சிறந்த கதைகள் பதிமூன்று/ராகுலன்
ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள். நாய் வருகிறது எனத் தெரிந்ததுமே அவள் குழம்பித் தவித்தாள். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த என் அப்பாவிடம் போய், "கவனி, குழந்தே" என்றாள். ராகுலனைப் பற்றி பாட்டி நீண்ட உபதேசம் புரிவாள் என அப்பா அறிவார். எனவே அவர் பத்திரிகையை மடக்கி விட்டு அவள் சொற்பொழிவைக் கேட்கத் தயாரானார். நான் ஒரு கொய்யாப்பழத்தைக் கடித்தபடி அவர்கள் அருகில் நின்றேன்.
"இந்த வீட்டில் என்ன நடக்கிறது" என்று அவள் கேட்டாள். "பிராமணர்கள் எப்படித் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாம்? அது அசிங்கமான பிராணி. நாம் நமது சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிப்பதற்கு ரொம்ப சுத்தமாக இருக்கவேண்டும்."
"நாய் வெகு புத்திசாலியான பிராணி. நாம் அதுக்குக் கற்றுக் கொடுத்தால் அது விரைவில் கற்றுக் கொள்ளும், எல்லாம் நாம் அதை எப்படிப் பழக்குகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது."
"மண்ணாங்கட்டி மோசமான ஒரு நாய்க்குட்டியை நீ எப்படிப் பழக்குவாய்? எந்த நேரத்தில் அது எப்படி நடந்துகொள்ளும் என்பதை நீ எவ்வாறு அறியமுடியும் அரிசி அல்லது காய்கறி வேகும் வாசனையை உணர்ந்து அது அடுப்பங்கரைக்குள் ஒடினால் என்ன செய்வது? அடுக்களையைப் புனிதப்படுத்த நாம் எவ்வளவு செலவும் சிரமமும் மேற்கொள்ள நேரிடும்?"
"அம்மா, நாம் ஜாக்கிரதையாக இருந்து, அது அடுப்பங்கரைக்குள் போகாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஒரிரு தடவை அதுக்கு நல்ல அடி கொடு. எங்கே போகலாம், எங்கே போகக்கூடாது என்பதை அது தெரிந்து கொள்ளும்."
"இருக்கலாம். சாப்பிட்டானதும் எச்சில் இலைகளை விட்டெறியப் போகிற போது அது என் மேலே பாய்ந்தால் என்ன பண்ண? நான் புனிதம் அடைய கங்கை நதியில் குளிக்கப் போக வேண்டும்."
"அது சின்னக் குட்டியாக இருக்கிற போதே அதுக்குப் பயிற்சி அளித்தால் நிச்சயம் அது கற்றுக் கொள்ளும். அது உன் வழிக்கு வராதபடி நான் கவனித்துக் கொள்கிறேன்."
பாட்டி மிக அதிருப்தி கொண்டாள். நீ முடிவு பண்ணி விட்டாய் என்று புரிகிறது என்றாள்.
"அம்மா, நான் உன்னைப் பயமுறுத்த விரும்பவில்லை. ஆனால் எங்கும் திருட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாய் இருப்பது பத்து காவல் காரனுக்குச் சமம். நாய், தின்னும் சோற்றுக்கு விசுவாசத்தோடு இருக்கும்."
"உன் இஷ்டம் போல் செய்," என்று கூறியபடி பாட்டி அகன்றாள். அப்பா என்னை நோக்கி, "நீ என்ன சொல்கிறாய், லீலு?" என்று கேட்டார்.
"வீட்டில் ஒரு நாய் இருப்பது நல்லது தான். நாய் வளர்க்க வேண்டும் என்று எனக்கு எப்பவும் ஆசை” என்றேன்.
ஒரு நாள் சென்னா நல்ல சாதி நாய் ஒன்று கொண்டு வந்தான். அதை அவன் தன் மார்போடு அணைத்திருந்தான். அவன் என்னைக் கூப்பிட்டான்.
