சிறந்த கதைகள் பதிமூன்று/பசித்த மரம்

பசித்த மரம்
ஸத்யஜித் ராய்


அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.

நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். அங்கே காந்தி பாபுவை நான் எதிர்பார்க்கவேயில்லை.

"என்ன ஆச்சர்யம் வாங்க, வாங்க!" என்றேன்.

"என்னைத் தெரிகிறதா?”

"முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது."

அவரை நான் உள்ளே அழைத்து வந்தேன். இந்தப் பத்து வருட காலத்தில் அவர் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. 1950 களில் இந்த மனிதர் பூதக் கண்ணாடியோடு அஸ்ஸாம் காடுகளில் சுற்றி அலைவது வழக்கம் என்று சொன்னால் இன்று யார் நம்புவார்கள் அங்கே அவரை நான் சந்தித்த போது அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது. ஆயினும் தலையில் ஒரு நரை கிடையாது. அந்த வயதில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஆற்றலும் எந்த இளைஞனையும் நாண வைக்கும்.

"ஆர்க்கிட்களிடம் உனக்கு அக்கறை இன்னும் குறையவில்லையே!" என்றார் அவர்.

என் சன்னலில் ஆர்க்கிட் பூச்செடி ஒன்று வைத்திருந்தேன். வெகு நாட்களுக்கு முன் காந்தி பாபு தந்த பரிசு அது. ஆனால் அதில் எனக்கு ஈடுபாடு உண்டு என்று சொல்வதற்கில்லை. தாவரங்கள் மீது ஒரு ஆர்வத்தை எனக்கு அவர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவர் வெளி நாடு சென்றதும், ஆர்க்கிட்கள் மீதிருந்த சிரத்தையை நான் இழந்து விட்டேன். மற்றும் பல பொழுது போக்குகளிலும் எனக்கு ஊக்கம் இல்லாது போயிற்று. இப்போது என்னை ஈர்க்கும் ஒரே விஷயம் என் எழுத்துதான். காலம் மாறிவிட்டது. எழுதிச் சம்பாதிக்க இயலும் என்றாகியிருக்கிறது. என் மூன்று புத்தகங்களின் வருவாயைக் கொண்டு நான் என் குடும் பத்தைக் காப்பாற்றக் கூடும். நான் இன்னும் ஆபிஸ் வேலையும் பார்த்து வருகிறேன். ஆனாலும், அதை விட்டுவிட்டு என் முழு நேரத்தையும் எழுதுவதில் செலவிடவும் அவ்வப்போது சுற்றுலா சென்று வரவும் கூடிய ஒரு காலத்தை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

காந்தி பாபு உட்கார்ந்தார். சட்டென்று அவர் உடல் நடுங்கியது.

"குளிர்கிறதா?" என்று கேட்டேன். சன்னலை மூடிவிடுகிறேன். இவ்வருஷம் கல்கத்தாவில் நல்ல குளிர்காலம்..."

"இல்லை இல்லை" என்று அவர் மறுத்தார். அடிக்கடி இப்போ தெல்லாம் எனக்கு நடுக்கம் வருகிறது. வயதாகி விட்டது, இல்லையா? நரம்பித் தளர்ச்சிதான்."

அவரிடம் நான் எவ்வளவோ கேட்க வேண்டியிருந்தது. கார்த்திக் வந்துவிட்டான். அவனைத் தேநீர் தயாரிக்கச் சொன்னேன்.

"நான் ரொம்ப நேரம் தங்க மாட்டேன். என்று காந்தி பாபு சொன்னார், "உன் நாவல்களில் ஒன்றைப் பார்த்தேன். பதிப்பகத்தாரைக் கேட்டு உன் விலாசம் தெரிந்து கொண்டேன். ஒரு காரியமாகத் தான் நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."

"என்ன செய்ய வேண்டும்,சொல்லுங்கள். ஆனால், முதலில். நீங்கள் எப்ப திரும்பினர்கள் எங்கே போயிருந்தீர்கள்? இப்போது எங்கே இருக்கிறீர்கள்? நான் எவ்வளவோ அறிய விரும்புகிறேன்."

"இரண்டு வருஷங்களுக்கு முன் வந்தேன். நான் அமெரிக்காவில் இருந்தேன். இப்போது பாராசாத்தில் வகிக்கிறேன்."

"பாராசாத்?"

"அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்."

"தோட்டம் இருக்கிறதா?"

"ஆமாம்."

"தாவர வீடு கூட?"

காந்தி பாபுவின் பழைய வீட்டில் அருமையான தாவர வீடு ஒன்று இருந்தது. அபூர்வமான செடி வகைகள் அங்கே உண்டு. அசாதாரணத் தாவர இனங்களை அவர் எப்படிச் சேர்த்திருந்தார்! ஆர்க்கிட்களில் மட்டும் அறுபது, அறுபத்தைந்து வகைகள் இருந்தன. அம் மலர்களைப் பார்த்து நின்றால் பொழுது போவதே தெரியாது.

பதில் கூறும் முன் காந்தி பாபு சிறிது தயங்கினார்.

"ஆமாம். தாவர விடும் இருக்கிறது."

"அப்படியானால் இப்பவும் முன் போலவே நீங்கள் தாவரங்களில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள்?" 

"ஆமாம்."

அறையின் வடபுறச் சுவரை அவர் கூர்ந்து கவனித்தார். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். ராஜ வங்கப் புலி ஒன்றின் தோல், தலையோடு அங்கே தொங்கியது.

"அதைத் தெரிகிறதா?" என்று கேட்டேன்.

"அதேதான். இல்லையா?"

"ஆம், காதருகில் இருக்கிற துளையைப் பாருங்களேன்."

"சுடுவதில் நீ மன்னன். இப்பவும் அப்படித்தானே?"

தெரியாது. சிறிது காலமாக நான் சோதனை செய்யவில்லை. நான் வேட்டையாடுவதை நிறுத்தி ஏழு வருடங்கள் ஆகின்றன."

"ஏன்?"

"சுட்டது போதும் என்று தான். எனக்கும் வயதாகிறது இல்லையா? மிருகங்களைச் சுட வேண்டும் என்று தோன்றவில்லை."

"மரக்கறி உண்பவனாக மாறிவிட்டாயா?"

"இல்லை."

"பின்னே என்ன? சுடுவது என்பது கொல்வது மட்டுமே. ஒரு புலியை, முதலையை அல்லது காட்டெருமையைச் சுடுகிறாய். அதன் தோலை எடுத்து, தலையைப் பதம் பண்ணி, அல்லது கொம்புகளைச் சீர்ப்படுத்தி சுவரில் மாட்டிவைக்கிறாய். உன் வெற்றிகளைக் கண்டு சிலர் வியக்கிறார்கள். வேறு சிலர் பயப்படுகிறார்கள். உனக்கோ அவை உன் இளமைக் கால வீரசாகசங்களின் சின்னங்கள். ஆனால் நீ ஆட்டையும் கோழியையும் மற்றதையும் தின்கிற போது என்னாகிறது? நீ அவற்றைக் கொல்வதோடு நிற்பதில்லையே! மென்று சுவைத்து ஜீரணமும் பண்ணிவிடுகிறாய். இது ரொம்ப மேலான காரியமோ?"

