சிதம்பர நாடார் கதை

ஆக்கர்: அ.கா.பெருமாள்
வகை: நாட்டார் கதை
வெளியீடு:
காலம்:


பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தார். அவர் 12 வயதான நாடாச்சியம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். திருமணம் ஆகி பல நாட்கள் ஆன பின்னும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. நாடாச்சி அம்மா குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனம் மிக வருந்தினாள்.


பல நோன்புகளும் அவர்கள் நோற்றனர். பல கடவுள்களை வணங்கினர். ஆயினும் அவள் வயிறு திறக்கவில்லை. நாடாசியம்மாவுக்கு 32 வயது ஆனது. 20 ஆண்டுகளாகக் குழந்தையில்லாத ஏக்கத்தால் வருந்திய நாடாச்சி கணவனிடம் இனிமேலும் மலடியாக உயிர்வாழ்வதில் பொருளில்லை. நான் ஊர் ஊராகப் போய் தவம் செய்யப் போகிறேன். என்னை அனுப்பிவையுங்கள் என்றாள்.


செல்லையாநாடார் "நம் குலம் ஐந்துமுடிநாடார்குலம். பெருமைவாய்ந்த மரபு நமக்கு உண்டு. நாம் அப்படி போவது குலத்துக்கு அழகல்ல என்றார்.


நாடாச்சி கணவன் பேச்சைக் கேட்கவில்லை. என்னால் இனி பொறுக்க முடியாது, நான் தவம் செய்யப் போவேன் என்று அடம் பிடித்தாள்


கணவந் "உன் துயரம் எனக்குப் புரிகிறது. அப்படியானால் உன் பிள்ளைக்கலியைத்தீர்க்க ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள் என்றான்.


நாடாச்சியம்மாள் தத்துப்பிள்ளை சொந்தப் பிள்ளை குமா? அது உங்களுக்கும் நம் முன்னோருக்கும் நீர்க்கடன் செய்யுமா- வேண்டாம் அது என்றாள்.


வேறுவழியில்லாமல் செல்லையா நாடார் ஒப்புக் கொண்டார். நாடாச்சி அம்மா ஏழு தோழிகளை அழைத்துக்கொண்டு தவம் செய்யப் புறப்பட்டாள்.


முதலில் அவர்கள் இருக்கந்துறை அய்யன் கோவிலுக்குச் சென்றார்கள். அய்யனே எனக்குக் குழந்தை பிறந்தால் ஒரு யானை தருகிறேன் என நேர்ந்தாள். பின் அங்கிருந்து கன்னியாகுமரி பகவதி கோவிலுக்குச் சென்றாள். அம்மா எனக்கு குழந்தை வரம் தந்தால் மாசி மாதம் உனக்கு திருவிழா நடத்துவேன் மாதந்தோறும் நான் உன் கோவிலுக்கு வருவேன் என்றாள். பின் அங்கிருந்து புறப்பட்டு வழுக்கம்பாறை வந்தாள். அங்கு மூங்கிலடியிச்சி அம்மை கோயிலுக்குச் சென்றாள். அக்கோவிலில் 30 நாட்கள் தவம் இருந்தாள்.


எந்தக்கோவிலிலும் பலன் கிடைக்கவில்லை. பின் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குச் சென்று முறையிட்டாள். தேவனே என் குறையைத் தீர்த்தால் ஆண்டுக்கு இரண்டு திருவிழா நடத்துகிறேன். உன் பேரை விடுகிறேன் என்றாள். அங்கு அவளுக்கு எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. பின் சுசீந்திரம் ஊரைவிட்டு ஆஸ்ராமம் வந்தாள். அங்கு பதினெட்டாம்படி இசக்கியைக் கண்டு வணங்கினாள். பின் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு வந்து தவம் இருந்தாள். அங்கும் பலன் கிடைக்கவில்லை.


ஒரு இடத்திலும் பலன் கிடைக்காத நாடாச்சி பத்மநாபபுரம் வந்தாள். அங்கு பெருமாள் கோவிலில் இறைவனை சேவித்து, எனக்கு ஒரு பாலகனைத் தந்தால் பொன்னால் பல்லக்கு செய்து வைப்பேன் என்றாள். பின் திருவனந்தபுரம் வந்தாள் பலன் ஏதும் கிடைக்கவில்லை.