"நான் கொண்டு வந்திருப்பதைப் பார்! இது அழகாக இல்லை? பாவம், அது பயந்து எங்களிடமிருந்து விலகியது. அது ரொம்பவும் கறுப்பு. இருட்டில் அதைக் கண்டு கொள்ள முடியாது, அப்படிக் கறுப்பு. அதன் உடலில் ஒரு வெள்ளை மயிர் கூடக் கிடையாது. கறுப்பாய் பட்டுப் போல் மினுமினுத்தது அது. அதன் சிறு உடலுக்கு மிகப் பெரிய காதுகள். ஒளி நிறைந்த பச்சைநிறக் கண்களுக்கு இரு புறமும் அவை தொங்கின. அதனிடம் எனக்குப் பிரியம் ஏற்பட்டது.
சென்னா, இது ரொம்ப அழகு இதன் முகம் மின்மினி மாதிரிப் பளபளக்கிறது பார். நான் இதை வைத்துக் கொள்கிறேன். வாடி கண்ணு!" என்று, நான் என் கைகளை நீட்டினேன்.
"இது டீ இல்லை, டா."
"ஓ! இவனுக்கு என்ன வயது?"
"இருபதே நாட்கள் தான். தாயிடமிருந்து எடுத்து வந்த போது இது ஊளையிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு நீ இதுக்கு பால் மட்டுமே ஊட்ட வேண்டும். இதன் உடல் எப்படி இருக்கிறது?"
"அமாவாசை இரவின் இருட்டுத் தான்" என்று நான் குட்டியை என் கைகளில் எடுத்தேன். என் அம்மாவை அழைத்தேன்.
"ஏன் இந்தக் கூப்பாடு?" என்று கேட்டவாறு அம்மா அடுப்பங்கரையிலிருந்து வந்தாள். பாட்டியும் வந்தாள். என் கையில் நாய்க் குட்டியைக் கண்டதுமே பாட்டி பின்னுக்கு நகர்ந்தாள். கத்தினாள்: "சீ! இந்தப் பெண்ணைப் பாரேன். நாய்க்குட்டியை சொந்தப் பிள்ளை மாதிரி தூக்கி வைத்திருக்கிறது: கல்யாணம் ஆகிற வயது ஆச்சு, இன்னும் இது வளர வில்லையே!”
நான் பாட்டியைச் சீண்ட விரும்பினேன். குட்டியை முத்தமிட்டேன்.
"அட கடவுளே! பாவப்பட்ட இந்தக் கண்களால் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ!" எனப் புலம்பி, பாட்டி திரும்பிச் சென்றாள்.
அம்மாவுக்கு ஒரே வியப்பு. குட்டியைப் பார்த்து, "என்ன அழகு!" என்றாள். "இதுக்கு என்ன பெயர் வைக்கப் பொகிறாய்?"அச்சந்தர்ப்பத்தில் நான் யசோதரா என்றொரு நாடகம் படித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் யசோதரையும் ராகுலனும் நிறைந்து நின்றார்கள். எனவே என் மனசில் அலைமோதிய ராகுலன் என்ற பெயரை உச்சரித்தேன்.
அம்மா ஒரு கணம் யோசித்தாள். "சரி. அது நல்ல பெயர் தான்" என ஆமோதித்தாள்.
அன்றிறவு ராகுலன் சரியாகத் தூங்கவில்லை. அவனுக்குப் பிரிவின் ஏக்கம்.
