எங்கே போகிறோம்/10. சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
10
(வேறுபாடு ஏதுமில்லை)

02:13, 21 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

10. சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு

சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம்குறிப்பாக வாழ்தல் மூலம்-புத்திக் கொள்முதல் செய் கிறார்கள் அறிவு பெறுகிறார்கள்.

மனிதன் அறிந்து அவனுடைய பிறப்பு நிகழ்வது இல்லை. இறக்கும்பொழுது துன்பப்படுகிறான். ஆனால், வாழ மறந்து விடுகிறான். மனிதன் வாழ்ந்தால் இறப்பில் அவன் வருந்தான். மற்றவர்கள் வருந்துவார்கள். இந்தப் பேறு கோடியில் ஒருவருக்குத்தான் கிடைக்கிறது. மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் துயரத்தைக் குறைத் துக்கொண்டு, அன்பு, பரஸ்பர உதவி ஆகியவைகளை மேற்கொண்டு ஒழுகினால் துன்பச் சுமை குறையும்; துயரங்கள் தவிர்க்கப் பெறும்.

வாழ்க்கை என்பது தனக்காக மட்டுமல்ல. உடல் அமைப்பை உற்று நோக்குங்கள்! கண்களின் அமைப்பு, நம்மைப் பார்த்துக் கொள்வதைவிட மற்றவர்களைப் பார்க்கக் கூடிய நிலையில்தான் அமைந்துள்ளது. செவி களும் அப்படித்தான் அமைந்துள்ளன! வாயும் மற்றவர் களுட்ன் பேசத்தான்! தானே பேசிக்கொண்டால் என்ன பொருள்!

வாழ்க்கை, கடமைகளுக்காக வழங்கப் பெற்றது. வாழ்க்கை என்பது கடமைகளினால் ஆயது. சமுதாயத் திற்கு நம்மைப் பயனுள்ளவாறு ஆக்கிக்கொண்டு வாழ, நம்மை நாமே அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும்; வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இங்ஙனம் நம்மை வளர்த்துக்கொள்ள நல்ல இலக்கி யங்கள் துணை செய்யும் இந்த உலகில் பயனுள்ளவாறு பேசிப் பழக, நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிது. அதனால், வளர்ந்த மனிதர்களை வரவழைத்து வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கம்பன், வள்ளுவன், இளங்கோ, மில்டன், டென்னிசன், அப்பர் போன்றவர் களின் படைப்பிலக்கியங்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்; அந்த இலக்கியங்களைப் படிக்கவேண்டும். அந்த உத்தம இலக்கிய கர்த்தாக்களுடன் பழகவேண்டும்.

இலக்கியங்களைத் தொடர்ந்து கற்பது, சிந்தனையை வளர்க்கும்; அறிவை வளர்க்கும். நம் ஒவ்வொருவரையும் அனைத்துலக மனிதனாக்கும். இலக்கியங்களின் செழுமை யான கருத்துக்களைப் பொறுக்கி நமக்கு வழங்குகிறவர்கள், நம்மைச் செல்வராக்கு-பவர்கள். மனத்திற்கு வடிவ மும் இயக்கமும் தருவதில் இலக்கியம் முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியப் பயிற்சி இன்பம் அளிக்கும். நம்முடைய வாழ்க்கையை நிலைபேறுடையதாக்கி உறுதிப் படுத்துவது இலக்கியம்.

இலக்கியம் வாழ்க்கையை உருவாக்குகிறது! வாழ்க்கை யிலிருந்து இலக்கியம் உருவாகிறது. சமுதாயத்தின் வாழ்க்கையை காட்டும் கண்ணாடி போன்றது இலக்கியம் ஒரு இனத்தின்-மனிதனின் வளத்தை வரிவடிவில் காட்டுவது இலக்கியம். அதே போழ்து சமுதாயத்தை நெடிய நோக்குடன் வளரத் தூண்டுவதும் இலக்கியங்கள் தாம். புறத்தூய்மை தண்ணீரால் அமையும். அகத்தூய்மை வாய்மையால் தெரியும், வாய்மைக்கு ஊற்று இலக்கியம். வாழ்க்கை முழுவதையுமே உருவாக்குவது இலக்கியம்.