அதன்பிறகு நாடாச்சியம்மாள் விரக்தியடைந்து தோழிகளிடம் இனி வேண்டாத தெய்வம் இல்லை. எந்த தெய்வமும் நமக்கு அருளவில்லை. நம் ஊருக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ளுவோம் என்றாள்.


இவ்வாறு துயரம் கொண்டு நாடாச்சி ஊருக்குத் திரும்பும் வழியில் நெய்யாற்றங்கரைக்கு வந்தாள். அங்கு ஒரு குறத்தியைக் கண்டாள். குறத்தி இவளின் கையைப் பிடித்து உன் முன்னோர்கள் ஆண்ட இடத்தில் திருமதில் இடிந்து கிடக்கிறது. தேர் உடைந்து கிடக்கிறது. நீ அதை எல்லாம் சரிசெய்து பூசை செய்தால் நினைத்தது நடக்கும். உனக்குப் பிறக்கும் குழந்தைக்கு சிதம்பரம் என்று பெயர் வைப்பாய். அவன் தனது இருபத்தி எட்டாம் வயதில் ஒரு பிராமணப் பெண் காரணமாக இறப்பான் என்று கூறினாள்.


நாடாச்சிக்கு குறிகாரி பேரில் நம்பிக்கை வரவில்லை. அதனால் அவள் வரும்வழியில் மண்டைக்காடு கோவிலுக்குச் சென்றாள். அங்கு தன் குறைகளைக் கூறி புலம்பினாள். பின்பு கண்ணீர் விட்ட்படி தன் வீட்டிற்கு வந்தாள்.


செல்லையா நாடார் கோவில் கோவிலாகச் சென்று தவம் இருந்தது வந்த மனைவியைப் பார்த்தார். பெண்ணே கோவிலுக்குச் சென்ற பலனைக் கூறு எனக் கேட்டார். மனைவி குறத்தி ஒருத்தியைக் கண்டேன். குடும்ப தெய்வத்தை மறந்துவிட்டோமே என்று சுட்டிக்காட்டினாள். நாம் உடனே. அந்தக் கோவிலைச் சரிசெய்துவிடவேண்டும். இது என் ஆசை என்றாள்.


செல்லையா நாடார் பெரிய தச்சர்களையும் கொத்தர்களையும் அழைத்தார். சிதைந்த கோவிலைச் சரிசெய்யச் சொன்னார். அவர்களும் கோவிலைப் புதிய கோவிலாக மாற்றினர். நாடாச்சி கோவிலை வணங்கி தானம் பல செய்தாள்.


அந்நாளில் நாடாச்சி ஒரு கனவு கண்டாள். கனவில் அவள் கருவுற்ற்துபோலவும் அழகிய ஆண்குழந்தை பிறந்தது போலவும் கண்டாள். .அந்தக்கனவைக் குறித்து கணவனிடம் கூறினாள் அவரும் மிகவும் ககிழ்ச்சி அடைந்தார்.


கனவும் பலித்தது. சிலநாளில் நாடாச்சி கருவுற்றாள். ஒவ்வொரு மாதமாகக் கரு வளர்ந்தது. பத்து மாதம் ஆனது. மகப்பேறு காலம் வந்தது. செல்லையா நாடார் மனைவிக்கு மகப்பேறு பார்க்க செம்பொன்கரையில் உள்ள காலகன்னி என்ற மருத்துவச்சியை அழைத்து வருமாறு ஒட்டனை அனுப்பினார். ஒட்டனும் மருத்துவச்சிக்கு நிறைய பொன் தருவதாகக் கூறி அழைத்து வந்தான். காலகன்னி மகப்பேறு பார்த்தாள். நாடாச்சியம்மைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தைக்கு குறத்தி குறி சொன்னபடி சிதம்பரம் எனப் பெயர் சூட்டினாள். சிதம்பரத்திற்கு ஏழு வயதானதும் திண்ணைப் பள்ளி ஆசிரியர் வந்தார். அவனுக்கு மொழியைக் கற்பித்தார். அவனுக்கு வயது 15 னது. செல்லையா நாடார் மகனுக்கு யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றையும் வாள் வித்தை ஈட்டி எறிதல் போன்றவற்றையும் கற்பித்தார்.


