தப் பக்கம் படப்பிடிப்புக்கு வாரேன். அப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்.'
அந்தப் பார்சல்களை கைமடிப்பில் சுமந்தபடி உள்ளறைக்குள் அத்தைக்காரி போய்விட்டாள். ஊர்ப் பிரமுகர்களின் கேள்விகளைக் கேட்காமலே தலையாட்டிக் கொண்டிருந்த அக்னிநாத்தின் சட்டைக்காலரில், அமாவாசைக்காரன், ஒரு மைக்கைச் சொருகினான். இரண்டு கால்களை விரித்துப் போட்டு உச்சியில் சவாரி செய்த காமிராத் தலையை கோணப்படுத்தினான். அக்னிநாத்தும், தான் தாய்மாமா மகளை கட்டிக்கொள்ளப் போவதற்கான காரண காரியங்களை, ஏற்ற இறக்கமான குரலோடு ஒரே டேக்கில் பேசிவிட்டான். பதினைந்து நிமிடம் பறந்து விட்டது. இனி அக்னிநாத்தை கட் பண்ணி, இடையிடையே கயல்விழியையும் கட்பண்ணி, மிக்ஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி.
உள்ளறையிலிருந்து தள்ளாடி வந்த அத்தைக்காரி, திண்ணையில் நின்றபடியே. கணவனை கண்ணடித்து கூப்பிட்டாள். அவர் பார்க்காததால், பிறகு கையடித்துக் கூப்பிட்டாள். ஓடிவந்து ஒட்டிக் கொண்ட கணவரின் காதில் கிசுகிசுத்தாள். அவர் வலி பொறுக்காதவர்போல் 'முனுசாமி! கொஞ்சம் வாரியாப்பா...' என்று ஊளையிட்டார். கூடவே எழுந்த இயக்குநர் பிரமிப்பை, ஒரு குட்டு குட்டி, உட்காரவைத்துவிட்டு, அக்னிநாத், தாய்மாமாவை நெருங்கி, அத்தையை நெருக்கினான்.
'கற்பூர வாசனை அந்தக் கழுதைக்குத் தெரியலியே!'
'என்ன மாமா சொல்றீங்க?'
'ஒன்னக் கட்டிக்க மாட்டாளாம். வலிய வந்த சீதேவிக்கு கதவச் சாத்துறாள் மூதேவி.'
அக்னிநாத் ஆடிப்போனான். ஐந்தேமுக்கால் அடி உடம்புக்கு மேல் ஊடுருவி ஆகாய முட்டியும் பாதங்களுக்குக் கீழே அகலபாதாளம் தட்டியும் விஸ்வரூபமாய் எழுந்துநின்ற அவன் பெருமிதம் அரையங்குலமாய் சுருங்கியது. அதுவும் அழுகிப்போவதுபோல் நசிந்தது. ஆத்திரம் தலைச் சுற்றலாய், ஆவேசம் காதிரைச்சலாய், அதிர்ச்சி இருள்மயமாய் அவனை ஆக்கிரமித்தன. சிறிது நேரம் எதுவும் பேசாமல் உடம்பைகத் தரையை நோக்கி சுருக்கிக் கொண்டே போனான். அந்த சுருக்கத்தை சரி செய்யாமலே, யாரோ யாருக்கோ பேசுவதுபோல் பேசினான்.
'நான் போய் பேசிப்பார்க்கட்டுமா?'
பேசிப் பாருப்பா... காளியம்மா! காளியம்மா! கைக்கு எட்டினத வாய்க்கு எட்டாமச் செய்திடாதடி பாவி'
அக்னிநாத், உள்ளறைக்குள் கிட்டத்தட்ட ஓடிப்போனான். திரைப்படங்களில், இப்படிப்பட்ட காட்சிகளில் கெக்கொலி கொட்டிச் சிரித்தவன். நிச வாழ்க்கையிலும் இப்படி காதல் சவாலிட்ட பல பெண்களை படுக்கையறையில் வீழ்த்தியவன். ஆனால் இப்போதோ படுத்துப் போனவனாய் நடந்தான்.