"இலக்கியங்களைப் படிப்பதைவிட, படிக்கத்தக்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்’ என்பான் ஏடு தேடு காதலன் ரஸ்கின். திருவள்ளுவரும் **கற்பவை கற்க " என்றார். இலக்கியங்கள் வாழ்ந்தவாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயத்தின் எண்ணத்தை, சிந்தனைப் போக்கை, விருப்பங்களை, ஆர்வங்களை, குறிக்கோளைக் காட்டுவன. இலக்கு + இயம். இலக்கி யம்.

இலக்கியங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி மனித சமுதாயத்தை உந்திச் செலுத்துவன. இலக்கியப் பயிற்சி ஓர் உயரிய குறிக்கோளை மனிதனுக்குத் தந்து ஆவேசப் படுத்தவில்லை யென்றால் அவன் அந்த இலக்கியத்தைப் படித்தான்! அவ்வளவுதான்! அவன் அந்த இலக்கியத்தைக் கற்கவில்லை; உணரவில்லை; அனுபவிக்கவில்லை!

“தேர்ந்தெடுத்த சில இலக்கியங்கள் திரும்பத் திரும்பக் கற்கத் தக்கன அனுபவிக்கத் தக்கன.’’ என்று பிரான்சிஸ் பேக்கன் கூறினான். தமிழ், இலக்கியவளம் படைத்த மொழி, தமிழிலக்கியங்கள் வரலாற்றுப் பழைமை யுடையன. தமிழிலக்கியங்கள் தமிழர் தம் அன்றாட வாழ்க்கையின் படிப்பினைகளாகத் தோன்றியவை.

தமிழிலக்கியங்களில் கற்பனைகளும் புனைவுகளும் அறவே இல்லையென்று கூறலாம். சங்க இலக்கியங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆற்றலுடையன. காப்பி பங்கள் குடும்ப, சமூக, அரசியல் வாழ்க்கைகளை வளர்க்கும் தகையன. திருமுறைகள் அன்பில் நனைப்பன. பாரதி, சுதந்திர தாகத்தைத் தருவான், பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்யத் தூண்டுவான். இங்ஙனம் இலக்கியங்கள் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச் சிக்கும் உதவி செய்வன.

இலக்கியப் பயிற்சி வளர, வளர மனிதன் வளர்வான்; மனித சமுதாயம் வளரும். இளைஞர்கள் இலக்கியம் பயின் றால் இலட்சிய வீரர்கள் ஆவார்கள். இலக்கியம் கற்போம்; இலட்சியத்துடன் வாழ்வோம்!

சங்ககால இலக்கியங்கள் செல்வத்தைத் தேடும் முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தன. “பொருளே, காதலர் காதல்!" என்று கூறும் அளவுக்கும் பொருள் வேட்கை இருந்திருக்கிறது, ஒவ்வோர் இளைஞனும் திருமணத்திற்கு முன், பொருள் தேடச் செல்லும் பழக்கம் இருந்தது.

ஆடவர் என்றால் அவருக்கு வினையே உயிர் என்று குறுந்தொகை கூறும். "கடவுள் பக்திக்கு அடுத்தபடி முக்கியமான கடமை, அறவழியில் செல்வம் ஈட்டுவதே யாம்" என்று முகமது நபிகள் அருளிச் செய்துள்ளார். வாழ்க்கையின் கருவி, செல்வம். வினை’ என்ற சொல் லுக்குத் தொழில் என்பதுதான் பொருள். சமய உலகம் வேறு பொருளைக் கற்பிக்கிறது. அதனை மறந்து விடுக! ஆடவர், உயிருடன் வாழ்வதற்கு அடையாளம் அவர் செய்யும் தொழிலே, நியாயமான முறையில் பொருளிட்டும் தொழிலில் எதுவும் தாழ்ந்ததல்ல.

செய்யும் தொழிலைச் சிரத்தையுடன் செய்யவேண்டும்.இ சாவதற்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்வது போலத் தொழிலைச் செய்யவேண்டும். **ஒழுக்கம் உயிர்??--என்று வள்ளுவம் கூறியதைப் போல், குறுந்தொகை **வினையே ஆடவர்க்கு உயிரே" என்கிறது, ஆம் தொழில் செய்து பொருளிட்டி வாழ்தலே ஒழுக்கம்; இந்த ஒப்புமை சரி

போனதே!