நான் சொல்வதற்கு எதுவுமில்லை. கார்த்திக் தேநீர் கொண்டு தந்தான், காந்தி பாபு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். தேநீர்க் கோப்பையை எடுப்பதற்கு முன் அவர் மறுபடி நடுங்கினார். ஒரு வாய் உறிஞ்சிவிட்டு அவர் சொன்னார்: "இயற்கையின் அடிப்படை விதியே இதுதான். ஒரு பிராணி மற்றொன்றைத் தின்ன வேண்டும். அதை வேறொன்று விழுங்கும். அதோ அங்கே பொறுமையாய்க் காத்திருக்கும் பல்லியைப் பார்"

கிங் அன்ட் கோ காலண்டருக்குச் சற்று மேலே ஒரு பல்லி, பூச்சி ஒன்றைக் கண்கொட்டாது பார்த்திருந்தது. நாங்கள் அதைக் கவனித்தோம். அது முதலில் அசையாதிருந்தது. பிறகு மெதுவாக, எச்சரிக்கையோடு அசைந்து முன்னேறியது; முடிவில் ஒரே பாய்ச்சலில் அந்தப் பூச்சியைப் பிடித்துவிட்டது.

"அருமை!" என்று காந்தி பாப் கூறினார். அதன் சாப்பாட்டுக்கு இது போதும் உணவு. உணவு தான் வாழ்க்கையின் ஜீவாதாரம், புலிகள் மனிதரைத் தின்கின்றன. மனிதர்கள் ஆடுகளைத் தின்கிறார்கள், ஆடுகள் அவை எதைத் தான் தின்னவில்லை; இதை சிந்திக்கத் தொடங்கினரல் அநாகரிகமாகவும் புராதனமாகவும் தோன்றும். ஆனால் பிரபஞ்சத்தின் இயக்கவிதியே இதுதான். இதிலிருந்து தப்பமுடியாது. இந்த இயக்கம் நின்றுவிட்டால், சிருஷ்டியே நின்று போகும்."

"மரக்கறி உணவு சாப்பிடுவதனால் நல்ல நிலை ஏற்படலாம்." என்றேன்.

"யார் சொன்னது இலைகளுக்கும் காய்கறிகளுக்கும் உயிரில்லை என்று நினைக்கிறாயா?"

அவற்றுக்கும் உயிர் உண்டு. நீங்களும் ஜகதீஷ் போஸும் அதை எனக்குக் கற்றுத் தந்தீர்கள். ஆனாலும் அது வேறுவித வாழ்க்கை தானே? தாவரங்களும் பிராணிகளும் ஒரே ரகமானவை இல்லையே"

"அவை வித்தியாசமானவை என்றா எண்ணுகிறாய்?"

"இல்லையா பின்னே? பேதங்களைப் பாருங்கள். மரங்கள் நடக்க முடியாது; தம் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அவை எப்படி உணர்கின்றன என்று நமக்கு அறிவிக்கும் திறன் அவற்றுக்கு இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

காந்தி பாபு ஏதோ சொல்லப் போகிறவர் போல் தோன்றினார். ஆனால் பேசவில்லை. தேநீரைக் குடித்துவிட்டு கீழ்நோக்கிய பார்வையுடன் அமைதியாக இருந்தார். பிறகு என்னை நோக்கினார். அவரது கவலை தோய்ந்த வெறித்த நோக்கு என்னைக் குழப்பியது. ஏதோ புரியாத அபாயத்தின் பயம் என்னுள் படர்ந்தது. அவருடைய தோற்றம் தான் எவ்வளவு மாறியிருந்தது!

அவர் மிக மெதுவாகப் பேசலானார்: "பரிமள் இங்கிருந்து இருபத்தோராவது மைலில் நான் வசிக்கிறேன். ஐம்பத்தெட்டாவது வயதில், உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க உன் பதிப்பாளரைத் தேடி மிக்க சிரமத்தோடு காலேஜ் வீதிக்குப் போனேன். இப்போது இங்கே இருக்கிறேன். விசேஷ காரணம் இன்றி நான் இப்படிச் செய்திருக்க மாட்டேன் என்பது உனக்குப் புரியும் என நம்புகிறேன். புரிகிறதா? இல்லை, அபத்தமான நாவல்கள் எழுதி எழுதி உன் பகுத்தறிவை நீ இழந்துவிட்டாயோ? ஒரு வேளை என்னையும் உன் கதை ஒன்றில் பயன்படுத்துவதற்கான டைப் என்று நீ நினைப்பாய்."

நான் வெட்கினேன். காந்தி பாபு சொன்னதில் தப்பு இல்லை. எனது நாவல் ஒன்றில் அவரை ஒரு பாத்திரமாக உபயோகிப்பது பற்றிய நினைப்பு என் உள்ளத்தில் ஒடத்தான் செய்தது. 

"உன் எழுத்தை வாழ்க்கையோடு ஒட்டியதாக ஆக்கவில்லை என்றால், பரிமள், உனது நூல்கள் மேலோட்டமானவையாகவே இருக்கும். ஒன்றை நீ மறக்கக் கூடாது. உன் கற்பனை எவ்வளவு தெளிவாக இருந்தாலும், அது ஒருபோதும் உண்மையை விட விசித்திரமாக இராது. ஆனால் நான் உனக்கு உபதேசிக்க இங்கு வரவில்லை. உண்மையில், உன்னிடம் ஒரு உதவி யாசிக்கவே வந்தேன்."

நான் வியப்பில் ஆழ்ந்தேன். அவர் என்னிடம் என்ன விதமான உதவியை எதிர்பார்க்கிறார்?

"நீ இப்பவும் துப்பாக்கி வைத்திருக்கிறாய் அல்லவா? அல்லது அதைத் தலைமுழுகிவிட்டாயா?"

அவர் கேள்வியால் நான் திடுக்கிட்டேன். அவர் மனசில் என்ன தான் இருக்கிறது? "அதை நான் வைத்திருக்கிறேன். ஆனால் அதிகம் துரு ஏறியிருக்கும். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.

"நாளை உன் துப்பாக்கியோடு நீ என் வீட்டுக்கு வர முடியுமா?"

நான் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினேன். அவர் வேடிக்கை பேசியதாய்த் தோன்றவில்லை. "நிச்சயம் குண்டுகளோடு தான்" என்றும் அவர் குறிப்பிட்டார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் மூளையில் கோளாறு இருக்குமோ என்று சந்தேகித்தேன். ஆனால் அவர் பேச்சு அப்படிக் காட்டவில்லையே? எப்பவும் அவர் ஒரு மாதிரி விந்தைப் போக்கு உடையவர் தான். இல்லையேல் ஏன் அவர் காட்டில், அபாயங்களுக்கு நடுவே விசித்திரச் செடிகளை தேடி அலைகிறார்?

"துப்பாக்கியோடு வர எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எதற்காக என்று அறிய ஆவல். நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றிக் கொடிய மிருகங்களோ திருடர்களோ உண்டோ?"

"நீ வந்ததும் நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்வேன். முடிவில் நீ துப்பாக்கியை சுட நேராமலே போகலாம். அப்படியே சுட்டாலும், நான் உன்னை சட்ட விரோதச் செயலில் ஈடுபடுத்த மாட்டேன். இது உறுதி."