தனது தாய் உடலின் கதகதப்பையும் அன்பையும் இழந்து விட்டானே. நான் ஒரு மூலையில், அவனுக்காக இரு கோணிப்பைகளாலான படுக்கை தயாரித்திருந்தேன். ஆயினும், ராகுலன் இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருந்தான். அவனைச் சீராட்ட நான் பலமுறை எழுந்தேன். என் கைகளில் எடுத்து வைத்திருந்த வரை அவன் அமைதியாக இருப்பான். ஆனால் விளக்கை அணைக்க வேண்டியது தான் தாமதம், உடனே சிணுங்கத் தொடங்குவான். அன்றிரவு வீட்டில் யாரும் தூங்கவே இல்லை. பாட்டிக்கு மகா கோபம். "சனியன் பிடித்தது. என்னைத் தூங்க விட மாட்டேன் என்கிறதே! இந்த வீட்டில் நான் எப்படி வசிப்பது என் கடைசி நாட்களை இது இப்படிச் சீரழிக்கவா?"
பாட்டியின் முணுமுணுப்புகளை நான் கேட்டவாறிருந்தேன். பிறகு "பாட்டி, இருக்கட்டும் இந்தக் குட்டிக்கு தாயின் நினைப்பு. உனக்குக் கல்யாணம் ஆனபோது பதினோரு வயது என்று நீ சொல்லவில்லையா? உன் புகுந்த வீட்டுக்கு நீபோன அன்று இரவு முழுவதும் உன்னால் தூங்க முடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாய் என்றாயே ராகுலனும் தன் அம்மாவை நினைத்து அழுகிறான்" என்றேன்.
பாட்டியின் எரிச்சலில் பிரியமும் கலந்தது. "நீ கெட்டிக்காரி தான்.என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்திருந்து, இப்ப எனக்கு எதிராகக் குறிப்பிடுகிறாயே?" என்றாள்.
ராகுலன் அமைதி பெற ஒரு வாரம் பிடித்தது. மெதுமெதுவாக அது தன் ஊளையை நிறுத்தியது: பயத்தை விட்டொழித்தது. கொஞ்சம் கந்தல் துணிகளைப் பரப்பி அதற்கு மென்மையும் கதகதப்பும் நிறைந்த படுக்கை அமைத்தேன். அதன் சாப்பாட்டுக்குப் பெரிய கண்ணாடித் தட்டு ஒன்று வைத்தேன். கட்டிப் போட தோல் கழுத்துப்பட்டை வாங்கினேன். வாரம் ஒரு முறை சென்னா அதைக் குளிப்பாட்டினான்.
ராகுலனும் நானும் நண்பர்களானோம். நான் பள்ளி முடிந்து வந்த உடனேயே அதை வெளியே உலாவ அழைத்துச் சென்றேன். அதற்கு உணவு ஊட்ட நான் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. சாதமும் பாலும் நானே கொடுத்தேன். அதை நான் குளிப்பாட்ட இயலவில்லை. ஏனெனில் தண்ணிரைக் கண்டதும் அது ஒட்டம் எடுக்கும். ஒரு நாள் நான் அதைக் குளிப்பாட்ட முயன்றேன். அது என்னைத் தள்ளிவிட்டு ஒடியது. நான் சேற்றுக்குட்டையில் விழுந்தேன். அது குளத்தின் அருகில் நின்று வாலை ஆட்டியது. அது தான் நான் அதைக் குளிப்பாட்ட முயன்ற கடைசித் தடவையும் ஆகும்.
பாட்டியின் சுத்தம், அசிங்கம் பற்றிய நோக்குகளை ராகுலனுக்குப் புரியவைப்பது சிரமமாக இருந்தது. எங்களில் யாரைக் கண்டாலும் அது துள்ளிக் குதித்து ஆள் மீது தன் முன்கால்களைப் பதிக்கும்; தட்டியும் தடவியும் பேச்சுக் கொடுத்த பிறகு தான் அது ஆளைவிடும். பாட்டி வெளியே வருகிற போதெல்லாம், யாராவது ஒருவர் ராகுலனைப் பிடித்துக் கொள்ள வேண்டும்; அல்லது கட்டிவைத்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒரு சமயம், ராகுலனைக் கட்டிப் போட்டிருப்பதாக நம்பி, பாட்டிவெளியே வந்தாள். அது, தன் வழக்கம்போல், அவளை வரவேற்கத் தாவியது. பாட்டி பயங்கரமாக அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஒடிப் போனாள்.