நாடு, மாநிலம், மாவட்டம் பின்தங்கியது என்று அடிக்கடி பலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து, எந்த நாட்டில்-மாநிலத்தில்-மாவட்டத்தில் அல்லது ஒரு ஊரில் மனிதசக்தியை முற்றாக உழைப்பில் பயன் படுத்தாதவர்களும் அல்லது மிகக் குறிைவாகப் பயன் ப்டுத்துகிறவர்களும் இருக்கிறார்க்ள்ோ அந்தப் பகுதி பின்தங்கியதாகத்தான் இருக்கும்

அதுபோலவே, பொருள் உற்பத்திக்குப் பயன்படக் கூடிய நிலம், நீர், மற்றும் இயற்கை வளங்கள். தாதுப் பொருள்கள் எங்கு முற்றாகப் பயன்படுத்தப் படவில்லையோ அந்தப் பகுதியும் பின்தங்கியதாகவே இருக்கும். இதனை ஒளவையார்,

    ”நாடா கொன்றோ காடா கொன்றோ

    அவலா கொன்றோ மிசையர் கொன்றோ

    எவ்வழி நல்லவர் ஆடவர்

    அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனி யியல்பு ஒன்று இல்லை, எங்கு நல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும். **நல்லவர்* என்பதற்கு இன்றைய உலக வழக்கில் உள்ள **அப்பாவி** **செயலற்றவர்" என்ற பொருள் அன்று இல்லை!

அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைக்கும் பண்பு அனைத்தும் பெற்றவர்களையே பண்டைக்காலத்தில் நல்லவர் என்றனர். ஆதலால், மனிதர்கள் முறையாகப் பயன்படும் இடங்களில் எல்லாம் பொருள்வளம் இருக்கும்; பொருள் வளம் செழித்த நிலையில் சமுதாய மேம்பாடு விளங்கும்.

இலக்கியங்கள், செல்வங்கள் அன்ைத்திலும் உயர்ந்த செல்வம் வேளாண்மை வழிச் செல்வமே என்று போற்றுகின்றன அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஒளவையார், "பகடுதரு செந்நெல் போரோடு நல்கி" என்று பாடுகின்றார். கல்லாடனாரும் "பகடுதரும் பெருவளம்" என்று போற்றுகின்றார். அதாவது, எருதுகள் உழுது உண்டாக்கிய செந்நெல் வள்மும், பல்வகை நுகர்வுப் பண்டங்களும் பெருவளம் எனப்பட்டன். பொரு நராற்றுப்படை,

    “சாலி நெல்லின் சிறைகொள் வேலி

    ஆயிரம் விளையுட் டாகக்

    காவேரி புரக்கும் நாடு’

என்று காவிரி நாட்டின் சிறப்பினைக் கூறும் ஒரு வேலி நிலம் 6.2/3 ஏக்கர். ஒரு ஏக்கருக்கு விளைவு 150 கலம் நெல் அதனால் வளம் கொழித்திருந்தது. பசித்தவர்க்கு இல்லை யெனாது உணவு கிடைத்தது. நாலடியாரும் “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க’ என்றது. தமிழ் இலக்கிய உலகம் சமுதாய மேம்பாட்டுக்குரிய பொருள் ஆக்கம் வேளாண்மை மூலமே எனக் கூறியது. திருவள்ளுவரும்

    ”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

    தொழுதுண்டு பின் செல்பவர்”

என்றார்.

புரட்சிக் கவி பாரதி,

    ”உழவுக்கும் தொழிலுக்கும்

    வந்தனை செய்வோம்!"

என்றான். செந்தமிழ்ப் புலவர்களிலேயே சங்கப்பாடல் கள் இயற்றிய புலவர்களில் ஒருவர் பெயர் ஓரேருழவர் என்பது. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. செல்வ மேம்பாட்டில், பொருளாதார ஆக்கத்தில் பர்ம்புமலை சிறந்திருந்தது. பற்ம்புமலையை வேள் பாரி ஆண்டான். பாரி இயற்கையை - தாவர இனங் களை மிகவும் கவனமாகப் போற்றியதன் விளைவே முல்லைக் கொடிக்குத் தேரீந்தது. அதனாலேயே அவ னுடைய பறம்புமலை உழவர் உழாதன நான்கு பயன் உடையதாக விளங்கியது. அந்நான்காவன: வள்ளிக் கிழங்கு, மூங்கில் அரிசி, பலாப்பழம், தேன்.

