சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மாக்கியவெல்லியின் நூல்கள்
இத்தாலி தேசத்தின் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புக்களை காலக்கிரமமாக வரிசைப்படுத்தி இந்நூலில் மாக்கியவெல்லி எழுதியிருக்கிறான்.
டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி . (1512-1522) மாக்கியவெல்லி எழுதிய மிகப் பெரிய நூல் இதுதான். 1512-ஆம் ஆண்டில் இந்நூலை எழுத ஆரம்பித்து 1522-ஆம் ஆண்டில் முடித்தான். ஆம், பத்து ஆண்டுகளில் பத்துப் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறான்.
இவன் ஆராய்ச்சிக்குக் காரணமாயிருந்த நூல் ஒரு சரித்திர நூல். இந்தச் சரித்திர நூலை எழுதியவன் லீவி என்ற ஆசிரியன். இந்த லீவி ரோமானிய சரித்திரத்திலே மிகப் புகழ் பெற்று விளங்குகிறான். படுவா நகரில் கி.மு. 59-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 17ஆம் ஆண்டில் இயற்கையடைந்த லீவி, அதற்கு முந்திய காலத்து ரோமானிய சரித்திரத்தை நூற்றி நாற்பத்திரண்டு புத்தகங்களாகத் தொகுத்து எழுதியிருக்கிறான். இந்தப் புத்தகங்களில் ரோமானியரின் கீர்த்தியையும் அற முறையையும் விளக்கக்கூடிய தேசீய சரித்திரம் அடங்கியிருக்கிறது. பழங்காலத்திலிருந்து டீட்டஸ் லீவியசின் இந்தச் சரித்திர நூல் ரோமானிய கலாச்சாரத்தின் பாதுகாப்புப் பத்திரமாகவும், வரலாற்று நூல்களுக்கு வழி காட்டும் முதல் புத்தகமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
லீவி எழுதிய நூற்றி நாற்பத்தி இரண்டு புத்தகங்களில் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றி மட்டுமே மாக்கியவெல்லி ஆராய்ந்திருக்கிறான். மாக்கியவெல்லி ரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகிறான். தன் காலத்தவர்கள், சரித்திரம் படிக்காத காரணத்தினால்தான், கீர்த்தி வாய்ந்த முன்னோடிகளான அந்தக் காலத்துப் பேரரசர்களின் அல்லது பெரியோர்களின் பாதையைவிட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றான். முற்காலத்துப் பெரிய மனிதர்களின் வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தைத் தான் மாக்கியவெல்லி தன்னுடைய இந்த ஆராய்ச்சி நூலில் பெரும்பாலான இடங்களில் சுட்டிக்காட்டுகிறான்.
அரசன் :
மாக்கியவெல்லி, எழுதிய மிகப் பெரிய நூல் டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி. ஆனால், மிகப் புகழ்வாய்ந்த நூல் "அரசன்” தான். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவனுக்குக் கீர்த்தியும் அபகீர்த்தியும் தேடித்தந்த நூல் அரசன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியில், அவன் பொதுப்படையாக அரசியல் விஷயங்களை ஆராய்கிறான். ஆனால் அரசன் நூலில் குறிப்பாக முடியரசுகளைப் பற்றி ஆராய்கிறான். அரசன் நூலில் அவன் தன் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறான். அரசியல் விஞ்ஞானம் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிப் புதுமையான சிந்தனைகளை முதன் முதலில் அவன் இந்த நூலில் தான் வெளிப்படுத்தியிருக்கிறான். என்று சொல்லவேண்டும். அவனுக்கு முன் இப்படிச் சிரித்தவர்கள் கிடையாது. எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் அவன் தன் அரசன் நூலில் விதைத்திருக்கிறான்.
ஓர் அரசு நிலை பெறுவதற்காகக் கையாளக் கூடிய வழிகள் எப்படிப்பட்டவையாயினும் அவை வரவேற்கக் கூடியனவே என்று இந்த நூலில் அவன் கூறுகிறான். அரசியல் வெற்றிக்காக, சூழ்ச்சியும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும் - ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று (நம் மகாபாரதத்து அரசியல் சகுனி மாமாவைப் போல) சொல்வதை நாகரிக மனப்பான்மையுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவன் காட்டுகின்ற சூழ் நிலைகளோடு பொருத்திப் பார்க்கின்றபோது, வீழ்ச்சியடைய விரும்பாதவன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறபோது அவை அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.
லீவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மாக்கியவெல்லி மக்களுக்காகச் செய்தான் என்றால் அரசன் என்ற இந்த நூலை அரசர்களுக்காகச் செய்தான் என்று சொல்லலாம். அரசன் என்ற தலைப்பே இது முடியரசையாதரித்து எழுதப்பட்ட நூல் என்பதைக் காட்டுகிறது. இந்த நூலையும் மாக்கியவெல்லி ஓர் அரசனுக்கே காணிக்கையாக்கியிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாக்கியவெல்லி, நிலைபெற்ற அரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வுற்று வாழவேண்டும் என்பதற்காகத் தான் இந்நூலை எழுதினான். ஆனால் குடிமக்கள், அரசாங்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய நூலாக இருப்பதற்குப் பதிலாக அது சர்வாதிகாரிகளுக்குத் துணை போடும் நூலாகக் கருதப்பட்டு விட்டது. இது எப்படியிருக்கிறதென்றால், மருத்துவர்கள் மக்களின் நோயைப் போக்கக் கண்டுபிடிக்கிற மருந்து சிலருக்கு விஷமாகப் பயன்படுவது போலிருக்கிறது. மக்கள் உழைப்பைக் குறைப்பதற்காக விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிற இயந்திர சாதனங்கள் ஒரு சிலரின் பணப் பையை வீங்க வைப்பதற்குப் பயன்படுவது போல், மாக்கியவெல்லியின் நூல் சர்வாதிகாரிகள் பலருக்குப் பயன்பட்டிருக்கிறது.
பாக்கியவெல்லியின் அரசன் என்ற இந்த நூலைப் படிக்கிறபோது, சரித்திர நூலைப் படிப்பதுபோல் சங்கடமோ, ஆராய்ச்சி நூலைப் படிப்பது போல் கஷ்டமோ ஏற்படவில்லை. துப்பறியும் கதையைப் படிப்பதுபோல் இருக்கிறது. விஷயங்களை அவ்வளவு கவர்ச்சிகரமாக எழுதியிருக்கிறான். விவாதங்கள் அவ்வளவு வேகமாக நடை பெறுகின்றன! 1559-ஆம் ஆண்டில் ரோமாபுரியில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அரசன் நூலும் சேர்க்கப்பட்டது.
காஸ்ட்ரூசியோட வாழ்க்கை (1520):
காஸ்ட்ரூசியோ என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாக்கியவெல்லி எழுதிய நூலாகும்.
போர்க்கலை:
போர் செய்யும் முறைகளைப் பற்றி மாக்கியவெல்லி ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான், போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும், கொள்கைகளையும் விளக்கிக் கூறுகிறான்.
பிளாரென்ஸ் சரித்திரம் (1520) :
1518-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த மெடிசி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மாக்கியவெல்லியின் வறுமை நிலை கண்டு, இரக்கப்பட்டு அவனை அழைத்து பிளாரென்ஸ் சரித்திரத்தை எழுதும்படி நியமித்தனர். இதற்காக அவனுக்கு வருடாந்தரச் சம்பளமாக ஒரு சிறு தொகை கொடுக்கப்பட்டது. தர்க்கமுறையாகத் தொடர்ந்து ஏற்படும் மக்கள் வாழ்க்கையின் மாறுபாடுகளைப் பற்றிய இதுபோன்ற சரித்திரக் குறிப்பு எழுதும் முறை வேறு எந்த மொழியிலும் செய்யப்படாத முதல் முயற்சியாகும். ஆனால் மாக்கியவெல்லி இந்நூலை முற்றுப்பெற முடிப்பதற்கு முன்னால் அவனுடைய உயிர் வாழ்க்கை முடிந்துவிட்டது.
மன்ட்ர கோலா (1524):
முதன் முதலில் மாக்கியவெல்லி கவிதைகளும் இன்பியல் நாடகங்களும் எழுதினான். அவன் இயற்றிய செய்யுள்கள் மோசமானவை! ஆனால். இதயத்தைத் தொடக் கூடியவை. அவன் தனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த அரசன் நூலைக் காட்டிலும் தன் செய்யுள் நூல்களையும் இன்பியல் நாடகங்களையுமே பெரிதும் விரும்பினான். அவையே தன் அரிய படைப்புக்கள் என்று கருதினான். மன்ட்ரகோலா என்ற இந்த இன்பியல் நாடகம் தனக்கேயுரிய தனி நடையுடையது. எவ்வகையிலும் இதைச் சிறந்த நூல் என்றே கூற வேண்டும்.
பிற நூல்கள் :
இவை தவிர மாக்கியவெல்லி கிளீசியா என்ற ஓர் இன்பியல் நாடகத்தையும். பெல்பாகர் என்ற ஒரு நாவலையும், தலைப்பிடாமல் கவிதை நடையிலேயே இன்பியல் நாடகத்தையும் எழுதியிருக்கிறான். தனிச்செய்யுள்கள் பல இயற்றியிருக்கிறான். தான் ஒரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதிலேயே அவன் பெருமை கொண்டான். ஆனால் உலகம் அவனைக் கவிஞன் என்ற பெயரில் பெருமைப்படுத்தவில்லை. ஒரு சிறந்த சிந்தனையாளன் என்ற முறையில்தான் போற்றிப் பெருமை செய்கிறது.