"நான் எல்லாக் கிரியைகளையும் முடித்த பிறகா இப்படி! என்னை அசிங்கப்படுத்திவிட்டதே பாழாய் போகிற இந்தப் பிராணி! நான் என்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவள் சொன்னாள். சென்னா ராகுலனை செம்மையாக உதைத்தான். தீட்டைப் போக்கி தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதற்காகப் பாட்டி மந்திரங்களை உச்சரித்தாள், பட்டினி கிடந்தாள், பிச்சைக்காரர்களுக்கு அன்னதானம் செய்தாள். அன்றிலிருந்து ராகுலன் பாட்டி அருகில் போவதில்லை. அவளைக் கண்டால் அது தொலைவிலிருந்து வாலை ஆட்டும். பாட்டி அதைப் பாராட்டினாள். இது புத்திசாலி நாய் தான். சென்னா அடி கொடுத்த நாள் முதல், இது என் பக்கத்தில் வர முயலுவதில்லை" என்றாள். வெயிலில் உலரவைக்க வேண்டிய பண்டவகைகளைப் பாட்டி தயாரிக்கும்போது, ராகுலன் அவற்றுக்குக் காவல் நிற்கும்; ஒரு காகம் கூட அருகில் வராதபடி கவனிக்கும். இப்படியாக அது பாட்டியின் அன்பைப் பெற்றுவிட்டது. ஒரு தரம் ஒரு திருடன் வீட்டினுள் புக முயன்ற போது, ராகுலன் தான் குரைத்து எல்லோரையும் எழுப்பியது. அதன் பிறகு பாட்டி அதை வெகுவாகப் புகழ்ந்தாள். முன் ஜென்மத்தில் ராகுலன் அவளது குடும்பத்துக்குப் பணி செய்வதற்குத் தன்னையே அர்ப்பணித்திருக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் அலட்சியப்படுத்தினால் கடவுளுக்குப் பொறுக்காது என்றும் அவள் நம்பினாள். பாட்டி தன் இரவு உணவை ராகுலனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள்.
ஒரு வருடத்திற்குள் ராகுலன் பெரிதாக வளர்ந்து விட்டது. ஒரு கரடியின் வலிமை அதற்கு இருந்தது. அதுக்கு பாலும், சோறும் ரொட்டியும் கொடுத்தோம். வாரம் ஒருமுறை சென்னா மாமிசம் தயாரித்தான். அது பின்கால்களில் எழுந்து நின்றால், என் அளவு உயரம் இருந்தது. அது மிக எச்சரிக்கையோடு காணப்பட்டது. ஒரு புல் அசைந்தால் கூட அது கண்டுகொள்ளும் தெரிந்தவர்களிடம் பிரியமாகவும் சாந்தமாகவும் பழகிய அது அந்நியர்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளும், ராகுலன் என் நண்பன், பாதுகாவலனும் கூட. அது என்னோடிருந்தால் நான் இரவில் கூடப் பயமின்றி வெளியே போகலாம். பாட்டியும் நானும் கோயிலுக்குப் போகும் போது அது எங்களோடு வரும், வாசலில் நாங்கள் விட்டுச் செல்கிற எங்கள் காலணிகளைக் காத்து நிற்கும். பாட்டி தரும் வாழைப் பழத்தையும் அது தின்னும்.