ஆதலால், ஒரு நாடு பொருளாதாரத்தில் மேம்பாடுற்று விளங்கவேண்டுமாயின் வேளாண்மைப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். நம்முடைய நாடு, இன்னமும் உண்வுப் பொருள்களில் தற்சார்புடையதாக இல்லை! நாம் அங்காடிப் பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இது தவறு,உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இயற்கைப் பொருளாதாரத்திற்கு-அதுவும் குறிப்பாக வேளாண்மைப் பொருளா-தாரத்திற்கு நீர்வளம் தேவை. **நீரின்றமையாது உலகம்’ என்றது திருக்குறள், தண்ணிருக்கு மூலம் மழை. மழைநீரைச் சேகரித்தல் வேண்டும். கழனிக்குத் தண்ணிரைக் கொண்டுவந்து சேர்ப்பது வாய்க்கால், ‘நீர் வழங்கும் வாய்த்தலைகளை யுடைய மிழலைக் கூற்றம்" என்று மாங்குடிமருதனார் பாடியமை அறிக.

நீர்வளம் சேர்ப்பவை வாத்துக்கால்கள். மழைதரும் தண்ணீர் வளத்தைச் சேமித்துக் காக்கும் பழக்கம் தேவை. தண்ணிரைச் செல்வம் என்றே அப்பரடிகள் கூறுகின்றார். *ஏரிநிறைந்தனைய செல்வன்" என்பது அப்பரடிகள் வாக்கு.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய பொழுது **உடலுக்கு உணவு, உணவு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நிலத்தொடு கூடிய நீர். நிலத்தையும் நீரையும் கூட்டிப் பயன் காண்பவர்கள் இவ் வுலகில் உடம்பையும் உயிரையும் ஒரு சேரப்படைத்தவ ராவர். ஒரு நாட்டில் நிலப்பரப்பளவு எவ்வளவு மிகுதியாய் இருப்பினும் நீர்வளம் இல்லையேல் அந்நிலம் பயன் படாது. ஆதலால், நிலம் பள்ளமாய் இருக்கும் இடத்தில் கரையைக்கட்டித் தண்ணீரைத் தேக்கு" என்று அறிவுறுத்துகிறார்.

இங்ஙனம் நீரைத் தேக்குவதைத்தான் இன்று கசிவுநீர்க் குட்டை என்று கூறுகின்றோம். இங்ங்ணம் தண்ணிரைத் தேக்கிப் பயன்கொள்பவர்கள் இந்த உலகத் தின் செல்வத்துடன் இணைக்கப் பெறுவர். தண்ணிருக்குக் கரைபோட்டுத் தளையமைக்காதார் இல்வுலகத்தில் வாழ்ந் தும் வாழாதாரே!

இனிய அன்புடையீர்! மழைவளம் வர, வரக் குறைந்து வருகிறது! மழை, தேவை! மழைவளம் சிறக்கக் காடுகளை வளர்க்கவும்; அடர்த்தியான காடுகளை வளர்க்கவும். அகன்ற இலைகளையுடைய மரங்கள் அதிகமான மழையை வரவழைக்கும். பெய்யும் மழைத்தண்ணிரை, சொட்டு நீர்கூடவீணாகாமல் தேக்கிவைத்து, குறைவான தண்ணிரை பயன்படுத்திப் பயிர்களை வளர்த்துப் பயன் பெற வேண்டும்.

தண்ணிரைப் பாதுகாத்தல் என்பது சமுதாய மேம் பாட்டில்-பொருளாதார மேம்பாட்டில் முக்கியமான பணி.

இந்தப் பணியை, கடமையை நம்மில் பலர் இன்று உணரவில்லை. பல கண்மாய்கள், வரத்துக் கால்கள் தூர்ந்து கிடக்கின்றன. தூர்ந்து கிடப்பதோடன்றி அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்மாய்களை, ஏரிகளை ஏரிகளின் நீர்ப்பரப்புப், பகுதிகளை, தண்ணிர் வரத்துக் கால்களை ஆக்கிரமிப்பது குற்றம்; சமூகக் குற்றம்; பாபம்! இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்காமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்!