சிதம்பர நாடாரின் வீரமும் அழகும் அந்தப் பகுதியில் பரவியது. வஞ்சிநாட்டு அரசன் சிதம்பர நாடாரைப் பறக்கை வரை உள்ள பகுதிகளைக் கவனிக்கும் அதிகாரியாக நியமித்தான். சிதம்பர நாடாரும் குதிரை மேல் ஏறி புங்கடி மடம் வரை சென்று ஆட்சி செய்தார். அவருக்குத் துணையாக ஒரு செறுக்கனும் வருவான். அவருக்கு இருபத்தெட்டு வயதானது.


இப்படி இருக்கும் நாளில் பறக்கை ஊரில் ஒரு பிராமணப்பெண் இறந்துபோனாள். அவள் கொடிய பாம்பு கடித்து இறந்தாள். பாப்பாத்தி என்ற அந்த 18 வயதுப்பெண்ணின் உறவினர்கள் சுடுகாட்டுக்குக் கொண்டு வந்து சிதையில் ஏற்றினர். சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டுச் சென்றனர். அந்த வேளையில் சிதம்பர நாடார் அங்கே வந்தார்.


பாப்பாத்தி மிக மிக அழகாக இருந்தாள். இளம்வயதான அவள் மரணத்தைக் கண்டு அவள் பெற்றோர் கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது . அவள் உடலைக் கண்ட சிதம்பர நாடாருக்கு ஒரு யோசனை வந்தது. அவருக்குச் சித்துவேலையும் தெரியும். மந்திரம் தெரியும். அவர் அந்தப் பெண்ணைக் கடித்த பாம்பை வரவழைத்தார். அவளின் உடலில் உள்ள விஷத்தை உறிஞ்சச் செய்தார். பாப்பாத்தியின் உடலிலிருந்து இறங்கிய பாம்பு உயிர் நீத்தது. பிராமணப் பெண் உயிர் பெற்றாள்.


உயிர் பெற்ற பாப்பாத்தி சிதம்பர நாடாரைப் பார்த்தாள். அந்தச் சுடுகாட்டுக்குத் தான் வந்த காரணம் தெரியாமல் திகைத்தாள். சிதம்பர நாடாரே அவளுக்கு நடந்த கதையைக் கூறினார். அவள் நன்றிப் பெருக்குடன் நாடாரைப் பார்த்தாள். இனி நான் என் சொந்த ஊர் செல்லமாட்டேன். நீரே எனக்கு எல்லாம். என்னை அழைத்துச் செல்லும் என்றாள். சிதம்பர நாடாரும் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது தாய் பாப்பாத்தியை அன்போடு வரவேற்றாள்.


பாப்பாத்தியும் சிதம்பர நாடாரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். சிலமாதங்களில் அவள் கர்ப்பமடைந்தாள். மாதம் ஏழு ஆனது. பாப்பாத்தி என் பெற்றோரைக் காண ஆசையாக இருக்கிறது . என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றாள். சிதம்பர நாடார் அவளை அழைத்துக்கொண்டு பறக்கைக்கு வந்தார். கூடவே அவரது உதவியாள் செருக்கணும் சென்றான். மூன்று பேரும் பறக்கை பிராமணத் தெருவுக்குக் குதிரையில் சென்றனர்.


பிராமணப் பெண்ணின் பெற்றோர் சிதம்பர நாடாரை மகிழ்வோடு வரவேற்றனர். அவளைப் பிழைப்பித்த வரலாற்றைச் சிதம்பர நாடார் கூறினார். பிராமணப் பெண்ணின் பெற்றோர்கள் இருவரையும் தங்கள் வீட்டிலே இருக்கச் சம்மதித்தனர். இந்தச் செய்தி பிராமணர் தெருவுக்குத் தெரிந்தது. பறக்கை வேளாளர்களும் அறிந்தனர். ஊரார்கள் ஒன்றாய் கூடினர். நாடார் சாதியினன் ஒருவன் பிராமணப் பெண்ணை மணம் செய்துகொண்டதும் காணாதென்று ஊரிலே வந்து தங்குகின்றானே அவனை அப்படி விடக்கூடாது, கொல்லவேண்டும் என்றனர்.