காந்தி பாபு போக எழுந்தார். என் தோள்மீது கைவைத்துச் சொன்னார்: "பரிமள், நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன், ஏனெனில் போனமுறை உன்னைப் பார்த்த போது, நீ என்னைப் போலவே சாகசச் செயல்களில் மோகம் கொண்டிருந்தாய். மனிதர்களோடு நான் என்றும் அதிகம் பழகியதில்லை. இப்போது என் தொடர்பு மேலும் குறுகிவிட்டது. எனக்கு இருக்கிற சொற்ப நண்பர்களிடையே உன்னைப் போன்ற திறமைசாலி வேறு எவரும் இல்லை."

முன்பு நான் உணர்ந்திருந்த வீரச் செயல் மீதான சிலிர்ப்பு என்னுள் மறுபடியும் கிளர்ந்தெழுவதாகத் தோன்றியது. நான் கேட்டேன்: "உங்கள் இடத்தை எப்படி அடைவது; எப்போது எங்கே..." 

"சொல்கிறேன். ஜெஸ்ஸோர் சாலையில் பாராசாத் ஸ்டேஷன் வரை நேரே போ. அப்புறம் கேட்டுத் தெரியலாம். மதுமுரளி ஏரி பற்றி யாரும் சொல்வார்கள். ஸ்டேஷனிலிருந்து நாலு மைல் தள்ளியிருக்கிறது. ஏரி அருகே ஒரு பழைய பங்களா. அதை அடுத்து என் வீடு இருக்கிறது. உன்னிடம் கார் இருக்கிறதா?"

"இல்லை. ஆனால் கார் இருக்கும் நண்பன் உண்டு."

"இந்த நண்பன் யார்?"

"அபிஜித் என்னோடு கல்லூரியில் படித்தவன்."

"அவன் எப்படிப்பட்டவன் எனக்கு அவனைத் தெரியுமா?"

"உங்களுக்குத் தெரிந்திராது. ஆனால், நல்லவன். அவனை நம்பலாமா என்று யோசிக்கிறீர்களா? நிச்சயம் நம்பலாம்."

"நல்லது. அவனையும் அழைத்து வா. எப்படியும் வந்து சேர். அவசர காரியம் தான். சூரியன் மறைவதற்கு முன் வந்து விடு."

***

எங்கள் வீட்டில் ஃபோன் இல்லை. தெருக்கோடிக்குப் போய், ஒரு மருந்துக் கடையிலிருந்து அபிஜித்தைக் கூப்பிட்டேன்.

" உடனே வா. மிகமுக்கியமான விஷயம்" என்றேன்.

தெரியுமே, உன் புதுக் கதையை வாசித்துக் காட்ட அழைக்கிறாய். திரும்பவும் எனக்கு தூக்கம் தான் வரும்."

"அதில்லை. முற்றிலும் வேறு விஷயம் இது."

"அது என்ன? இப்பவே சொல்லேன்."

"அருமையான நாய்க்குட்டி வந்திருக்கிறது. ஒரு ஆள் என் வீட்டில் வைத்திருக்கிறான்."

நாயைத் தூண்டிலாக உபயோகித்தால் தான் அபிஜித்தை வரவழைக்க முடியும். அவனிடம் பதினோரு வகை நாய்கள் இருக்கின்றன. பல நாடுகளைச் சேர்ந்தவை. அவற்றில் மூன்று, பரிசு பெற்றவை. ஐந்து வருடங்களுக்கு முன் அவன் இப்படி நாய்ப்பித்து கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதுமில்லை, பேசுவதுமில்லை.

நாயிடம் கொண்ட காதல் போக, அபிஜித்திடம் ஒரு நல்ல குணம் இருந்தது: என் திறமையிலும் தீர்ப்பிலும் அவனுக்கு முழு நம்பிக்கை, எந்தப் பதிப்பாளரும் என் முதல் நாவலை வெளியிட முன்வராத போது, அபிஜித் அதன் தயாரிப்புச் செலவை ஏற்றான். இந்த விஷயம் எல்லாம் எனக்குப் புரியாது. ஆனால் நீ இதை எழுதியிருக்கிறாய். அது குப்பையாக இருக்க முடியாது. பதிப்பகத்தார்கள் மடையர்கள்" என்று சொன்னான். புத்தகம் நன்கு விற்றது. எனக்குச் சிறிது புகழும் சேர்ந்தது. அபிஜித்துக்கு என் மீதிருந்த நம்பிக்கையை அது உறுதிப்படுத்தியது. 

நாய்க்குட்டி விஷயம் உண்மை இல்லை என்று தெரிந்ததும், எனக்கு உரியது கிடைத்தது. அபி என் முதுகில் சூடாக ஒரு அறை தந்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. அவன் என் கோரிக்கைக்கு இணங்கினான்.

"நாம் போவோம். நாம் வெளியே போய் வெகு காலம் ஆகிறது. கடைசியாக நாம் சோனார்பூர் சதுப்புகளில் வேட்டையாடியதுதான். ஆனால் யார் இந்த ஆசாமி! நீ ஏன் அதிக விவரம் தரக்கூடாது?"

"அவர் என்னிடம் விவரம் எதுவும் சொல்லவில்லை. நான் உனக்கு எப்படி அதிகம் சொல்வேன்? ஏதோ மர்மம் இருப்பதும் நல்லது தானே. நம் கற்பனை வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு."

"அந்த ஆள் யார் என்றாவது சொல்லேன்."

"காந்தி சரண் சாட்டர்ஜி, இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு சமயம் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தாவர இயல் பேராசிரியராக இருந்தார். பிறகு, அபூர்வ தாவர இனங்களைச் சேகரிக்க அலைவதற்காக அந்த வேலையை விட்டார். நிறைய ஆய்வு செய்தார். சில கட்டுரைகளை வெளியிட்டார். அற்புதமான தாவரங்கள் பல-முக்கியமாக ஆர்க்கிட்கள்-அவரிடம் இருந்தன."

"நீ அவரை எப்படிச் சந்தித்தாய்?"

"ஒரு சமயம் நாங்கள் அஸ்ஸாமில் காஜிரங்காவன பங்களாவில் சேர்ந்து இருந்தோம். ஒரு புலியைச் சுடுவதற்காக நான் அங்கே போனேன். அவர் நீபென்தஸ்சை தேடிக்கொண்டிருந்தார்."

"எதை".

"நீபென்தஸ். அது தாவர இயல் பெயர். உனக்கும் எனக்கும் கூஜாச் செடி. அஸ்ஸாம் காடுகளில் வளர்கிறது. பூச்சிகளைத் தின்று வாழ்கிறது. அதை நான் பார்த்ததில்லை. இது காந்தி பாபு சொன்னவிவரம்."

"பூச்சி தின்னும் செடியா செடி பூச்சிகளைத் தின்னுமா?"

"நீ தாவர இயல் படித்ததேயில்லை என்று தெரிகிறது."

"இல்லை. நான் படித்ததில்லை."

"சந்தேகம் வேண்டாம். பள்ளிப் பாடநூல்களில் இச் செடிகளின் படங்களைக் காணலாம்."

"சரி, மேலே சொல்."

"அதுக்கு மேல் சொல்வதற்கு அதிகம் இல்லை. நான் என் புலியை வென்றேன், திரும்பி விட்டேன். அவர் அங்கு தங்கினார். என்றாவது ஒரு நாள் அவரைப் பாம்பு கடிக்கும், அல்லது வனவிலங்கு தாக்கும் என்று நான் அஞ்சினேன். அப்புறம் நாங்கள் அதிகம் சந்திக்கவில்லை. கல்கத்தாவில் ஒரிரு தடவை சந்தித்தோம். ஆனால் அடிக்கடி அவரை நினைத்துக் கொள்வேன். சிறிது காலம் நானும் ஆர்க்கிட் மோகம் பெற்றிருந்தேன். அமெரிக்காவிலிருந்து எனக்காகச் சில புதிய இனங்கள் கொண்டு வருவதாக அவர் கூறியிருந்தார்."