திருக்குளங்களைக் கவனிக்காமல் திருக்கோயில் களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் செய்து கொண்டிருக் கிறோம்! நாம் மழைவளம் பெறுவோம்! பெய்யும் மழை வளத்தைப் பாதுகாப்போம்!

    "நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

    தட்டோரம்ம இவண் தட்டட்டோரே!

    தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!”*

என்ற கவிஞனின் பாடல் வரிகளுக்கு வாழ்க்கையில் பொருள் காண்போமாக!

இயற்கை வளம் இந்நிலவுலகத்திற்கு ஒரு கொடை. இயற்கையென்பது என்ன என்று வரையறை செய்ய இயலாது. நம்மைச் சுற்றியுள்ள உலகமனைத்தும் இயற்கையே!

மலை வளம், காடு வளம், நில வளம், வளி வழங்கும் ஞாலம், வெப்பம் தந்து வாழ்வளிக்கும் ஞாலம் திரி திரு கதிரவன் தண்ணென நிலவு பொழியும் சந்திரன்; விலங் கினங்கள், பறவையினங்கள் எல்லாமே மானுட வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை; வாழ்க்கைக்குத் தேவை யானவை.

அதனால்தான் கடவுளைக் காணும் களம், இயற்கை என்றனர். அப்பரடிகள் **மூரி முழங்கொலிநீர் ஆனான் கண்டாய்" என்றும் "வாசமலரெலாம் ஆனாய் நீயே!”* என்றும் "பழத்திடைச் சுவை ஒப்பாய்!" என்றும் அருளியுள்ளமை அறிக.

தாயுமானார் மலர் கொய்து இைறவனுக்குப் பூசனை செய்ய மனம் ஒருப்படா நிலையில் "பார்க்கின்ற மலரூடும் நீயிருத்திபனிமலர் எடுக்கவும் நண்ணுகிலேன்" என்றார்.

இளங்கோவடிகள் தமது காப்பியம்ாகிய சிலப்பதிகாரத்திற்கு, கடவுள் வாழ்த்தே பாடவில்லை, இயற்கையை வாழ்த்தினார்!

    "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

    கொங்கலர்தார்ச் சென்னி

    குளிர்வெண்குடை போன்று,

    இவ் அங்கண் உலகளித்த லான்"

    "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

    காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு

    மேரு வலந்திரித லான்."

    ”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்

    மேல்நின்று தான் சுரத்த லான்”

என்று இயற்கையை வாழ்த்தியே காப்பியத்தைத் தொடங்குகின்றார். இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது இயற்கையின் குறையல்ல. நாம் இயற்கையை -இயற்கையினாலாய சுற்றுப்புறச் சூழலை முறையாகப் பாதுகாக்காமையே காரணமாகும்.

”மாரி பொய்ப்பினும் வாரி வளங்குன்றினும் இயற்கையிலான செயற்கையில் தோன்றினும்” அதற்கு மக்களே பொறுப்பு. நாட்டை ஆளும் அரசுகளே பொறுப்பு என்பது சங்க காலக் கவிஞர் வெள்ளைக்குடி நாகனாரின் கருத்து. இதனை உணர்ந்து இயற்கையைப் பாது காப்போம் இயற்கை, பேரழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்ப்போம்! இயற்கை வளர்க்கும் வழித்தடத்தில் செல்வோம்!

சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய இலக்கணங்கள் ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் அகத்திணை வாழ்க்கையை-கற்பு வாழ்க்கையை வலி யுறுத்தின. இலக்கியங்களிலும் அகத்திணை என்றே ஒரு துறை உண்டு. திருக்குறளில் ‘காமத்துப்பால் உள்ள மையை ஒர்க சங்க காலத்தில் ‘காமம்’ என்ற சொல் நல்ல பொருள் நலம் தந்த சொல்லாகவே விளங்கியது. பிற்காலத்தில்தான் காமம் என்ற சொல் கொச்சைப் படுத்தப்பட்டது.