ஊரார்கள் கோயிலில் கூடி சிதம்பர நாடாரைக் கொல்லவேண்டும் என முடிவு செய்தனர். இந்தச் செய்தியை வஞ்சிகுல மன்னனுக்குத் தெரிவிக்கவேண்டும். அவரிடம் சிதம்பர நாடாரைக் கொல்ல அனுமதி பெறவேண்டும் என எண்ணினர். அப்படியே செய்ய முடிவு செய்து ஒரு தூதுவனைத் திருவிதாங்கோட்டுக்கு அனுப்பினர். இந்த விஷயத்தை அறிந்த சிதம்பர நாடார் பிராமணப் பெண்ணைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியையும் அதனால் அவளுக்கும் தனக்கும் தொடர்பு ஏற்பட்டதையும் விரிவாக எழுதி தன் பேரில் தவறில்லை என்றும் தெரிவித்து ஓலை எழுதி செறுக்கனிடம் கொடுத்து வஞ்சி மன்னனுக்கு அனுப்பினர்.


இரண்டு தூதர்களும் திருவிதாங்கோட்டுக்கு ஒன்றாகவே குதிரையில் சென்றனர். மன்னர் இரண்டு பேர் எழுதிய ஓலையையும் கண்டார். படித்தார். நாடார் பேரில் தவறில்லை. அவரைக் கொல்லக்கூடாது என மன்னர் ஓலை எழுதினார். செறுக்கனின் கையில் ஓலையைக் கொடுத்து முதலில் நீ போ என்றார். இரண்டு தூதர்களும் ஒன்றாகவே திரும்பினர்.


இருவரும் வில்லுக்குறி ஊரின் அருகே உள்ள தோட்டியம்பலத்தில் ஓய்வெடுத்தனர். செறுக்கன் களைப்பினால் அயர்ந்து உறங்கினான். வேதியரின் தூதன் உறங்காமல் இருந்தான். செறுக்கன் அயர்ந்து உறங்கியதும் வேதியரின் தூதன் புறப்பட்டு செறுக்கனை எழுப்பாமலே வந்தான்.


இந்த நேரத்தில் பறக்கை வேதியர்களும் வேளாளர்களும் சிதம்பர நாடாரைப் பிடித்து கயிற்றால் கட்டினர். ஊரின் தெற்குப் பகுதியில் இருந்த புங்கடிக்குக் கொண்டு வந்தனர். தூதனின் வருகைக்கு எதிர்பார்த்து நின்றனர். சிதம்பர நாடாரோ கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என பேசாமல் அமைதியாக இருந்தார்.


பார்ப்பனரின் தூதுவன் குதிரையில் வந்தான். பண்டாரவிளையின் அருகே வந்தபோது நாடரைக் கொல்லவேண்டாம் எனக்கூறிக் கையைக் காட்டினான். வேதியரோ அவன் கொல்லுதற்கு ஓலை கொண்டுவந்தான் எனக்கூறி வெட்டுமாறு ஆணையிட்டனர். கொலைகாரனும் சிதம்பர நாடாரை வெட்டினான்.


சிதம்பர நாடான் இறந்ததைக் கேள்விப்பட்ட பாப்பாத்தி நாக்கைப் பிடுங்கி உயிரை விட்டாள். இரு சாதியினரும் சேர்ந்து செருக்கனையும் கொன்றனர்.


இறந்த மூன்று பேரும் அமைதி கொள்ளாமல் பறக்கை ஊரில் ஆவிகளாக அழிமதி செய்தனர். பலரைக் கொன்றனர். வேதியர்கள் இவ்வாறு ஊரில் மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை சோதிடம் மூலம் அறிந்தனர். சிதம்பர நாடாருக்குப் பறக்கை புங்கடியில் கோவில் எடுத்து வழிபட்டனர். பலிகளூம் பூசைகளும் செய்து அவர்களை அமைதிப்படுத்தினர். ஐந்துமுடி நாடார்கள் மதுசூதனபுரம் ஊரில் சிதம்பர நாடாருக்குக் கோவில் எடுத்தனர். அங்கு அவர்கள் வழிபாடு செய்தனர். நாடார் அவர்களுக்கு அருள்புரியும் தெய்வமானார்

"https://ta.wikisource.org/w/index.php?title=சிதம்பர_நாடார்_கதை&oldid=1503842" இலிருந்து மீள்விக்கப்பட்டது