"அவர் அமெரிக்கா போயிருந்தாரா?"

"அவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்று அயல் நாட்டுத் தாவர இயல் பத்திரிகை ஒன்றில் வெளியாயிற்று. அதனால் அவர் பிரபலமானார். தாவர இயலாளர் மாநாட்டுக்கு அவரை அழைத்தார்கள். இது நடந்தது 1951 அல்லது 52ல், அதன்பிறகு இன்று தான் நான் அவரை சந்திக்க நேர்ந்தது."

"இத்தனை வருடம் அவர் என்ன செய்தார்?"

"எனக்குத் தெரியாது. நாளைக்குத் தெரியும் என்று நம்புகிறேன்."

"அவர் பைத்தியம் இல்லையே?"

பார்க்கப்போனால் உன்னைவிட அதிகப் பைத்தியம் இல்லை. நீயும் உன் நாய்களும், அவரையும் அவரது செடிகளையும் விட உயர்ந்தவையில்லை."

நாங்கள் அபிஜித்தின் காரில் பாராசாத் நிலையம் நோக்கி ஜெஸ் ஸோர் சாலையில் சென்றோம். நாங்கள் என்பதில், அபிஜித்தையும் என்னையும் தவிர, மூன்றாவது ஒரு ஜீவன், அபிஜித்தின் நாய் பாதுஷாவும், சேரும். இது என் தவறுதான். குறிப்பாகத் தடுக்கப்படாவிட்டால், அபிஜித் தனது நாய்களில் ஒன்றைக் கட்டாயம் கொண்டு வருவான் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்.

பாதுஷா கபில நிற ராம்பூர் வேட்டைநாய், பெரியது. வலியது. காரின் பின் இருக்கை முழுவதையும் அடைத்துக் கொண்டது. அதன் முகம் சன்னலுக்கு வெளியே நீண்டிருந்தது. விரிந்து பரந்த பசும் வயல்களை அது ரசித்ததாகவே தோன்றியது. அவ்வப்போது, சாலையில் தென்பட்ட ஊர் நாய்களைப் பார்த்து அது வெறுப்புடன் குரைத்தது.

பாதுஷாவின் வருகை இந்தப் பயணத்துக்கு தேவையற்றது என நான் கூறவும், அபிஜித் மறுத்துரைத்தான்: "உனது துப்பாக்கி சுடும் திறமையில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் இவனை நான் கூட்டி வருகிறேன். நீ பல வருடங்களாகத் துப்பாக்கியைத் தொடவேயில்லை. ஆபத்து ஏற்பட்டால் பாதுஷா அதிகம் உதவுவான். அவன் மோப்பசக்தி அசாதாரணமானது. அவன் எப்படிப்பட்ட வீரன் என்பது உனக்கே தெரியும்."

காந்தி பாபு வீட்டைக் கண்டு கொள்வதில் சிரமம் எதுவுமில்லை. பிற்பகல் இரண்டரை மணி அளவில் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். வெளிவாசலைக் கடந்ததும் சீரான பாதை ஒன்று அவர் பங்களாவுக்கு இட்டுச் சென்றது. வீட்டின் பின்னால், பட்டுப்போன பெரிய ஷிரிஷ் மரம் நின்றது. அதன் அருகில் ஒரு தகர ஷெட். அது தொழிற்சாலை மாதிரி இருந்தது. வீட்டுக்கு எதிரே, பாதைக்கு மறுபக்கம், தோட்டம். அதுக்கு அப்பால் நீண்ட தரக ஷெட் அதனுள் மினுமினுக்கும் கண்ணாடிப் பெட்டிகள் பல, ஒரே வரிசையாக, வைக்கப்பட்டிருந்தன.

காந்தி பாபு எங்களை வரவேற்றார். ஆனால் பாதுஷாவைக் கண்டு சிறிது முகம் சுளித்தார்.

"இந்த நாய் பயிற்சி பெற்றது தானா?" என்று அவர் கேட்டார்.

அபி சொன்னான். இவன் எனக்குப் படிந்து நடப்பான். ஆனால் பழக்கப்படாத நாய்கள் இங்கே இருந்தால் இவன் என்ன செய்வான் என்று சொல்வதற்கில்லை. நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?"

"இல்லை. நான் வளர்க்கவில்லை. ஆனாலும் தயவு செய்து அதை இந்த அறையில் இந்த சன்னலில் கட்டிப்போடுங்கள்."

அபிஜித் ஒரக்கண்ணால் என்னை நோக்கிக் கண்சிமிட்டினான். ஆயினும், பணிவுள்ள சிறுவன் போல, அந்த நாயைக் கட்டி வைத்தான். பாதுஷா சிறிது முரண்டியது. ஆனால் நிலைமையை அனுசரிப்பதாகத் தோன்றியது.

நாங்கள் வெளிவராந்தாவில் பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்தோம். அவருடைய வேலையாள் பிரயாக் தன் வலக்கையைக் காயப்படுத்திக் கொண்டானாம். அதனால் அவரே எங்களுக்காகத் தேநீர் தயாரித்து, ஒரு பிளாஸ்கில் மூடி வைத்திருந்தார். எங்களுக்குத் தேவைப்படும் போது நாங்கள் கேட்கலாம் என்று காந்தி பாபு தெரிவித்தார்.

இது போன்ற அமைதியான இடத்தில் இனம் புரியாத என்ன அபாயம் பதுங்கியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய இயலவில்லை. பறவைகளின் ஒலிகள் தவிர எல்லாம் அமைதியாகவே இருந்தது. துப்பாக்கியைச் சுமந்து கொண்டிருப்பது அசட்டுத்தனமாகப் பட்டது. அதை சுவரில் சாய்த்து வைத்தேன்.

அபி இயல்பாகவே நகரவாசி. அவனால் சும்மா இருக்க முடியாது. கிராமப்புறத்தின் அழகு, இனம் தெரியாத பறவைகளின் மெல்லிசை இவ்விஷயங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அவன் அமைதியற்று இருந்தான். பிறகு திடீரென்று பேசினான்: "பரிமள் சொன்னான், அஸ்ஸாம் காடுகளில் அதீதமான செடி எதையோ தேடுகையில், நீங்கள் ஒரு புலியால் பயங்கரமாய்த் தாக்கப்பட்டீர்களாமே?”

விஷயங்களை மிகைப்படுத்தி தன் பேக்சுக்கு நாடகப் பாங்கு அளிப்பதில் அபிக்கு விருப்பம் அதிகம். அது காந்தி பாபுவைப் புண்படுத்தலாம் என்று நான் பயப்பட்டேன். ஆனால் அவர் புன்னகை புரிந்தார். "உனக்கு காட்டில் ஆபத்து என்றால் நிச்சயம் ஒரு புலி என்று தான் அர்த்தம். இல்லையா? பெரும்பாலான மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால். இல்லை, நான் புலியைச் சந்தித்ததே இல்லை. ஒரு முறை, ஒரு அட்டை கடித்து விட்டது. அது பிரமாதம் இல்லை."