ஆண்டுகள் பலவாயினும் நரையின்றி, மூப்பின்றி, முதுமையின்றி வாழலாம். காயகல்பம்-தங்கபஸ்பம் சாப்பிட்டா? இல்லை, இல்லை! பிசிராந்தையார் மூப்பின்றி என்றும் இளமையாக வாழ வழி சொல்லுகின்றார். "வீட்டில், மாட்சிமைக்குரிய குணங்கள் அனைத்தும் பொருந்திய மனைவி வாய்த்த புதல்வர்களும் அறிவு நிரம்பியவர்கள் ஏவல் செய்வோரோ நான் கருதியதே கருதிச் செய்வர் அதனால் நரையில்லை, மூப்பில்லை, முதுமையில்லை" என்று கூறுகின்றார்!

    ”யாண்டு பலவாக நரையில ஆகுதல்

    யாங்காகியர் என வினவுதி ராயின்

    மாண்டளன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

    யான்கண் டனையர் என் இளையரும், வேந்தனும்

    அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

    ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்

    சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!"

    (புறம்-191)

என்பது பிசிராந்தையார் பாடல்.

வீட்டில் பொருளாதார மேலாண்மை குடும்பத் தலைவியிடம் இருந்தது என்பதை சங்கப் பாடல்கள் கூறு கின்றன. வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் பரிசில் பெற்றுவந்தார். வந்தபின் தமது மனைவியிடம் சொல்லு கின்றார், ‘வாழ்க்கைத் துணைநலமே! இதோ, குமணன் தந்த பரிசுப் பொருள்கள்! உனக்கு வேண்டியவர்களுக்குக் கொடு உன்னால் விரும்பப்படுகிறவர்களுக்கும் கொடு உனது சுற்றத்தாருக்கும் கொடு நமது சுற்றத்தாருக்கும் கொடு வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்று பாராட்டாது அனைவருக்கும் கொடு என்னைக் கேட்காம லும் கொடு கலந்து ஆலோசனை செய்யாமலும் கொடு! உன் விருப்பம் போலக் கொடு!" என்கிறார்.

ஆதலால், குடும்பத் தலைவிக்குக் குடும்பத்தில் பொருளாட்சி இருந்தது தெரிய வருகிறது. இன்றைய நிலை என்ன? ஒருசில குடும்பங்களில்தான் உள்ளன. வேலை பார்த்துச் சம்பாதிக்கும் மனைவிகூடத் தான் ஈட்டிய பொருளை அல்லது அதில் ஒரு பகுதியைக் கூடத் தான் வைத்துக்கொள்ள முடியாத நிலை!. இதுதான் நமது நாட்டுக் குடும்ப வாழ்க்கை நிலை. சங்க இலக் கியங்கள் மனைவியைக் குடும்பத் தலைவி என்றே கூறு கின்றன. திருக்குறள் “வாழ்க்கைத் துணைநலம்" என்று சிறப்பிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பெண் அடிமைத்தனம் இல்லை. இன்று நாம் எங்கே போகிறோம்? பெண் சிசு கொலை, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, வரதட்சணைக் கொடுமை என்று பெண்களுக்குக் கொடுமை செய்யும் வழியில் போகின்றோம்! இந்த நிலை மாறி மகளிர் போற்றும் தடத்தில் செல்ல வேண்டும்!

சங்க காலத்தில் சமூக அமைப்பு இருந்தது. எல்லாக் குடும்பங்களிலும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே தமிழ் நெறியின் குறிக்கோள். "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்த வேண்டும்" - இது தமிழின் குறிக்கோள்! தமிழனின் குறிக்கோள் தமிழ் இலக்கியம் காட்டும் பொருள் நெறி.

பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர் "எல்லாருக் கும் இன்பம்’ என்ற கொள்கையை வலியுறுத்துகின்றார். ஒரு வீட்டில் சாப்பறை கொட்டப்படுகிறது. ஒரு வீட்டில் மனமுரசு கேட்கிறது. ஏன் இந்த அவலம்! அருகில் நிற் போர் கடவுளின் படைப்பு என்கின்றனர்.