முக்காலியில் உட்கார்ந்தபடியே, வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரி முடித்த கயல்விழி, அவனைப் பார்த்து 'வாங்கத்தான்' என்று சொல்லியபடியே எழுந்து கொடியில் தொங்கிய கருநீல துப்பட்டாவை, நீலநிற சுடிதாருக்குமேல் போட்டுக் கொண்டாள். நிறமற்ற நிறம்... அதேசமயம் அழுத்தந் திருத்தமான முகம்... ஒளியச்சு லாவகம்... அவனை வரவேற்பதுபோல் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனை உற்சாகப் படுத்தியது. முதல் பார்வையிலேயே அவளை அசத்தியாச்சு. பேச்சிலயும் அசத்திட்டால் தோப்புக்கரணம் போடுவாள்.
'எப்பா... எப்படி வளந்துட்டே... எப்படி ஜொலிக்கிறே... உன்ன அப்படியேக் கடிச்சுத் தின்னுடலாம் போல இருக்கு...
'நீங்க என்ன மிருகமா?...
அக்னிநாத் திக்குமுக்காடினான்... அவளை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் அல்லாடினான். பல திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் இவனுக்கு எழுதிக்கொடுத்த சவுக்கடி உரையாடல்களை முதல் தடவையாக வாங்கிக் கட்டுவதுபோல் நெளிந்தான். கண்களை மூடினான். மீண்டும் அவள் சிரிப்புச் சத்தம் கேட்டு கண்திறந்தான். அவள் பார்வை உற்சாகப் படுத்தியது.
'ஆமா! நான் மாறியிருக்கனா?... என்னைப் பத்து வருஷமாப் பார்க்காமலேயே அடையாளம் கண்டுபிடித்தியா... இல்ல நான்தான்னு யூகிச்சியா..?'
'ஒங்களத்தான் தினமும் பார்க்கேனே... தொலைக்காட்சியில நீங்க நடித்து நூறு நூறு விழாக்களைக் கண்ட 'அவனோட ராத்திரிகள்'.... 'பெண் பெண்தான்' - 'ஆண் ஆண்தான்'.... 'கொலையும் செய்வாள் பத்தினி'.... 'நேற்று ராத்திரி எம்மா'... இப்படி எத்தன படங்கள்... நானா பார்க்கிறது இல்ல... அப்பாம்மா... ஒங்கள ரசிச்சுப் பார்க்கும்போது, என்னால அத ஆபாசமுன்னு சொல்ல முடியல... என்வரைக்கும் ஒதுங்கிக்குவேன்... ஒங்களோட சமூகக் கருத்துக்களும், ஒங்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி காதுலயும் கண்ணுலயும் அடிபட்டதுண்டு. முனுசாமி என்கிற கிராமத்துப் பெயர மாற்றிக்கிட்டது. நீங்க கிராமங்களுக்கே செய்த சேவை.'
அக்னிநாத், ஒன்றும்புரியாமல் விழித்தான். சாட்டையடி கொடுத்தபடியே சிரிக்கிறாள். அழுத்தமாகப் பார்க்கிறாள்... அதுவும் நேருக்கு நேராய், கண்ணில் கண்விட்டு பேசுகிறாள்... இவள் எந்த வகையில் சேர்த்தி... அக்னிநாத் விவகாரத்திற்கு வந்தான்.
'ஆமா... நீ என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னியாம்... என்னை இங்க வரவழைச்சு என் வாயால அந்த நல்ல வார்த்தைய கேக்கத்தானே இப்படி தந்திரமாப் பேசியிருக்கே...'
'இந்தமாதிரி சினிமாத்தனங்கள் எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தாலும் வராது அத்தான், ஒங்களக் கட்டிக்க விருப்பம் இல்ல... அவ்வளவுதான்.'