"உங்களுக்கு அந்தச் செடி கிடைத்ததா?"

"எந்தச் செடி?"

"கூஜா அல்லது கிண்ணம்-ஏதோ பெயரில் ஒரு செடி"

"ஒ, நீபென்தஸ் செடியா ஆமா, கிடைத்தது. இப்பவும் அது இருக்கிறது. அதைக் காட்டுவேன். மாமிசம் தின்னும் தாவரங்கள் தவிர மற்றச் செடிகள் மீது இப்ப எனக்கு அக்கறை இல்லை. ஆர்க்கிட்களில் கூடப் பலவற்றை எறிந்து விட்டேன்."

காந்தி பாபு உள்ளே போனார். அபியும் நானும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டோம், இறைச்சி தின்னும் செடிகள்! என் கல்லூரி தாவர இயல் பாட நூலில் ஒரு பக்கத்தையும், பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்திருந்த சில படங்களையும் நான் நினைவு கூர்ந்தேன்.

காந்தி பாபு ஒரு புட்டியுடன் வந்தார். அதனுள் தத்துக்கிளிகள், வண்டுகள், மற்றும் பலவகைப் பூச்சிகள், பல்வேறு அளவுகளில், இருந்தன. புட்டியின் மூடியில், மிளகு ஜாடியின் மேல்மூடிவில் இருப்பது போல், துளைகள் இருந்தன. சாப்பாட்டு நேரம். என்னோடு வாருங்கள்" என்று அவர் அறிவித்தார்.

கண்ணாடிப் பெட்டிகள் இருந்த தகர ஷெட்டுக்கு நாங்கள் போனாம். ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு விதச் செடி இருந்தது. அவற்றில் எதையும் நான் முன்பு பார்த்ததில்லை.

இச் செடிகளை நம் நாட்டில் காணமுடியாது. நீபென்தஸை தவிர. ஒன்று நேபாளத்தை சேர்ந்தது. இன்னொன்று ஆப்பிரிக்கா மற்றவை அனைத்தும் மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தவை" என்று காந்தி பாபு கூறினார்.

இச்செடிகள் நமது மண்ணில் எவ்வாறு உயிரேர்டிருக்கின்றன என்று அபி அறிய விரும்பினான்.

"அவற்றுக்கும் மண்ணுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்றார் காந்தி பாபு.

"எப்படி?"

"அவை மண்ணிலிருந்து ஊட்டச் சத்து பெறுவதில்லை. மனிதர்கள் வெளியிலிருந்து உணவு பெறுவது போலவும், தங்கள் நாடுகள் இல்லாத பிற நாடுகளிலும் சுகமாக வாழமுடிவதைப் போலவும், இவையும் சரியான உணவு கிடைத்தால் எந்த இடத்திலும் செழித்து வளர்கின்றன." 

காந்தி பாபு ஒரு பெட்டி அருகே நின்றார். அதனுள் இரண்டு அங்குல நீளமுள்ள பச்சை இலைகளை உடைய விசித்திரச் செடி ஒன்று இருந்தது. அவ்விலைகளில் பல் வரிசைகள் போல் கூர்கூரான வெள்ளை விளிம்புகள் இருந்தன. கண்ணாடிப் பெட்டியில், புட்டியின் வாய் அளவுக்கு ஒரு வட்டக் கதவு இருந்தது. காந்தி பாபு வெகு வேகமாய் அதை திறந்தார். புட்டியின் மூடியை நீக்கி, அதன் வாயைக் கதவினுள் புகுத்தினார். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளிப்பட்டதும், அவர் புட்டியை விரைவாக இழுத்துக் கொண்டு, கதவை மூடினார். அந்தப் பூச்சி சற்றே அங்குமிங்கும் திரிந்தது. பிறகு ஒரு இலை மீது அமர்ந்தது. உடனே அந்த இலை நடுவில் மடங்கி, பூச்சியை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. பற்களின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சீராகப் பொருந்தின. பூச்சி அந்தக் கூண்டிலிருந்து தப்பி ஒட வழி இல்லை.

இத்தனை விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இயற்கை அமைத்த பொறி எதையும் இதுவரை நான் கண்டதேயில்லை.

கம்மிய குரலில் அபி கேட்டான் "பூச்சி எப்பவும் இலைமீதே உட்காரும் என்பது என்ன நிச்சயம்?"

"இச் செடிகள் பூச்சிகளை வசியம் செய்ய ஒரு மணம் பரப்புகின்றன. இச் செடிக்கு வீனஸ் ஈப்பொறி என்று பெயர். இது மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தது. தாவர இயல் பாட நூல்கள் அனைத்திலும் இது காணப்படும்" என்றார் காந்தி பாபு.

நான் பிரமிப்புடன் பூச்சியைக் கவனித்தேன். அது முதலில் பதறித் துடித்தது. பிறகு குழப்பமுற்றது. அதன் மேல் இலையின் இறுக்கம் அதிகரித்தது. அந்தச் செடி, உயிரைச் சூறையாடுவதில் ஒரு பல்லிக்குச் சிறிதும் சளைத்ததல்ல.

அபி சிரிப்பு வரவழைக்க முயன்றான். "வீட்டில் இது போல் ஒரு செடி இருப்பது நல்லது. பூச்சிகளை எளிதில் ஒழிக்கலாம். பாச்சைகளைக் கொல்ல டி.டி.டி. பொடி தெளிக்கத் தேவையில்லை."

"அதுக்கு இந்தச் செடி சரிப்படாது. பாச்சைகளை இது ஜீரணிக்க இயலாது. இதன் இலைகள் மிகச் சிறியன” என்று காந்தி பாபு சொன்னார்.

அடுத்த பெட்டியில் இருந்த செடியின் இலைகள் லில்லி இலைகள் போல் நீளமானவை. ஒவ்வொரு இலையின் துனியிலும் பை போன்ற ஒன்று தொங்கியது. இதையும் நான் முன்பே படங்களில் பார்த்திருக்கிறேன்.

"இது தான் நீபென்தஸ்-கூஜாச் செடி" என்று காந்தி பாபு விளக்கினார். இதன் பசி வெகு அதிகம். முதன்முதலில் இதை நான் கண்டபோது, இதன் பைக்குள் ஒரு சிறு பறவையின் மிச்சங்களைப் பார்த்தேன்."

அட கடவுளே! என்றான் அபி. இப்ப இது எதை தின்று வாழ்கிறது?" அவனது தன்னியல்பு மாறி, பயம் அவனைப் பற்றத் தொடங்கியது.

"பாச்சை, வண்ணத்துப் பூச்சி, கம்பளிப்பூச்சி வகையராத்தான். ஒரு முறை நான் ஒரு எலியைப் பிடித்து இதுக்கு ஊட்ட முயன்றேன். இது மறுத்து விடவில்லை. ஆனால் அளவு மீறித் தின்பது அவற்றுக்கே ஆபத்தாகும். இச் செடிகள் பேராசை பிடித்தவை. இயற்கை வரம்பு அவற்றுக்குத் தெரிவதில்லை."