புலவர் இன்பதுன்பங்களுக்குக் கடவுளின் படைப்பு காரணம் என்பதை மறுக்கிறார். மறுப்பதோடன்றி, அப்படிக் கடவுள் படைத்திருந்தால் அக்கடவுள் பண்பில் லாதவன் என்று கூறுகிறார். அது மட்டுமா? இந்த உலகம் இன்னாததாகத்தான் இருக்கும். இன்மையைஇன்னாமையைத் தாங்கிக் கொள்ளாதே! இன்னாதனவாக உள்ள உலக அமைப்பை எதிர்த்துப் போராடு இனியன காணும் வரையில் போராடு என்றார்.

    ”ஓரில் நெய்தல் கறங்க, ஒரில்

    ஈர்ந்தன முழவின் பாணி ததும்பப்

    புணர்ந்தோர் பூவணி அணியைப் பிரிந்தோர்

    பைத லுண்கண் பணிவார் புறைப்பப்

    படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்

    இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க,

    இதன் இயல்புணர்ந்தோரே??

    (புறம்-194)

என்ற பாடலை, பாடற் பொருளை இலட்சியமாகக் கொண்டு நடப்போமாக!

இன்று தகவல் தொடர்புகள் வளர்ந்ததன் பயனாக இந்தப் பஞ்சபூத உலகம் நெருக்கமாக வந்து கொண்டிருக் கிறது. ஆனால். மனிதன் அந்நியப் பட்டுக்கொண்டே போகிறான்! ஆனால், சங்ககாலத்தில் கணியன் பூங்குன் றன் என்ற கவிஞன்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடினான்! உலகம் நெருங்கிவந்தால் மட்டும் போதாது உலக மாந்தர் ஒரு குலமாக வேண்டும். இதுவே கணியன் பூங்குன்றனின் இலட்சியம் இந்தக் கருத்தையே வள்ளலார், ஆன்மநேய ஒருமைப்பாடு என்றார்.

நல்ல சமுதாய அமைப்பு கால் கொண்ட நிலையில் பெரியோரை யாரும் வியந்து பாராட்ட மாட்டார்கள். சிறியோரை யாரும் இகழ மாட்டார்கள். ஏன்? பெரியோர் பெரியோரானது அவர்களின் முயற்சியால் மட்டுமல்ல. அவர்களுக்கு இந்த உலகம் வழங்கிய வாய்ப்புக்களே காரணம். அதனால்தான் தம் புகழ் கேட்கப் பெரியோர் நாணினர் என்று இலக்கியம் கூறுகிறது.

சிறியோர் சிறியோராக இருப்பது பிறப்பினாலும் அல்ல; விதியினாலும் அல்ல. வாய்ப்புக்கள் வழங்கப் படாமையே காரணம், அது அவர்கள் குற்றமல்ல. அதனால், சிறியோரை இகழ்வது இல்லை. ஒவ்வோர் ஊரிலும் கற்று அனுபவித்து அடங்கிய சான்றோர் பலர் வாழ்தல் வேண்டும் என்பது சங்க இலக்கியக் கொள்கை அப்படி சான்றோர் பலர் வாழும் ஊரில் பொய் இருக்காது களவு இருக்காது; கலகம் இருக்காது; நம்பிக்கை நிலவும்: நல்லெண்ணத்துடன் கூடிய உறவு கலந்த சமுதாயம் அமையும்; அமைதி நிலவும்,

    ”ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

என்றது தமிழிலக்கியம்.

தமிழிலக்கியங்கள் முடியாட்சிக் காலத்திலேயே தோன்றின. ஆயினும் முடியாட்சியைத் தழுவியே பாடினார்கள் அல்லர். அரசனின் கடமைகளை வலியுறுத்திப் பாடியவர்கள் பலர். மக்களை ஒழுங்குடன் –ஒழுக்கமுடன் வாழச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களிடத்தில் ஒழுக்கக் கேடுகள் இருந்தால் அதற்குரிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.

    ”நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”

என்று பாடினார் பொன்முடியார்.

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையில் தோன்றி மலர்ந்தவை. வாழ்க்கையை வளர்த்தவை. வையத்துள் வாழ்வாங்கு வாழ, தமிழிலக்கியங்கள் வழிகாட்டுகின்றன! பழந்தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள்! நச்சு இலக்கியங் களைப் படிக்காதீர்! நச்சு இலக்கியங்கள் காட்டும் திசையில் போகாதீர்! பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் :பண்பாட்டு நெறியில் செல்வோமாக!

        -- 15.10.94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை.

------------------