என் சிநேகிதி மாலதியின் தந்தை பெங்களுருக்கு மாற்றலாகிப் போனார். அவள் போவதற்குமுன் அவளிடமிருந்த நாய்குட்டி ஒன்றை எனக்குத் தந்தாள். அது பிறந்து பத்து நாட்களே ஆயின. அதற்கு நாங்கள் ராணி என்று பெயரிட்டோம். அது நிலாவில் வடித்தெடுத்தது போல் அப்பழுக்கற்ற வெள்ளை நிறம். அதன் கண்கள் வெளிர் நீல நிறம் பெற்றிருந்தன. இரண்டு நாய்களுக்கிடையிலும் எவ்வளவு வித்தியாசம்! ராகுலன் அடக்கப்படாத காட்டாள் மாதிரி இருந்தது. ராணியோ அமைதியுடன் சீமாட்டி போல் தோன்றியது. ராகுலன் கொந்தளிக்கும் கடல் போல் இருந்தது. ராணி சமதரையில் மெதுவாக நகரும் அமைதியான நீரோடை போல் காணப்பட்டது.
ஒரு துணை சேர்ந்ததில் ராகுலன் சந்தோஷம் அடையும் என நான் நம்பினேன். ராணியை அதனிடம் எடுத்துப் போய், "உன் ராணியைப் பார்" என்றேன். ராகுலன் உறுமியது. ராணி அதனிடமிருந்து பம்மியது. நான் ராகுலனைத் தட்டி, "அசடு, ஒரு ராணியிடம் நடந்து கொள்ளும் முறை இது அல்ல" என்று கண்டித்தேன். நான் பாலை ராகுலனின் தட்டில் ஊற்றி, அதை ராணி முன் வைத்தேன். அது நக்கிக் குடித்தது. ராகுலன் உக்கிரமாக அதைப் பார்த்து, கோபமாய்க் குரைத்தது.
நான் ராகுலனுக்குத் தீனி கொடுப்பதற்காக சென்னாவைக் கூப்பிட்டேன். சென்னா ஒரு கொட்டாங்கச்சியில் சோற்றையும் பாலையும் கலந்து, ராகுலன் முன் வைத்தான். என்னைத் தவிர வேறொருவர் ராகுலனுக்கு உணவு கொடுப்பது இது தான் முதல் முறையாகும். அது தன் முன்னே வைத்த உணவைப் பார்க்க மறுத்தது; ஆனால் ராணி தன்னுடைய தட்டில் தீனி தின்பதை உறுத்து நோக்கியபடி இருந்தது. ராணி தின்று முடித்ததும், நான் கொட்டாங்கச்சியிலிருந்த சோற்றையும் பாலையும் அதன் தட்டில் கொட்டி, அதன் முன்னே வைத்தேன். அது சந்தடி செய்யாமல் தின்றது.
இரவு வந்ததும் ராணி குளிரால் நடுங்கியது. நான் அதுக்காக இரக்கப்பட்டேன். அதை ராகுலனின் படுக்கையில் இட்டேன். ராகுலனுக்கு வேறொரு படுக்கை தயாரித்தேன். ஆனால் அது புதியதில் படுக்க மறுத்து, தரையிலேயே கிடந்தது.
புதிய இடத்துக்குப் பழக்கப்படும்படி ராணிக்குப் பயிற்சிதர வேண்டியிருந்தது. பாட்டியின் சுத்தம் பற்றிய விதிகளை அனுஷ்டிக்கவும், அடுக்களைக்குள் போகாதிருக்கவும் அதற்குக் கற்றுத் தரவேண்டுமே! ஆகவே நான் ராணியுடன் அதிக நேரம் செலவிட்டேன். சென்னா ராகுலனைக் கவனித்தான். மேலும் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு ராகுலன் வளர்ந்திருந்தது.
ராணி ராகுலனின் நட்புக்கு ஏங்கியது. அதன் பிரியத்தைப் பெற அது எண்ணற்ற வழிகளில் முயன்றது. ஆனால் ராகுலன் அதை அறவே வெறுத்தது. ராணி அருகில் நெருங்கி வந்தாலே அது பாய்ந்து பிடுங்கியது.