மிகுந்த வசியத்தோடு நாங்கள் ஒவ்வொரு பெட்டியாகப் பார்த்து நகர்ந்தோம். இவற்றில் சில செடிகள் முன்பே நான் படங்கள் மூலம் அறிந்தவை. மற்றவை முற்றிலும் விசித்திரமானவை; நம்பமுடியாதவை. மாமிசபட்சணித் தாவரங்களில் இருபது வகைகள் காந்தி பாபுவிடம் இருந்தன. அவற்றில் சில உலகில் வேறு எவர் சேகரிப்பிலும் காண முடியாத அளவு அபூர்வமானவை.

அவற்றில் மிக விநோதமானது லன்ட்யூ-சூரியப்பனி. அதன் இலை மீதுள்ள ரோமங்களைச் சுற்றி நுண்ணிய நீர்த்துளிகள் மினுமினுத்தன. காந்தி பாபு, ஒரு ஏலவிதை அளவு இறைச்சித் துணுக்கை எடுத்து, ஒரு சின்னக் கயிற்றில் கட்டினார். அதை இலையிடம் மெதுவாக நகர்த்தினார். அப்போது இலையின் ரோமங்கள் ஆசையோடு இறைச்சியை நோக்கி நிமிர்வதை நாங்கள் இலகுவில் காணமுடிந்தது.

காந்தி பாபு கயிற்றை அகற்றினார். அதை மேலும் தாழ்த்தினால், இலை ஈப்பொறி போலவே இறைச்சியை கவிவிப்பிடிக்கும் அதிலிருக்கும் சத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை எறிந்துவிடும் என்று அவர் விளக்கினார். "நீங்களும் நானும் சாப்பிடுவது போல் தான் இதுவும்-என்ன சொல்கிறீர்கள்?"

ஷெட்டிலிருந்து நாங்கள் தோட்டத்துக்கு வந்தோம் ஷிரிஷ் மரத்தின் நிழல் நீண்டு புல்மீது படிந்திருந்தது. பிற்பகல் நான்கு மணி இருக்கும்.

காந்தி பாபு தொடர்ந்தார். இவற்றில் பெரும்பான்மைச் செடிகள் : பற்றி எழுதிவிட்டார்கள். ஆனால் நான் சேகரித்திருக்கிற மிக விசித்திரமான ஒரு இனம் பற்றி எவரும் எழுதமுடியாது. நானே எழுதினால் தான் உண்டு. அதைத் தான் நீங்கள் இப்போது காண வேண்டும். உங்களை இன்று நான் ஏன் வரச் சொன்னேன் என்பது உங்க்ளுக்கு உடனே புரிந்துவிடும். வா பரிமள், வா அபிஜித் பாபு."

தொழிற்சாலை போல் தோன்றிய இடத்துக்கு நாங்கள் அவர் பின்னே போனோம். உலோகத்தாலான கதவு பட்டப்பட்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் ஒவ்வொரு சன்னல் இருந்தது. காந்தி பாபு ஒன்றை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தார். பிறகு எங்களைப் பார்க்கும்படி அழைத்தார். அபியும் நானும் சன்னல் வழியே கவனித்தோம்.

அறையின் மேற்குச் சுவரில், உயரே கூரை அருகில், வானவெளிச் சாளரங்கள் இரண்டு இருந்தன. அவற்றின் கண்ணாடிப் பரப்பு வழியே சிறிது வெளிச்சம் பரவி அந்த இடத்துக்கு ஒரளவு ஒளி ஊட்டியது. அறைக்குள் நின்றது ஒரு தாவரம் போலவே தோன்றவில்லை. கனத்த பல தும்பிக்கைகள் கொண்ட ஒரு மிருகத்தை ஒத்திருந்தது அது. அந்த மரத்தின் அடிப்பாகம் சுமார் எட்டு அல்லது பத்து அடி உயரத்துக்கு நின்றதை நாங்கள் மெதுவாக உணரமுடிந்தது. உச்சிக்குக் கீழே சுமார் ஒரு அடிதள்ளி, மரத்தைச் சுற்றி தும்பிக்கைகள் முளைத்திருந்தன. அவை ஏழு இருந்ததை நான் எண்ணினேன். அடிமரம் வெளிறி, வழுவழுப்பாய் நெடுகிலும் கபிலநிறப் புள்ளிகள் படர்ந்து காணப்பட்டது. தும்பிக்கைகள் இப்போது முடமாய் உயிரற்றுத் தோன்றின. ஆனால் அவற்றைப் பார்க்கையில் என் முதுகத்தண்டு சில்லிட்டது. அரை குறை வெளிச்சத்துக்கு எங்கள் கண்கள் பழகியபின், இன்னொன்றையும் நாங்கள் கவனித்தோம். அந்த அறையின் தரைநெடுக சிறகுகள் சிதறிக் கிடந்தன.

நாங்கள் எவ்வளவு நேரம் செயல் மறந்து நின்றோம் என நான் அறியேன். இறுதியில் காந்தி பாபு சொன்னார்: "மரம் இப்போது தூங்குகிறது. ஆனாலும் அது விழித்துக் கொள்ளும் நேரம் தான்."

நம்பிக்கையற்ற குரலில் அபி கேட்டான், "உண்மையில் இது ஒரு மரம் இல்லையே; மரம் தானா?"

"அது மண்ணிலிருந்து வளர்வதால் அதை வேறு எப்படிச் சொல்வது? ஆனால் அது ஒரு மரம் போல் நடந்து கொள்வதில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். அதற்கு ஏற்ற பெயர் அகராதியிலேயே இல்லை"

"நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்?"

"ஸெப்டோபஸ். வங்காளியில், சப்தபாஷ்-சப்த பாசம்-என்று கூறலாம். பாசம் என்றால் அருள் அல்லது முடிச்சு. நாக பாசம் என்பது போல."

வீடு நோக்கி நடக்கையில், இந்த இனத்தை அவர் எங்கே கண்டு பிடித்தார் என்று கேட்டேன்.

"மத்திய அமெரிக்காவில், நிகரகுவா ஏரி அருகே, அடர்ந்த காடு ஒன்றில்" என்று அவர் சொன்னார்.

"நிரம்ப சிரமப்பட்டுத் தேட வேண்டியிருந்ததா?"

"அந்த வட்டாரத்தில் இது வளர்வதாக நான் அறிந்திருந்தேன், பேராசிரியர் டன்கன் பற்றி நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். பெரிய ஆராய்ச்சியாளர், தாவர இயலாளர். மத்திய அமெரிக்காவில் அபூர்வ தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சிலேயே அவர் தன் உயிரை இழந்தார். அவர் உடல் அகப்படவேயில்லை. அவர் எப்படி இறந்தார் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர் டயரியின் இறுதிப் பக்கங்களில் இத்தாவரம் குறித்து அவர் எழுதியிருந்தார்.

"சந்தர்ப்பம் கிடைத்ததும் நான் நிகரகுவா போனேன். குடிமாலாவிலிருந்தே அங்கு வசித்த மக்கள் இந்த மரம் பற்றிப் பேசுவதைக் கேட்டேன். இதை அவர்கள் சைத்தான் மரம் என்றார்கள். பின்னர் சிலவற்றை நானே கண்டேன். அவை குரங்குகளையும் இதர பிராணிகளையும் தின்பதை நேரில் பார்த்தேன். வெகுவாய்த் தேடி அலைந்த பிறகு, என்னோடு எடுத்து வருவதற்கு வசதியான சிறு தாவரம் ஒன்றைக் கண்டேன். பாருங்கள், இரண்டு வருஷங்களில் அது எப்படி வளர்ந்திருக்கிறது!"

