54
“அதுசரி; நீ எடுத்துச் சொல்றதுதானே?”
“சொல்றதைக் கேட்டால்தானே?”
“இப்படியே விட்டுட்டா, அப்புறம் மாப்பிள்ளை கதி என்னாவது?”
“அதுதான் அம்மா எனக்கும் மட்டுப்படவில்லை; விளங்கவும் இல்லை!” என்று வருந்தினாள் சுமதி. மறுகணம், அவள் பேசிய பேச்சே அவளை வருத்தியதாக உணர்ந்தவுடன், அத்துயர உணர்வு பிறந்த இடத்தை நுணுக்கமுடன் ஆராய்ந்தாள்; மனச்சாட்சி சிரிக்கத் தொடங்கிய சிரிப்பில், விதியின் நாதத்தையும் அவளால் கேட்க முடிந்தது. அன்றோரு தினம் தன் சகோதரி ஆஸ்பத்திரியில் தனக்கு வழிகாட்டிவிட்டுச் சென்ற புதிய விதியின் பாதை மின் வெட்டியது. பொழுது விடிந்து பொழுது போனால், எத்தனை எத்தனையோ தரம் ஞாபகப்படுத்திக் கொண்ட முடிவும் புனர்ஜன்மம் எடுக்கத் தலைப்பட்டது. ‘சுசீ, நீ எனக்கு இட்ட ஆனைதான், நம்ப அத்தானைக் காப்பாற்றுகிறதுக்கு உண்டான ஒரே வழியா? ஐயையோ, கையிலே வெண்ணெயை வச்சிக்கிணு நெய்க்கு அலைஞ்சேனே? அம்மாவுக்கு இந்த வழி புரிஞ்சுதான், சுற்றி வளைச்சு என் வாயைக் கிண்டிக்கிட்டு இந்நேரம் இருந்தாங்களா? அத்தானுக்கு உண்டான வழியைப் பற்றி நானே என் வாயினாலே சொல்லி விடமாட்டேனா என்றுதான் அம்மா தவிச்சுக்கிட்டு இருந்திருக்குமோ?’ அந்தரங்க சுத்தியுடன் சுயப் பரிசோதனை நடத்தி முடிந்தவுடன் அவள் சிலிர்ப்படைந்தாள்; ரோமச் சிலிர்ப்பு விளைந்தது. விளைந்த முத்துக்கள் கண்களில் உருளத் தொடங்கிவிட்டன. பெற்றவளைக் குற்ற உணர்வின் நச்சரிப்புடன் ஏறிட்டாள். குனிந்திருந்த தலை இப்போது நிமிர்ந்தது; அப்பார்வையில் மன்னிப்புக் கோரும் பாவளை விளங்கத் தவறவில்லை. ‘அம்மா’ என்று கூப்பிட்டாள்.
கலைந்த சிந்தனையுடன், “என்னடி பெண்னே?” என்றாள் தெய்வநாயகி.