ஒரு மாலை, நான் கல் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படித்திருந்தேன். ராணி ஒரு பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. நான் ராகுலனை அருகில் ஒரு மரத்தில் கட்டியிருந்தேன். ராணி விளையாடு வதை அது கவனித்தது. ராணி பந்தைத் தன் வாயில் கவ்வ முயன்றது. பந்து நழுவி, ஒடிச் சென்றது. ராணி அதைத் துரத்திச் சென்று, அதைப் பற்களால் கவ்வ முயன்றது. பந்து ராகுலன் அருகில் ஒடியது. ராணி தயக்கத்துடன் பந்தை எடுக்க முன்வந்தது. அதை அது எடுப்பதற்குள், ராகுலன் பயங்கரமாய்க் குரைத்து, ராணி மேல் பாய்ந்தது. ராணி உதவி கோரிக் கத்தியது. நான் என் புத்தகத்தை வீசி விட்டு, அதைக் காப்பாற்ற ஒடினேன். ராகுலன் தன் கூரிய பற்களை ராணி கழுத்தில் பதித்திருந்தது. நான் ராகுலனைக் காலால் உதைத்து, ராணியை விடும்படி செய்தேன். அதை என் கைகளில் தூக்கினேன். அது பயத்தால் நடுங்கியது. ராகுலன் குரைத்தபடி வெறியோடு குதித்தது. அதன் வாயிலிருந்து எச்சில் வடிந்தது. நான் கூட அதைக் கண்டு சிறிது பயந்து போனேன். அப்பாவி ராணி மோசமாகக் கடியுண்டிருந்தது. அதன் பணி வெள்ளை உடலில் ரத்தம் திட்டுதிட்டாகத் தென்பட்டது. எனக்கு ராகுலன் மீது கடும்கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன். ஒரு கைத்தடியினால் அதுக்குக் கடுமையான அறை கொடுத்தேன்.
நான் ராணியை அதிக சிரத்தையுடன் கவனிக்கலானேன்.
ஒரு ஞாயிறு பிற்பகல், நான் ராகுலனை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தூங்குவதற்காக வீட்டினுள் வந்தேன். நான் தலையணையில் தலை சாய்த்திருப்பேன்; அதற்குள் ராணி அலறுவதை கேட்டேன். வெளியே ஒடினேன். நான் பார்த்தது என் வயிற்றை கலக்கியது. ராகுலன் ராணியைப் பற்களால் கவவி, அதை முரட்டுத்தனமாக, வண்ணான் துணியைக் கல் மீது அறைவது போல், தரை மீது அடித்துக் கொண்டிருந்தது. ராணியின் கதறல்கள் மெலிந்து தேய்ந்தன. ராகுலனின் கண்கள் பொறாமையால், கோபத்தால், பழிவாங்கும் உணர்வால் தகித்தன. அதன் அருகில் போவதற்கே நான் பயந்தேன்.
நான் சென்னாவை, அம்மாவை, பாட்டியைக் கூவி அழைத்தேன். அவர்கள் ஒடி வந்தார்கள். "சென்னா ராணியைக் காப்பாற்று. ராகுலன் அதைக் கொன்று போடும்" என்று கத்தினேன். சென்னா ராகுலனிடம் ஒடி, அதுக்கு ஒங்கி ஒரு உதை கொடுத்தான். ராகுலன் உருண்டு விழுந்தது. ராணியை விட்டுவிட்டது. ராணி ரத்தத்தில் தோய்ந்திருந்தது. ராகுலன் அதன் அடிவயிற்றை கடித்துக் குதறியிருந்தது. ராணி வேதனையால் முனகியது. பிறகு அசைவற்றுக் கிடந்தது.
ராகுலனின் நாக்கிலிருந்து ரத்தம் சொட்டியது. நான் அதன் பக்கம் திரும்பியதும் அது வாலை ஆட்டியது. ராணியின் அசைவற்ற உடலைப் பார்த்தது. அது தனது செயலில் மகிழ்வு அடைந்ததாகத் தோன்றியது.