"அது இப்போ என்ன தின்கிறது?"

"நான் கொடுப்பதை எல்லாம். சில சமயம் நான் அதுக்காக எலிகளைப் பிடித்தது உண்டு. வழியில் காரில் அடிபட்டு நாய் அல்லது பூனை கிடந்தாலும், அதை இந்த மரத்துக்காக எடுத்து வரவேண்டும் என்று பிரயாகிடம் சொன்னேன். அவற்றையும் அது ஜீரணித்தது. நாம் சாப்பிடக்கூடிய மாமிச வகையை-கோழி, ஆடு எல்லாம் தான்-கொடுத்தேன். அண்மையில் அதன் பசி மிக அதிகமாகிவிட்டது. அதுக்கு தீனி போட்டு திருப்தி அளிக்க இயலவில்லை. தினம் இந்நேரத்தில் அது விழித்தெழும் போது, அதிகப் பரபரப்பும் குழப்பமும் பெற்று விடுகிறது. நேற்று ஒரு பேராபத்து நிகழ இருந்தது. அதுக்கு கோழி தர பிரயாக் அறைக்குள் போனான். ஒரு யானைக்குத் தீனி கொடுப்பது போல் தான் இதுக்கும் தர வேண்டும். முதலில் மரப்பகுதியின் உச்சியில் ஒரு மூடி திறக்கிறது. மரம் ஒரு தும்பிக்கையின் உதவியால் உணவை உயரே எடுத்துச் சென்று, உச்சியில் இருக்கிற ஒரு பொந்துக்குள் வைக்கிறது. அப்படி அது சிறிது உணவை உள்ளே வைக்கும் ஒவ்வொரு தடவையும் செப்டோபஸ் அமைதியாக இருக்கிறது. மீண்டும் அது தன் தும்பிக்கையை ஆட்டத் தொடங்கினால் அது இன்னும் பசியாக இருக்கிறது என்று அர்த்தம்.

"இதுவரை இரண்டு கோழிகள், அல்லது ஒரு சிறு ஆடு ஒரு நாளைக்கு செப்டோபஸுக்குப் போதுமானதாக இருந்தது. நேற்று முதல் ஏதோ மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பிரயாக் இரண்டாவது கோழியைக் கொடுத்ததும் வழக்கம் போல் வெளியே வந்தான். தொடர்ந்து தும்பிக்கைகளை ஆட்டி அடிக்கிற ஒசை கேட்கவும் என்ன விஷயம் என்று அறிய அவன் மறுபடியும் உள்ளே போனான்.

"நான் என் அறையில் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு அலறல் கேட்டது. உடனே அங்கே ஒடிப்போனேன். கோரக் காட்சியைக் காண நேர்ந்தது. செப்டோபஸின் தும்பிக்கைகளில் ஒன்று பிரயாகின் வலதுகையை இரும்புப்பிடியாகப் பற்றி இருக்க, அவன் அதை விடுவிக்க முழு பலத்தோடும் போராடினான். இன்னொரு தும்பிக்கை அவனை மறுபுறமிருந்து கவ்விப் பிடிக்க, வெறியோடு நெருங்கிக் கொண்டிருந்தது.

நேரம் தாழ்த்தாமல் நான் என் கைத்தடியால் தும்பிக்கை மீது பலமாக அறைந்தேன். என் இரு கைகளாலும் பிரயாகைப் பிடித்து இழுத்தேன். ஒரு மாதிரி அவனைக் காப்பாற்றினேன். செப்டோபஸ் பிரயாகின் சதையில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்துவிட்டது. அதை அது தன் வாய்க்குள் போடுவதை நான் என் கண்களால் பார்த்தேன். இது தான் எனக்குக் கவலை தருகிறது."

நாங்கள் வராந்தாவை அடைந்தோம். காந்தி பாபு உட்கார்ந்து, தன் நெற்றியைத் துடைப்பதற்காகக் கைக்குட்டையை எடுத்தார்.

"நான் இதுவரை கருதியதேயில்லை செப்டோபஸ் மனித இறைச்சியால் வசீகரிக்கப்படும் என்று. இது பேராசையாக இருக்கலாம். அல்லது ஒரு விதக் கொடுரமாகவும் இருக்கும். நேற்று நடந்ததற்குப் பிறகு அதைக் கொல்வது தவிர எனக்கு வேறு வழியில்லை. நேற்று அதன் உணவில் விஷம் கலந்து கொடுத்தேன். ஆனால் அது மிக சாமர்த்தியம் பெற்றிருக்கிறது. தும்பிக்கையால் அது உணவைத் தொட்டது; தூக்கி எறிந்து விட்டது. மீதி இருக்கிற ஒரே வழி அதைச் சுடுவது தான். பரிமள், நான் ஏன் உன்னை இங்கே கூப்பிட்டேன் என்பது இப்போது புரிந்திருக்கும்."

நான் ஒரு கணம் யோசித்தேன். "ஒரு குண்டு அதைக் கொன்றுவிடும் என்று உறுதியாக நம்புகிறீர்களா?" என்று கேட்டேன்.

"அது சாகுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு ஒரு மூளை இருக்கிறது. இது எனக்கு மிக உறுதியாகத் தெரியும். அது சிந்திக்கிறது. இதற்குப் போதிய சான்று உண்டு. நான் அதன் அருகே எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அது ஒரு போதும் என்னைத் தாக்கியதில்லை. ஒரு நாய் தன் எஜமானை அறிவது போல், அது என்னை அறிந்திருக்கிறது. பிரயாகிடம் வன்முறையாக அது நடக்கக் காரணம் இருக்கலாம். சில தருணங்களில் பிரயாக் செப்டோபஸைச் சீண்டி விளையாட முயன்றான். உணவை நீட்டி அதற்கு ஆசைகாட்டி உடனே அதை அகற்றி விடுவான். அல்லது தும்பிக்கை அருகில் உணவைக் கொண்டுபோவது; வேடிக்கை பார்க்க, பிறகு உணவு தராமலே விலகி விடுவது-இப்படி எல்லாம் செய்வான். அதுக்கும் மூளை இருக்கிறது. எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அதாவது அதன் தலையில்

தும்பிக்கைகள் வளர்ந்து தொங்குகிற மரப்பாகத்தின் உச்சியில், அது இருக்கிறது. அது தான் நீ குறிவைத்துச் சுடவேண்டிய இடம்"

அபிஜித் அவசரமாயக் குறுக்கிட்டான். "அது வெகு எளிது. ஒரு நொடியில் கண்டுவிடலாம். பரிமள், உன் துப்பாக்கியை எடு."

காந்தி பாபு கை உயர்த்தி அவனை நிறுத்தினார். "எதிராளி தூங்கும் போது யாராவது அவனைச்சுடுவார்களா? பரிமள், உனது வேட்டை நியதி என்ன சொல்கிறது?"

துரங்கும் பிராணியைக் கொல்வது அனைத்து விதிகளுக்கும் எதிரானதே. அதிலும் முக்கியமாக, எதிராளி அசைய முடியாமல் இருக்கையில். அது முற்றிலும் புறம்பான விஷயம்."

காந்தி பாபு பிளாஸ்கை எடுத்து வந்து, எங்களுக்குத் தேநீர் வழங்கினார். அதை நாங்கள் பருகி முடிந்த பதினைந்து நிமிடங்களில், செப்டோபஸ் விழித்துக் கொண்டது.