'இந்தாபாரு கயல்... எனக்குப் பேரும் புகழும் இருக்குது. எட்டுப் பங்களா இருக்குது. கறுப்புப் பணமே கோடி தேறும்... நல்லா யோசித்து பாரு... அப்புறமா வருத்தப்படாதே... என்ன இல்ல என்னிடத்தில்?... நிறைவாவே இருக்கேன்...'
'நீங்க சொல்ற நிறைவுகள், எனக்கு குறைவுகளாத் தெரியலாம் இல்லியா...'
'அப்போ எவனயாவது காதலிக்கிறியா?... அதையாவது சொல்லு... நானே அவனுக்குக் கட்டி வைக்கிறேன்...'
'இதுவரைக்கும் இல்ல...'
'அப்போ என்னக் கட்டிக்க விரும்பாததுக்கு காரணமாவது சொல்லு...'
'காரணம் இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். விருப்பம் இல்ல... நீங்க ஆயிரம் தடவக் கேட்டாலும் இதே பதில்தான்.'
'ஒன்னை நம்பி டி.வி.காரணக்கூட கூட்டிக்கிட்டு வந்திட்டேன். நாடு முழுக்க செய்தி போயிட்டுது. கடைசில ஒன்னால நான் தலைகுனிஞ்சு...'
'நிறுத்துங்கத்தான். ராமன் கெட்டதும் பெண்ணால... ராவணன் கெட்டதும் பெண்ணால என்கிறது மாதிரி பேசாதிங்க...'
'கோபப்படாதே கயல்விழி... இந்தக் கல்யாணம் நடக்காட்டால் நான் திரையுலகத்தில தலை நிமிர்ந்து நடக்க முடியாது... எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்கே தெரியல...'
'ஒங்களுக்குத் தெரியாத சினிமா வழியா?... 'என் மாமா மகள், சின்ன வயசிலிருந்தே என்னை சகோதரனா நெனச்சு பழகிட்டாளாமுன்'னு சொல்லிடுங்க... ஒங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது...'
'ஆனாலும் காரணத்த...'
அக்னிநாத்துக்கு புரிந்ததோ புரியவில்லையோ. கயல்விழி சொன்னதில் பல காரணங்கள் இருப்பதுபோல் பட்டது. தரையில் அழுத்தமாகக் கால் பதித்தப்டியே ஒவ்வொரு வார்த்தையும் ஒலி குறையாமல் முழுமையாய் வெளிப்பட இயல்பாகப் பேசினாள்.
'சரியத்தான்... எனக்கு நேரமாகுது... இந்தப் பகுதியில ஒரே சாதிக்கலவரம்... அண்ணன் தம்பியாப் பழகுனவங்க... கவுரவர்களாயும், பாண்டவர்களாயும் ஆயிட்டாங்க... அதனால மத நல்லிணக்கத்தையும், வகுப்பு ஒற்றுமையையும் வலியுறுத்தி, இன்னைக்கு வெட்டாம்பட்டியில வீதி நாடகம் போடப்போறோம். நாயகர் நாயகி இல்லாத நாடகம்... ஒருத்தன வீரனாக்குறதுக்காக முப்பது பேரை பேடியாக்காத நாடகம் என்னோட வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிற கலை வாழ்வு. இப்போ போனால்தான் சரியான நேரத்திற்குப் போக முடியும்... வாரேன் அத்தான்... இந்தாங்கத்தான் உங்க நகைகளும், புடவையும்...
அக்னிநாத் கூனிக் குறுகி, அந்த அறைக்குள்ளேயே நாட்டப்பட்ட கம்பமாய் நின்றபோது, கயல்விழி அந்த அறையின் பின்வாசல் வழியாக வெளியேறி, வீட்டின் முன்பக்க வழியாய் வந்தாள். வீட்டு வாசலை இருட்டாக்கி மறைத்த, அக்னிநாத்தின் சொகுசு காருக்கருகே நிறுத்தி வைக்கப்பட்ட தனது சைக்கிளை உருட்டினாள்.
குமுதம் - செப்டம்பர், 1999 |