"சென்னா, ராகுலனை அவிழ்த்து விட்டது யார்? நான் அதைக் கட்டியிருந்தேனே."
சென்னா குற்ற உணர்வோடு சொன்னான்: "அதைக் குளிப்பாட்ட வேண்டியிருந்தது. அவிழ்த்து விட்டு, சோப்புக்காக உள்ளே வந்தேன். நான் திரும்புவதற்குள் அது அந்தப் பிராணியை கொன்றுவிட்டது."
நான் ராகுலனிடம் ஆத்திரம் கொண்டேன். அதை அடிப்பதற்காக முன்நகர்ந்தேன்.
"அதன் பக்கத்தில் போகாதே. அதுக்குப் பைத்தியம். அது உன்னைக் கடித்துவிடும்" என்று அம்மா அலறினாள்.
"பைத்தியமா!" நான் பதறிப் போனேன்.
"நிச்சயமாக இல்லாவிட்டால் அது ராணியை கொன்றிராது."
"அது பைத்தியமாக இராது, அம்மா. இது காலம் அல்ல" என்று நான் மறுத்தேன்.
பாட்டி குறுக்கிட்டாள். "இதெல்லாம் பற்றி உனக்கு என்ன தெரியும் பைத்தியம் பிடிப்பதற்கும் தனிகாலம் உண்டா? அதன் கிட்டப் போகாதே."
என் கோபம் மறைந்தது. பைத்தியத்தின் அறிகுறி எதையும் நான் ராகுலனிடம் காணவில்லை.
"சென்னா, ராகுலனுக்கு விஷம் கொண்டு வா. அதை சோற்றில் கலந்து கொடுப்போம். குழந்தைகள் இருக்கிற வீட்டில் பைத்தியம் பிடித்த நாயை வைத்திருப்பத ஆபத்து."
"வேண்டாம், அம்மா" என்று கெஞ்சினேன். "ராகுலனுக்கு விஷம் கொடுக்காதே" நான் அழ ஆரம்பித்தேன்.
ஒரு பயனும் இல்லை. என் கண்ணி யாருடைய நெஞ்சிலும் ராகுலன்மீது இரக்கம் எழச் செய்யவில்லை.
மறுநாள் காலை சென்னா விஷமிட்ட உணவுடன் ராகுலனிடம் போனான். ராகுலன் வாலை ஆட்டியது. ஆனந்தத்துடன் குதித்தது. அதன் கிட்டப்போக சென்னா பயந்தான். சிறிது தூரத்தில் தட்டை வைத்து, அதை முன்னே தள்ளினான். ராகுலன் உணவை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அது என்னிடம் வர முயன்றது. அது சோற்றைத் தொடாது என்பதை அம்மா கவனித்தாள். சொன்னாள் லீலா தட்டை நீ அதன் முன்னே வை".
சொந்தக் குழந்தை போல் வளர்த்த ஒரு ஜீவனுக்கு நான் எப்படி விஷம் கொடுக்க முடியும் மறுத்து விட்டேன்.
பாட்டி சென்னாவிடம் சொன்னாள்: "தட்டை அதன் பக்கம் தள்ளு. அது பசி எடுத்தால் தின்னும்." சென்னா தட்டை நாயருகே தள்ளினான். ராகுலன் முந்திய இரவு உணவு தின்னவில்லை. அதுக்குப் பசி. அது ஒரக்கண்ணால் என்னை பார்த்தது. வாலை ஆட்டியது. உணவை விழுங்கத் தொடங்கியது. என்னால் மேலும் தாங்கமுடியவில்லை. என் அறைக்குப் போய், கதவை சாத்தினேன்.
அதன்பின் வேறு நாயை நான் என் வீட்டுக்குக் கொண்டு வந்ததேயில்லை.
(கன்னடக் கதை)