சிறிது நேரமாகவே முன்னறையில் பாதுஷா அமைதியற்று இருந்தது. இப்போது திடீரென ஒரு ஒசையும் ஊளைக்குரலும் எழுந்தன. என்ன விஷயம் என்று அறிய அபியும் நானும் அங்கே விரைந்தோம். பாதுஷா கட்டை அறுக்க மூர்க்கமாய்ப் போராடியது. அபி குரல் கொடுத்து அதை அடக்க முயன்றான். அவ்வேளையில் விநோதமான கூரிய மணம் ஒன்று காற்றில் பரவியது. அந்த வாசனையும், பலமாக ஒங்கி அறையும் ஒசையும் தகர ஷெட் இருந்த திக்கிலிருந்து வருவதாய் தோன்றின.

அந்த மனத்தை வர்ணிப்பது சிரமம் என் குழந்தைப் பருவத்தில் எனது தொண்டைச் சதையை அகற்ற ஒரு சமயம் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது எனக்குத் தரப்பட்ட குளோரோ ஃபாரத்தின் (மயக்க மருந்தின்) வாசனையை இந்த மணம் நினைவு படுத்தியது. காந்தி பாபு அறைக்குள் பாய்ந்தார். "வா, இது தான் நேரம்."

"இது என்ன வாசனை?" என்று கேட்டேன்.

செப்டோபஸ் தான். உணவை வசீகரிக்க அது வெளிப்படுத்துகிற வாசனையே இது..."

அவர் முடிப்பதற்குள், பாதுஷா வெறிவேகத்தோடு இழுத்து, கழுத்துப்பட்டியைத் தெறிப்பதில் வெற்றி கண்டது. காந்தி பாபுவைத் தரையில் தள்ளி விட்டு வாசனை வந்த இடம் நோக்கி அது பாய்ந்து ஒடியது.

"பேராபத்து!" என்று கத்திய அபி நாயின் பின்னே ஒடினான்.

சில கணங்களுக்குப் பிறகு, துப்பாக்கியுடன் நான் தகர ஷெட்டை அடைந்த போது, பாதுஷா சன்னல் வழியாக மறைந்து போனதைக் கண்டேன். அதை நிறுத்த அபி செய்த முயற்சிகள் பலன்தரவில்லை. காந்தி பாபு பூட்டிய கதவை திறந்த போது, ராம்பூர் வேட்டைநாயின் மரண ஒலம் கேட்டது. நாங்கள் உள்ளே ஒடினோம். பாதுஷாவைப் பிடித்திழுக்க ஒரு தும்பிக்கை போதவில்லை. செப்டோபஸ் முதலில் ஒரு தும்பிக்கையாலும், பிறகு இரண்டாவதாலும், பின் மூன்றாவது தும்பிக்கையாலும் கொடுரமாய் அந்த நாயைத் தழுவிக் கொண்டிருந்தது.

காந்தி பாபு எங்களை நோக்கிக் கத்தினார்: "ஒரு அடி கூட முன்னே போகாதீர். பரிமள், சுடு!"

நான் குறி பார்க்கத் தொடங்கவும், அபி என்னைத் தடுத்தான். அவன் தன் நாயை எவ்வளவு மதித்தான் என நான் உணர்ந்தேன். காந்தி பாபுவின் எச்சரிக்கையையும் மீறி, அவன் செப்டோபஸை நெருங்கினான். பாதுஷாவை பிடித்திருந்த தும்பிக்கைகளில் ஒன்றை பற்றி விலக்கினான். அந்த பயங்கரக் காட்சியைக் கண்டு நான் வெலவெலத்தேன். மூன்று தும்பிக்கைகளும் இப்போது, நாயை விட்டு விட்டு, அபியை சுற்றி வளைத்தன. அதே சமயம் இதர நான்கு கைகளும், மனித ரத்தம் கிடைக்கப் போகிற ஆவலால் தூண்டப்பட்ட நாக்குகள் போல், முன்னே அசைந்து வந்தன.

"சுடு, பரிமள், சுடு அங்கே தலையில் என்று காந்தி பாபு அவசரப் படுத்தினார். என் கண்கள் செப்டோபஸ் மீதே நிலைத்திருந்தன. மரத்தின் உச்சி யில் ஒரு மூடி மெதுவாய் திறப்பதை கவனித்தேன். அங்கு ஒரு பொந்து தென்பட்டது.

தும்பிக்கைகள் அபியை அந்தத் துளைக்கு தூக்கிக் கொண்டிருந்தன. அபியின் முகம் வெளுத்து, கண்கள் துரத்தி நின்றன.

மிக நெருக்கடியான கணத்தில்-இதை நான் முன்பும் கவனித்திருக்கிறேன்-என் நரம்புகள் அமைதியுற்று, மந்திரத்தால் கட்டுண்டவை போல் இயங்கின. நிதானமான கைகளால் துப்பாக்கியைப் பற்றி, செப்டோபஸின் தலையில் இருந்த இரண்டு வட்டப் புள்ளிகள் நடுவே குறிதவறாது சுட்டேன்.

ஊற்றுப் போல் ரத்தம் பீச்சியடித்தது எனக்கு நினைவிருக்கிறது. தும்பிக்கைகள் சட்டென முடமாகி, அபியின் மீதிருந்த பிடியை விட்டதைப் பார்த்ததாக நினைக்கிறேன். உடனே அந்த வாசனை பொங்கி என் உணர்வின் மீது கவிந்து கொண்டது.

***

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான்கு மாதங்கள் ஒடிவிட்டன. இப்போது தான் நான் எனது பூர்த்தியாகாத நாவலை தொடரும் சக்தி பெற்றிருக்கிறேன். 

பாதுஷாவைக் காப்பாற்ற முடியவில்லை. அபி புதிதாக ஒரு வீர நாய்க்குட்டியும் திபேத்திய நாயும் வாங்கிவிட்டான். வேறொரு ராம்பூர் வேட்டை நாயைத் தேடிக்கொண்டிருக்கிறான். அவனது விலா எலும்புகள் இரண்டு முறிந்து போயின. இரண்டு மாத காலம் கட்டுக்கட்டி சிகிச்சை செய்து இப்போது குணம் அடைந்திருக்கிறான்.

காந்தி பாபு நேற்று வந்தார். தனது மாமிச பட்சிணித் தாவரங்கள் அனைத்தையும் அகற்றுவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். "புடலை, அவரை, கத்திரி போன்ற சாதாரண தோட்டக் காய்கறி இனங்களில் சில ஆய்வுகள் நடத்த விரும்புகிறேன். நீ எனக்குப் பெரும் உதவி செய்தாய். நீ விரும்பினால் என் செடிகள் சிலவற்றை உனக்குத் தருவேன். நீபென்தஸ் செடியை எடுத்துக் கொள். வீட்டில் பூச்சி புழுக்களின் தொல்லை நீங்கி விடும்" என்றார்.

"வேண்டாம். நன்றி. உங்கள் மனம் போல் அனைத்தையும் தூர விட்டெறியுங்கள். என் வீட்டில் பூச்சிகளைப் போக்கடிக்க எனக்கு ஒரு செடியும் தேவையில்லை" என்றேன்.

கிங் அன்ட் கோ காலண்டருக்குப் பின்னிருந்த பல்லியும் "ஆமாம், ஆமாம்" என்றது.

(வங்காளிக் கதை)